காதல் வள்ளியும் கள்ளக் கந்தனும்:

இன்று மீண்டும் தஞ்சை பெரிய கோவில் சிற்பம் – நன்றிகள் திரு சதீஷ் ( படங்களுக்கு ), திரு திவாகர் ( அருமையான தமிழில் வள்ளியின் கதையை எழுதி கொடுத்ததற்கு )

முருகன் கோயில் – தஞ்சை பெரிய கோவில் வளாகம் – மயில் மீது முருகன் , அவனை சுற்றி வள்ளி திருமணம் கதை விளக்கும் சிற்பங்கள் .



தொண்டைவள நாட்டிலே உள்ள வள்ளிமலை போலவே அங்கு வாழும் வேடர்களும் அவர்கள் தலைவனுமான நம்பியும் தங்கள் தருமத்திற்கு ஏற்ப சிறந்து விளங்கினர். ஆனாலும் அந்த நம்பிக்கும் ஒரு குறையுண்டு. குழந்தை இல்லையே என்ற ஒரு குறைதான். அதுவும் பெண் குழந்தை என்றால் நம்பிக்கு மிக மிக விருப்பம்.

சித்தர்கள் வாழும் அந்த அழகான வள்ளிமலையின் ஒரு ஓரத்திலே சிவமுனி எனும் தவயோகி தன் தவத்தில் ஈடுபட்டிருந்தார். அந்தத் தவக் கோலத்தில் இருக்கும் சிவமுனிக்கும் ஒரு சோதனை ஒரு அழகிய புள்ளிமான் வடிவில் வந்தது. தன் தவம் முடிந்து குடிலில் இருந்து வெளி வரும் வேளையில் அந்தப் புள்ளி மான் துள்ளலாக அவர் முன் ஓடிவந்தது. புள்ளிமானின் ஒய்யார அழகு ஒருகணம் அந்த தவமுனிவரை மயக்கியதன் காரணம், அவர் தவவலிமையால் புனிதமான பலிதமாகி, அந்தப் பெண்மான் கருவுற்றது.

அந்தப் புள்ளிமான ஒரு அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்து, அங்கிருக்கும் வேடர்களின் வள்ளிக் கிழங்குக் குழியில் விட்டு விட்டு ஓடிவிட்டது. ஆதரவற்ற அந்த ஒளி வீசும் அழகான பெண் குழந்தையை தெய்வம் தந்த குழந்தையாக வேடர்களின் தலைவன் பாவித்து, வள்ளி என்றே பெயரிட்டு வளர்த்துவந்தான். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் செல்லமாக வளர்க்கப்பட்டாலும் அந்த அழகு வள்ளி தங்கள் வேட்டுவக் கடவுளான வேலவனையே மனம் முழுவது வரித்து, அந்த ஆறுமுகத்தான் கந்தனுக்காகவே தான் பிறப்பிக்கப்பட்டதாகவே அவனையே நினைத்து வாழ்ந்து வந்தாள்.

கன்னிப் பருவத்துப் பெண்களை சோளக் கொல்லைக் காவலுக்கு வைப்பது வேடர்களின் வழக்கம். சோளப்பயிர்கள் மேலோட்டமாக வளர்ந்து சோளம் (தினைப் பருப்பு) அதிகம் வளரும் பருவத்தில், அந்தத் தினைப் பயிர்களின் மத்தியில் ஒரு பரண் அமைத்து அந்தப் பரண் மேலிருந்து குருவிகள், கிளிகள் வாராமல் இருக்க பருவப் பெண் வள்ளி காவல் காத்திருக்கும் ஒரு சுப வேளையில் வள்ளியின் மனதில் என்றும் கோயில் கொண்டுள்ள கந்தன் தன் மலைக் கோயிலை விடுத்து அவள் மனக்கோயிலின் நாயகனாய் வர எண்ணம் கொண்டான்.

சிற்பத்தை பாருங்கள் – பரண் மீது வள்ளி , கையில் உண்டிகோல். அருகில் என்ன மரம் ?


அகிலத்தையும் ஆளும் ஆண்டவனான கந்தனுக்கு, ஏனோ தன் காதலியிடம் கூட சற்று விளையாடிப் பார்க்கலாமே என்ற எண்ணம் வந்தது போலும். அவள் மனத்துள் உருவான கடவுளாய் உருவம் பெறாமல் சாதாரண வேட்டுவ இளைஞனாய் அவளை சீண்டிப் பார்த்தான். (காதலியை சீண்டாமல் காதல் என்ன வேண்டிக்கிடக்கு?)

அவள் யாரோ.. என்ன பேராம்.. அவள் தந்தை யாராம்.. கல்யாணத்திற்குப் பெண் கேட்டால் அவளைத் தனக்குத் தர சம்மதிப்பாரோ.. என்றெல்லாம் அந்தச் சின்னப் பெண்னிடம் பெரிய கேள்விகளைக் கேட்டான். அந்த அழகு பதுமை பேசாமல் தலை குனிந்துகொண்டாள். தூரத்தே சத்தம் கேட்க, ‘வீட்டுப் பெரியவர்கள் அதுவும் வேடவர்கள் வந்தால் அவனை கொன்று விடுவார்கள்’ என்று எச்சரித்து துரத்தியும் விட்டாள். துரத்தப்பட்டவன் ஓடி ஒளிந்தவன் போல பாவனை செய்து அங்கேயே வேங்கை மரமாகி மாறி நின்று கொண்டான். சிற்பி செதுக்கிய மரத்தின் அர்த்தம் புரிந்ததா ? வேடவர்கள் கூட்ட்மாக வந்தனர். தேவைப்பட்ட தினைப் பண்டங்களை வள்ளிக்குக் கொடுத்தனர். சென்றுவிட்டனர்.

மறுபடியும் வேடனாய் உருமாறி வள்ளியிடம் காதல் மொழி பேசினான். வள்ளி கோபமாய் பார்த்தாள். ‘இது முறையா’ என்று கேள்வி கேட்டாள். போய்விடு என்று மன்றாடினாள். என் மனதில் இன்னொருவன் வந்து குடி புகுந்து தொல்லை செய்வது போதாது என்று நீயும் ஏன் தொல்லை செய்கிறாய்.. இது நியாயமா.. என்று கெஞ்சினாள். அப்படியானால் உன் மனத்தை வரித்தவன் பெயர் சொல்லு என்று வேடன் கேட்டான். வெட்கப்பட்டாள் அந்தப் பேதை.

மறுபடியும் சப்தம். மறுபடியும் துரத்தினாள் அவனை. இந்தச் சமயத்தில் ஓடி ஒளிந்தவன் மரமாக மாறாமல் வயதான சிவத் தொண்டர் போல உருக் கொண்டவன் தைரி்யமாக இப்போது வள்ளி முன்பும் அவள் கூட்டத்தார் முன்பும் வெளிப்பட்டான். தாத்தா சிற்பத்தில் பார்த்தீரா ? வயதான சிவத்தொண்டரைப் பார்த்ததும் வள்ளியும் அவள் தந்தையும், கிழவருக்கு வேண்டிய தினைப் பண்டங்களைப் படைத்து, அவர் காலில் விழுந்து வணங்கினர். அந்தக் கள்ளக் கிழவரும் ஆர அமர உண்டு விட்டு, தாராளமாக ஆசிகளையும் வழங்கினார். சந்தோஷமாக அவள் தந்தையும் மற்றவர்களும் அங்கிருந்து விலக, தனித்துவிடப்பட்ட வள்ளியிடம் வேண்டுமென்றே காதல் வார்த்தைகளை கிழவர் அள்ளிவீச, அந்தச் சின்னப் பெண் ‘சீச்சீ’ என்று விலகினாள். அப்போது ஒரு யானை அந்த சோளக் கொல்லையில் ஒடிவரக்கண்ட வள்ளி பயத்துடன் அந்த சிவனடியாரைக் கட்டிக் கொண்டு அந்த யானையை விரட்டுமாறு வேண்ட, சிற்பத்தை பாருங்கள் – என்ன அருமை – எம் சி ஆர் போல பயந்து நடுங்கும் வள்ளியை அனைத்து பிடித்திருக்கும் கள்ள தாத்தா

அந்த கிழவனாரான கந்தன் தன் அண்ணன் விநாயகனை மனதுள் வேண்ட, அந்த வெற்றி விநாயகனே அந்த யானையாக வந்தவன், சுயரூபம் எடுத்து அண்ணனாக மாறி அவர்களை வாழ்த்தினான். கிழவனாக வந்த கந்தனும் அவள் மனக்கோயில் நாயகனாய் மாறினான்.
சிற்பத்தில் பாருங்கள் – கொஞ்சம் கொஞ்சமாக தாத்தா குமாரனாக மாறும் காட்சி

ஆறு முகமும் ஈராறு கைகளும் கொண்டு மயில் மேல் அமர்ந்து குமரனாய் தரிசனம் தந்தான்.

அழகு வள்ளிக் குறத்தி தன் மணாளனே இத்தனை நாடகம் ஆடி கள்ளத்தனம் செய்தவன் என்று அறிந்து உள்ளம் பூரித்தாள். தன் மன நாயகனோடு ஒன்று சேர்ந்தாள்

எமன் ரொம்ப பொல்லாதவன் விடமாட்டான், சாம்பசிவ பக்தன் என்றால் தொடமாட்டான்

இன்று மீண்டும் திரு சதீஷ் அவர்களின் உதவியால், தஞ்சை பெரிய கோவிலிலுள்ள, எனக்கு மிகவும் பிடித்த சிற்பத்தின் அற்புத புகைப்படம் கிடைத்துள்ளது.

காரணம்? சிறு வயதில் என்னை உறங்க வைக்க என் தந்தையார் எனக்கு இந்த கதையை பாட்டாக படிப்பார். இன்றும் நினைவில் உள்ளது. என் மகனும் இந்த பாட்டைகேட்டால் தூங்கிவிடுவான்

எமன் ரொம்ப பொல்லாதவன் விடமாட்டான்
சாம்ப சிவா பக்தன் என்றால் தொடமாட்டான்
சிவ சிவ சிவ என்ற நாமம் சொல்லடா
மானுடனே உனக்கிதில் பாரம் என்னடா

மார்க்கண்டேயனின் கதை நாம் அனைவரும் அறிந்ததே. ம்ருகண்டு முனிவரும் அவரது துணைவி மருடவதி பிள்ளைப் பேறு வேண்டி கடுந்தவம் புரிந்தனர். தவத்தின் பயனாக அவர்கள் முன் தோன்றிய சிவபெருமான், ,” அறிவிலர்களாய் நூறு பிள்ளைகள், இல்லையேல் அறிவு ஜீவியாய் பதினாறே ஆண்டுகளே ஆயுள் உள்ள மகன், இதில் ஒன்றை தேர்ந்து எடு்ப்பீர்களாக,” என்றார். எதிர்பார்த்தபடியே அறிவில் சிறந்த பிள்ளையை அவர்கள் வேண்ட அவ்வாறே ஒரு மகனை அவர்கள் பெறுகின்றனர். மார்கண்டேயன் என்று பெயர் சூட்டி, அன்பும், அறமும் திகழ வளர்கிறது குழந்தை.

பாலகன் பதினாறு வயதை நெருங்க நெருங்க, பெற்ற மனங்கள் பதறுகின்றன. பெற்றோரின் கவலை முகங்கள் கண்டு துளைத்துத் துளைத்துச் சிறுவன் வினவ,அவர்களும் தங்கள் தவப்பயனாக அவன் பிறந்தாலும், அதிலுள்ள நிபந்தனையான 16 வயதில் மரணமெனும் செய்தியையும் கூறி அழுகின்றனர். காலனின் ஈசனே தனக்கு நித்திய பூஜா மூர்த்தியாய் இருக்கையில், மரணம் தன்னை நெருங்காது எனும் தீர்க்க முடிவோடு, மார்க்கண்டேயன் தினந்தோறும் சிவ லிங்க பூஜையில் ஈடுபடுகிறான். அவ்வாறே, குறிப்பிட்ட நாள் வருகையில், எமன் தனது பாசக் கயிற்றை வீச தக்க தருணத்தை எதிர் நோகியுள்ளான்.

மார்க்கண்டேயனோ, எமனுக்கு அஞ்சி ஓடி, சிவலிங்கத்தை ஆலிங்கனம் செய்தவாறு உயிர் பிச்சைக்கான பூசையிலுள்ளான்! காலம், காலன் இரண்டும் நிற்காதல்லவா? பொறுமை இழந்த எமன் தன் பாசக்கயிற்றை மார்க்கண்டேயனை நோக்கி வீசுகையில், சிவலிங்கத்திலும் சேர்ந்தே விழுகிறது. தன் பக்தன் தன்னை ஆலிங்கனம் செய்து பூசை செய்வதைக் கூட மதியாமல், தன் பணியை செய்த (!) எமனின் செயலால் கோபம் கொண்ட சிவன், லிங்கத்திலிருந்து வெளிப்பட்டு, காலால் காலனை எட்டி உதைக்கிறார். ஆனால், காலன் தனது பணியைச் செய்வதையே சிவனாரே தடுத்த மாதிரி ஆகிவிடுமல்லவா? எனவே, மார்க்கண்டேயனின் ஆயுள் ‘என்றும் பதினாறு’ என்ற அரிய வரம் தந்து அருள்கிறார்.

இதுவே கதை – இப்போது சிற்பம். மூன்று காட்சிகள் – மேல் இருந்து கீழ்.
முதல் காட்சி:

காலன் மார்கண்டேயனை துரத்தி வர, அவன் சிவ லிங்கத்தை கட்டிக்கொண்டு இருப்பது போல அற்புதமான சிற்பம்.

அடுத்து, ஈசன் காலனை உதைத்து கீழே விழும் எமன். ( ஒரு வருடம் முன்னர் நண்பர் ஸ்ரீவத்சன் எடுத்த படத்தையும், இப்போது சதீஷ் எடுத்த படத்துடன் ஒப்பிட்டிப் பாருங்கள் – ஈசன் கையில் இருக்கும் சூலம் – இப்போது முழுவதுமாக சிதைந்து விட்டது !!!)

கடைசி காட்சி – சாகா வரம் பெற்ற மார்கண்டேயன் தன் இரு கை கூப்பி ஈசனை வணங்குகிறான்

இதோ அப்பர் இந்த கதையை அற்புதமாக பாடியிருக்கும் தேவாரம்:

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=4&Song_idField=4107&padhi=113+&button=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95

மருட்டுயர் தீரவன் றர்ச்சித்த மாணிமார்க் கண்டேயற்காய்
இருட்டிய மேனி வளைவா ளெயிற்றெரி போலுங்குஞ்சிச்
சுருட்டிய நாவில்வெங் கூற்றம் பதைப்ப வுதைத்துங்ஙனே
உருட்டிய சேவடி யான்கட வூருறை யுத்தமனே

தன்னை மயக்கிய யமபயமாகிய துன்பம் தீருமாறு அக்காலத்தில் அர்ச்சித்த பிரமசாரியான மார்க்கண்டேயனுக்காகக் கரிய உடம்பு, வளைந்த ஒளி பொருந்திய பற்கள் தீயைப் போன்ற சிவந்த மயிர்முடி, மடித்த நா இவற்றை உடைய கொடிய கூற்றுவன் உடல் நடுங்குமாறு அவனை உதைத்து அவ்விடத்திலே அவனை உருளச்செய்த சிவந்த திருவடிகளை உடையவன் திருக்கடவூரில் உகந்தருளி உறைகின்ற உத்தமனாகிய சிவபெருமான் ஆவான்.

தக்ஷன் தலையை கொய்த ஈசன் – தஞ்சை பெரிய கோயில்

நண்பர் சதீஷ் குமார் அவர்கள் சென்ற வாரம் தஞ்சை செல்லும் பொது – வழக்கம் போல படங்கள் எடுத்து வருமாறு கேட்டேன் . அவரும் அருமையான பல படங்களை எடுத்து வந்துள்ளார் . அதில் ஒன்றை இன்று பார்ப்போம். முதலில் கதை !!

தக்ஷன் வரலாறு

தக்ஷன் எனும் அரசன் முற்பிறவியில் செய்த தவத்தின் பயனாக பார்வதி தேவி அவரின் மகளாகப் பிறக்க அவளை சிவனுக்கு மணம் முடிக்க தேவர்கள் தக்ஷனிடம் பெண் கேட்டு வருகையில் ஆணவத்தால் அறிவிழந்த தக்ஷன் சிவபெருமான் தனது காலில் விழுந்து வணங்க வேண்டும் என்று வேண்டவே சிவபெருமான் பார்வதியைச் சிறை எடுத்துச் சென்று மணம் புரிந்து கொண்டார். அவன் விருப்பத்துக்கு மாறாக அவன் மகள் தாக்ஷாயிணியை சிவன் மணந்து கொண்டதால், வேண்டும் என்றே தக்ஷன் ஒரு மகா வேள்வி நடத்த எத்தனித்து, அதற்கு தன் மாப்பிள்ளையை அழைக்காமல் அவமானம் செய்தான்.

அந்த வேள்வியைக் காண தான் செல்ல வேண்டுமெனப் பரமேஸ்வரனிடம் அனுமதி கேட்டாள் மலைமகள். பரமேஸ்வரன் அந்த நேரத்தில் தியானத்தினால் ஆலோசித்து, “இந்த வேள்வியில் என்னுடைய அம்சமாக உள்ள ருத்திரனுக்கு ஹவிர் பாகம் இல்லாமல் இந்த யாகம் நடத்த உள்ளனர். ஆகவே, என்னை அவமதிப்பதற்காகவே இந்த யாகம் நடத்தப்படுவதால் நீ செல்ல வேண்டாம்”, என்று சொல்கிறார்.

ஆனால் தந்தை பாசம் கண்ணை மறைக்க அழையா விருந்தாளியாக தாக்ஷாயிணி அங்கே போனாள். தக்ஷன் வேள்விக்கான ஏற்பாடுகளைச் செய்து வேள்வியைத் தொடங்குகிறான். தாக்ஷர்யணியை எவரும் விசேஷமாகக் கவனிக்கவில்லை. சிவனுக்கு நடந்த அவமானங்களை கண்டு சகிக்க முடியாமல் அங்கேயே மறைந்து போனாள்.

அப்பொழுது, பரமேஸ்வரனுக்கு விவரம் தெரிந்து, கோபத்தில் தக்ஷ்ன் தலையைக் கொய்து – அதனை வேள்வி தீயினிலே இட்டு எரிக்கிறான் ஈசன். இதை காணும் அனைவரும் அஞ்சி நடுங்குகின்றனர்.

பின்னர், பிரம்மன் ( தக்ஷனின் தந்தை ) ஈசனிடம் சென்று வேண்டிய்தின் பெயரில் , வெட்டப்பட்ட தலைக்கு பதில் ஒரு ஆட்டின் தலையை வைத்து உயிர் பெறுகிறான் தக்ஷன்.
இவற்றை பெரிய கோவில் படிகளின் கைப்பிடியில் செதுக்கி உள்ள அழகு சிற்பங்கள்.. அருமை. ஒவ்வொன்றாக பார்ப்போம்.

முதலில் இது இருக்கும் இடம் ( நண்பர் சதீஷ் அருமையாக படம் எடுத்துள்ளார் ) – நமக்கு சிற்பத்தின் அளவை விளக்க ஒரு பேனாவை வைத்து படங்களை பிடித்துள்ளார். கதையை விளக்க சிற்பங்களை பாருங்கள்.இரு பக்கமாக காட்சிகள் நகருகின்றன – ஒரு பக்கம் தக்ஷன் தலை கொய்தல் . மற்றொறு பக்கம் அவனுக்கு ஆட்டின் தலையை பொருத்துதல் .


முதல் தலை கொய்தல் – முனிவர்கள் அனைவரும் கூடி நிற்கும் காட்சி ( நீங்கள் பார்க்கும் பொது மிகவும் பின்னால் இருக்கும் இடம் ) – அதை அடுத்து மேல் தளத்தில் மிக அழகாக அமர்ந்திருக்கும் ஈசன், நந்தியின் மேல் ஒரு கை வைத்து அழகாக நிற்கும் உமை, அவர்களை அடுத்து ஒரு தோழிப்பெண்.

கீழே – முக்கிய காட்சி – தக்ஷனின் தலையைக் கொய்து தீயில் இடும் ஈசன் ( அதை கண்டு முகம் திரும்பி நகரும் முனிவர். அடுத்து தலை வெட்டப்பட்டு முண்டமாக கிடக்கும் தக்ஷன் – அவன் நிலையை கண்டு கைகளை மேல உயர்த்தி அழும் தக்ஷனின் துணைவி . அதை அடுத்து இந்த காட்சியை கண்டு பார்போர் அலறி பயந்து ஓட – என்ன ஒரு அருமையான படைப்பு – முன்று பெண்மணிகள் , அவர்களை அடுத்து முன்று முனிவர்கள் – அவர்களின் தோற்றம், திரும்பி, முகத்தில் பயம் – அந்த கோர காட்சியை காட்சியை பார்த்துக்கொண்டே , ஓடும் படி செதுக்கி உள்ளான் சிற்பி.. கடைசியில் இருவர் – ஓட ஆரம்பித்தே விட்டனர். ( சிற்பத்தின் அளவை குறிக்க பேனாவை கவனியுங்கள் )

சரி – அடுத்த பாகம் – மூன்று ரிஷிகள் – மற்றும் பிரம்மன் ஈசனிடம் வேண்டும் காட்சி , தக்ஷனின் தவறை மன்னித்து அவனுக்கு உயிர் பிச்சை கேட்டு நிற்கின்றனர். என்ன ஒரு அருமையான சிற்பம் – அதுவும் அந்த ஈசனின் வடிவம் – மான் , மழு , இடையில் தொங்கும் நாகம் , மிக அருமை.


ஈசனும் மனம் இறங்க – கடைசி காட்சி – மேல பூத கணங்களும் விண்ணவரும் இசை முழங்க , ஆட்டின் தலையுடன் ஈசனை வணங்கும் தக்ஷன் – மற்றும் மற்ற முனிவர்கள் ஆசி பெறுகின்றனர்.

இதோ தேவாரம் குறிப்புகள்

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=8&Song_idField=81140&padhi=14&startLimit=10&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

வெஞ்சின வேள்வி வியாத்திர னார்தலை
துஞ்சின வாபாடி உந்தீபற
தொடர்ந்த பிறப்பற உந்தீபற.

கடுஞ்சினத்தால் தொடங்கின யாகத்துக்கு அதி தேவதையின் தலை அற்ற விதத்தை நமது பிறவித் தொடர் அற்று ஒழி யும் வண்ணம் பாடி உந்தீபறப்பாயாக!

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=8&Song_idField=81140&padhi=14&startLimit=11&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

ஆட்டின் தலையை விதிக்குத் தலையாகக்
கூட்டிய வாபாடி உந்தீபற
கொங்கை குலுங்கநின் றுந்தீபற.

சிறுவிதியின் தலையற்றுப் போக அதற்குப் பிரதியாக ஆட்டின் தலையைப் பொருத்தின விதத்தைப் பாடித் தனங் குலுங்க நின்று உந்தீபறப்பாயாக!

தஞ்சையிலும் பேய் அம்மை

நாம் முன்னர் தஞ்சை பெரிய கோவில் ஆடல் வல்லானின் அற்புத ஆட்டத்தை பார்த்த பொது அங்கும் பேய் அம்மையின் அழகிய சிற்பத்தை கவனிக்க மறந்து விட்டேன். நாம் கங்கை கொண்ட சோழ புறத்தில் பார்த்து போலவே இங்கும் பேய் அம்மை ஆரவாரத்துடன் ஆட்டத்தை பார்கிறார்கள். இடம் தான் சற்று மாறி உள்ளது. நந்தி அதே இடத்தில் ஆச்சு வார்த்தாற்போல உள்ளார். (நடராஜரின் ஆட்டத்துக்கு நந்தி தான் தாளங்கள் போட்டு மேளம் வாசிப்பார் என்று ஐதீகம். ஆகவே நடராஜரின் ஆட்டம் நந்தியின் பக்கவாத்தியம் இல்லாமல் நிறைபெறாது)

இரு சிற்பங்களை அடுத்து அடுத்து இணைக்கிறேன் – பார்த்து மகிழுங்கள்
20812088
ஆடல் வல்லான்
20842086
நந்தி
20762079
பேய் அம்மை

ஈசனுக்கு உடும்பு கறி படைத்த பக்தன்

கண்ணப்பர் செருப்பு அணிந்ததை சென்ற மடல்களில் பார்த்தோம். இப்போது அவர் ஈசனுக்கு உடும்பு கறி படைத்ததை பார்ப்போம். மீண்டும் தஞ்சை பெரிய கோவில் சிற்பம், ராஜ ராஜ சோழ தேவருக்கு மிகவும் பிடித்த கதைகள் – ஈசனிடம் அளவில்லாத பற்று கொண்டு அவனிடம் சரண் புகுந்த நாயன்மார் கதைகள். அதில் அவர் மிகவும் ரசித்த ஒன்று , கண்ணப்பர் கதை. இதோ கருங்கல்லில் .
1880188718901884
சிறு சிற்பம் என்றாலும் அந்த சிற்பத்தில் கண்ணப்பரின் முகத்தில் தெரியும் பணிவு, பக்தி – அதிலும் அவர் ஆசையுடன் உடும்பை படைக்கும் காட்சி ( வேடுவன் அல்லவா, அப்போதும் தனது வில் அம்பை விடவில்லை, அருகில் அவரது வேட்டை நாய் )- எதிரில் மரத்தடியில் சிவ லிங்கம்.

தேவார குறிப்பு, இதற்கும் உண்டு.
பதினொன்றாம் திருமுறை

சிந்தக்கடும்பகல் வேட்டையிற் காதலித் தடித்த
உடம்பொடு சிலைகணை உடைத்தோல் செருப்புத்
தொடர்ந்த நாயொடு தோன்றினன் தோன்றலும்

தடிந்த உடும்பு – கொல்லப்பட்ட உடும்பு, அது பாகமாக்கப்படவில்லை. இறைவற்கு நகை தோற்றுவிக்க அன்பினால் கொண்டு வரப்பட்டது.

இங்கே மேலும் கதையை உணர்த்தும் சிற்பங்கள் உண்டு. அவற்றை பற்றி வரலாறு.காம் நண்பர் கோகுல் அவர்களின் அருமையான இடுகை (கடை காட்சியில் சிவ கோச்சாரியார் மரத்தின் பின் ஒளிந்துக்கொண்டு பார்ப்பதை சித்தரித்த வண்ணம் அருமை )
கோகுல் அவர்களின் அருமையான இடுகை

படங்களுக்கு நன்றி www.varalaaru.com

அழகுக்கு அழகு சேர்க்கும் – சிற்பகலைக்கு மகுடம் சூட்டும் ஓவியம்

சிற்பக்கலை எவ்வாறு நம்மை தாக்குகிறது என்று பல இடுகைகளில் பார்த்தோம். ஆயிரம் ஆண்டுகள் ஆயினும், கால வேகத்தை தாண்டி அந்த கலைஞனின் கலை தாக்கம் அவனது ஜீவனில் இருந்து கல்லினுள் பாய்ந்து , கல்லினுள் இருந்து நமக்குள் பாய்கிறது.


இதை பலரும் உணர்தாலும் சிலருக்கே – அந்த அபூர்வ சக்தி படைத்த ஒரு சிலருக்கே, அந்த உணர்வை வெளி கொணர முடியும். மற்றவருக்கு நம் கண் முன்னே அழகை கண்டவுடன் ரசித்து , நம் அகக்கண் அதை படம் பிடித்து , உள்ளுணர்வை தூண்டி எழுப்பும், ஒரு வித வெளியீட்டை அது தேடும். என் நண்பர் முரளி போன்று கலை திறன் படைத்தவராய் இருந்தீர்கள் என்றால், அந்த உணர்வு, அந்த தாக்கம் , நீங்கள் கண்ட காட்சிக்கு – அழகுக்கு அழகு சேர்க்கும் – சிற்பகலைக்கு மகுடம் சூட்டும் ஓவியம் . பலருக்கு இந்த பாகியம் கிடைப்பதில்லை, எனினும் ரசிக்கும் கண்கள் உள்ளனவே. இரு கலைஞர்களுக்கும் இடையே ஆயிரம் ஆண்டுகள் ஆயினும், உயர்ந்த கலைக்கு என்றும் அழிவில்லை என்று உணர்த்தும் உயிர் சிலை -உயிர் ஓவியம். தஞ்சை பெரிய கோயில் லக்ஷ்மி சிற்பம். ( இதை முதலில் ஞான சரஸ்வதி என்று தவாறாக இட்டு இருந்தேன். பிறகு மேலும் படிக்கையில் இரு கரங்களுடன் இருப்பதால் இது லக்ஷ்மி என்றும், அதே ஆலயத்தில் இருக்கும் நான்கு கரம் கொண்ட சரஸ்வதி சிற்பமும் கண்டு பிழையை சரி செய்துள்ளேன்

சிற்பத்தில் என்ன ஒரு உணர்வு, காலை அழகே மடித்து ஒரு கால் மீது மற்றொன்றை இட்டு அமர்ந்திருக்கும் வண்ணம், அந்த கருணை சொட்டும் கனிவு முகம், வானவில்லை போல வளைத்த புருவம், மந்தகாச புன்னகை, மணி மகுடம், விதவிதமான ஆபரணங்கள், ஆடை அலங்காரம், இதை செதுக்கிய சோழ சிற்பி தன் வாழ்வின் பயனை இந்த படைப்பில் பேற்றான் என்றால் அது நிகை அல்ல. கல்லுக்குள் தன் உயிரை இட்டு அதை உயிர் பித்து என்றும் அழியா வரம் தந்து நம்மை இன்றும் மயக்கும் அவன் கலை திறன் வாழ்க.

வண்ணப்படம் பலவிருந்தும் கருப்பு வெள்ளைக்கு ஒரு தனி மௌசு, படத்தினுள் நம்மை எடுத்து செல்லும் தன்மை.

இதை தன் விரல்களால் வரைந்த ஓவியனுக்கு, பொறாமையாக உள்ளது, இது ஒரு தெய்வீக கலை என்பதை மீண்டும் உணர்த்தி விட்டீர்கள் முரளி. வாழ்க உமது கலை, இது போல இன்னும் பல ஓவியங்கள் தீட்ட எங்கள் நல் ஆசிகள்

முரளி அவர்களின் மற்ற ஓவியங்களை இங்கே காணலாம்.

Tanjore sculpture

நான் பெரியவன் – என்னைவிட பெரியது – தஞ்சை பெரிய கோவில் இரண்டாம் பாகம்

சரி, முந்தைய மடலில் பெரிய கோவில் ஒரே ஒரு படம் மட்டுமே பார்த்தோம். பொன்னியின் செல்வரான அருள்மொழி வர்மரின் தாக்கத்தில் சற்று நிறைய எழுதி விட்டேன்.
1409
தொலைவில் இருந்து பார்த்தோம். இப்போது நெருங்கி செல்வோம், ஆனால் ஒரு மாற்றம். உங்கள் கண்களை கட்டி, அழைத்து போகிறோம். முதல் வாயில் – இது சோழர் காலத்தில் கட்ட பட்டது அல்ல – அடுத்து காந்தளூர் சாலையில் ராஜ ராஜன் பெற்ற வெற்றியை குறிக்கும் கோபுரம் – கேரளாந்தகன் வாயில் – அதையும் இப்போதைக்கு தாண்டி செல்வோம். அடுத்து அரசனாக பதவி ஏற்கும் பொது அவன் சூடிக்கொண்ட பெயரால் விளங்கும் வாயில் – ராஜ ராஜன் வாயில் – இங்கே உங்கள் கண் கட்டை சற்று அவிழ்த்து விடுகிறோம்.

1330

இது என்ன – வாயில் காப்போன் – ( த்வார பாலகன் ) – கோரைப் பல்,பிதுங்கும் கண்களுடன் உங்களை எதிர் கொல்லும்.
13491352
13611363
13651359
1430

நான்கு கரங்கள்,காலை உயர்த்தி,அது என்ன காலின் அடியில்,ஒரு சிங்கம்,சரி இது என்ன ஒரு பாம்பு,சரி பாம்பின் வாயில் என்ன,ஆஹா ஒரு யானை, பின்புறமாக
யானையை முழுங்கும் பாம்பு,யானை எவ்வளவு பெரியது, அதை முழுங்கும்
பாம்பு (anai kolran…anaconda ??),அது எவ்வளவு பெரியது,இப்போது
வருகிறது பாடல்.எப்படி கொர்கிறான் பாருங்கள் சிற்பி.
1498
1399140113741443

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=1&Song_idField=1068&padhi=068&startLimit=2&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

சம்பந்தர் தேவாரம் – திருமுறை 1.68.2

புரிகொள்சடையர் அடியர்க்கெளியார் கிளிசேர் மொழிமங்கை
தெரியவுருவில் வைத்துகந்த தேவர் பெருமானார்
பரியகளிற்றை அரவுவிழுங்கி மழுங்க இருள்கூர்ந்த
கரியமிடற்றர் செய்யமேனிக் கயிலை மலையாரே.

பெரிய களிற்று யானையை மலைப்பாம்பு விழுங்கி மறையும் இருள் மிக்க கயிலை
மலையில் விடம் உண்ட கரிய கண்ட ராய்ச் சிவந்த திருமேனியராய் விளங்கும்
இறைவர் வளைத்துக்கட்டிய சடைமுடியை உடையவர். அடியவர்க்கு எளிமையானவர்.
கிளி போன்ற மெல்லிய மொழி பேசும் உமை மங்கையைப் பலருக்கும் தெரியுமாறு ஒரு
பாகமாகக் கொண்டு மகிழ்ந்த தேவர் தலைவராவார்.

1365
இப்போது மேலிருக்கும் துவரபாலகன் கைகளை கவனியுங்கள்,கீழே பார்,யானையை முழுங்கும் பாம்பு,அதை விட நான் எவ்வளவு பெரியவன், ஜாக்கிரதை,உள்ளே இருப்பவரோ,விஸ்மயம் ( சொல்ல நாவில்லை என்று அந்த கற் சிலை தனது கையால் விளக்கும் அழகு )

பெரிய கோவில் துவாரபாலகர்கள் ( வாயிற்காப்போன்) அல்லவா, இதை எப்படி உங்களுக்கு உணர்த்துவது – சரி படத்தில் ஒரு ஆளை, இல்லை ஒரு யானையை கொண்டு வருவோம் – இப்போது புரிகிறதா – பதினெட்டு அடி உயரம் உள்ள இவர்கள்.
13701372
1357
13851391
1388
ராஜ ராஜன் நிறுவிய தஞ்சை பெரிய கோவில், ராஜ ராஜெஷ்வரம், பெருவுடையார்
கோவில் என்று அவனே அழைத்த, பிருகதீஸ்வரர் ஆலயம்.

அவன் இதனை தக்ஷின மேரு என்று கண்டான், தக்ஷின கைலாசம்,இதனாலேயே
இங்கு விமானம் கோபுரத்தை விட உயரமாக உள்ளது ( மற்ற ஆலயங்களில்
கோபுரம் விமானத்தை விட உயரமாக இருக்கும் )

விமானத்தை கைலாயம் என்று உணர்த்துகிறான் பார்த்தீர்களா….( திரு
K. பாலு ஐயா அவர்கள் இதனை எனக்கு மிக அழகாக விளக்கினார்)

எப்படி ஒரு சிறு சிலை வடிவம் – ஒரு பெரும் தத்துவத்தை விளக்குகிறது பாருங்கள்..

சரி இப்போது மற்ற படங்களை பாருங்கள்

முதல் கோபுரம்
134114141417
இரேண்டம் கோபுரம் – கேரளாந்தகன் வாயில்
13761379
மூன்றாம் கோபுரம் – ராஜ ராஜன் வாயில்
14341436
முடிவில் மகா மேரு விமானம் – விமானத்தை பற்றி பல தகவல் உண்டு – அவற்றை விளக்க நாம் மீண்டும் அங்கே செல்வோம். அதுவரை படங்களை பாருங்கள் – அவ்வப்போது படங்களுள் வரும் மனிதர்களை வைத்து இந்த கோவிலின் பெயர் ஏன் பெரிய கோவில் என்று வந்தது என்பது உங்களுக்கு புரியும்.
1332150013361339134613441367139714031412142014231425142814381445

(படங்கள் தந்து உதவிய நண்பர்கள் மற்றும் திரு ரோகன் ராவ் அவர்களுக்கு நன்றி
http://rohanrrao.wordpress.com/ )

இதோ தஞ்சை பெரிய கோவில் – முதற் பாகம்

அஜந்தா மற்றும் எல்லோரா முதற் பார்வை பார்த்தோம் – அப்போது தஞ்சை பெரிய கோவிலுக்கும் அதே போல ஒரு முதற் பார்வை இட வேண்டும் என்று நண்பர் பலரும்
கேட்டுக்கொண்டதின் பெயரில் இதோ தஞ்சை பெரிய கோவில் – இதற்கு முன்னரே ஒரு சிறு சிற்பம் வெளி வந்து விட்டது எனினும் இது இந்த தொடரின் முதற் பாகம்

சோழ பேரரசன் முதலாம் ராஜ ராஜன், ஒரு அற்புத மனிதன். அருள்மொழி என்ற இயற் பெயர் கொண்ட இவன், பட்டத்து இளவரசனான தனது அண்ணன் ஆதித்ய கரிகாலன் படுகொலையுற்ற பின் (969 AD) , தனது சிற்றப்பன் அரியணை மீது ஆசை கொண்டதனால் அவனுக்கே விட்டுக்கொடுத்து ( 985 AD) பதினைந்து ஆண்டுகள் காத்திருந்து பிறகு அரியணை ஏறி சோழ சாம்ராஞ்சியத்தை அதன் உச்சிக்கு இட்டு சென்று அதற்கு முடிசூடுவதுபோல ஒரு கோவிலை பிரமாண்டமாக கட்டி அதற்க்கு ராஜராஜேஸ்வரம் என்று பெயர் சூடினான்.

இதை திருவாலங்காடு தகடுகள் மூலம் நாம் அறியலாம் …. திரு கே ஏ நீலகண்டசாஸ்திரி சோழர்கள் புத்தகத்தில் … பக்கம் (pages 212 -213)

Verse 69 of the plates

விண்ணுலகுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசையால்
ஆதித்தன் மறைந்தான், கலியின் வல்லமையால் ஏற்பட்ட
காரிருளைப் போக்க , அருண்மொழி வர்மன் அரசனாகுமாறு
அவனுடைய குடிமக்கள் வேண்டினர். ஆனால் ஷத்ரிய தருமத்தை
நன்கு அறிந்த அருண்மொழி அரச பதவியை மனதார விரும்பவில்லை
என்று கூறிவிட்டான். தன்னுடைய சிற்றப்பன் அவ்வரசப் பதவியை
விரும்புவதை உணர்ந்தமையால் தன் சிற்றப்பன் ஆசை தீரு மட்டும்
அரசனாக இருக்கட்டும் என்று அருண்மொழி அரச பதவியை
மறுத்துவிட்டான் …..

என்று தெரிவிக்கின்றன

மேலும் verse 70 of the plates

அருண்மொழியின் உடலில் உள்ள சில அடையாளங்களை பார்த்தபோது,
மூவுலகையும் காக்கும் ஆற்றல் படைத்த திருமாலே, பூவுலகுக்கு
வந்திருப்பதாக நினைத்து, மதுராந்தகன் அவனை இளவரசனாக்கி மண்ணுலகை
ஆளும் பொறுப்பை தானே மேற்கொண்டான்.

( அமரர் கல்கி இதனை எடுத்து அதில் தனது அமர காவியமான பொன்னியின் செல்வனை நமக்கு படைத்தார் )

இன்னொரு தகடு – ஈசலம் – திரு நாகசுவாமி அவர்களின் தளத்தில் மேலும் படியுங்கள்

http://tamilartsacademy.com/articles/article29.xml

அருள்மொழி – நீண்ட அழகிய கரங்களை உடையவன், உள்ளங்கையில் சங்கு சக்கர ரேகை கொண்டவன் – கங்கா , வங்கா , கலிங்கம் , மகதா , மாலவா , சிங்கள , ஆந்திர , ரட்ட (ராஷ்ட்ரகூட அல்லது மஹாராஷ்ட்ரா ) ஓட்ட (ஒரிசா ), கதஹா , கேரள , குத மற்றும் பாண்டிய …தேசங்களை வென்று – அதனால் குவிந்த செல்வதை கொண்டு தஞ்சை நகரியில் பெரும் கற்றளி அத்யுத்தமம் என்ற ராஜராஜேஸ்வரம் கோவிலை நிறுவினான்.
1324
தஞ்சை நுழையும் போதே விண்ணை தொடும் விமானம் கண்ணில் படும் ( கர்ப்பக்கிருகம் மேல் இருப்பது விமானம் – வெளி வாயில் கோபுரம் – பொதுவாக கோபுரம் விமானத்தை விட உயரம் இருக்கும் – எனினும் இங்கும் ராஜ ராஜனின் மகன் ராஜேந்திரன் கட்டிய கங்கை கொண்ட சோழபுரதிலும் விமானம் பெரியது – ஏன் ?)….சரி சற்று அருகில் செல்வோம் – அடுத்த மடலில்

பெரிய கோவில் – சிறிய சிற்பம்

நாம் மல்லை அர்ஜுன தவம் முன்னர் பார்த்தோம். அதே போல காஞ்சி கைலசனாத கோவில் சிற்பமும் பார்த்தோம்.அங்கே பல்லவ சிற்பியின் கலை பார்த்த நாம் – இப்போது அங்கிருந்து சுமார் முன்னூறு ஆண்டுகள் பின்னர் சோழ சிற்பி இதே கதையை கையாண்ட முறையை பார்போம்.

சோழ பேரரசன் ராஜ ராஜன் கட்டிய கற்றளி – தஞ்சை பெரிய கோவில் (எனினும் அவனே பெரிய கற்றளி என்று அழைத்த கோவில் காஞ்சி கைலசனாத கோவில். )

சரி, பெரிய கோவில் என்றதும் அங்கு இருக்கும் அனைத்தும் பெரியது என்று இல்லாமல் – நாம் அங்கே இருக்கும் சிறு சிற்பங்களை பார்போம். முன்பு நாம் பார்த்த சண்டேச அணுகிறஹ முர்த்தி போல, அடுத்து நாம் பார்ப்பது பசுபதஅஸ்த்ரதான முர்த்தி. சிறு சிற்பம் என்றாலும் மிக அழகான வடிவம். முதலில் முழு சிற்பத்தையும் கொஞ்சம் பாருங்கள்.
1173
நிறைய நபர்கள் – புரிய கொஞ்சம் கடினமாக இருக்கிறதா ?. சரி ஒவ்வொன்றாக பார்போம். முதலில் கீழ் இருந்து மேல்

முதல் வரிசை
1165
இங்கே சிவ பூத கணங்கள் – கொஞ்சம் கொஞ்சமாக ஒரு காட்டுப்பன்றி போல மாறுவது போல வடித்து உள்ளனர். சரி கதையை மீண்டும் பார்போம். ***

அர்ஜுனன் மகாபாரத போருக்கு தன்னை தயார் படுத்து ஈசனிடம் இருந்து பசுபத அஸ்திரத்தை பெற முயல்கிறான். கடுந்தவம் புரிகிறான். அப்போது ஈசன் அவனை விளையாட்டாய் பரிசோதிக்க வேடுவன் போல வேடம் இட்டு – ஒரு பன்றியாயை இருவரும் வேட்டை ஆடுவது போல நிகழ்வு, அப்புறம் இருவருக்கும் யுத்தம் – கடைசியில் அர்ஜுனன் வந்தது ஈசன் என்று உணர்த்து அவன் தாள் பணிய, அஸ்திரத்தை பெறுகிறான்.

இப்போது மீண்டும் சிற்பத்திற்கு வருவோம் – இரண்டாம் தளம் – இங்கே அர்ஜுனன் ஒரு காலில் நின்று தவம் புரிகிறான் ( கடுந்தவம் போல இல்லை – மல்லையில் எலும்பும் தோலுமாய் இருந்த துறவி போல இல்லாமல் சற்று நன்றாகத்தான் உள்ளான் )
11631169
806
அடுத்த காட்சி – இருவருக்கும் யுத்தம் – அருகில் உமை, தனது மடியில் குழந்தை முருகனை வைத்து இருக்கும் கோலம் அருமை
11761178
இருவரும் ஒருவரை ஒருவர் எதிர் கொள்ளும் கோலம் ( நாம் முன்பு காஞ்சி கைலாசநாத கோவிலில் பார்த்த வடிவம் ) அருமை. 1192
1167
அருகில் நான்முகன், மஹாவிஷ்ணு மற்றும் லெட்சுமி . மல்லையில் விஷ்ணு மட்டும் கோவிலினுள் இருப்பது போல இருக்குமே ??
1196
அடுத்த மேலும் சில தெய்வங்கள் – இந்த அறிய காட்சியை கண்டு நிற்கின்றனர்.

அடுத்த தளம் – இங்கே அருமையாக அதிகார தோரணையில் அமர்ந்திருக்கும் ஈசன் – அடுத்து உமை – அவர்களுக்கு முன் கை கூப்பி நிற்க்கும் அர்ஜுனன் – அர்ஜுனனுக்கு அஸ்திரத்தை அளிக்கும் குள்ள பூத கணம்…இதை காணும் விண்ணவர்கள் அவர்களை போற்றுகின்றனர்.
11711182
அடுத்து – அம்மையும் அப்பனும், மடியில் முருகனும் மீண்டும் கைலைக்கு செல்கின்றனர். அந்த குழந்தையின் மடி சவாரி – என்ன உயிரோட்டம்.
1180
கடை தளம் – இங்கேயும் விண்ணவர். ஒரு முனிவர் தன் சீடனுக்கு ஏதோ உபதேசம் செய்வது போல உள்ளது – வியாசர் விருந்தோ ? 11601307

***

இது விசயன் தவத்தைக் கெடுத்துக் கொல்லவந்த மூகாசுரன் என்னும் பன்றி

ஒரு அருமையான நம் ஐயம் தீர்க்கும் பாடல் ( இதற்க்கு சரியான விளக்கம் தந்த திரு வி. சுப்ரமணியம் அவர்களுக்கு நன்றி.)

சம்பந்தர் தேவாரம் – திருமுறை 1.48.6

காடடைந்த ஏனமொன்றின் காரண மாகிவந்து
வேடடைந்த வேடனாகி விசயனொ(டு) எய்ததென்னே
கோடடைந்த மால்களிற்றுக் கோச்செங்க ணாற்கருள்செய்
சேடடைந்த செல்வர்வாழும் சேய்ஞலூர் மேயவனே.

கோடுகளோடு கூடிய பெரிய யானைப் படைகளை உடைய கோச்செங்கட் சோழனுக்கு அருள் செய்தவனும், பெருமை பொருந்திய செல்வர்கள் வாழும் திருச்சேய்ஞலூரில் மேவியவனுமாகிய இறைவனே! வில்லடிபட்டுக் காட்டுள் சென்று பதுங்கிய பன்றி ஒன்றின் காரணமாக, தான் வேடன் உருத்தாங்கி வந்து அருச்சுன னோடு போர் புரிந்தது ஏனோ?

குறிப்புரை:
பன்றியைத் துரத்திவந்து வேடனாகி விசயனோடு சண்டையிட்டது ஏன் என்கின்றது. ஏனம் – பன்றி. இது விசயன் தவத்தைக் கெடுத்துக் கொல்லவந்த மூகாசுரன் என்னும் பன்றி. இதனைத் திருவுள்ளம் பற்றிய சிவபெருமான் பன்றியைக்கொன்று விசயனைக் காத்தனர் என்பது வரலாறு. கோடு – கொம்பு. மால் – பெரிய; மயக்கமுமாம். கோச்செங்கண்ணான் செய்த கோயில்களில் ஒன்றாதலின் அவற்கு அருள்செய் சேய்ஞலூர் மேயவனே என்றார். சேடு – பெருமை.

ஆடல் வல்லானின் ஆனந்த கூத்து

சோழ சிற்பியின் அபார திறமையை போற்றி ஆதியும் அந்தமும் இல்லா அருள் பெரும் ஜோதி ரூபமான அவனின் ஆடல் உருவம் இந்த சட்டங்களுக்குள் வந்து ஆடுவது போலவே உள்ளது …..ஆடல் வல்லானின் ஆனந்த கூத்து …. தஞ்சை பெரிய கோவில் சிற்பம்.. பல கோணங்கள்…

 

சுயன்று ஆடும் அவனின் சுயர்சியை காட்ட கழுத்தில் இருக்கும் பாம்பு நழுவி கையில் தொங்கிக்கொண்டு இருப்பதை பாருங்கள் ..அந்த பாம்பின் சுயல்களில் தான் என்ன ஒரு உயிரோட்டம் ….இடையில் இருக்கும் உடுப்பும் அது போலவே பறந்து அவன் சுயன்று சுயன்று ஆடுவதை வெளி கொணர்கின்றன … அந்த .உடைகளில் தான் என்ன அழகிய வண்ணங்கள்.. ஒரு காலில் நின்று ஆடும் போதும் என்ன ஒரு வலிமை என்ன ஒரு ஒரு நளினம் ..சிற்பியின் வேலைப்பாடு ஒவ்வொரு அங்க அசைவையும் காட்டும் விதத்தில் உள்ளது

 

பிரமனுக்கு இரவாகும்பொழுது இயற்கை சலிக்காது. சிவபெருமான் அருளினால் ஒழிய இயக்கம் இல்லை. அவன் கழிப்பேருவகை கொண்டு ஆடும்போது சடப் பொருள்கள் மூலம் துயில் நீங்கி எழும் ஒலி அலைகளை வாரி இறைக்கிறான். அசையாத பொருள்களும் அசைந்து அவனை சுற்றி ஒளிக்கற்றைகளை பரப்புகின்றன. ஆடிக்கொண்டே அவன் பல்வேறு தொழில்களை நடத்துகிறான். முடிவு காலம் நெருங்கியதும் எல்லாவற்றையும், உருவங்களையும் நாமங்களையும் – தீயால் சுட்டெரித்து, அவைகட்கு ஓய்வு கொடுக்கிறான். இது கவிதை. இம்மி குறைவின்றி விஞ்ஞானமும் கூட.

– ஆனந்த குமாரசுவாமி.