பக்தியை எப்படி வர்ணிப்பது – சிலையில் ?

ஆடவல்லானின் ஆடல் கோலத்தை பலரும் பாடியுள்ளனர், விழா எடுத்துக் கொண்டாடியுள்ளனர். தத்துவபூர்வமான விளக்கங்கள் பல வெளிவந்துள்ளன. அவைகளின் சிறப்பை நாம் எளிதில் உணர்ந்து அனுபவிக்க, அந்த அற்புத நடனத்தை இன்றும் நாம் கொண்டாட, அவரை கல்லில் செதுக்கியும் உலோகத்தில் வார்த்தும் சிறப்பித்த சிற்பிகளும் ஒரு முக்கியக் காரணம்.

அவர்களின் அற்புத கலையின் சிறப்பைப் போற்றி பெருமைப்படவே இந்த பதிவு. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள், அந்த அழகை உலோகத்திலும் உயிர் பெற செய்யும் தன்மையை நாம் புரிந்துக்கொள்ள இன்றைய பதிவு.

நண்பர் அர்விந்த் அவர்களின் படங்கள் இல்லையென்றால் கண்டிப்பாக இப்படி ஒரு பதிவை எழுத முடியாது. அலங்கரிக்கப்பட்ட ஆடல் வல்லானின் அழகுக் கோலம், அருங்காட்சியக சூழலில் அல்ல, ஆலயத்தில்! சுழன்று ஆடுவதைப்போல் காணப்படும் இந்த தோற்றத்தை எதிரில் நின்று பார்க்கும் நமக்கு ஏற்படும் அனுபவங்கள் அதிசயம்தான்! அந்த அழகு வதனத்தின் தேஜஸ் மற்றும் அந்த முத்திரைக் காட்டும் கையை பார்க்கும் பொழுது அலைபாயும் நம் மனதிற்குள் ஒரு அதீத அமைதி உருவாகிறது.

ஜோதி ஸ்வரூபமாய் அவன் ஜொலி ஜொலிக்க, அருகில் சிவகாமி அம்மை தன் மணாளன் ஆடும் அழகை கண்கொட்டாமல் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறாள்.

அம்மையின் முகத்தில் புன்சிரிப்பு, வெறும் சிரிப்பல்ல பெண்மைக்கே உரியான ஒரு பெருமித சிரிப்பு! நிற்கும் கோலத்தில் என்ன ஒரு நளினம்!

இருவரோடு முடியவில்லை, இன்னும் ஒருவர் இருக்கிறார்!

இது நம் காரைக்கால் அம்மை.

நாம் முன்னரே பலமுறை அவர்களை கல்லில் பார்த்துள்ளோம். ஆனால் செப்பு சிலைகளில் இதுவரை ஒன்றிரண்டு அருகாட்சியகங்களில் தான் பார்த்ததுண்டு.


படங்கள்: இணையத்தில் இருந்து.

இந்த சிலைகள் அம்மையாரின்வாழ்கையை விளக்குகின்றன , ஆனால் ஏதோ ஒரு குறை, அது அம்மையாரின் பக்தி! அதை எப்படி சிலையில் காட்டமுடியும்?

பக்தி என்பது ஒரு சாதாரண உணர்வோ உணர்ச்சியோ அல்லவே! அது ஒரு நிலை! பிறப்பு, வாழ்வு, இறப்பு என்ற சுழற்சியை விட்டு ஜீவன் வெளியே வந்து, உடல் என்னும் கூடு, ஆவி என்ற ஒரு அடையாளம் என்று இரண்டையும் தாண்டி , இறைவன் என்ற பரம்பொருளிடம் ஐக்கியம் ஆகும் நிலை. இதை சிலையில் எப்படி காட்டுவது? இந்த நிலையை எழுத்தில் வர்ணிக்கவே கடினமாக இருக்கிறது. அம்மையின் பாடலையே விளக்கமாக இடுகிறேன்

இறவாத இன்ப அன்பு
வேண்டிப்பின் வேண்டு கின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும்
பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் இன்னும்
வேண்டும்நான் மகிழ்ந்து பாடி
அறவாநீ ஆடும் போதுன்
அடியின்கீழ் இருக்க என்றார்.

– என்றும் கெடுதலில்லாத இன்ப அன்பினை வேண்டிப் பின்னும் வேண்டுவாராய், `இனிப் பிறவாதிருக்கும் வரம் வேண்டும், மீண்டும் பிறவி உளதாயின் உன்னை என்றும் மறவாது இருக்கும் வரம் வேண்டும், இவற்றோடு இன்னும் ஒன்று வேண்டும், அது, அறவா! நீ ஆடும்போது, நான் மகிழ்ந்துபாடி உன் அடியின்கீழ் இருக்கவும் வேண்டும்` என்று வேண்டினார்.

இப்போது மீண்டும் அம்மையை பாருங்கள்.

புடவை சுற்றப்பட்டாலும், வெளியில் தெரியும் தாளம் போடும் கைகள் மற்றும் முகத்தை வைத்தே அந்த கலைஞனின் அற்புத திறனை நாம் உணர முடிகிறது. அம்மையின் கைகள் தாளம் போடும் போதே, சற்றே வளைந்து அவன் ஆட்டத்தில் லயித்து இருப்பது தெரிகிறது. தான் வேண்டிய வரத்தை அளித்த மகேசனின் மீதான அவரது அன்பு, அதனுடன் மேலே பார்க்கும் வண்ணம் கழுத்து நேராக நீண்டு, நாசிகள் சற்றே விரிந்து, அந்த முகத்தில் தெரிவது பக்தியா?

இல்லை இல்லை பக்திப் பரவசம் !!

பேரூர் கனகசபையின் மனம் கவரும் சிற்பங்களுக்கு இது ஒரு காணிக்கை. பாகம் 1

பேரூரின் கலைச் சுரங்கத்தை என்று கண்ணுற்றேனே அன்று முதல் இந்தக் கலையழகை நம் கலாஇரசிகர்களாகிய உங்களுடன் பகிர்ந்து இரசித்து சுவைக்க வேண்டும் என்ற ஆவல் உள்ளத்தில் பொங்கிக் கொண்டே இருந்தது. ஒருநாள் இரண்டு நாட்கள் அல்ல! பத்து வருடங்கள்! ஆனால் இத்தனைக் காலம் பொறுத்ததிலும் நன்மை இருக்கத்தான் செய்கிறது. இந்தப் பதிவினை படித்து முடிக்கும் பொழுது அதை நீங்களும் உணர்ந்து கொள்வீர்கள்.

இன்று நாம் பார்க்கப் போவது அழகுப் பெட்டகமான ஊர்த்துவதாண்டவ மூர்த்தியின் அற்புத அழகைத்தான். இதோ, சிறைக்குள் இருக்கும் இந்த உயிர்ச் சிலையைப் பாருங்கள்.

முதலில், இது ஒரு தூண் சிற்பம்! ஒரே கல்லால் ஆன தூண் சிற்பம். பேரூரின் இந்தக் கனகசபையில் மிகவும் அற்புதமான வேலைப்பாடமைந்த எட்டு தூண்கள் இங்கே வடிவமைக்கப் பட்டுள்ளன. இவை கி.பி 1625 முதல் கி.பி. 1659 வருடங்களில் இராஜா சிவத்திரு அழகாதிரி நாயக்கர் அவர்களால் அமைக்கப் பெற்றது.


இரும்புக் கூட்டுக்குள் சிறை வைக்கப்பட்டுள்ளதாலோ என்னவோ, சிற்பக்கலையின் உச்சமாகத் தோன்றும் இந்தக் கலையின் அழகு பெரும்பாலானோர் கவனத்திற்கு வருவதேயில்லை! இதைப் படித்த பின்னாவது சில நல்ல உள்ளங்கள் இந்தச் சிறைக்கு பதில் நல்ல கண்கவரும் கண்ணாடிக் கூண்டை அமைப்பார்கள் என நம்புவோம்.



சோழர்களின் காலத்திற்குப் பின்னும், 13 – 14 ஆம் நூற்றாண்டு பாண்டியர்களின் காலத்திற்குப் பிறகும் சிற்பக் கலையின் வளர்ச்சி சற்றே குன்றியது போல்தான் இருந்தது. ஆனால் 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த கனகச்சபை சிற்பம், சிற்பக் கலை இன்னும் மறைந்து விட வில்லை மாறாக அந்தக் கலையில் தேர்ச்சி அடைந்து அழகில் இமயத்தையும் விஞ்சியதை துல்லியமாக எடுத்துக் காட்டுகிறது.

கம்பிகளுக்குள் இல்லாமல், கம்பீரமாக நிற்கும் பிரிட்டிஷ் காப்பகத்தின் பழைய புகைப்படம் இதோ…

ஓவியர் சிற்பி அவர்கள் ஓவியமும் இதோ ( நன்றி varalaaru.com )

நம்முடைய கலை மீதான கட்டுக்கடங்காத ஆர்வத்தை அறிந்து, புகைப்படம் எடுக்க அனுமதி கொடுத்ததோடு அல்லாமல் இந்த அழகுச் சிலையின் அழகை கண்ணார பருகுவதற்காக கதவையும் திறந்து காட்டிய அந்த ஆலயத்தின் EO அவர்களுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டு, இந்தக் கலை விருந்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம். இதோ, மனதைக் கொள்ளையடிக்கும் அந்த அழகுச் சிலையின் உருவம்.

இது ஒரு தனித்துவம் வாய்ந்த சிற்பம், கற்சிலையாகப் பார்த்தாலும், சிவனின் நடனமாகப் பார்த்தாலும் சாமனியர்களால் எளிதில் புரிந்துகொள்வது கடினம்தான். சிவனை நாடி அவனை அறிந்தால்தான் இந்த நடனத்தையும் புரிந்துகொண்டு இரசிக்கமுடியுமாம்! ப்ரம்மா, விஷ்ணு, கந்தன், நாரதர், பரதன் (நாட்டிய சாஸ்திரத்தை எழுதியவர்) இவர்களால்தான் நடனத்தை அறிந்து கொண்டு இரசித்து ஆனந்திக்க முடியுமாம்!

சாலுவன் குப்பத்தில் இருக்கும் கல்வெட்டு ஒன்று சிவநடனத்தின் தனிச் சிறப்பை கூறுவதோடு, நாட்டியத்தின், சங்கீதத்தின் கூறுகளை விளக்கி, சிவநடனத்தை கண்டுகளிக்க விளக்குகிறது: யதி ந விததா பரதோ யதி ந ஹரிர் நரதோ ந வ ஸ்கந்தா பொத்தம் க இவ ஸமர்த்தாஸ் ஸங்கிதம் கலகலஸ்ய (Epigraph. Ind. 10, p. 12).
நூல்: NATARAJA – THE LORD OF DANCE – Dr. Sivaramamurti

சிவநடனத்தைக் கண்டுகளிக்கும் இந்தக் கடவுளர்கள் வெறும் பார்வையாளர்கள் மட்டும் அல்ல. ஒவ்வொருவரும் தங்களின் இரசனைக்கு தக்கவாறும், நடனத்தை ஊக்குவிப்பதைப் போலவும், பல்வேறு இசைக் கருவிகளை உபயோகித்து நாயகனின் நாட்டியத்திற்கு மேலும் வலுசேர்க்கின்றனர். இதோ அதைப்பற்றி சில வரிகள், நடனத்தை நாயகன் துவக்கிய கணமே விஷ்ணு மர்தளம் என்னும் வாத்தியத்தை இசைத்து தன் தெய்வீக இசைய பரவவிட, துடிப்பாய் எழும் அந்த ஒலி வண்ணமயில்களைத் தோகைவிரித்தாடச் செய்யும் கரு மேகங்களின் இடியாய் எழுகிறது. தாமரைக் கையோன் பிரம்மாவோ வெங்கலத் தாளத்தை நாட்டியத்திற்கும் விஷ்ணுவின் தாளத்திற்கும் ஏற்றார் போல் தட்டி இசைத்து காமனை வென்ற சிவனின் நர்த்தனத்தை இடைவிடாது நடத்துகிறார்.

இங்கிருக்கும் பிரம்மாவிற்கு அப்படி என்ன சிறப்பு, தெரிகிறதா?


ஐந்து சிரங்களைக் கொண்ட பிரம்மா, சிவனுக்குரிய சின்னங்களான மானையும், மழுவையும் கொண்டுள்ளார்!!

இசைக்கலைஞர் எவ்வாறு கணநேரம் தன் பாடலை நிறுத்தி, தாளத்திற்கும், ஸ்ருதிக்கும் ஏற்றவாறு எப்படி திரும்பத்தொடர்கிறாரோ, அதே போல் இங்கு நம் ஆடலழகனும் கணநேரம் தன் நடனத்தை நிறுத்தி தன் மத்தளத்தை இசைத்து இசையை தன் வழிக்கு நேர்த்திசெய்து மீண்டும் தொடர்கிறார்.

காரைக்கால் அம்மையார் இங்கே மற்றுமொரு தனித்துவம்! இது தனிச் சிற்பம் அல்ல அதே தூணில் செதுக்கப்பட்டிருக்கும் சிற்பமே!

என்னவொரு அற்புதமான வடிவமைப்பு! வற்றிய முலைகள், சுருங்கி மடிப்புகளைக் காட்டும் கழுத்து தசைகள், வயதான தோற்றத்தை அற்புதமாக எடுத்துக் காட்டும் இந்தச் சிலை இளம் வயதிலேயே, வயதான பேய் உருவம் கேட்டுப் பெற்ற காரைக்காலம்மையார்! (முந்தைய பதிவுகள் பார்க்கவும்)

முயலகன் மட்டும் தப்பி விடுவாரா என்ன? இதோ தன் கையில் பாம்பை பிடித்தவாறு காணப்படும் கொழு கொழு முயலகன்.

சற்றே நீளமான பதிவுதான், என்னசெய்வது இதை பாகங்களாகப் பிரித்து பதிவது தவறென்று தோன்றுவதால் வார்த்தைகளைச் சுருக்கி, வண்ணப் படங்களை பேச வைக்கிறேன்.

அழகான பிரிந்த தாடை, அழகிய வரிகளைக் கொண்ட நாசிகளை உடைய அழகிய இளமைத் ததும்பும் வதனம் கொண்ட சிவன்.

உயர்த்திய கால்கள், எவ்வளவு அழகாக கனக் கச்சிதமாக வடிக்கப் பட்டிருக்கும் மூட்டு, கைகள், கைவிரல், நகம், விரல் மூட்டுகளின் மேல் உள்ள வரிகள், நகச்சதை, என்னவொரு தத்ரூபமான படைப்பு!!



மற்றுமொரு அழகிய வடிவமைப்பு, மேல்பாகமும் அடிப்பாகமும் காட்டும் கால் பாதம், விரல்கள், பாதத்தின் மேல் தெரியும் காலணியின் வார்ப்பட்டை, வளைந்து திரும்பி அழகிய முத்திரையைக் காட்டும் கை, கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல், இதை விடத் துல்லியமாக யாரால் வடிக்க இயலும்!






எண்ணற்ற வடிவங்களைத் தாங்கி இருக்கும், கைகள் வரிசையாய் விரிகின்றன…

தனித்துவம் பெற்ற எண்ணற்ற சின்னங்கள் எப்படித்தான் வடித்தனரோ! இவைகள் அனைத்திற்கும் பெயர்களும், முக்கியத்துவமும் கூடத் தெரியவில்லை, தேடிக் கண்டுபிடிப்போம்.

சிறப்பிற்கும் மேல் சிறப்பான ஒன்று!


பொதுவாக நாம் சிற்பத்தின் அளவைக்காட்ட ஏதேனும் தெரிந்த பொருளை உபயோகிப்பது வழக்கம், முக்கியமாக அளவில் மிகவும் சிறிய சிற்பங்களின் அளவை எடுத்துக்காட்ட, அதே போல் பெரிய கோவில் துவார பாலகர் சிற்பத்தின் அளவைக் காட்ட சிற்பி உபயோகித்திருக்கும் யானைக் கூட நினைவுக்கு வரலாம் உங்களுக்கு. ஆனால், இங்கு தற்செயலாகவோ, அல்லது சிற்பத்தின் பெருமையைக் கூட்டுவதற்காகவே, இயற்கையாக கிடைத்த இந்த அரிய தடயம், மனதை கொள்ளை கொண்டுவிட்டது! நீங்களேப் பாருங்கள்.

சிற்பியின் திறமையும், சிலையின் தத்ரூபமும் தான் இந்தக் கொசுவை ஏமாற்றி விட்டதோ! பாவம் படைத்தவனின் குருதியையே ருசிப் பார்க்க துளையிட முயற்சி செய்கிறது போலும்!!

இந்தப் பதிவும் இதில் உள்ள சிற்பங்களும் தங்கள் மனதை நிச்சயம் கொள்ளை கொண்டிருக்கும், அவ்வாறு இருந்தால் இந்தக் கொள்ளை அழகை பேரூர் செல்லும் யாவரும் கண்டு மகிழ வேண்டும் என்று நினைத்தால், இந்தப் பதிவை நண்பர்களோடும், நல்ல உள்ளம் கொண்ட அனைவரோடும் பகிர்ந்து கொள்ளுங்கள், அப்படியாவது சில நல்ல உள்ளங்கள் சேர்ந்து இரும்புச் சிறையில் இருக்கும் இந்த அழகுச் சிலைக்கு கண்ணாடிக் கூண்டு கிடைக்க வழி பிறக்கட்டும்.

பிருங்கி முனிவர் வரலாறு

புலி கால் முனிவர் பற்றி கூறும் பொது இந்த மூன்று கால் முனிவரும் நினைவிற்கு வந்தார்.

பிருங்கி முனிவர் – மறந்தும் புறந்தொழாத் தீவீர சிவ பக்தர். ( அதனால் சிவனைத் தவிர வேறு யாரையுமே வழிபட மாட்டார், சிவனின் மனைவியான சக்தியாக இருந்த போதிலும் கூட)

ஒருமுறை சிவனை நேரில் வழிபட கைலாயம் சென்ற முனிவர், தம்பதி சமேதராய் இருந்த சிவனையும் பார்வதியையும் கண்டு திகைத்தார். சிவனை மட்டுமே அன்றுவரை வணங்கி வந்த முனிவர் ,சக்தியையும் வணங்குவது தமது பக்திக்கு இழுக்கு என எண்ணித் தம்மை ஒரு வண்டாக உருமாற்றிக் கொண்டார். பறந்து சென்று, மும்முறை சிவனை மட்டும் வலம் வந்தார். பார்வதி தேவியை வணங்காமல் திரும்பும் அவரை கண்டு கடுஞ்சினம் கொண்டாள் சக்தி. தன்னை வணங்காத முனிவருக்கு தன் சக்தி மட்டும் எதற்கு என்று எண்ணி தன் சக்தியை எடுத்துக்கொண்டால்.

தமது சக்தியைத் இழந்த முனிவர், வெறும் எலும்புக் கூடாய் மாறி நிலையாக நிற்க கூட முடியாமல் குடை சாய்ந்தார் – அவ்வாறு கீழே விழப் போன அவரை, சிவன் தனதுகோலைக் கைப்பிடியாய்த் தந்து காப்பாற்றினார்.

( இது மீண்டும் நடை பெறக்கூடாது என்று தானோ என்னமோ அப்பனின் ஒரு பாதியை வாங்கிக்கொண்டாளோ – சிலர் இந்த கதை வேறு விதமாக சொல்வார்கள் – முனிவர் வருவதை கண்டு அவரது நோக்கத்தை அறிந்த சக்தி ஈசனிடம் மிக அருகில் அமர – முனிவர் அப்போதும் அப்பனை மட்டும் சுத்தி வந்தார் – உடனே உமை ஈசனின் ஒரு பாதியை எடுத்து அம்மை அப்பன் என்று அர்த்த நாரியாய் மாற – அவர் வண்டாக மாறி ஈசன் இருக்கும் பக்கம் மட்டும் குடைந்து சுற்றி வந்ததாக கூறுவர் )

அதன் பிறகு ….அது வேறு கதை . இப்போது சிற்பத்தை பார்போம். இவரது சிற்பத்தை எங்கெல்லாமோ தேடினின் – கடைசியில் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் கோவில் வெளி மண்டப தூணில் நமக்காகவே மூன்று கால்களுடன் காட்சி தந்தார் – மிக அரிய சிலை. எலும்பு உருவம் அவ்வளவு சரியாக சித்தரிக்க படவில்லை –



எலும்பு உருவத்தையும் மூன்று கால்களையும் பார்க்க மற்ற இடங்களில் உள்ள படங்களை இணைக்கிறேன்.
2808281028122814
படங்களுக்கு நன்றி – அர்ச்சனா ரகுராம்
Temple Dairies – Part 1
மற்றும்
*http://www.kamat.com/kalranga/mythology/7667.htm*
South Indian shrines illustrated By P. V. Jagadisa Ayyar

தஞ்சையிலும் பேய் அம்மை

நாம் முன்னர் தஞ்சை பெரிய கோவில் ஆடல் வல்லானின் அற்புத ஆட்டத்தை பார்த்த பொது அங்கும் பேய் அம்மையின் அழகிய சிற்பத்தை கவனிக்க மறந்து விட்டேன். நாம் கங்கை கொண்ட சோழ புறத்தில் பார்த்து போலவே இங்கும் பேய் அம்மை ஆரவாரத்துடன் ஆட்டத்தை பார்கிறார்கள். இடம் தான் சற்று மாறி உள்ளது. நந்தி அதே இடத்தில் ஆச்சு வார்த்தாற்போல உள்ளார். (நடராஜரின் ஆட்டத்துக்கு நந்தி தான் தாளங்கள் போட்டு மேளம் வாசிப்பார் என்று ஐதீகம். ஆகவே நடராஜரின் ஆட்டம் நந்தியின் பக்கவாத்தியம் இல்லாமல் நிறைபெறாது)

இரு சிற்பங்களை அடுத்து அடுத்து இணைக்கிறேன் – பார்த்து மகிழுங்கள்
20812088
ஆடல் வல்லான்
20842086
நந்தி
20762079
பேய் அம்மை

முதல் வரிசையில் இருந்து ஈசனின் ஆடல் அழகு பார்க்கும் எலும்பு அம்மை

சென்ற மடல்களில் காரைக்கால் பேய் அம்மையின் கதை படித்தோம். அங்கே நிறைய சிற்பங்களை இடவில்லை, ஏனெனில் அவர்களின் கதையின் உன்னதம் சரிவர நாம் உணர வேண்டும் என்பதற்க்காக. இப்போது அதற்கு ஈடு செய்ய, ஆலங்காட்டில் ஆடும் அழகன் ஆடல்வல்லானின் அற்புத ஆட்டத்தை முதல் வரிசையில் அமர்ந்து காணும் அம்மை – கங்கை கொண்ட சோழபுறத்து அற்புத சிற்பி வடித்த சிலை.

( Sfiy’ இல் வந்த இந்த அருமையான இடுகை )

http://sify.com/news_info/tamil/rasanai/aug05/fullstory.php?id=13909600

தூக்கிய திருவடியொடு ஆடும் அழகனின் திருவடிவினைச் உலோக சிலையாய் வடிப்பது ஒரு அறிய கலை, ஆனால் அதை கல்லில் வடிப்பது – ஒரு உன்னத கலை. சோழநாட்டுச் சிற்பிகளோ கல்லைப் பிளந்து எழிலுரு ஆடவல்லான் திருமேனிகளைப் பல திருக்கோயில்களில் வடித்துச் சென்றுள்ளனர். அத்தகு சிற்பப் படைப்புக்கள் வரிசையில் தலையாயதாக விளங்குவது கங்கை கொண்ட சோழீச்சரம் திருக்கோயிலின் தேவகோட்டமொன்றில் இடம் பெற்றுள்ள ஆடும் அழகனின் திருவடிவாகும்.

பொதுவாகத் திருக்கோயிற் சிற்பப் படைப்புக்களைக் கண்டு அதன் பேரழகை நுகரப் புகுமுன், அங்குக் காணப்பெறும் சிற்பத்தின் வரலாறு, புராணப் பின்புலம், செய்நேர்த்தி, உணர்வுகளைக் காட்டிடும் முகபாவம் ஆகியவற்றை அறிந்து, பின்பே அவற்றைக் கூர்ந்து காண முற்படுவோமாயின் அச்சிற்பம் நம்மோடும் பேசும் சுகானுபவத்தைப் பெறலாம்.

காளியோடாடிய கயிலைநாதன்தாருகன் எனும் அசுரன் பிரமனைக் குறித்துக் கடுமையாகத் தவம் இயற்றி தனக்குப் பெண்ணால் மட்டுமே மரணம் ஏற்பட வேண்டும் என்று வரத்தையும், பேராற்றல்களையும் பெற்றான். அவன் சென்ற இடங்களிலெல்லாம் வெற்றி கண்டான். ஆணவமலம் மிக்குற்று தேவர்களையும், தெய்வங்களையும் தாக்க எத்தனித்தான் . எத்துணை உபாயங்கள் செய்தும் அவனிடமிருந்து தப்பியலாத தேவர்கள் பரமேஸ்வரனைப் பிரார்த்தித்து வேண்டினர். பரமனோ தன் கழுத்திலிருந்த ஆலகால விஷத்திலிருந்து தேவியின் அம்சத்தை கரியதும் உக்கிரம் நிறைந்ததுமான உருவமாக, காலகண்டியாகப் படைத்துத் தாருகனை வதம் செய்ய ஆணையிட்டார்.

காலகண்டியாகிய காளிதேவி தாருகனுடன் உக்கிரமாகப் போரிட்டு அவனை அழித்தாள். காளியின் கோபம் தணியாததால் அவளைச் சாந்தப்படுத்த விழைந்த பரமன் அவள் உக்கிரத்தை எட்டு சேத்திர பாலகர்களாக (அட்ட பைரவர்) மாற்றியருளியதோடு, அவள் முன்பு நடன மாடத் தொடங்கினார். ஈசன் ஆட அவர் முன்பு வெங்கோபமுற்ற காளிதேவியும் ஆவேசமாக ஆடத் தொடங்கினாள். அண்ணலின் ஊர்த்துவ மாதாண்டவம் கண்டு ஆட இயலாதவளாய் அமைதியுற்றாள். இச்சிவதாண்டவ வரலாற்றை சிவமகாபுராணம் இனிதே உரைக்கின்றது. திருவாலங்காட்டில் (திருவள்ளூர் மாவட்டம்) இத்திருநடனம் நடைபெற்றதாக ஆலங்காட்டுத் தலபுராணம் விவரிக்கின்றது.
193719391942194519471950

மூவர் தமிழில்…

ஆடினார் காளி காண ஆலங்காட்டு அடிகளாரே எனத் திருவாலங்காட்டில் பாடிய திருநாவுக்கரசு பெருமானார்,

ஆடினார் பெருங்கூத்து காளிகாண, என்று திருப்பாசூர் பதிகத்திலும்,

கத்து காளி கதம் தணிவித்தவர், என்ற திருக்கடவூர் மயானத்துப் பதிகத்திலும் குறிப்பிட்டு காளியோடாடிய கருணாமூர்த்தியின் பெருமை பேசுகின்றார்.

மாத்தன் தான் மறையார் முறையால் மறை
ஓத்தன் தாருகன் தன் உயிர் உண்ட பெண்
போத்தன் தான் அவள் பொங்கு சினம் தனி
கூத்தன்தான்-குரங்காடு துறையானே
பைதல் பிணக் குழைக் காளி வெங்கோபம்
பங்கப் படுப்பான்
செய்தற்கு அரிய திருநடம் செய்தனசீர்
மறையோன் உய்தல் பொருட்டு வெங்கூற்றை உதைத்தன:
உம்பர்க்கு எல்லாம் எய்தற்கு
அரியன-இன்னம்பரான்தன் இணை
அடியே பூத்து ஆடிக் கழியாதே நீர், பூமியீர்
தீத்து ஆடி திறம் சிந்தையுள் வைம்மினோ
வேர்த்து ஆடும் காளிதன் விசை தீர்க்க-
என்று கூத்து ஆடி உறையும் குடமூக்கிலே

இவ்வாறு அப்பரடிகள் குரங்காடுதுறை, இன்னம்பர், திருகுடமூக்கு ஆகிய திருக்கோயில்களில் காளி தன் வெங்கோபத்தினைப் பங்கப்படுத்திய கூத்தனின் புகழைத் தேவாரத் தமிழால் புகழ்கின்றார்.

திருஞானசம்பந்தப் பெருமானாரோ

ஐயாறுடைய அடிகளைப் பாடிப் பரவுங்கால்,
வென்றிமிகு தாருகனது ஆர் உயிர் மடங்க கன்றி
வரு கோபமிகு காளிகதம் ஓவ
நின்று நடம் ஆடி இடம்-நீடு மலர் மேலால்
மன்றல் மலியும் பொழில் கொள் வண் திருஐயாரே

என்றும், தன் பிறந்த பதியான சீகாழி ஈசனைப் போற்றுங்கால்,

சொக்கத்தே நிர்த்தத்தே தொடர்ந்த மங்கை செங்கதத்
தோடு ஏயாமே மாலோகத் துயர்
களைபவனது இடம்கைக்கப் போய் ஊக்கத்தே
கனன்றுமிண்டு தண்டலைக்காடே ஓடா ஊரே சேர் கழுமல வளநகரே

என்றும் காளியோடாடிய திறம் பேசுகின்றார். திருநாவலூரரான சுந்தரரோ,

கொதியினால் வரு காளிதன் கோபம்
குறைய ஆடிய கூத்துடையானே

என்று ஆவடுதுறையில் இன்றமிழ்ப் பதிகம் பாடி திருவாலங்காட்டுத் திருநடனத்தின் சிறப்பு பேசுகின்றார்.

திருஆலங்காட்டுத் திருநடனம்

தாருகன் உயிர் போக்கிய காளிதேவியின் கோபத்தைப் போக்க ஆலமரங்கள் அடர்ந்த திருவாலங்காட்டில் அண்ணல் மீண்டும் ஓர் ஆனந்த நடம் புரிந்தார். வாணன் குட முழவிசைக்க, காரைக்கால் பேயார் கைத்தாளம் இசைக்க, பூசகணங்கள் மத்தளம் முழங்க அண்ணலின் ஆடல் தொடங்கிற்று. ஆடல் காண கணபதிப் பிள்ளை எலிமீதமர்ந்து ஊர்ந்துவர, கந்தனோ மயில்மீது அமர்ந்து பறந்து வந்தான். சூரிய சந்திரர் காண காளிதேவியும் எண்கரம் நீட்டி கோபமொடு ஆடத் தொடங்கினாள். மூன்று கால் பிருங்கியும் ஓர்புறம் ஆட, சடையமர்ந்த கங்காதேவியும் சுழன்று ஆட, இடபத்தோடு நின்ற சிவகாமியோ, எழிலுறு இக்காட்சி கண்டு மெய்மறந்தாள்.

ஆலங்காட்டில் உமையம்மையும், காரைக்காலம்மையும் கண்டு களித்த அந்த ஆனந்தத் தாண்டவக் காட்சியை உலகம் உள்ளளவும் மனித குலம் கண்டு இன்புற வேண்டும் என்று நினைத்தான் கங்கை கொண்ட இராஜேந்திர சோழன் (கி.பி. 1012-1044). தான் எடுத்த கங்கை கொண்ட சோழீச்சரம் எனும் சிவாலயத்தின் கருவறையின் தென்மேற்குப் பகுதியில் ஆலங்காட்டு ஆடற்காட்சியை நிரந்தரமாகப் பதித்தான். கல்லிலே இங்கு அக்காட்சி உயிர்ப் பொலிவோடு திகழ்கின்றது.

தேவகோஷ்டமொன்றின் மேற்பகுதியில் திருவாலங்காட்டு ஆலமரமொன்றில் இலைகளோடு கூடிய கிளைகள் தெரிகின்றன. ஆடல்வல்லான் சூடும் அக்ஷமாலையொன்றும், அவன் பூசும் வெண்பொடி சுமந்த பொக்கணமும் (விபூதிப்பை) ஆலமரத்துக் கிளையில் தொங்குகின்றன. தலையில் கொக்கிறகு, கபாலம், உன்மத்தம் ஆகியவற்றையும், விரிசடையில் நீரலையாய் சுழன்று ஆடும் கங்கையையும் சூடியவராய், ஒரு காதில் மகரகுண்டலமும், மறுகாதில் பத்ரகுண்டலமும் தரித்தவராய் வலதுகாலை முயலகன் மீது இறுத்தி இடது காலை இடுப்பளவு உயர்த்தி, மேலிருகரங்களில் டமருகமும், எரியகலும் ஏந்தி, வலது முன் கரத்தால் அபயம் காட்டி இடது முன்கரத்தை உயர்த்திய காலுக்கு இணையாக நீட்டி ஆனந்தத் தாண்டவம் ஆடுபவராய் அண்ணல் காட்சி தருகின்றார். தெய்வீகப் பொலிவும், கொவ்வைச் செவ்வாயில் குமின் சிரிப்பும் காணப்பெறும் இச்சிற்பத்தின் முக அழகுக்கு ஈடாக வேறு ஒரு படைப்பினைக் காட்டுதல் கடினமே.ஈசனுக்கு வலதுபுறம் பிருங்கிமுனிவர் ஆட, இடப்புறம் எட்டுகரங்களோடு கதம் கொண்ட காளிதேவி ஆடுகின்றாள். தூக்கிய திருக்கரங்களும், கால்களின் அசைவும் அவள் ஆடுகின்ற ஆடலின் வேகத்தைக் காட்டுகின்றன. கோபக்கனலை அவளது பிதுங்கிய விழிகளும் ஆவேசம் காட்டும் முகமும் வெளிப்படுத்துகின்றன. வேர்த்து ஆடும் காளியிவள் என்பது நன்கு விளங்கும்.
19321921
இந்த தேவகோஷ்டத்தின் இருமருங்கும் எழிலார்ந்த சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. மலரேந்திய சூரியனும் சந்திரனும் ஒரு கரத்தை தலைக்கு மேல் உயர்த்தி ஈசனைப் போற்றுகின்ற நிலையில் விண்ணில் பவனி வருகின்றனர். சூரியனுக்குச் சற்று கீழாக எலிமீதமர்ந்த கணபதியாரும், மயில்மீதமர்ந்த கந்தனும் ஆலங்காடு நோக்கி விரைந்து செல்கின்றனர். இக்காட்சிக்குக் கீழாக நந்தியெம்பெருமான் குடமுழவினை இசைத்தவாறு அமர்ந்துள்ளார்.

கோஷ்டத்தின் கீழ்புறம் பூதகணங்கள் மத்தளங்களையும் இன்னபிற இசைக்கருவிகளையும் இசைத்தவாறு ஆடி மகிழ்கின்றன. அப்பூதகணங்களோடு விரிந்த சடை, வற்றிய கொங்கைகள், எலும்பு உரு ஆகியவற்றோடு இலைத்தாளம் இரண்டினை கையிலேந்தி இசைத்தவாறு காரைக் காலம்மையார் அண்ணலின் அடிக்கீழ் அமர்ந்தவாறு ஆடல் காண்கின்றார்.ஆடும் அழகனுக்கு இடதுபுறம் விண்ணகத்தில் சந்திரன் உலவ, கீழே அண்ணல் உலாப்போகும் எருது நிற்கின்றது. அதன் முதுகில் இடக்கரத்தை ஊன்றியவாறு வலக்கரத்தில் மலரொன்றை ஏந்திய நிலையில் உமாதேவி நிற்கிறார். தேவியின் திருமுகமோ அழகனின் ஆடலில் ஒன்றி மெய்மறந்த நிலையைக் காட்டுகின்றது. ஆனால் இடபமோ வாய்பிளந்த நிலையில் ஆடலின் வேகங்கண்டு மிரண்டு காணப்பெறுகின்றது.

சிற்பங்களை இன்னும் தெளிவாக பார்க்க

19921994199619982000200220042006

இக்காட்சியைக் காணும் போது,

சரிகுழல் இலங்கிய தையல் காணும்
பெரியவன் காளிதன் பெரிய கூத்தை
அரியவன் ஆடலோன் அங்கை ஏந்தும்
எரியவன்-இராமனதீச்சரமே

என்ற திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடலுக்கென வடிக்கப்பெற்ற சிற்பக் காட்சியே இதுவென்பது நன்கு விளங்கும். ஈசனார் முகத்திலோ ஆனந்தப் புன்னகை. காளியின் முகத்திலோ கடும் சினம். காளையில் முகத்திலோ மிரட்சி. அன்னையின் முகத்திலோ அமைதி. இத்தனை உணர்வுகளையும் ஒருங்கே இக்காட்சியில் படைத்துக் காட்டிய சோழனின் சிற்பி நம் அனைவரையும் கங்கைகொண்ட சோழபுரத்தில் இருந்தவாறே திருவாலங்காட்டிற்கு அழைத்துச் சென்று அற்புதத் திருக்கூத்தைக் காட்டுகின்றான். காண்போம் வாரீர்.

(பி.கு.) கலைநயமும், வரலாற்றுச் சிறப்பும் ஒருங்கே பெற்ற இந்த ஆடவல்லான் திருமேனியின் தூக்கிய இடது காலினைக் கலையறிவற்றோர் பின்னாளில் சிதைத்து அழித்துவிட்டனர். இருப்பினும் உடையார்பாளையம் ஜமீன்தார் நூற்றாண்டுகளுக்கு முன்பு செய்த திருப்பணியின் போது உடைந்த காலுக்கு முட்டுக்கொடுத்து ஓரளவு சீர் செய்துள்ளனர்.

காரைக்கால் அம்மையின் அருமையான பாடல்கள் இதோ :

பதினொன்றாம் திருமுறை : பாடல் எண் : 1

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=11&Song_idField=11002&padhi=040&startLimit=1&limitPerPage=1&sortBy=&sortOrder=தேசக்

கொங்கை திரங்கி நரம்பெ ழுந்து
குண்டுகண் வெண்பற் குழிவ யிற்றுப்
பங்கி சிவந்திரு பற்கள் நீண்டு
பரடுயர் நீள்கணைக் காலோர் வெண்பேய்
தங்கி யலறி யுலறு காட்டில்
தாழ்சடை எட்டுத் திசையும் வீசி
அங்கங் குளிர்ந்தன லாடும் எங்கள்
அப்ப னிடந்திரு ஆலங் காடே.

பாடல் எண் : 22

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=11&Song_idField=11002&padhi=040&startLimit=22&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

சூடும் மதியம் சடைமேல்
உடையார் சுழல்வார் திருநட்டம்
ஆடும் அரவம் அரையில்
ஆர்த்த அடிகள் அருளாலே
காடு மலிந்த கனல்வாய்
எயிற்றுக் காரைக் காற்பேய்தன்
பாடல் பத்தும் பாடி
யாடப் பாவம் நாசமே.

பாடல் எண் : 19

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=11&Song_idField=11002&padhi=040&startLimit=19&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

வேய்கள் ஓங்கி வெண்முத்
துதிர வெடிகொள் சுடலையுள்
ஒயும் உருவில் உலறு
கூந்தல் அலறு பகுவாய
பேய்கள் கூடிப் பிணங்கள்
மாந்தி அணங்கும் பெருங்காட்டில்
மாயன் ஆட மலையான்
மகளும் மருண்டு நோக்குமே.

அடுத்த முறை கங்கை கொண்ட சோழபுரம் செல்லும் பொது கண்டிப்பாக இந்த அருமையான சிற்பத்தை கண்டு ரசியுங்கள்.

209320902096

அதே மாங்கனி வேறு குழப்பம் – காரைக்கால் அம்மை சரித்திரம்

கம்போடியாவில் காரைக்கால் அம்மையாருக்கு சிற்பம் என்றவுடன் பலருக்கு அவர் யார் என்றும், அவர்களது கதையை பற்றி படிக்கவும் ஆவல்.

அந்த ஆவலை தூண்டவே அந்த மடலில் அவர்களுடைய அற்புத கதையை பற்றி எழுதவில்லை. எனினும் அவர்களது வினோத உடல் அமைப்பு பலரையும் கேள்வி எழுப்ப செய்தது.

இவை அனைத்தையும் மனதில் கொண்டு, அவருடைய அற்புத பாடல்களை இங்கே இடாமல், அவர் சரித்திரத்தை விளக்கும் முறையில் நண்பர் திரு. வி. சுப்பிரமணியன் ஐயா ( எனக்கு பல முறை பக்தி இலக்கியங்களில் இருந்து சிறந்த குறிப்புகளையும் பாடல்களையும் தேடி தந்த வழி காட்டி ) அவர்கள் இயற்றி இருக்கும் அற்புத பாடலையும், அம்மையார் புகழ் விளக்கும் திருவாலங்காடு கோயில் கோபுர சிற்பம் ஒன்றையும் இணைக்கிறேன்.

கோபுர சிற்பம் – அம்மையின் வாழ்க்கையில் மூன்று முக்கிய நிகழ்வுகள். இடம் இருந்து வலம் – திருமணம், மாங்கனி, கைலாய பிரவேசம்

பசித்து வந்தவ ரிலைதனி லொருகனி
.. படைத்து வந்தவர் பிறகடி தொழவொரு
.. பழுத்த இன்கனி அவர்பெற அருளிடு .. முமைகோனே
புசித்த பின்கண வனும்வின விடஅவர்
.. பொருட்ட ருங்கனி தரஉட னுறைவது
.. பொருத்த மன்றென அவனவர் தமைவில .. கிடுவானே
நசிக்க ஒன்பது துளையுட லழகென
.. நவிற்றி என்புரு வினைஅரு ளெனமிக
.. நயக்கு மன்பர துளமகி ழுருஅளி .. சடையோனே
வசிட்ட ரும்பல முனிவர்க டொழஉறை
.. மலைத்த டந்தனி லடியிட வெருவிய
.. மனத்தர் மன்புக ழனைதொழு முனதடி .. மறவேனே.

உரை:
(தனது இல்லத்திற்குப்) பசியோடு வந்த அடியாருக்கு இலையில் (கறி இன்னும் சமைத்து
இராததால், கணவன் கொடுத்தனுப்பியிருந்த) ஒரு மாம்பழத்தை இட்டு மகிழ்ந்து, பிறகு
(கணவன் உண்ணும்போது இன்னொரு கனியையும் கேட்கத்) திருவடியைத் தொழுதபொழுது, அவருக்கு
(புனிதவதி என்ற காரைக்கால் அம்மையாருக்கு) ஒரு பழுத்த இனிய கனியை அளித்த
பார்வதி நாதனே! (அதை) உண்ட பின் (அதைப் பற்றிக்) கணவன் கேட்டபொழுது, அவன்
நம்புவதற்காக அவர் வேண்டியபொழுது இன்னொரு அரிய கனியைத் தர, அதைக் கண்டு (அவர்
தெய்வம் என எண்ணி) அவரோடு இல்லறம் நடத்துவது தகாது என்று அவரி விட்டு நீங்கிச்
சென்றான். (அதன் பிறகு) “இந்த ஒன்பது ஓட்டைகளுடைய உடலின் அழகு அழிவதாக!” என்று
சொல்லிப், “பேய் உருவத்தைத் தாராய்” என்று மிக விரும்பிக் கேட்ட பக்தருடைய
உள்ளம் மகிழ அவ்வுருவத்தை அளித்த, சடை உடையவனே! வசிஷ்டரும், பல முனிவர்களும்
தொழ (நீ) உறைகிற கயிலைமலைப் பாதையில் காலை வைத்து நடக்க அஞ்சிய மனத்தை உடையவர்,
(அதனால் தலையால் நடந்தவர்), நிலைத்த புகழ் உடைய அம்மையார் தொழுகிற உனது
திருவடியை நான் மறக்கமாட்டேன்!

காரைக்கால் அம்மையார் வரலாற்றைப் பெரிய புராணத்தில் விரிவாகக் காண்க

படைத்தல் –
உவத்தல் – மகிழ்தல்;
இன் கனி – இனிய கனி;
அரும் கனி – அரிய கனி;
உடன் உறைவது – கூடி வாழ்வது;
நசிக்க – அழிக!
நவிற்றி – சொல்லி;
என்பு – எலும்பு;
உரு – உருவம்;
நயத்தல் – விரும்புதல்;
மகிழ்தல் – விரும்புதல்; களித்தல்;
உள மகிழ் உரு அளி – உள்ளம் மகிழும் வடிவை அளிக்கிற;
மலை – இங்கே, கயிலை மலை;
தடம் – வழி; பாதை; மலை;
அடியிடுதல் – அடிவைத்து நடத்தல்;
வெருவுதல் – அஞ்சுதல்;
மன் – நிலைத்த; மிகுந்த;
அனை – அன்னை;

பதம் பிரித்து:
பசித்து வந்தவர் இலைதனில் ஒரு கனி
.. படைத்(து) உவந்தவர், பிற(கு) அடி தொழ, ஒரு
.. பழுத்த இன் கனி அவர் பெற அருளிடும் .. உமைகோனே!
புசித்த பின் கணவனும் வினவிட, அவர்
.. பொருட்(டு) அரும் கனி தர, உடன் உறைவது
.. பொருத்தம் அன்(று) என அவன் அவர்தமை விலகிடுவானே!
“நசிக்க ஒன்பது துளை உடல் அழ(கு)” என
.. நவிற்றி, “என்(பு) உருவினை அருள்” என மிக
.. நயக்கும் அன்பர(து) உள[ம்] மகிழ் உரு அளி .. சடையோனே!
வசிட்டரும் பல முனிவர்கள் தொழ உறை
.. மலைத்தடம்தனில் அடியிட வெருவிய
.. மனத்தர், மன் புகழ் அனை தொழும் உன(து) அடி .. மறவேனே!

காரைக்கால் அம்மை தொழும் உன்னை மறவேன்
——————————————————
தனத்த தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன .. தனதான

(விரித்த பைங்குழல் – திருப்புகழ் – சுவாமிமலை)

கம்போடியாவில் காரைக்கால் அம்மை

கம்போடியா ( Khao Preah Vihear) கோவில் சிற்பம் சிலவற்றை நாம் முன்பு பார்த்தோம். அவ்வாறே இன்றும் ஒரு அறிய சிற்பம்.

தொலைவில் இருந்து பார்க்கும் போது நடராஜர் மட்டுமே தெரிந்தார். அழகிய ஆடும் கோலம் – பத்து கைகளும் ஒரே கை வேகமாய் ஆடுவது போல அழகே உள்ளது.


கொஞ்சம் கீழே பார்த்தால் அனந்தசயனன், காலை அன்பாய் பிடித்து விடும் லக்ஷ்மி ( சிற்பம் சிதைந்து விட்டது ) நாபிக்கமலத்தின் மேல் பிரம்மன். அவர்களை அடுத்து இரு கிளிகள் – அதற்கு மேல் ஒரு யாழி – யாழியின் மேல் இருப்பவர் யார் என்று தெரியவில்லை – அதை அடுத்து இரு குரங்குகள் !!

சரி அத்துடன் விட்டு விடலாம் என்று பார்த்தால் ஆடல் வல்லானின் அற்புத நடனத்தை ரசிக்கும் இருவர் ( தலைகள் சிதைந்து விட்டன ) – ஆனால் வலது புறம் இருப்பது ஒரு பெண்மணி – அவர்களின் அங்க குறிப்புகளை சோழர் கால காரைக்கால் அமையின் சிலையுடன் ஒப்பிடும் போது அப்படியே ஒத்து உள்ளது. (சுருங்கிய மார்பகம்) ஒருவேளை தன்னை பேய் போல ஆக்குக என அம்மை இறைவனை வேண்டிக்கொண்டதால் இளமை மாறியதோ. அம்மையின் முழு கதையை வரும் மடல்களில் பார்ப்போம்

(அம்மை தாம் அருளிய அந்தாதியில்)

பெறினும் பிறிதியாதும் வேண்டேம் நமக்கீது
உறினும் உறாதொழியுமேனும் – சிறிதுணர்த்தி
மற்றொரு கண் நெற்றிமேல் வைத்தான் தன் பேயாய
நற்கணத்தில் ஒன்றாய நாம்

எனக் குறித்தருள்கிறார். இதனால் பேய் வடிவம் என்பது சிவகணங் களில் ஒன்றான பேய்வடிவம் என்பதை அறியலாம்.




காரைக்கால் அம்மை பெரும் பாலும் தென் இந்திய இலக்கியங்களிலேயே வருபவர், பல தமிழருக்கே தெரியாத ஒருவர். அவர் எங்கே அங்கே சென்றார் ? தமிழக சிற்பிகள் அல்லது அவர்களது வழி தோன்றல்கள் இல்லை அவர்களிடம் கலை பயின்றவர்கள் இதை வடித்து இருக்கலாம். ஏனெனில் சிலையில் தமிழ் / சோழ கலை தெரிய வில்லை , பெரும்பாலும் தென் கிழக்கு ஆசிய சாயலே தெரிகிறது.

images courtesy
http://www.sundial.thai-isan-lao.com/phanom_rung.html