கம்போடியாவையும் பல்லவர்களையும் இணைக்கும் மகர தோரணம்

ஃபூனன் (கம்போடியா) பற்றிய ஒரு புத்தகத்தில் சுவையான ஒரு படத்தை பார்த்தேன். ஒரு சிற்பக் கரு உருவானது. இந்தச் சிற்பத்தைக் கண்டவுடன் ஏனோ சட்டென தாளவனூர் சிற்பம் நினைவுக்கு வந்தது. இந்த இரண்டு சிற்பங்களையும் ஒப்பிட்டுப் பார்த்ததில் ஒரு இனிய அதிர்ச்சி! இரண்டும் ஒன்றுதானோ என்ற சந்தேகம் வந்துவிட்டது. அந்தச் சிற்பங்கள் இதோ:


Mr. Andy Brouwer ( www.andybrouwer.co.uk/blog/) என்ற நண்பர் எடுத்தப் புகைப்படங்கள்,சம்போர் ப்ரெய் குக் – கம்போடியா – அவர் அனுமதி பெற்று அவருக்கு ஒரு சிறப்பு நன்றியுடன் இங்கே படைக்கப்படுகின்றன.மகர தோரணங்கள் என்றழைப்பர். சாதாரணமாகப் பார்த்தால் ஏதோ வாயில்தோரணங்களாகவும் அலங்காரத்துக்காகவும் செதுக்கியதாகத்தான் தோன்றும். ஆனால் அதை உற்று நோக்க ஏராளமான வித்தைகள் உள்ளே தெரியும்.

இரண்டு சிற்பங்களும் இருவேறு இடங்கள். ஒன்று நம் பல்லவதேசத்தில் உள்ள தாளவனூர். இன்னொன்று கம்போடியா நாடு.

கடல் கடந்த நீண்ட இடைவெளி உள்ள இந்த இருவேறு சிற்பங்களின் ஒற்றுமை நம்மை வியக்கவைக்கிறது. இது அலங்காரத்துக்காக மட்டுமே செதுக்கப்படவில்லை. தன் சிற்பத் திறமையை முழுதும் கொட்டி இவைகளை அந்தச் சிற்பி வடித்திருக்கிறான் என்ற வகையில் அந்த மகரதோரணத்தில் அப்படி என்ன விசேஷம் என்று ஆராய்ந்தோமானால் நிறைய விஷயங்கள் தெரியவரும். சேக்கிழாரின் பெரிய புராணத்தில் திருஞானசம்பந்த நாயனார் கதையில் வரும் பாடலில் இந்த மகர தோரண முக்கியத்துவம் குறித்து விவரங்கள் கிடைக்கும்.

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1228&padhi=72&startLimit=1071&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

மகர தோரணம் வண்குலைக்
கமுகொடு கதலி
நிகரில் பல்கொடித் தாமங்கள்
அணிபெற நிரைத்து
நகர நீள்மறுகு யாவையும்
நலம்புனை அணியால்
புகரில் பொன்னுல கிழிந்ததாம்
எனப்பொலி வித்தார்.

(மகர தோரணங்களும், வளம்மிக்க குலைக் கமுகுகளும், வாழைகளும், ஒப்பில்லாத பலகொடிகளும், மாலை களும் ஆகிய இவற்றை அழகு பொருந்த நிரல்பட அமைத்து, நகரம் முழுமையும் உள்ள நீண்ட தெருக்கள் எல்லாவற்றையும் நன்மை பொருந்த அணிசெய்து, குற்றம் இல்லாத தேவலோகமே கீழ் இறங்கிய தாம் எனக் கூறுமாறு அழகு செய்வித்தார் சிவநேசர்.)

குற்றம் இல்லாத தேவலோகத்தில் மகரதோரணம் என்பது இன்றியமையாத ஒன்று என்பதை நாம் அறிந்துகொள்ளும்போது, அந்த சிற்பியின் கைவண்ணத்தைக் காண்கிறோம். ஒரு நகரத்தையோ அல்லது அரண்மனையோ அல்லது தொழப்படுகின்ற கோயில்களோ கல்லில் செதுக்கப்படவேண்டும் என்று வரும் பட்சத்தில் அது சிறப்பான தேவலோகத்துக்கு இணையாக சிற்பி கருதுகிறான். அங்கு மகரதோரண வாயில் என்பது இன்றியமையாத ஒன்று என்று சிற்பிக்குப் புலனாகிறது. மகரதோரணத்தில் இந்தப் புனிதம் கெடாதபடி சிற்பியின் கைவண்ணம் மிளிர்கிறது.

இப்படிப்பட்ட கடின வேலைப்பாடுகள் கொண்ட சிற்பங்கள் பிற்காலச் சோழர்கள் தங்கள் கோயில்களில் அருமையாய் பிணைத்தனர். தாராசுரம் கோயில் படி சுவரில் உள்ள இந்த மகரத்தை பாருங்கள்.

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் ஞான சரஸ்வதி சிற்பத்தில் மிக அருமையான இரு மகரங்களை பார்த்து மகிழுங்கள். நன்றி நண்பர் திரு மோகன்தாஸ் அவர்கள்.


மேலும் மகரங்களை பற்றி திரு உமாபதி ஸ்தபதியார் அவர்கள் இடத்தில கேட்ட பொது – சிலாகித்துப் போய் விளக்குகிறார். “ஆறு வெவ்வேறு விதமான சிற்பங்களை உள்ளடக்கி, அவைகளுக்குச் சுற்றி அலங்காரம் செய்வதைப் போல செடிகொடிகளையும் பக்கவாட்டுகளில்அழகோடு செதுக்கிக் காட்டவேண்டும். மிகக் கஷ்டமான சிற்பவேலை மட்டுமல்லாமல் கூரிய புத்தியோடு செயல்பட்டால் ஒழிய மகரதோரண சிற்பங்களை அவ்வளவு எளிதில் செதுக்கிவிடமுடியாது.!” அவர் மேலும் நமக்கு விளக்க அனுப்பிய படம் இதோ.

வேறெங்கெஙகு இத்தகைய மகரதோரணங்கள் செதுக்கியிருக்கிறார்கள் என்று மற்ற இடங்களிலும் ஒருமுறை பார்க்கவேண்டும். ஆராயவேண்டும்.

ஒரு சிற்பியின் பார்வையில் சிற்ப ரசனை

திரு K P. உமாபதி ஸ்தபதியுடன் நம் நண்பர் திரு சதீஷ் உரையாடியதன் விளைவுதான் இந்தப் பதிவு.. உரையாடலின் போது அவர் நம்முடன் பகிர்ந்ததை வைத்து ஒரு சிற்பியின் பார்வையில் சிற்ப ரசனை ,அதில் அவர் எதை , எவற்றை எப்படி எல்லாம் ரசிக்கிறார் என்பதை எடுத்துக் காட்டும் முயற்சி.

மல்லை படங்கள் திரு ஸ்ரீராம், அசோக் , மற்றும் எனது சமீபத்திய பயணத்தில் எடுத்தவை – கம்போடிய சிற்பங்கள் திரு கோகுல் ( சிங்கப்பூர் நண்பர் – கிரிக்கெட் ரசிகர் ).


பல முறை நாம் பார்த்த வடிவம்தான் இந்த வராஹ சிற்பம், நாம் முன்னரே பாசுரங்களையும் வைத்து அலசியது என்றாலும் (( பாசுரங்களையும் வைத்து அலசியது))இப்போது ஒரு புதிய பார்வையில் பார்க்கிறோம், இல்லை படிக்கிறோம்

முதலில் முழு சிற்பத்தையும் பார்ப்போம். அதுவும் அசோக் உதவியுடன் சிற்ப நுணுக்கங்களை விளக்கு போட்டு பார்ப்போம்.


புரிகிறதா ? மல்லை சிற்பி ஒரே சிற்பத்தில் எத்தனை எத்தனை விதமான கை வடிவங்களை உயிரோட்டத்துடன் கருங்கல் குகையில் செதுக்கி நமக்கு அவனது ஆற்றலை காட்டுகிறான் பாருங்கள்.

பட்டியலிட்டு ஒன்றொன்றாய் பார்ப்போம். பொறுமையாகப் பாருங்கள். செதுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு உருவமும் ஒரே அளவில் இல்லை, எனினும் ஒரு குறிப்பிட்ட உருவத்தின் அளவுகள் அனைத்தும் ஒன்றுக்கொன்று இணையானவை.

3884388838913903390639103908391239153918392039223924392739293932
இன்னும் முடியவில்லை. என்னடா கைகளை கட்டி விட்டு கடைசியில் இரண்டு கால்களா என்று பார்க்கிறீர்களா? . முக்கியமான படங்கள் – முடிவில் வந்த இரண்டு படங்கள்.


பல்லவ சிற்பிகளின் அற்புத திறனை அங்கோர்வாட் சிறப்புடன் ஒப்பு நோக்கும் ஒரு முயற்சி.

நண்பர் கோகுல் அவர்களுக்கு நன்றி – அங்கோர்வாட் அழகிகளுக்கும். பல்லவ சிற்பத்திற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் – சம்பந்தம் இல்லை, வேற்றுமை. கண்டு பிடியுங்கள் பார்ப்போம். குனிந்து பாருங்கள்.

சரி படத்தை பாருங்கள். கால்களை பாருங்கள்.

ஒரு ஓவியத்தை தீட்டும் போது நாம் ஒரே பரிமாணத்தில் கொண்டு வருவது போல அவர்கள் சிற்பத்தையும் செதுக்கி உள்ளனர். ஆனால் பல்லவ மகா கலைஞனோ நேரில் நிற்கும் பாணி என்ன ஒருவர் திரும்பி சுவரை பார்க்கும் பாணியை கூட கால்களில் கொண்டு வந்து விட்டான்.

மேலும் சில படங்கள் – உங்கள் ரசனைக்கு

ஒளித்துநின்று அம்பு எய்தல் தருமமோ?

முன்னர் நாம் வாலி வதம் தாராசுரம் சிற்பம் பார்த்தோம். அதில் இராமன் சண்டையிடும் வாலியை நோக்கி குறி பார்க்கும் வரையிலும் பார்த்தோம். இப்போது கதையின் அடுத்த காட்சி – ஆனால் அங்கு இல்லை, கம்போடியா பாண்டிய ஸ்ரெய் சிற்பம்.

அற்புத வடிவம். இரண்டு காட்சிகள் ஒரே சிற்பத்தில். முதல் காட்சி ( வலம் இருந்து இடம் – நீங்கள் சிற்பத்தை பார்க்கும் படி ) இராமன் நாணை எய்து விட்டான் – அவனது வலது கரத்தை பாருங்கள் – நானை விட்ட பின்னர் அப்படியே படம் பிடித்தாற்போல உள்ளது .

வில்லின் கயிர் முடி வரையிலும் செதுக்கி உள்ள சிற்பியின் திறன் அபாரம்.

வாலி சுக்ரீவன் – இருவரின் முகங்கள் – சண்டையின் உக்கிரத்தை வெளி காட்டுகின்றன. அவர்கள் கால்களை கொஞ்சம் பாருங்கள் – வினோதமான வடிவமைப்பு – குரங்கின் கால்கள் – கை ( வாலியின் கை) முட்டி – மனித கை போல – சுக்ரீவனை அடிக்க உயர்ந்து உள்ளது.

அடுத்த காட்சி – வாலி தரையில் விழுந்து – தாரையின் மடியில் கிடக்கிறான். அவனது முகத்தை கொஞ்சம் பாருங்கள் – கோபக் கணைகள் – மார்பில் ராமனின் கணை – கம்பனின் வர்ணனையை இப்போது பார்ப்போம்.

இராமன் மறைந்து நின்று எய்திய அம்பினை வாலி மார்பில் வாங்கிக் கொண்டே இராமனைப் பார்த்து நியாயம் கேட்க்கிறான். (கம்பராமாயணம்)

“இருவர் போர் எதிரும் காலை இருவரும் நல் உற்றாரே
ஒருவர்மேல் கருணைதூண்டி ஒருவர் மேல் ஒளித்துநின்று
வரிசிலை குழைய வாங்கி வாய் அம்பு மருமத்து எய்தல்
தருமமோ பிறிது ஒன்று ஆமோ தக்கிலது என்னும் பக்கம்”

உரை: ஒரு போரில் இரு வீரர் எதிர்த்து நிற்கும்போது அவ்விரண்டு பேரையும் ஒரு சமமாக – நல்ல உறவினராகக் கொள்வது சிறந்தது. நீ அவ்வாறு கருதுவதற்கு மாறாக அவ்விருவருள் ஒருவர் மீது கருணை கொண்டு மற்றவர் மீது மறைந்து நின்று வில்லை வளைத்துக் கூரிய அம்பை மார்பில் பாய்ச்சுதல் அறமாகுமோ! இது தக்கதன்று என்று கருதப்படும் பட்சதாபமே ஆகும்.

மேலும் வாலி சொல்லுவான்:

” வீரம் அன்று விதி அன்று மெய்ம்மையின்
வாரம் அன்று நின் மண்ணினுக்கு என் உடல்
பாரம் அன்று பகை அன்று பண்பு அழிந்து
ஈரம் இன்றி இது என் செய்தவாறு அரோ”

உரை:இராமா! நீ செய்த இச்செயல் வீரமுடையதன்று; நூல்களில் விதித்த முறையன்று; உண்மையை சார்ந்ததும் அன்று; உனக்கு உரியதான இவ்வுலகத்துக்கு என் உடல் ஒரு சுமையும் ஆகாது; நான் உனக்கு பகையும் அல்லேன்; இங்ஙனம் இருக்கவும், நீ உன் பெருமைக் குணம் அழிந்து அன்பின்றி இச்செயலைச் செய்த விதம் எக்காரணத்தாலோ?

நியாயம் கேட்ட வாலியைப் பார்த்து இராமன் தான் ஏன் அவ்வாறு வாலியின் மீது அம்பெய்தினேன் என்பதையும், அண்ணனுக்காக உயிரையும் கொடுக்க முன்வந்த சுக்கிரீவனுக்கு சந்தேகத்தால் வாலி இழைத்த அநீதியையும், அவன் மனைவி தாரையை அபகரித்ததுவும் வாலிக்குத் தகாது என்பதனையும் எடுத்துச் சொல்வான்.

“ஈரம் ஆவதும் இற் பிறப்பு ஆவதும்
வீரம் ஆவதும் கல்வியின் மெய்ந்நெறி
வாரம் ஆவதும் மற்றும் ஒருவன் புணர்
தாரம் ஆவதைத் தாங்கும் தருக்கும் அரோ”

உரை: அன்புச் செயலாவதும், உயர்குடியில் பிறந்த தன் பயன் ஆவதும், வீரத்தின் பயன் ஆவதும், மற்றொருவனுக்குச் சேர்ந்த மனைவியைக் கற்புத் தவறாதபடி பாதுகாக்கும் பெருமையே அன்றோ”


“ஆதலானும் அவன் எனக்கு ஆருயிக்
காதலான் எனலானும் நிற் கட்டெனென் “

நீ இப்படியெல்லாம் செய்தாய் ஆதலாலும், இந்த சுக்கிரீவன் என் உயிர் போன்ற நண்பன் என்பதாலும் உன்னைக் கொன்றேன். என்று சொல்வான் இராமன்.

நூறாவது பதிவு – ஒரு அறிய சிற்பம் – ஒரு அற்புத மனிதர் – திரு ஜெயபாரதி ஐயா

இது இந்த வலைப்பக்கத்தின் நூறாவது பதிவு. – நூறு சகோதரர்களான கெளரவர்களின் முடிவுக்காலத்தின் நிகழ்வு ஒன்று நமது நூறாவது பதிவாக மலர்கிறது. பீமனுக்கும் துரியோதனுக்கும் இடையே நடக்கும் துவந்த யுத்தம்.

நூறு பதிவுகள் அதுவும் ஆரம்பித்த குறுகிய காலத்திற்குள் இட முடிந்ததற்கு காரணம் நண்பர்களும், நல் அறிஞர்களும் வழிகாட்டி ஊக்கப்படுத்தியதால்தான். சில நல்ல உள்ளங்கள் இந்த வலைப்பதிவை ஆரம்பிக்க ஊக்குவித்து கலங்கரை விளக்கமாய் இருந்து வழிகாட்டியும் வருகிறார்கள். அந்த கலங்கரை விளக்கங்களில் ஒருவர், என்னை மட்டுமல்ல சாமானியர்களையும், ஆராய்ச்சியாளர்களையும், சங்க கால ஆர்வலர்களையும், சம கால ஆர்வலர்களையும் தன்னுடைய வசீகர எழுத்தால் கவர்ந்திழுப்பவரைத்தான் இன்று அறிமுகம் செய்யப் போகிறேன். இவர் ஒரு நடமாடும் கலைக் களஞ்சியம். ஒரு நிமிடம்! இவருக்கு அறிமுகம் தேவையா! அப்பேர்பட்டவர் யார்: அவர்தான் Dr. S. ஜெயபாரதி, இவருடைய வரலாற்று படைப்புகளும், கலாச்சார, பண்பாடு பற்றிய படைப்புகளும் இவருக்கு உலகெங்கும் ஏராளமான ரசிகர்களையும், ஆர்வளர்களையும் உருவாக்கியுள்ளது. இவரது மேலாண்மை திறம் வியக்கத்தக்கது, ஒருவரின் மனதை எளிதாக அறிந்துகொள்பவர். இவர் பங்குபெறும் மின் குழுமங்களில் யாரேனும் ஒரு சுவாரசியமான தகவலைத் தெரிவித்தாலோ அல்லது சந்தேகங்களை தெரிவித்தாலே, அதை நிவர்த்தி செய்ய முன் நிற்பவர், தவறிருந்தால் சுட்டிக் காட்டுவதோடு சரியான பாதையில் செல்ல வழிகாட்டுபவர். இவரது துணையிருந்தாலே போதும் இலக்கை நோக்கி பாதி தூரம் சென்ற நிம்மதி கிடைக்கும் நமக்கு. நம் மண்ணின் பெருமையை அறிந்து கொள்ளும் தேடலில் ஒவ்வொருவரையும் ஈடுபடுத்துவதில் இவருக்கு அலாதிப் பிரியம்.

( இன்றைய அரிய மனிதர்களில் ஒருவரான் இவரை அறியாதவர் யாரேனும் இருந்தால் உடனே பார்க்கவும் டாக்டர் சி. ஜெயபாரதி)

நாம் பார்க்கப் போகும் இன்றைய பதிவு அவருடைய வலைப்பதிவிலிருந்து எடுக்கப்பட்டதுதான். துவந்த யுத்தம்

நாம் ஏற்கனவே இந்த சிற்பத்தை ஒத்த அதே வகை சிற்ப பதிவுகள் பலவற்றை பார்த்திருக்கிறோம். அதனால் இந்த சிற்பத்தை நான் விளக்குவதை விட Dr. ஜெ. பி. யின் விளக்கம் இன்னும் பொருத்தமாக இருக்கும் என்று அவரை அணுகினேன். நூறாவது பதிவு வேறு. உடனே அனுமதித்த அவரது கருணையை என்னவென்று சொல்வது. என்னைப் போன்ற பல பேரை அவர் உருவாக்க அவர் பல காலம் வாழவேண்டும் என்று இறைவனை இறைஞ்சுவோம். கரும்பு தின்ன கூலியா

அற்புதமான இந்த சிறப்புப் பதிவை வழங்கும் டாக்டர். ஜே.பி ஐயாவுக்கு நன்றி.

உலகத்தின் தலை சிறந்த சிற்பங்களின் புகலிடங்களில் ஒன்றான பண்டே ச்ரெய் ஆலயங்கள் ஒன்றில் உள்ள சிற்பத்தை இன்று காண்போம். “அன்கோர் வாட்”டில் இருந்து வடகிழக்காக 15 மைல்கள் தொலைவில் உள்ளது இந்த பண்டே ச்ரெய்.

[“The lacy setting is superbly executed and the balanced rhythm and harmony
of the scene itself cannot be surpassed in any work of man” – Reginald le May.

துல்லியமான அபிநயத்தோடு துவந்த யுத்தத்தை, பழங்கதையை எடுத்துக்காட்டும் இந்த சிற்பங்களை விஞ்சிய எதுவும் இருப்பது அரிதே!]

இன்றைய சிற்பத்தில் உள்ள காட்சி பாரதப் போரின் கடைசி கட்டத்தில் நடந்த ஒரு நிகழ்வு.

பாரதப்போர் முடியும் தருவாயில் அனைவரையும் இழந்து, படுகாயப்பட்டு களைப்படைந்த துரியோதனன் மறைந்திருக்கிறான். அந்த சமயம் பார்த்து பாரதப்போரை முடிவுக்கு கொண்டுவர முடிவு செய்து அவனை தேடிவரும் பாண்டவர்களின் கண்ணில் படுகிறான். பாண்டவர்கள் ஐவர் ஆனால் அவனோ ஒருவன் ஆகவே பாண்டவர்களில் யாரேனும் ஒருவரோடு யுத்தம் செய்யும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. பாண்டவர்களில் பத்தாயிரம் யானை பலம் கொண்ட துரியோதனனுக்கு இணை பீமன் மட்டும் தான். காயம்பட்டு களைப்படந்திருந்தாலும் கதாயுதத்தை கையாளும் திறமையால் பீமனுடன் போர் புரிய சம்மதிக்கிறான் துரியோதனன். பீமனும் கதாயுத்தை கையாள்வதில் வல்லவனே.

கதை என்பது நீண்ட பிடியும் உருண்ட தலைப் பகுதியும் உடைய ஆயுதம். இதை பயன்படுத்தியே இரதங்களை உடைத்தும், யானைகளை கொன்றும், கவசங்களை உடைத்தும் எதிராளியை நிலை குலையச் செய்வர்.

கிருஷ்ணரும், பாண்டவர்களும் வேடிக்கைப் பார்க்க, துரியோதனனுக்கும், பீமனுக்கும் கதாயுத பயிற்சி அளித்த பலராமரை நடுவராக கொண்ட துவந்த யுத்தம் துவங்குகிறது. துவந்த யுத்தம் என்பது இருவருக்கு இடையே மட்டும் நடைபெறும் சண்டை. அது இறுதிவரைக்கும் நடைபெறுவதாக இருக்கலாம் அல்லது ஏதாவது ஒரு உத்தியின் மூலம் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படலாம்.

யுத்தம் நடைபெறுகிறது ஒரு காலகட்டத்தில் பீமன் களைப்படைகிறான், ஆனால் பத்தாயிரம் யானை பலம் கொண்ட துரியோதனோ மிகவும் எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் போர் புரிகிறான். பீமன் சற்று அயர்ந்த நேரம் தரையிலிருந்து எழும்பிய துரியோதனன் தன் கதையை பீமனின் தலையை நோக்கி தாக்க முற்படும் நேரத்தில் துரியோதனின் பலவீனமான இடது தொடையை தாக்குமாறு கிருஷ்ணன் பீமனுக்கு ஆலோசனை கூறுகிறான். துரியோதனன் எழும்பியதால் அவன் தொடை பீமனுக்கு எளிய இலக்காக அமைய, பீமனின் அடி மரண அடியாக துரியோதனின் தொடையில் விழ, தொடை பிளந்து குற்றுயிரும் கொலையுயிருமாய் வீழ்கிறான் துரியோதனன். யுத்த விதிகளை மீறியதால் தன் கலப்பாயுதத்தால் பீமனை தாக்க முயலும் பலராமனை தடுக்கிறார் மாயக் கண்ணன்.

இந்த யுத்தக் காட்சியை அற்புதமாக எடுத்துக்காட்டும் சிற்பத்தை பார்க்கலாம் இப்பொழுது.

வலதுபக்கம் அமர்ந்து கொண்டு யுத்தத்தை பார்த்து ஆரவாரம் செய்யும் பாண்டவர்களில் நால்வர்.

நடுவில் போரிடும் பீமன், அந்தரத்தில் பறந்து பீமனின் தலையை சரியாக குறிவைக்கும் துரியோதனன்.

இடது பக்கம் நான்கு கைகளோடு பலராமரின் ஆயுதத்தை தடுத்து நிறுத்தும் கிருஷ்ணர்.

துவந்த யுத்தத்தை அற்புதமாக விளக்கும் சிற்பம். எங்கேயோ கம்போடியாவில் பாரதப்போரை விளக்கும் சிற்பம் பாரதம் என்றழைக்கப்படும் இந்தியாவில் இல்லை!

(அருமையான தமிழில் மொழி பெயர்த்து உதவிய சதீஷுக்கு நன்றி )

காண்டவ ஆரண்ய தகனம் – ஒரு அபூர்வ சிற்பம் ,கம்போடியா

கம்போடியாவின் ‘படேய் ஸ்ரி’ யில் ஒரு அற்புதமான சித்திரம். இந்தக் கலைச் சித்திரத்தின் பின்னணி முதலில் எனக்குத் தெரியாது. ஆனால் அந்தக் கலைப் படைப்பின் ஆழம் என்னை மூழ்கடித்துவிட்டதால் எங்கெங்கோ தேடியதில் ‘மகாபாரதத்தில்’ அதன் கதை கிடைத்தது. அற்புதமான கதை.. அதை நம் கண்முன்னே கொண்டுவந்த அற்புத சிற்பிகள்:

காண்டவ ஆரண்ய தகனம்தான் அந்தக்கதை. இன்றைய மத்தியப் பிரதேசத்திலிருந்து டில்லி வரை பரந்த காடுகளைக் கொண்ட பகுதிக்கு காண்டவப்பிரஸ்தம் என்று பெயர் அப்போது நிலவிவந்தது. பஞ்ச பாண்டவர்கள் தங்கள் தலைநகரகமாக இந்திரப்பி்ரஸ்தத்தை உரு்வாக்கும் முயலும் தருணம். எங்கே உருவாக்குவது என்று கண்ணனை ஆலோசனை கேட்கிறான் அருச்சுனன். அந்தச் சமயத்தில் ஒரு அந்தணன் தானம் கேட்டு அவர்களிடம் வருகிறான். என்ன வேண்டும்.. கேளுங்கள்.. என்று அருச்சுனன் அந்த அந்தணனை வினவும்போது அந்த அந்தணன் கேட்கும் தானம் அவனை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

‘இதோ இந்த ஆரண்யத்தையே எரித்து அந்த பெருந்தீயினைத் தானமாக தந்தருள்க’ என்று கேட்கும் அந்தணன் அருச்சுனனுக்கு விசித்திரமாகப் பட்டாலும் காக்கும் தெய்வமாம் கண்ணனுக்கு அந்தணன் வடிவில் வந்தது யார் என்று தெரிந்து விட்டது. ‘சாட்சாத் அக்னி பகவானே’ அந்தணனாக வந்ததும் புரிந்தது.

அக்கினியே வந்து ஆகாரமாக அக்கினியை ஏன் கேட்கவேண்டும் என்று அருச்சுனன் வினவுகிறான். அப்படி நெருப்பு வேண்டுமென்றால் அந்த தேவதையே உருவாக்கிக் கொள்ளலாமே என்றும் கேட்கிறான். அதற்கு அக்கினிதேவன் தன் இயலாமையும் தான் வந்த காரணத்தையும் விளக்குகிறார்.

ஒரு சமயம் சுவேதகி என்னும் பேரரசன் தன் பேராற்றலை நிரூபிக்க தான் நீண்டகாலம் யாகபூசை செய்யவேண்டுமென அந்தணர்களை அழைக்கிறான். யாகம்தானே என்று அங்குள்ள அந்தணர்களும் ஒப்புக்கொண்டாலும் அது நீண்ட நெடிய வருடங்களாய் நீண்டுகொண்டே போவதில் அச்சப்படுகின்றனர். ‘இத்தனை காலம் யாம் இங்கு இந்த யாகத் தீயின் அமர்ந்து யக்ஞம் செய்ததே போதும் – எம்மை ஆளை விடு’ என்று கூறி எழுந்துவிடுகின்றனர். ஆனால் சுவேதகி கோபப்படுகின்றான். எப்படியும் செய்தே ஆக வேண்டுமென்று பிடிவாதம் பிடிக்க, அந்தணர்கள் அவனை சிவனை அழைத்துத் துணை கொள்ளுமாறு உபதேசம் செய்கின்றனர் (அவனால் முடியாதென்று தெரிந்தே). ஆனால் அதை நம்பிய சுவேதகி முதலில் சிவனை நோக்கிக் கடுந்தவம் செய்கின்றான். சிவனும் அவன் முன் தோன்றுகிறார். அவனை சுயமாகவே முதலில் 12 வருடத்திற்கு நெய்யூற்றி இடைவிடாது யக்ஞம் செய்து வந்த பிறகு தன்னைப் பார்க்க ஆணையிடுகிறார்.

சுவேதகியும் சுயமாகவே 12 ஆண்டுகள் இடைவிடாது நெய்யூற்றி யாகம் செய்து வெற்றிகரமாக முடித்து சிவனிடம் சென்று தன் பழைய யாகத்தையும் முடித்துத் தர வேண்டுகிறான். அவன் விருப்பப்படியே சிவபெருமானும் சிறந்த துர்வாசமுனியையே துணையாக அனுப்பி வைக்க, அவன் தடைப்பட்டுப்போன பழைய யாகம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. சரி போகட்டும். ஆனால் இனிமேல்தான் வினையே..

அந்த 12 வருடங்களில் இடைவிடாமல் ஊற்றப்பட்ட நெய்யானது அக்கினிதேவனின் உடலில் ஊதிப் போய் அவனை மிகக் கோரமான நிலையில் வைத்துவிட்டது. உடம்பில் மிக அதிகமான நெய் போகவேண்டுமானால் எங்காவது மிகப்பெரிய இடத்தில் தீயை வரவழைத்து அந்தப் பெருந்தீயில் கூடுதல் நெய் சுட்டெரிக்கப்படவேண்டிய கட்டாயம் அக்கினிதேவனுக்கு உருவாகிவிட்டது. மறுபடியும் சிவன் உதவிக்கு வந்தார். ‘காண்டவ ஆரண்யம் தற்சமயம் கொடுமையான உயிரினங்களின் தொந்தரவில் உள்ளதால் அந்த ஆரண்யத்தை சாம்பலாக்கி உன் துயரைப் போக்கிக் கொள்ளேன்’ என்றார் சாம்பசிவன்.

ஆதிக் கடவுளே சொல்லும்போது இனி என்ன கவலை என்று அந்த காண்டவ ஆரண்யத்தை சாம்பலூட்டும்போதுதான் இன்னொரு பிரச்னை வந்தது. நாகர்களின் தலைவனான தட்சகன் அந்தக் காட்டிலே தனி ராஜ்ஜியம் செய்துவந்தான். தேவேந்திரனுக்கு உற்ற தோழன். ஒவ்வொருமுறை அக்னி காட்டை அழிக்கும்போதெல்லாம் இவன் இந்திரனிடம் முறையிட அவன் அவ்வளவு முறையும் வருணனை வரவழைத்து மாபெரும் மழையினைத் தருவித்து அந்தக் காடுகளை ரட்சித்துவந்தான். அதனால் அக்கினியால் ஓரளவுக்கு மேல் போராடமுடியவில்லை.

அக்கினி நடந்த விஷயங்களைச் சொல்லினான். அதனால்தான் அவன் கண்ணனின் கருணாகடாட்சத்துக்காக ஏங்கி இந்தக் காடுகளை தீமயமாக்கி தனக்கு இரையாக தானம் கேட்டான்.

அருச்சுனனுக்கும் பாண்டவருக்கும் அந்த சமயத்தில் ஒரு நல்ல நாடு தேவைப்பட்டுள்ளதால் கண்ணனும் இசைந்து அருச்சுனனிடம் இந்த காண்டவப்ரஸ்தக் காடுகளை அழைத்து இந்திரப்பிரஸ்தநகரம் உருவாக்குமாறும் ஆணை கொடுத்தான்.

அக்கினியால் முடியாத அந்த அழிவினை அருச்சுனன் செய்ய ஆரம்பித்தான். ஆனால் இந்திரன் அவனை தடுக்க வருணனை ஏவினான். அருச்சுனன் பாணங்கள் வருணனைத் தடுத்ததோடு மட்டுமல்லாமல் அந்தக் காடுகளுக்கே வானத்துக் கூரையாக அம்புகளால் ஆகாயத்தில் காப்பு வைத்து அழித்தான். அப்போது அந்த தட்சகன் காட்டில் இல்லாமல் வெளியே சென்ற சமயம். தட்சகன் மகனான அசுவசேனா மிகப் பலம் கொண்டு போராடி முடியாமல் அந்தக் காட்டிலிருந்து வெளியேறப்பார்த்தான். அந்த மகனுக்கு உதவியாக தட்சகனின் மனைவி அசுவசேனாவை தனக்குள் முழுங்கிக் கொண்டாள். ஆனாலும் அருச்சுனம் விடாமல் அந்த நாகதேவியில் தலையை சீவி அசுவசேனாவை வெளிக் கொணர முயலும்போது மறுபடியும் இந்திரன் தன் நண்பனின் மகனை காப்பாற்ற முன் வந்தான். வாயுபகவானை அனுப்பி ஒரு கணம் மயக்கக் காற்றை வீசி அருச்சுனன் மயங்கும் வேளையில் அசுவசேனா ஓடிவிட உதவிசெய்தான். மறுபடியும் எழுந்த அருச்சுனன் மிகவும் கோபம் கொண்டு மாபெரும் போர் செய்து தன் வில் வித்தையைக் காண்பித்து வாயு தேவனை விரட்டி அடித்தான். கண்ணில் கண்ட துன்பப்படுத்தும் உயிரினங்கள் அனைத்தையும் அழிக்கத் தலைப்பட்டான். கருடன் போன்ற பறவைகள் தவிர்த்து அனைத்து உயிரினங்களும் அழிவைக் காண ஆரம்பித்தன. வேறு வழியில்லாமல் காட்டில் ஆங்காங்கே இருந்த அசுரர்களும், கந்தர்வர்களும் யட்சர்களும் அருச்சுனனோடு போருக்கு வந்தனர். அருச்சுனன் கண்ணன் உதவியை நாட கண்ணனின் சக்கரம் பல அசுரகணங்களை அழித்தது. முடிவில் மொத்தக் காடும் அக்கினி தேவனுக்கிரையாகி அவன் துன்பத்தைப் போக்கின.

பெரிய கதைதான். ஆனால் இந்தப் பெரிய கதையைப் பற்றிய சிற்பங்கள் இந்தியாவில் இல்லாமல் எங்கோ கம்போடியாவில் மிக அற்புதமான கலைச் சித்திரமாக வடிவமைக்கப்பட்ட விதத்தையும் அந்த சிற்பிகளின் கைவண்ணத்தையும் என்னவென்று சொல்வது? அற்புதம் என்று ஒரே வார்த்தையில் சொல்வது எந்த விதத்தில் பொருந்தும் என்றும் தெரியவில்லை.

இப்போது சிற்பங்களைப் பாருங்கள். ஐராவதத்தில் இந்திரன், இடி மழை பொங்கும் நீருடன் வருணன், (கீழே நீர் பொங்கும் காட்சி), ஒருபக்கம் அசுவசேனா நாகம் தப்பியோடும் சிற்பம், இன்னொரு சிற்பத்தில் சக்கரத்தோடு கண்ணனும் மறுபக்கத்தில் வில்லோடு கூடிய விஜயன், காட்டில் மற்ற விலங்குகள், மற்றும் பறவைகள் தப்பியோடுவது..

அப்பப்பா.. சிற்பிகளா இவர்கள். இல்லை.. கலைப் பிரும்மாக்கள்..



ஈசனை குறிபார்க்கும் காமன் – கம்போடியாவில்

நமது புராணங்களில் வரும் கதைகளின் தாக்கம் இந்திய எல்லைகளை தாண்டி எங்கெல்லாம் சென்றுள்ளது என்று அறியும் போது மெய் சிலிர்க்கிறது. கம்போடியா மற்றும் இந்தோனேசியாவில் இருக்கும் சிற்பங்களின் வடிவங்கள் சற்று மாறுபட்டு இருந்தாலும் அவற்றில் சித்தரிக்கப்பட்டிருக்கும் கதைகளின் ஆழம் பிரமிக்கவைக்கின்றது.

இன்றும் அது போல ஒரு அற்புத வடிவம் – கம்போடியா பன்திய ஸ்ரெய் கோவிலில் – காமன் ஈசனை குறி பார்க்கும் வடிவம் இதோ.

முன்னர் நம் சோழ சிற்பி தஞ்சை பெரிய கோவிலில் இதே கதையை மூன்று பாகங்களாக தன் சிற்பத்தின் மூலமாக இந்த கதையை விளக்கி இருந்தான். இப்போது கம்போடியா சிற்பி இதை சிற்பி இதை எப்படி சித்தரிக்கின்றான் – பார்போம்.

2449


ஒரே சிற்பம் – அதனிலேயே முழுக் கதையையும் அப்படியே காட்ட வேண்டும். காமன் தனது
நாணை ஏற்றி ஈசனை குறி பார்க்கிறான் – அது முதல் காட்சி. ஈசனின் அமர்ந்த
கோலம் – அருமை – ( அவர் அமர்ந்திருக்கும் ஆசனத்தின் கீழே மூன்று அடுக்கு – பல முனிவர்கள் , மிருகங்கள், பூத கணங்கள் ) – ஆனால் அவர் காமனை பார்க்கும் பார்வை – ஆம் – சுட்டெரிக்கும் பார்வை மிக மிக அருமை.

ஈசனின் மறு பக்கத்தில் – ஒரு பெண்மணி மிக பணிவுடன் ஈசனின் கரத்தில் இருந்து ருத்ராக்ஷ் மாலையை கையில் வாங்கியவாறு உள்ளது – ஈசன் தனது தி்யான நிலையை விட்டு பார்வதியிடம் காமனின் பாணத்தின் தாக்கத்தால் நாடுவதை காட்டவோ ?

திலோத்தமை – மகேசனையே மயக்கிய அழகு

இன்றைக்கு நாம் ஒரு மிக சுவாரசியமான கதை , அதனை ஒட்டிய ஒரு அற்புத சிற்பத்தை பார்க்க போகிறோம்.( கம்போடியா சிற்பம் இப்போது பிரெஞ்சு நாட்டு அருங்காட்சியகத்தில் உள்ளது )

முதலில் கதை – இல்லை இல்லை கதைக்குள் ஒரு கதை .அதிரூபசுந்தரிகள் என்றாலே நமக்கு ரம்பை, ஊர்வசி, மேனகை நினைவுக்கு வருவார்கள். அவர்களுடன் தில்லோதமை – ஆனால் இந்த சுந்தரியின் கதை வேறு .

இதனைபஞ்ச பாண்டவருக்கு மூத்தவரான தர்மராஜனுக்கு நாரதர் மகாபாரதத்தில் விளக்குகிறார்: காட்டில் அக்ஞானவாசத்தில் இருக்கும் பஞ்ச பாண்டவர், பாஞ்சால நாட்டு மன்னன் துருபதன் தனது மகள் திரௌபதிக்கு தக்க மணாளனை தேட வைக்கும் சுயம்வரத்தை பற்றி அறிந்து – அதில் பங்கேற்கின்றான் விஜயன். திரெளபதியையும் கைப்பிடிக்கின்றான்

தன் தாயிடம் தருமன், வெளியில் இருந்து, தாங்கள் பிட்சை கொண்டு வந்ததாக கூற, அவளும் சகோதரர்கள் அனைவரும் முறையே அதனை பகிர்ந்து கொள்ளுமாறு கூறுகிறாள்.

தருமருக்கு தர்மசங்கடம் – அப்போது அவ்வழியே வரும் நாரதர் நிலைமையை புரிந்து அறிவுரை கூறுகிறார். அழகிய பெண்ணால் கெட்டு அழிந்த அசுரர்கள் – சுண்டா மற்றும் உபசுண்டா எனும் இரு அசுரர்களின் கதையை சொல்கிறார்.

இருவரும் நிசும்பனின் புதல்வர்கள் ( நிசும்பன் ஹிரண்யகசிபுவின் வம்சத்தில் தோன்றிய அரக்கன் ) – இணை பிரியாதவர்கள் , சகோதர பாசம் மிகுந்தவர்கள் – தங்கள் அனைத்து உடமைகளையும் தங்களுக்குள் பங்கிட்டு வாழ்ந்தவர்கள். பெரும் வேள்வி நடத்தி, தாங்கள் இருக்கும் விந்திய மலையையே புகைக்க வைத்தனர். தேவர்கள் அவர்கள் தவத்தை கலைக்க பல முறை முயன்றும் முடியவில்லை . முடிவில் பிரம்மன் தோன்றி என்ன வரம் வேண்டும் என்று வினவ, இருவரும் சாகா வரம் கேட்க – முடியாது என்றார் பிரம்மன்.

பிறகு இருவரும் தங்கள் சகோதர பாசத்தில் நம்பிக்கை வைத்து – தங்கள் இருவர் கையால் மட்டுமே தங்கள் முடிவு நிகழும் என்ற வரம் பெற்றனர்.

இருவரும் வரத்தின் பலத்தால் பூலோகத்தையும் , இந்திர லோகத்தையும் வென்றனர். இவர்களை தடுக்க பிரம்மன் விஸ்வகர்மாவை அழைத்து – மூவுலகிலும் இல்லாத ஒரு அழகிய பெண்ணை உருவாக்க கட்டளை இட்டார் . விஸ்வகர்மன் உலகில் உள்ள அனைத்து அற்புத நுண்ணிய அணுக்களை கொண்டு திலோத்தமையை உருவாக்கினான். (தில் – எள் போன்ற நுண்ணிய அணுக்கள் – உத்தம – மிகவும் மேலான )

பிரம்மன் அவளை சுண்டா மற்றும் உபசுண்டாவை மயக்கி இருவருக்குள் சண்டை வரச் செய்ய கட்டளை இட்டார். தில்லோதமையும் அவ்வாறே அங்கு செல்லும் முன் ஈசனையும் இந்திரனையும் வணங்கி பிரதக்ஷணம் செய்தாள். அப்போது அவள் அழகில் வைத்த கண் வாங்காமல் பார்த்த ஈசன், அவள் சுற்றிவரும்போது கூட அவளை பார்க்க நான்கு தலைகளை கொண்டதாகவும், இந்திரன் ஆயிரம் கண்கள் பெற்றதாகவும் கேள்வி.
(இந்திரனின் ஆயிரம் கண்களுக்கு வேறு பல கதைகளும் உண்டு !!)

நினைத்தது போலவே, திலோத்தமையின் அழகில் மயங்கி இரு இணை பிரியா சகோதரர்களும் ஒருவரோடு ஒருவர் சண்டை இட்டு மாண்டனர்.

இதனால் நாரதர் தர்மனுக்கு பெண் விவகாரங்களில் மிக ஜாக்கிரதையாக செயல் பட வேண்டும் என்றும் அண்ணன் தம்பி உறவு அவளால் முறிய வாய்ப்பு உண்டு என்று கூறி, அவர்களுக்கு …….அது வேற கதை . நாம் இன்றைக்கு இதனுடன் நிறுத்துவோம்.

இப்போது சிற்பம். கம்போடியா நாட்டில் இருந்து தற்போது பிரெஞ்சு நாட்டு குய்மேட் அருங்காட்சியகத்தில் இருக்கும் இந்த அற்புத சிற்பம். சுண்டா மற்றும் உபசுண்டா திலோத்தமையை நடுவில் வைத்து சண்டையிடும் காட்சி.

கம்போடியாவில் காரைக்கால் அம்மை

கம்போடியா ( Khao Preah Vihear) கோவில் சிற்பம் சிலவற்றை நாம் முன்பு பார்த்தோம். அவ்வாறே இன்றும் ஒரு அறிய சிற்பம்.

தொலைவில் இருந்து பார்க்கும் போது நடராஜர் மட்டுமே தெரிந்தார். அழகிய ஆடும் கோலம் – பத்து கைகளும் ஒரே கை வேகமாய் ஆடுவது போல அழகே உள்ளது.


கொஞ்சம் கீழே பார்த்தால் அனந்தசயனன், காலை அன்பாய் பிடித்து விடும் லக்ஷ்மி ( சிற்பம் சிதைந்து விட்டது ) நாபிக்கமலத்தின் மேல் பிரம்மன். அவர்களை அடுத்து இரு கிளிகள் – அதற்கு மேல் ஒரு யாழி – யாழியின் மேல் இருப்பவர் யார் என்று தெரியவில்லை – அதை அடுத்து இரு குரங்குகள் !!

சரி அத்துடன் விட்டு விடலாம் என்று பார்த்தால் ஆடல் வல்லானின் அற்புத நடனத்தை ரசிக்கும் இருவர் ( தலைகள் சிதைந்து விட்டன ) – ஆனால் வலது புறம் இருப்பது ஒரு பெண்மணி – அவர்களின் அங்க குறிப்புகளை சோழர் கால காரைக்கால் அமையின் சிலையுடன் ஒப்பிடும் போது அப்படியே ஒத்து உள்ளது. (சுருங்கிய மார்பகம்) ஒருவேளை தன்னை பேய் போல ஆக்குக என அம்மை இறைவனை வேண்டிக்கொண்டதால் இளமை மாறியதோ. அம்மையின் முழு கதையை வரும் மடல்களில் பார்ப்போம்

(அம்மை தாம் அருளிய அந்தாதியில்)

பெறினும் பிறிதியாதும் வேண்டேம் நமக்கீது
உறினும் உறாதொழியுமேனும் – சிறிதுணர்த்தி
மற்றொரு கண் நெற்றிமேல் வைத்தான் தன் பேயாய
நற்கணத்தில் ஒன்றாய நாம்

எனக் குறித்தருள்கிறார். இதனால் பேய் வடிவம் என்பது சிவகணங் களில் ஒன்றான பேய்வடிவம் என்பதை அறியலாம்.




காரைக்கால் அம்மை பெரும் பாலும் தென் இந்திய இலக்கியங்களிலேயே வருபவர், பல தமிழருக்கே தெரியாத ஒருவர். அவர் எங்கே அங்கே சென்றார் ? தமிழக சிற்பிகள் அல்லது அவர்களது வழி தோன்றல்கள் இல்லை அவர்களிடம் கலை பயின்றவர்கள் இதை வடித்து இருக்கலாம். ஏனெனில் சிலையில் தமிழ் / சோழ கலை தெரிய வில்லை , பெரும்பாலும் தென் கிழக்கு ஆசிய சாயலே தெரிகிறது.

images courtesy
http://www.sundial.thai-isan-lao.com/phanom_rung.html

கல்லை மட்டும் கண்டால் ..கண்முன்னே சிலை திருட்டு

நாளிதழ்களில் அவ்வப்போது சிலை திருட்டு பற்றி படித்துள்ளேன். ஆனால் இந்த படங்களை பார்த்த பின்னர் நானே சிதைந்து போனேன்.
938

புகழ் பெற்ற இந்த இடம் கம்போடியாவில் உள்ள கபால் சிபியான் என்ற இடம். இங்கே ஆயிரம் லிங்கம் உள்ள அருவி உண்டு… ஜல சயன பெருமாள் சிற்பம். என்ன அருமையான வேலைப்பாடு – ஒரு காட்டின் நடுவில் ரம்மியமான சௌந்தர்யத்தில் இயற்கை எழில் கொஞ்ச கொட்டும் அருவியின் தாளத்தில் பல நூற்றாண்டுகள் நித்திரையில் இருந்த கோலம்…நாபியில் இருந்து பிரம்மன், காலருகில் லெட்சுமி ….மூன்று மண்டபங்கள் – தனி தாமரைஆசனத்தில் மீண்டும் பிரம்மன் …அனைத்தும் கலைக்க பட்டு…சிலை திருட்டு>>>>>>
944946949

முதலில் லக்ஷ்மி முகம் …அப்படியே பெயர்த்து எடுக்க எப்படி தான் மனம் வந்ததோ ? ஐயோ ..நெஞ்சம் வெடிக்கிறது…இதை படம் எடுத்து அதிகாரிகளுக்கெல்லாம் அனுப்பி உள்ளனர்…அப்போதும் எதுவும் நடக்கவில்லை…அதாவது நல்லது நடக்க வில்லை…அத்துடன் நின்றார்களா மாபாதகர்கள் …அடுத்து பெருமாளையும் பெயர்த்து எடுத்து விட்டனர்…
942
இப்போது எதோ ஒரு நல்ல உள்ளம் அதை செப்பனிட்டு உள்ளது…எனினும் அந்த புராதானமான சிலை …..951

இந்திரனின் யானைக்கு முப்பத்தி மூன்று தலைகள் !

யானை என்றாலே நமது சிற்பிக்கு அதித ப்ரியம்…அதிலும் வெள்ளை யானை என்றால் கேட்க வேண்டுமா… அதிலும் தேவர்களுக்கு அதிபதியான இந்திரனின் வெள்ளை யானை என்றால்..அப்பப்பா ….ஐராவதம் ….வஜ்ராயுதம் கொண்ட இந்திரனின் யானைக்கு முப்பத்தி மூன்று தலைகள்…ஒவ்வொரு தலைக்கும் ஏழு தந்தங்கல்…இதை எப்படி சிற்பம் / ஓவியத்தில் சித்தரிப்பது ….இங்கே ஒரு ஓவிய முயற்சி பாருங்கள்…

 

இதில் என்ன வியப்பு என்றால் ஐராவதம் தாய்லாந்து மற்றும் கம்போடியா , விஎத்னம் போன்ற இடங்களில் மக்கள் இன்றும் மிக நேர்த்தியாக வழிபடுகின்றனர் …அங்கே இராவடி என்று ஒரு ஆறு உள்ளது…இங்கே பாருங்கள் தாய்லாந்தில் இராவடி என்னும் ஒரு அருங்காட்சியகத்தில் மிக பிரம்மாண்டமான சிலை..சிலையில் ஐராவதத்திர்க்கு மூன்று தலைகள் வைத்து கம்போடியா சிற்பி செதுக்கிய வண்ணம் மிகவும் அருமை…இம்மாதிரி வடிவங்கள் அங்கு நிறைய உண்டு…

 

இதோ சிலவற்றை பாருங்கள்…



 

இந்தியாவிலும் பல இடங்களில் இந்திரனின் ஐராவதத்திர்க்கு சிலை இருந்தும் ஒரு தலை கொண்ட சிற்பங்களே அதிகம்…இதோ சோமநாதபுரம் மற்றும் மும்பை அருகே உள்ள பாஜா குடவரை சிற்ப்பங்கள்..

585 592

 

தஞ்சை பெரிய கோவில் புகழ் பெற்ற ஓவியங்களிலும் ஐராவதம் வரும்….அதை வேறொரு இழையில் பார்ப்போம்