பாம்பு காதணியை தேடி

வாழ்க்கையே ஒரு தேடல் – அப்படி ஒரு தேடலில் நாம் தேடியது கையில் கிடைத்தவுடன் வரும் மகிழ்ச்சி !! அதுவே பல நாள் தேடலாக இருந்த பின்னர் கிடைத்த பொருளாக இருந்தால் – மிகுந்த மகிழ்ச்சி தான். முன்னர் ஒரு முறைஒரு மோதிரத்தை தேடி சென்றோம். அதே போல இன்று ஒரு காதணியை தேடி பயணிக்கிறோம் ! வெறும் காதணியா அது ? பாம்பு காதணி !!

கையில் எடுத்து ராமன் ஐயா தந்த போது அது என்ன என்று புரியவில்லை. “என்ன சார் இது தாயத்தா?” என்று தான் கேட்க தோணியது. ” இல்லை இது ஒரு வித காதணி “என்று அவர் சொன்னபோதும் நம்பிக்கை வர வில்லை. “இதை எப்படி சார் அணிவார்கள் ! போட்டு காட்டுங்க?” என்று சொன்ன பொது -” நம்மால் முடியாது – இதுக்கு ஆச்சி காத்து வேணும் ” என்றார் ! பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையிலும் இந்த வகை காதணிகள் தமிழ் நாட்டில் பரவலாக இருந்தது என்று சொல்லி வெள்ளி மற்றும் தமிரத்திலும் எடுத்துக் காட்டினார் !!



நமக்கு ஆச்சி காதணி என்றாலே இன்று பாம்படம் என்று கிராமங்களில் பார்த்த நினைவு தான் ! இது போல. ஒரு வேளை ’இப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் கதையோ ??’

இன்னும் தேடியதில் இந்த பதிவு கிடைத்தது “Snake earrings of India” அதில் குறிப்பாக இதனை நாகவடூர (ம்) என்று சொல்கிறார்.

இதைக் கொண்டு மேலும் தேடியதில் இணையத்தில் இன்னும் சில குறிப்புகள் கிடைத்தன. – இவை பத்தொன்பதாம் நூற்றாண்டு படங்கள் -19thC


Images:
http://collections.vam.ac.uk/item/O79092/earrings-unknown/
http://shanalramlall.blogspot.sg/2010/03/earrings-from-old-days.html
http://www.asianart.com/articles/ganguly/22.html

அப்படி இருந்தும் – இதை போன்ற காதணியை இப்படி தான் அணியவேண்டும் என்று காட்ட ஒரு படமும் கிடைக்க வில்லை. மனிதர்களை விட்டுவிட்டு சிலைகளில் தேடலாம் என்றபோது மீண்டும் ராமன் சார் – ‘ஒ, இருக்கே ……………. கோயில் பாவை விளக்கு சிற்பத்தின் காதில் இருக்கு’ என்றார். உடனே அங்கு சென்றோம் – ஆஹா , அதே நாகவடூரம் ! அப்போது படம் எடுக்க முடியவில்லை.

அதிருஷ்டவசமாக நண்பர் வீரென் மூலமாக புதவை திரு வசந்த் கதிர்வேல் படங்களை தந்து உதவினார். என்ன அழகு – நீங்களே பாருங்கள்!!

இந்த செப்புச் சிலை சுமார் 17th – 18th C. சார்ந்தது. காதில் நாகவடூரம் என்ன அழகாக இருக்கிறது பாருங்கள் .

தற்போதைய நவீனவகை நகைக் கடைகள் இவை போன்ற பாரம்பரிய டிசைன்களுக்கு உயிர் கொடுக்க வேண்டும் – எப்படியெனில் சாதாரண காதுகளிலேயே அணியும் வண்ணம் இதை சற்று மாற்றி அமைக்க வேண்டும் – அல்லது இவ்வளவு பெரிய காது துளை மீண்டும் ஃபாஷனாவதற்கு எத்தனை ஆண்டுகள் பிடிக்குமோ !! !!

ஒரு மோதிரத்தை தேடி

மோதிரங்கள் நமது வரலாற்றுடன் பின்னிப் பயணிக்கும் ஒரு அணிகலன். அதை அணிய வேண்டும் என்றால் உடலை வருத்தி ( குத்தி )ஓட்டை போடத் தேவை இல்லை ) – மேலும் , கால் விரல்களை சேர்த்தல் இருபது மோதிரங்களைக் கூட எளிதாக அணியலாம், ஒரே விரலில் ஒன்றுக்கு மேல் போட்டுகொண்டால் – எண்ணிக்கை மேலும் பெருகும். உலக வரலாற்றில் ( விக்கி ) குறிப்புப்படி சுமார் 4800 ஆண்டு காலாசாரம் இது. எனினும் நமது பரத கண்டத்தில் ( நமது புராணங்களின் காலத்தை நிர்ணயிக்கும் சர்ச்சை இங்கு வேண்டாம் !!) முத்திரை மோதிரங்கள் பல இடங்களில் முக்கியத்துவம் பெற்றுள்ளன. அசோகா வனத்தில் சீதை அனுமனை ஸ்ரீ ராமனின் கணையாழி கொண்டு அடையாளம் கண்டு்கொண்டது, மனையாளை மறந்த துஷ்யந்தன் முனி சாபத்தால் நினைவு திருந்தாமல், பின்னர் மீன் வாயில் சிக்கிய தன முத்திரை மோதிரம் கண்டு சகுந்தலையை நினைவு கூர்வதும், தன சொந்த மகனான பரதனைக் கண்டு கொண்டதும் , என்று இந்த சிறு அணிகலன் ஆற்றும் பணி மிக முக்கியம்.

இன்று நாம் ஒரு மோதிரத்தைத் தேடிச் செல்கிறோம், இந்த பயணத்தின் மூலம் இரு வரலாற்றுச் சின்னங்களை ஒன்று சேர்த்து ஆய்வு செய்ய எத்தனிக்கிறோம். அணிகலன்கள் மற்றும் செப்புத் திருமேனிகள். ஒன்றுக் கொன்று, தங்கள் காலத்தை துல்லியமாக நிர்ணயிக்கும் பணிக்கு, எவ்வாறு உதவி செய்கின்றன ? இதன் மூலம் நம் வாசகர்களுக்கு மீண்டும் ஒரு கோரிக்கை. உலகெங்கும் இருக்கு அருங்காட்சியகங்களில் இருக்கும் சிலைகளை பல கோணங்களில் படம் எடுப்பதன் முக்கியத்துவம் விளங்கும் என்று நம்புகிறோம்.

இந்தப் பதிவு தஞ்சை பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டை ஒட்டி நடந்த விழா , மற்றும் விழாவை ஒட்டி நடந்த அருங்காட்சியகத்தில் தொடங்குகிறது. திரு ராமன் அவர்கள் அருமையாக விழாவை படம் பிடித்து வந்தார். அதில் ஒன்று கண்ணைப் பறித்தது. சோழர் காலத்து அணிகலன்கள் – இதுவரை கண்டிராத ஒன்று, அதை பற்றி நூல்களிலும் வந்த மாதிரி தெரியவில்லை.

ஆர்வலர்கள், நாங்கள் இருவரும் அதை இன்னும் விரிவாக ஆராய்ந்தோம்.

திரு ராமன் அருங்காட்சியகத்தில் இருந்த பல செப்புத் திருமேனிகளை படம் பிடித்ததும், நான் சென்ற டிசம்பர் மாதம் சென்னை அருங்காட்சியக சிலைகளை படம் பிடித்ததும் மிகவும் உதவின. அதிலும் தஞ்சையில் சிலைகளின் மிக அரு்கில் சென்று அவரால் படம் எடுக்க முடிந்தது. ( சென்னையில் கண்ணாடி போட்டு சிரமமப் படுத்துவார்கள் )

தனியாக பார்க்கும் மோதிரத்தை சிலையில் தேடும் பணியில் ஈடுபட்டோம்.

அதற்கு முதலில் மோதிரத்தின் நல்ல படங்கள் – இதோ

என்ன ஒரு அருமையான மோதிரம்.

முதலில் , CE 10th நூற்றாண்டு, உமையம்மையின் சிலை, கொடிக்காடு , வேதாரண்யம் தாலுகா, நாகை

அருமையான சிலை – எனினும் நேராக மோதிரங்களுக்கு போவோம்.

கையில் இருக்கும் மோதிரங்கள், பொதுவாக எளிமையாகவே உள்ளன. தடிமனான கம்பி போலவும் , அதில் சிறு வேலைப்பாடும் தெரிகிறது.

அடுத்து ஒரு நூறு ஆண்டுகள் அடுத்து , CE 11th நூற்றாண்டு உமையம்மை தம் தோழியுடன் , திருவேங்கிமலை , திருச்சி

இன்னும் அருகில் சென்று, இடைப்பட்ட காலத்தில் அணிகளின் வடிப்பதிலும் அணிவதிலும் மாறுதல் தெரிகிறதா என்று பார்ப்போம்.

நல்ல மாற்றம் தெரிகிறது. நடுவில் கல் பதித்து, அதை சுற்றி சிறு மலர் இதழ்கள் விரிவது போல இருப்பது நன்றாக தெரிகிறது.

அதே நூற்றாண்டை சேர்ந்த உமையொரு பாகர், 11th C CE, திருவெண்காடு , மயிலாடுதுறை .

உமை பாகத்தில் உள்ள கையில் இருக்கும் மோதிரத்தை அருகில் சென்று பார்ப்போம்.

சென்ற சிலையை விட சற்று எளிமையாக உள்ளன மோதிரங்கள். இந்த சிலை 11th நூற்றாண்டின் முதல் பாதியில் வடித்ததாக கொள்ளலாமோ?. மோதிரம் சற்று தட்டையாகவும், நடு பகுதி சற்று விரிவு பெற்று தெரிகிறது.

இன்னும், 12th மற்றும் 13th நூற்றாண்டு சிலைகளை தேடி, அவற்றில் இருக்கும் மோதிரங்களை ஆய்வு செய்யவேண்டும், எனினும் அடுத்து நாம் பார்க்கும் சிலையில், நம் தேடல் வெற்றி பெற்றது. உமை, தேவர்கண்டனல்லூர் , திருவாரூர்.

இந்த சிலையின் காலம் தெளிவாக இல்லை. சென்னை அருங்காட்சியகத்தில் இருக்கும் பொது 14th C CE என்றும், தஞ்சையில் 15th நூற்றாண்டு என்றும் பலகைகள் உள்ளன. ( அருங்காட்சி அட்டவணை நூலில் எப்படி இருக்கிறது என்று பார்க்கவேண்டும் )

எனினும், உமையின் வலது கையில் நம் தேடலின் நிறைவு …

அருகில் சென்று பாருங்கள், நாம் தேடிய மோதிரம் – இதோ இந்த செப்புத்திருமேனியில்

இப்போது கடினமான கேள்வி – இந்த மோதிரத்தின் காலம் என்ன ?