பல்லவ துவாரபாலகர்களுக்கு என்ன கொம்பா முளைத்துள்ளது?

நண்பர்களே , இன்று நான் என்னை மிகவும் கவர்ந்த மனிதரை பற்றி எழுதுகிறேன். எனது அறிவுப்பசியைத் (சிற்பங்களை சார்ந்த!!) துவக்கி வைத்த அற்புத மனிதர், இணையத்தின் பலம், அதன் முழு பயன், வரும் சந்ததியனருக்கு நாம் விட்டுச்செல்ல கூடிய பொக்கிஷங்கள் போன்றவற்றை எனக்கு உணர்த்திய மாமனிதர். திரு ஐன்ஸ்டீன் அவர்கள் தனது அற்புத கண்டுபிடுப்புகளை பற்றி இவ்வாறு கூறினாராம்..” தொலைவில் உள்ள ஒரு நல்ல பொருளை என்னால் காணமுடிவதற்குக் காரணம் நான் உயர்ந்தவர்களின் தோளில் இருந்து பார்ப்பதால்தான்”

அது போல ஒரு உயர்ந்தவரை பற்றிய பதிவே இது. நான் எழுதும் அந்த மனிதரை நான் நேரில் சந்தித்தது கிடையாது. நான் எனது வாழ்கையை எப்படி எழுதவேண்டும் என்பதை பற்றிய தெளிவைப் பெறுவதற்கு முன்னரே, அதாவது 1988 இல் அவர் மறைந்துவிட்டார்.

சிற்பக்கலை பற்றி எனக்கு ஆர்வம் வந்தவுடன், மல்லை கலைச்செல்வங்களை வெறும் பொழுதுபோக்காக மட்டும் பார்க்காமல், ஒரு தேடலாக பார்த்தேன் . அவற்றை பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள பல ஊடகங்களை அலசினேன். சிங்கையில் இருந்தபடியால் நேரில் பார்க்க வாய்ப்புகள் குறைவு, எனவே புத்தங்களை படித்து பசியாறினேன். எனினும் சிற்பக்கலை பற்றி ஒரு சில புத்தகங்களே கிடைத்தன. அவற்றில் பலவும் என் அறிவுக்கு ( இன்றும் ) எட்டாத நிலையில் இருந்தன. அவற்றில் சில விலை அதிகமாக என்கைக்கு எட்டாதவகையில் என்னை வாட்டின. ஆர்வம் என்னை இணையத்திற்கு எடுத்து சென்றது. அல்லும் பகலும் தேடினேன் . இரண்டு தளங்கள் கிடைத்தன. திரு நாகசுவாமி அவர்களின் தளம் மற்றும் திரு

கிஃப்ட் சிரோமோனி அவர்களின் தளம் Dr.Gift Siromoney (30.7.1932 – 21.3.1988), M.A., M.Sc., Ph.D., F.S.S.

http://www.cmi.ac.in/gift/Archaeology.htm

திரு கிஃப்ட் அவர்களின் இடுகைகள் எனது பல கேள்விகளுக்கு எளிமையான முறையில் விடை தந்தன. மேலும் அருமையான வர்ணனை , இலவசமாக, புகைப்படங்கள், விளக்கும் சித்திரங்கள் என்று இருபது ஆண்டுகளுக்கு முன்னரே அவர் கையாண்ட முறை, என்னை மிகவும் கவர்ந்தன. இணையத்தில் சுற்றிக்கொண்டிருக்கும் சாமானியர்கள் கூட ஒருமுறை படித்தால், நமது குல பொக்கிஷங்களான கலைப்பெட்டகங்ளை போற்றி அவற்றை ரசிக்க வைக்கும் வண்ணம் இருந்தன அவரின் இடுகைகள். வரும் சந்ததியினர் இவற்றை போற்றி பேணி காக்க அவர் செய்துள்ள பனி அபாரம். அவரது இந்த செய்கை, அவர் இந்த உலகை விட்டு சென்றபின்னரும் என்னை போல சிலரை ஊக்குவிப்பதை கண்டு பெருமை படுகிறேன். ஏகலைவன் போல அவரை மானசீக குருவாக கொண்டு, நானும் இணையத்தில் இவ்வாறு ஒரு சிற்பக்கிடங்கியை உருவாக்க வேண்டும், அவரை போல என் தளமும் எனக்குப் பின்னரும் பலருக்கு உதவ வேண்டும் என்ற ஆசையில் அவர் வழி பின்தொடர்கிறேன்.

அவர் இவ்வாறு விட்டுச்சென்ற ஒரு இழையை இன்று விரிவு செய்து இங்கு படைக்கிறேன். இதுவும் ஒரு பல்லவ புதிர். திரு கிஃப்ட் அவர்களது இடுகையை சற்று நேரம் எடுத்து படியுங்கள்.

http://www.cmi.ac.in/gift/Archeaology/arch_dvarapalaka.htm

நண்பர்களின் உதவி கொண்டு அவரது இந்த பதிவை படங்கள் கொண்டு நான் விளக்குகிறேன்.


மிகவும் எளிய கருத்து இது. பல்லவ வாயிற் காப்போன் வடிவங்கள் உள்ளே இருக்கும் தெய்வங்களின் ஆயுதங்களே! என்பதே ஆகும்

இதை விளக்க, பல்லவ கால குடவரைகளின் வாயிற் காப்போன்களை பார்ப்போம். பொதுவாக பல்லவ கால சிவன் ஆலய வாயிற் காப்போங்களின் தலை அலங்காரங்கள் பற்றி வேறுபட்ட கருத்துக்கள் உண்டு. இவர்களுக்கு கொம்பு உண்டு ! பழங்கால பழகுடியின மக்களின் பழக்கமோ , அல்லது சமண வடிவங்களில் வரும் நாக சித்தரிப்பின் விளைவோ, இல்லை நந்தி வடிவமோ ..என்று பல விதமான கருத்துக்கள் உண்டு.

வல்லம் குடைவரையை ஆய்வு செய்து தனது விளக்கங்களை தந்துள்ளார் திரு கிஃப்ட் அவர்கள், ஆனால் இன்று வல்லம் குடவரை மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளது. நல்ல படம் எடுக்க முடியாத படி ” பாதுகாத்து வருகின்றனர். ” ( படங்களுக்கு நன்றி திரு சுவாமிநாதன் ஐயா மற்றும் திரு சந்துரு). ஆனால் நண்பர் திரு ஸ்ரீராம் அவர்களின் உதவி கொண்டு திருமயம் குடைவரை சிற்பங்கள் மற்றும் மண்டகப்பட்டு , சீயமங்கலம் குடைவ்ரைகளின் சிற்பங்கள் கொண்டு நாம் இன்று விரிவாக பார்க்கப்போகிறோம்.

சரி, முதலில் வல்லத்திலேயே ஆரம்பிப்போம். அற்புத சிற்பங்களை பாதுகாக்க அசிங்கமான இரும்புத்திரை .

அற்புத துவாரபாலகர்கள். பிற்கால கோயில்களில் தனித்தன்மையை இழந்து நிற்கும் சிற்பங்களை போல அல்லாமல், ஒவ்வொருவரும் தனக்கே உள்ள தனித்தன்மையுடன் உயிரோட்டத்துடன் இருக்கும் பல்லவ சிற்பங்கள். இரு பல்லவ சிற்பங்கள் ஒன்று போல இருக்காது, அதுவும் அவர்கள் சற்றே திரும்பி நிற்கும் பாணி அருமை.

வலது புறத்து சிலைக்கு இருக்கும் கொம்பை பார்த்தீர்கள ? இவை கொம்புகளா. கொம்பென்றால் தலையின் மேலே அல்லது சற்று நெற்றிப்பொட்டின் அருகில் அல்லவா இருக்க வேண்டும். இவை எங்கோ கழுத்தின் நடுவில் இருக்கும் படி உள்ளனவே, அதிலும் “கொம்பு” ஆரம்பிக்கும் பகுதியில் ஒரு தேவையற்ற வளைவு உள்ளதே.

சரி, இடதுபுறத்து சிற்பத்தை பார்ப்போம். இவருக்கு கொம்பில்லை, எனினும் கூர்ந்து பாருங்கள், நாடு நெற்றியில் ஒரு புடைப்பு தெரிகிறது . இது அவரது கிரீடத்தின் அலங்காரமா ? இல்லை இதற்க்கு வேறு ஏதாவது அர்த்தம் உண்டா ?

சரி, அடுத்து மண்டகப்பட்டு மகேந்திர குடைவரை செல்ல்வோம் .

வலது புறத்து துவாரபாலகன் அழகாக இருந்தாலும் கொம்பில்லை. வருத்தப்பட வேண்டும், இடது புறத்து ஆள் நமக்கு உதவுகிறார். நெற்றி புடைப்பு தான் இங்கேயும் .

அது என்ன இது, புது அலங்காரம். இன்னும் சிலவற்றை பாற்றுவிட்டு இந்த கேள்விக்கு விடை தேடுவோம்.

அடுத்து சீயமங்கலம் செல்வோம்.


வலது புறத்து சிற்பம் கொம்புடன் காட்சி அளிக்கிறது. இடது புறத்து வாயிற் காப்போன் கிரீடத்தில் தான் புடைப்பை காணவில்லை.


சரி, மீண்டும் கொம்பை சற்று அருகில் சென்று பார்ப்போம். இங்கேயும் கொம்பின் அடியில் உள்ள அரை வட்டம் குழப்பத்தை தருகிறது.

இப்போது புதிருக்கு விளக்கம் பெற, நண்பர் ஸ்ரீராம் அவர்களின் உதவி கொண்டு திருமயம் சிற்பங்களை பார்ப்போம். அற்புத வடிவங்கள், அதுவும் அந்த வலது புறத்து சிற்பத்தின் நிற்கும் பாணி, ஆஹா என்ன ஒரு கம்பீரம், அப்படியே உயிர் சிற்பம்.


இடது புறத்து சிற்பம் சற்று அடங்கி இருந்தாலும் அருமை.


அருகில் சென்று ஆராய்வோம் . அவர்களின் தலை அலங்காரம் மிக அருமை.

வலது புறத்து வாயிற் காப்போனின் தலை கொம்பு – இப்போது இந்த சிற்பத்தில் இன்னும் அலங்காரமாக இருக்கும் கொம்பு நமக்கு பல உண்மைகளை வெளி கொணர உதவுகிறது. உங்கள் மனக்கண்களில் வாயிற் காப்போனின் முகத்தை எடுத்துவிட்டு வெறும் கொம்புகளை மட்டும் பாருங்கள்

கிரீடத்தின் மேலே ஒரு வேல் போன்ற அமைப்பு தெரிகிறதா. இதையும் இரண்டு கொம்புகள் ( அவற்றின் அடியில் இருக்கும் அரை வட்டம் ) ஆனதையும் சேர்த்து பாருங்கள். ஒரு திருசூல வடிவம் தெரிகிறதா. .

ஆம் இவரே திரிசூலநாதர்

இதே வாதத்தின் படி, இடது புறம் இருப்பது வெறும் புடைப்பு இல்லை. அது மழு . கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள புகழ் பெற்ற சண்டேசர் வடிவத்தில் அவன் கரத்தில் உள்ள மழுவை பாருங்கள்.

இவரே மழுவுடையார்.

ஈசனின் மழுவும் சூலமும் மனித உரு கொண்டு அவன் சன்னதியை காக்கும் கோலங்களே இவை.

சகோதரி காதி அவர்கள் அனுப்பிய காவேரிபாக்கம் சிற்பம். தற்போது சென்னை அருங்காட்சியகத்தில் இருக்கும் சிற்பம். இவரும் திரிசூலநாதர் !!

எனது முதல் கண்டுபிடிப்பு ! மூன்று ஸோமாஸ்கந்தர் வடிவங்கள் ஏன் உள்ளன

நண்பர்களே!

இன்று மிகவும் சந்தோஷமான நாள். எனது முதல் கண்டுபிடிப்பு இன்று வெளி வருகிறது. இது தற்செயலாக கண்ணில் பட்ட ஒரு புகைப்படத்தில் இருந்த வந்ததே என்றாலும், இரண்டு வருடங்களாக இதனை நான் எப்படி வெளியிடுவது என்ற குழப்பத்தில் இருந்தேன். ஏதாவது கருத்தரங்கில் பெரிய பெரிய ஆய்வாளர்களுக்கு முன் இதனை வெளியிடவேண்டும் என்ற ஆசை இருந்தது. பிறகு தான் புரிந்தது, இவை எல்லாம் எவ்வளவு கடினம் என்று, அது மட்டும் இல்லாமல் அவ்வாறு சமர்ப்பித்த ஆவணங்கள் எத்தனை சான்றோர்களையும், சாமானியர்களையும் ஆன்றோர்களையும் சென்று அடைகின்றன! அதனால், இன்று நண்பர்கள் துணையுடன், இணையத்தில் எங்கள் தளம் தரும் தைரியத்தில், முதல் முதலில் எனது கண்டுபிடிப்பை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

பல்லவர்கள் கலை உலகுக்கு செய்த சேவை மிக அரியது. அதனை பற்றி எழுத வேண்டும் என்பதால் மகேந்திர குடைவரைகள் பற்றிய தொடரை துவங்கினேன். அவற்றில் நாம் பல அரியதகவல்களை தெரிந்து கொண்டோம் . இந்தத் தொடரில் மேலும் பல விஷயங்களை தொடர்ந்து வரும் பதிவுகளில் பார்ப்போம்.

பல்லவர்கள் சிற்பக் கலை வளர்ச்சிக்கு ஆற்றிய தொண்டில் மிகவும் போற்றப்பட வேண்டியவை அவர்கள் தந்த சோமாஸ்கந்த வடிவம், சிவ கங்காதர வடிவம் மற்றும் மகிஷாசுரமர்தினி வடிவங்கள். அவற்றில் பல்லவ சோமாஸ்கந்த வடிவம் மிகவும் அற்புதமான வடிவம், பிற்கால பல்லவர் ஆலயங்களில் கருவறையில் பின் சுவரில் இந்த அற்புத வடிவத்தை நாம் பார்க்கலாம்.

இந்தப் பதிவு அப்படிப்பட்ட மூன்று சோமாஸ்கந்த வடிவங்களை பற்றியும் அவற்றால் எழும் புதிருக்கு விடையும் பற்றியது. பொதுவாக கருவறை பின்சுவரில் மட்டுமே இருக்கும் இந்த வடிவம் சாளுவன்குப்பம் அதிரணசண்ட மண்டபத்தில் வெளியிலும் இரண்டு இடங்களில் உள்ளன. இந்தக் குடைவ்ரையே புதிர்கள் நிறைந்த ஒன்று.

பல அறிஞர்கள் வெகுவாக விவாதித்த விஷயம். பார்ப்பதற்கு குடைவரையின் பாணி முற்கால பல்லவர் குடைவரை போல ( தூண்களின் அமைப்பு ) இருந்தாலும் , அங்குள்ள கல்வெட்டில் (அற்புதாமான கல்வெட்டு) ராஜஸிம்ஹ பல்லவன் தான் எடுப்பித்த அதிரணசண்ட பல்லவேஸ்வர க்ருஹம் என்று தனது பட்டப்பெயர் அதிரணசண்ட (அதி – மிகை , ரண – போர்களம், சண்ட – வல்லவன் ) என்று கூறுகிறது.

மல்லை பற்றி திரு நாகசுவாமி அவர்களின் அற்புதமான பதிவைப் படியுங்கள். ஒரு தவம் போல அவர்கள் பணிகள் நம்மை நெகிழவைக்கும்.

http://tamilartsacademy.com/books/mamallai/new-light.xml

வாசகர்கள் இந்த அதிரணசண்ட மண்டபத்தின் அமைப்பையும் மகேந்திரர் கால குடவரைகளின் அமைப்பையும் ஒப்பு நோக்கினால் இன்னும் பல கேள்விகள் வெளி வரும்.

அதற்கு முன்னர், இந்த சோமஸ்கந்தர் என்றால் என்ன? உமையுடனும் கந்தனுடனும் இருக்கும் ஈசன் என்றே பொருள்சரி! முருகன் மட்டும் ஏன், விநாயகர் எங்கே? அதற்கு முந்தைய பதிவான மல்லையில் எங்கும் விநாயகர் இல்லை வாசியுங்கள்.

பல்லவ மன்னன் மகேந்திரன் தான் முதல் முதலில் உலோகம், சுதை, செங்கல், மரம் போன்றவற்றை உபயோகிக்காமல் கல்லில் கட்டிய ஆலயம் என்று கூறியதை மண்டகப்பட்டு கல்வெட்டில் பார்த்தோம். அப்போது அவர்கள் இறைவனின் வடிவத்தை சுதை மற்றும் மரத்தில் செய்து வழிபட்டார்கள். இன்றும் பல்லவ கால உத்திரமேரூர் வரதர் ஆலயத்தில் சுதை வடிவங்களை பார்க்கலாம். ஆலயத்தை கல்லில் கட்டிய அவர்கள், மரத்தாலும் சுதையாலும் ஆன விக்கிரகங்கள் மிக விரைவில் அழிந்து விடுவதை கண்டோ, அல்லது அங்குள்ள சிற்பியின் கைவண்ணம் காலத்தால் வளர்ந்ததாலோ, அவற்றையும் கல்லிலே செதுக்க ஆரம்பித்தனர் எனவே பிற்கால பல்லவர் கருவறை சுவரின் பின்பக்கம் சுவரிலேயே சோமாஸ்கந்த வடிவம் செதுக்கப்பட்டது. இவ்வாறு வந்ததே சோமாஸ்கந்த வடிவம். வலது புறத்தில் ஈசன், இடது புறத்தில் உமை, உமையின் மடியில் அல்லது நடுவில் குழந்தை முருகன். இந்த வடிவமும் காலப்போக்கில் எவ்வாறு வளர்ச்சி பெற்றது என்பதை பற்றி படிக்க திரு கிபிட் சிரோமொனே அவர்களின் பதிவு

http://www.cmi.ac.in/gift/Archeaology/arch_somaskanda.htm

சோழர்கள் இந்த வடிவத்தை வெண்கல சிலைகளாக வடித்து, இந்த வடிவத்தின் பெருமையை இன்னும் பெரிதாக்கினார்.


சரி, மீண்டும் அதிரணசண்ட பல்லவேஸ்வரக்ருஹம் வருவோம், பலருக்கு இன்று நாம் பார்க்கும் மல்லை முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் மண்ணுள் புதைந்து இருந்தது என்பது தெரியாது. (ஆம், புகழ் பெற்ற பஞ்ச பாண்டவ ரதம் கூடத்தான்!) அந்தக் காலத்தில் ( 18 C) இருந்த நிலையை அரிய இந்த புகைப் படத்தை பாருங்கள் ( நன்றி பிரிட்டிஷ் லைப்ரரி )

இன்று இப்படி காட்சி அளிக்கும் மண்டபமே அது.


சரி, சற்று அருகில் சென்று பார்ப்போம்.

கருவறைக்கு இருபுறமும் இரண்டு சோமஸ்கந்தர் வடிவங்கள் உள்ளதை பாருங்கள். பொதுவாக கருவறையில் உள்ளே மட்டுமே இருக்கும் இவை ஏன் இங்கு வெளியில் வந்துள்ளன.

கருவறையினுள் சற்று சென்று பார்ப்போம். சிவ லிங்கத்தின் பின்புறம் அழகிய சோமஸ்கந்தர் வடிவம் உள்ளது.

பின்னர் எதற்காக சிற்பி வெளியிலும் இரண்டு சோமாஸ்கந்த வடிவங்களை செதுக்கினான்

இங்கே தான் எனது கண்டுபிடிப்பு வருகிறது. மண்ணில் புதைந்த மண்டபத்தை வெளிக் கொணர்ந்தவுடன் எடுத்த புகைப் படம் ( மீண்டும் நன்றி பிரிட்டிஷ் லைப்ரரி ) என் கண்ணில் பட்டது.

சற்று உன்னிப்பாக கவனியுங்கள். வெளியிலும் இரண்டு சிவ லிங்கங்கள் இருப்பதை பார்க்கிறோம்.

அதனால் தான் சிற்பி அவற்றுக்கு பின்னர் சோமஸ்கந்தர் வடிவங்கள் செதுக்கி உள்ளான். இதுவே எனது கண்டுபிடிப்பு

இந்த லிங்கங்கள் இப்போது எங்கே போயின ? இவை மற்றும் இன்றி இன்னும் இரண்டு சிற்பங்கள் புகை படத்தில் உள்ளன. தலையில்லாத அமர்ந்த கோலத்தில் ஒரு வடிவமும், நிற்கும் கோலத்தில் அழகிய இன்னொரு வடிவமும் காணலாம். சென்ற முறை அங்கு சென்ற பொது இந்த சிதைவுகள் ஒரு ஓரத்தில் இருப்பதை படம் எடுத்தேன்!!

கால ஓட்டம் ஒரு கலைஞனையும் அவன் திறமையயும் அழிக்க நினைத்தாலும், அந்தக் கலைஞனின் சிற்பக் கலையை மட்டும் காலத்தால் அழிக்க முடிவதில்லை என்பதையும் உணர்ந்தேன். அது பதினெட்டாம் நூற்றாண்டின் நிலை. பின்னர் விளைந்த சிதைவுக்கு யார் பொறுப்பு?

தேவிக்கு யமனின் பரிசு

வணக்கம் நண்பர்களே, இன்று நாம் மீண்டும் எனக்கு மிகவும் பிடித்தமான மல்லைக்கு பயணிக்கிறோம். இன்னும் ஒரு அற்புத படைப்பு இந்தச் சிற்பம். நாம் முன்னரே பார்த்தது தான் , ஆனால் வேறு ஒரு கண்ணோட்டத்தில். ( இந்தக்கால கட்டுடல் அந்தக்காலத்தில் )

ஆம்!. மகிஷாசுரமர்தினி சிற்பம் தான். இந்த சிற்பத்தை முழுவதுமாக ரசிக்க மூன்று நான்கு பதிவுகள் தேவை. எனவே இதோ முதல் பதிவு. தேவியை பார்ப்போமா…

‘சித்திரம் பேசுதடி. சிந்தை மயங்குதடி’ என்பது போல பேசாமலேயே நம்மை மயக்கும் சிற்பம் இது. தனது கை இல்லை கல் வண்ணத்தால் நம்மை கிறங்க வைக்கிறான் சிற்பி. அவற்றை பார்க்கும் முன்னர் முதலில் கதையை பார்ப்போம்.

வழக்கம் போல ஒரு அசுரன். மகிஷன். வரம் கேட்டு கடுந்தவம் புரிந்து பிரம்மனை வரவழைத்து அழியா வரம் கேட்கிறான். பிறப்பு என்றால் இறப்பும் நியதி. அதனால் சாகாவரம் தர இயலாது என்று நான்முகன் மறுக்க, தனது வரத்தை சற்று மாற்றிக் கொள்கிறான் மகிஷன். தனது வலிமையின் மீது இருந்த ஆணவத்தால், தன்னை எந்த ஆணாலும் எதிர்க்க முடியாது என்று இருக்க, மிகவும் புத்திசாலித்தனம் என்று நினைத்து தான் மடித்தால் ஒரு பெண்ணின் கையாலேயே மடிய வேண்டும் என்று வரம் கேட்கிறான். நான்முகனும் அவ்வாறே கொடுத்து விட, தவத்தின் பலத்தாலும் தனது அசுர குணத்தாலும் உலகை வென்று அடுத்து தேவலோகத்தின் மேல் படை எடுக்கிறான் மகிஷன். அவனது செயலை முறியடிக்க அனைத்து தெய்வங்களும் ஒன்று கூடி ஒரு தேவியை உருவாக்கி அவளுக்கு தங்கள் சக்திகளை கொடுக்கிறார்கள். எவ்வாறு… ( நன்றி கீதா அம்மா ) தேவி மகாத்தியத்தில் இருந்து வரிகளை எடுத்து அதற்க்கு தமிழில் விளக்கங்களும் தந்தார்.

ஷூலம்ஷூலாத் விநிஷ்க்ருஷ்ய ததெள தஸ்யை பிநாகத்ருக்

பிநாகபாணியான ஈசன் தனது சூலத்திலிருந்து ஒரு சூலத்தைத் தோற்றுவித்து அவளுக்குக் கொடுத்தார்.

சக்ரஞ் ச தத்தவான் க்ருஷ்ண: ஸமுத்பாத்ய ஸ்வசக்ரத:
கரிய திருமால் தன் சக்கரத்தினின்று ஒரு சக்கரத்தை உண்டாக்கி அளித்தார்.

சங்கஞ் ச வருண: சக்திம் ததெள தஸ்யை ஹுதாஸன:

வருணன் சங்கத்தையும், அக்கினி சக்தி ஆயுதத்தையும் கொடுத்தனர்.

மாருதோ தத்தவாம்ச்சாபம் பாணபூர்ணே ததேஷுதீ

வாயு பகவான் வில்லையும் அம்பையும் பாணங்கள் நிறைந்த அம்பறாத்தூணியையும் அளித்தார்.

வஜ்ர-மிந்த்ர: ஸமுத்பாத்ய குலிசா-தமராதிப:

இந்திரன் தனது குலிசத்தில் இருந்து தோற்றுவிக்கப் பட்ட வஜ்ராயுதத்தையும் யானையாகிய ஐராவதத்தில் இருந்து தோற்றுவிக்கப் பட்ட மணியையும் கொடுத்தான்.

குலிசம் இங்கே இடி என்ற பொருளில் வரும் என எடுத்துக் கொள்ளலாம்

ததெள தஸ்யை ஸஹஸ்ராக்ஷோ கண்டா-மைராவதாத் கஜாத்

காலதண்டாத்-யமோ தண்டம் பாசஞ் சாம்புபதிர்ததெள

யமன் காலதண்டத்தில் இருந்து தண்டத்தையும், வருணன் பாசத்தையும் அளித்தனர்.

ப்ரஜாபதிச் சாக்ஷமாலாம் ததெள் ப்ரஹ்மா கமண்டலும்

பிரஜாபதியாகிய பிரம்மா அக்ஷமாலையையும் கமண்டலுவையும் கொடுத்தார்.

ஸமஸ்த-ரோம-கூபேஷு நிஜரச்மீன் திவாகர:

அவளுடைய மயிர்க்கால்களில் பிரகாசிக்கும்படியான கிரணங்களைச் சூரியன் அளித்தான்.
காலச்ச தத்தவான் கட்கம் தஸ்யாச் சர்ம ச நிர்மலம்!

காலன் கத்தியையும் நிர்மலமான கேடயத்தையும் அளித்தான்.

சரி, சிற்பத்திற்கு வருவோம். போருக்கு செல்லும் தேவியின் அழகோ அழகு. எட்டு கைகளுடன், சிங்கத்தின் மீது அமர்ந்து, ஒரு கம்பீரத்துடன் பார்க்கும் அந்த முகம்

நாணை வில்லில் ஏற்றி நிற்கும் பாணி, வில்லை பிடித்திருக்கும் கரத்தை பாருங்கள். கட்டை விரல் வில்லின் மீது படர, மற்ற விரல்கள் பலத்துடன் பற்றி இருக்கும் காட்சி, வில்லை வளைத்து இழுத்து கயிற்றை பிடித்திருக்கும் கரமோ இன்னும் அற்புதம். அதற்க்கு ஏற்றார்போல உடலை சற்று விறைப்பாக செதுக்கி இருப்பது .. உயிரோட்டம்

அடுத்து நம் கண்ணுக்கு சட்டென படுவது – தண்டம். யமனின் கால தண்டம். இது தண்டமோ அல்லது (G)கதையோ என்ற கேள்வி வராமல் இருக்க, சற்று படத்தை உற்று பார்ப்போம்.


கைப்பிடி கதை போல இருந்தாலும், உருண்டையாகவே இருக்கிறது. மேலும் தண்டத்தின் மேல் பாகம் நன்கு உருண்டு உள்ளதை நாம் தெளிவாக பார்க்க முடிகிறது. தண்டம் சிங்கத்தின் பிடரி பக்கம் முடிவதாலும், அதை அடுத்து சிங்கத்தின் பிடரி ரோமங்களின் வேலைப்பாடு இருப்பதால், சிதைந்த கூரிய கத்தி அல்ல என்று நாம் தெளிவாகவே சொல்லலாம்.

மேலும் மற்ற கரங்களில் உள்ள ஆயுதங்கள் என்ன என்னவென்பதை படங்களை கொண்டு பட்டியலுடன் ஒப்பிட்டு கூறுங்கள் பார்க்கலாம்.

ஆமாம், ஈசனிடம் பெற்ற சூலம் எங்கே?. ஒருவேளை வில்லையும் நாணையும் பிடிக்க இரு கரங்கள் தேவைப்பட்டதால் சிற்பி சூலத்தை விட்டு விட்டாரோ?

சிற்பத்தின் அழகை ரசிக்க இன்னும் ஒரு படம். படைப்பு சிற்பம், அதிலும் இப்படிப்பட்ட சிற்பத்தை வடித்த சிற்பி, தேவியை சிங்கத்தின் மீது சவாரி செய்வது போல காட்ட வேண்டும். இங்கே பாருங்கள், வலது கால் எப்படி முழுமையாக வெளியில் நீட்டி செதுக்கி உள்ளான் என்று.

இப்போது நீங்கள் மனதில் இந்த சிற்பத்தை ஒரு தனி படைப்பாக பார்க்காமல், ஒரு குடைவரையின் ஒரு பக்க சுவர் ( மறு பக்கம் இருப்பது நாம் முன்னர் பார்த்த சேஷ சயன பெருமாள் ),

ஒரு மலையினுள் குடைந்த அதிசயம் இது. புரிகிறதா.

விஜயவாடா மொஹல்ராஜபுரத்து அதிசயங்கள் – பாகம் 2

மோகல்ராஜபுரம் பற்றிய முதல் பதிவில் திரு திவாகர் அவர்களின் ஒரு சில படங்களே கிடைத்தன். அவற்றில் எழுந்த கேள்விகளை தீர்க்க இணையத்தில் பல நாட்கள் தேடியும் ஒன்றும் கிடைக்க வில்லை. பிறகு கூகிள் மொழிபெயர்ப்பு கொண்டு தெலுங்கில் தேடினேன். கிட்டியது

http://pratibimbamu.blogspot.com/

தளத்தின் உரிமையாளருக்கு உடனே மடல் அனுப்பினேன், திரு நாராயணசுவாமி அவர்களும் படங்களை வெளியிட அன்புடன் ஒத்துக்கொண்டார்.

படங்களை பாருங்கள். இன்னும் பல கேள்விகளே வருகின்றன

வாயிற் காப்போனை பாருங்கள் ( எனக்கு மிகவும் பிடித்தவர்கள் – எவ்வளவு சிதைந்தாலும் ) வலது புறம் இருப்பவனின் தலையில் அது என்ன கொம்பு போல ( அதற்கென தனி பதிவு தயார் செய்ய வேண்டும் )

கூடுகளை இன்னொரு முறை பாருங்கள்.

மகேந்திரவர்மரின் கலைத்தாகம் உண்டவல்லியில் துவங்கியதா ?

சிற்பங்களுக்கென உருவாக்கப் பட்ட சிறப்பு வலைத்தளம் இது, மேலும் பல்லவ சிற்பங்களின் வசீகரத்தால் மயங்கிக் கிடக்கும் எனக்கு இந்த பதிவை உருவாக்குவது சற்றே சிரமமெனினும் நல்லதொரு பதிவை உங்களுக்கு அளிக்கும் மகிழ்ச்சியில் தொடர்கிறேன்.

ஏதாவது ஒன்று நமக்கு பிடிக்கிறது என்றால் நம் மனம் அதிலேயே லயித்து விடும், மீண்டும் மீண்டும் மனம் அதையே நாடிச் செல்லும். அது போல் பல்லவ சிற்பங்களில் மனதை செலுத்தி சிட்டுக் குருவியாய் சிறகடித்துக் கொண்டிருந்த என்னை, பல்லவர்களுக்கு முந்திய சிற்பங்களின் புகைப்படத்தை காட்டியும் தன் கேள்விக் கணைகளாலும் கட்டிப் போட்டுவிட்டார் தோழி கேத்தி. எனினும் நான் எனது மகேந்திர நாமத்தை விடவில்லை. அண்மையில் ஒரு தேடலில் – என்னுடைய மயக்கத்தால் சிற்பக்கலையின் ஈடு இல்லாத நாயகன் மகேந்திரபல்லவன்தான் என்றிருந்த நான் தகர்ந்து போனேன், டாக்டர். முகமது தாஜுதீன் கான் அவர்களின் ஆச்சர்யமூட்டும் உண்டவல்லி குடைவரைகளின் புகைப் படங்களை பார்த்தபொழுது தான் ….

(உண்டவல்லிக் குடைவரைகள் விஜயவாடாவிற்கு தென்மேற்கே 6 கி.மீ. தொலைவிலும், குண்டூரிலிருந்து வடமேற்கே 22 கி.மீ. தொலைவிலும் உள்ளது, ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள இந்தக் குடைவரைகள் ஹைதராபாதிலிருந்து 220௦ கி.மீ. தொலைவில் உள்ளது. நன்றி விக்கி)

இந்தப் படங்களை பார்த்தவுடன் நினைவுக்கு வந்தவர் “விசித்திரசித்தன்” நாவலை எழுதிய திரு. திவாகர் அவர்கள்தான், அவரிடம் இதைப்பற்றி உரையாடிய போது இரண்டு ஆச்சரியமான விஷயங்கள் தெரியவந்தன. ஒன்று இந்த குடைவரைகளின் காலம் 4 முதல் 6 ஆம் நுற்றாண்டு (கி.பி.), இது விஷ்னுகுன்டின மன்னர்கள் காலத்தை சார்ந்தது. நிச்சயமாய் இது மகேந்திரவர்மரின் முதல் குடைவரையான மண்டகப்பட்டிற்கு முந்தியதுதான். இரண்டாவது ஆச்சர்யம், மகேந்திரவர்மர் தன்னுடைய வாழ்நாளின் முற்பகுதியை இங்கே செலவிட்டு இருக்கவேண்டுமென்பது. மேலும் சிம்ம விஷ்ணுவின் மனைவிகளில் ஒருவர் விஷ்னுகுண்டின் வம்சத்தை சார்ந்தவர் என்றும் தெரியவந்தது.

மற்ற விஷயங்களைப பற்றி அலசி ஆராய்வதற்கு முன், இரண்டு சிற்பக் கலைகளையும் சற்று பொருத்திப் பார்த்திடுவோம். உங்களுக்கு அதிக சிரமமில்லாமல் ஒரே ஒரு துவார பாலகரையும் ஒரே ஒரு தூணையும் மட்டும் முதலில் பார்க்கலாம்.


தூணின் வடிவமைப்பு, அதில் உள்ள வரிகள், நேர்த்தி, சிம்மத்தின் வடிவமைப்பு ஆகியவற்றோடு துவார பாலகரின் தோற்றம், நிற்கும் அழகு, கதை ஆயுதம், உடை , அணிகலன் , இடுப்பு வளைவுகள், இடுப்பின் மேல கையை ஊன்றி வைத்திருக்கும் முறை ஆகியவற்றையும் கவனிக்கவும்.

என்ன பார்த்தாயிற்றா, ஒருவேளை மகேந்திரவர்மரால்தான் இவைகள் செதுக்கப்பட்டனவோ என்ற எண்ணம் எழுகிறதல்லவா! ஆனால் என்ன செய்வது இவற்றின் காலம் குறைந்தது ஐம்பது முதல் நூறு ஆண்டுகள் நம் விசித்திரசித்தருக்கு முற்பட்டதாயிற்றே.

இதுவரை மகேந்திரவர்மர்தான் குடைவரை சிற்பங்களின் முன்னோடி என்றல்லவா நினைத்திருந்தோம், இதோ திரு. நாகசாமி தன்னுடைய நூலில் குறிப்பிட்டுள்ளதையும் பார்த்துவிடுவோம். ( மண்டகப்பட்டு புகழ் பெற்ற மகேந்திர கல்வெட்டு )

http://www.tamilartsacademy.com/books/mamallai/new-light.xml

கல்வெட்டினை படித்துப்பார்க்கலாம் ” விசித்திரசித்தனால் நிர்மாணிக்கப் பட்ட இந்த ஆலயம், பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர்க்கு அர்ப்பணிக்கப்பட்டது, இதில் செங்கலோ, கலவையோ, மரமோ, உலோகமோ உபயோகப்படுத்தப்படவில்லை. இதுதான் தென்னிந்தியாவில் முதன்முதலாக வெட்டப்பட்டது என்றும் குறிப்பிடப்படவில்லை, இதற்குப்பின் வந்த கல்வெட்டுகளிலும் அவ்வாறு குறிப்பிடப்படவில்லை. பட்டப்பெயர் வைத்துக்கொள்வது அவருக்கு மிகவும் பிடிக்கும் , அப்படியெனில் அவர் தனக்கு “அத்யகுகயதநகாரி” அதாவது முதல் குடைவரையை வெட்டியவர் என்று பெயர் வைத்துக் கொண்டிருந்திருக்கலாம், ஆனால் இதுவரை அவ்வாறு ஒரு பட்டப் பெயரை நாம் எங்கும் பார்க்கவில்லை.
மகேந்திரரால் உருவாக்கப்பட்ட எந்த ஒரு பண்டைய ஆவணங்களிலும், அதாவது கல்வெட்டுகளிலோ அல்லது செப்பு பட்டயங்களிலோ, அவர்தான் முதலில் குடைவரைகளை தோற்றுவித்தார் என்று குறிப்பிடப்படவில்லை.”

எது வேண்டுமானாகிலும் இருந்துவிட்டு போகட்டும், ஒன்று நிச்சயம் இந்த மண்டகப்பட்டு குடவரை தான் பல்லவர்களின் முதல் குடைவரை. ( சிலர் மண்டகப்பட்டு குடவரை மற்றும் தூண்களின் வேலைப்பாட்டையும் அதன் வாயிற் காப்போனின் வேலைபாட்டையும் வைத்து தூண்களை விட அவர்களின் வேலைப்பாடு முதிர்ந்த நிலை என்று சொல்வது உண்டு. ஒரு வேலை அவை பின்னர் வெட்டப் பட்டதாகவும் இருக்கலாம்)

அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு பார்த்தால், மண்டகப்பட்டு குடைவரைக்கும் உண்டவல்லிக் குடைவரைக்கும் உள்ள ஒற்றுமை புலப்படும். தமிழகத்தில் குடைவரைகளுக்கும், சிற்பக் கலைக்கும், ஆலய கட்டுமானத்திற்குமான பொற்காலத்திற்கு வித்திட்ட மகேந்திரவர்மரின் கலைத்தாகம் உண்டவல்லியில் துவங்கியதா ?

மேலே கண்ட ஒற்றுமைகளை எதைச்சையாக இருக்கவேண்டும் என்றும் நீங்கள் நினைத்தால், மேலும் சில உண்டவல்லிக்கும் மகேந்திர குடைவரைகளில் உள்ள சிற்ப ஒற்றுமைகள் இதோ. தூணின் வடிவம், அலங்கார பூ வடிவம், கம்பீர சிங்கம் ….

இப்போது என்ன சொல்கிறீர்கள் ?

இதே போல் மற்றுமொரு மனதை கொள்ளை கொள்ளும் குடைவரை ” பைரவகொண்டா”, இதை விரைவில் மற்றுமொரு பதிவில் காண்போம்.

கம்போடியாவையும் பல்லவர்களையும் இணைக்கும் மகர தோரணம்

ஃபூனன் (கம்போடியா) பற்றிய ஒரு புத்தகத்தில் சுவையான ஒரு படத்தை பார்த்தேன். ஒரு சிற்பக் கரு உருவானது. இந்தச் சிற்பத்தைக் கண்டவுடன் ஏனோ சட்டென தாளவனூர் சிற்பம் நினைவுக்கு வந்தது. இந்த இரண்டு சிற்பங்களையும் ஒப்பிட்டுப் பார்த்ததில் ஒரு இனிய அதிர்ச்சி! இரண்டும் ஒன்றுதானோ என்ற சந்தேகம் வந்துவிட்டது. அந்தச் சிற்பங்கள் இதோ:


Mr. Andy Brouwer ( www.andybrouwer.co.uk/blog/) என்ற நண்பர் எடுத்தப் புகைப்படங்கள்,சம்போர் ப்ரெய் குக் – கம்போடியா – அவர் அனுமதி பெற்று அவருக்கு ஒரு சிறப்பு நன்றியுடன் இங்கே படைக்கப்படுகின்றன.மகர தோரணங்கள் என்றழைப்பர். சாதாரணமாகப் பார்த்தால் ஏதோ வாயில்தோரணங்களாகவும் அலங்காரத்துக்காகவும் செதுக்கியதாகத்தான் தோன்றும். ஆனால் அதை உற்று நோக்க ஏராளமான வித்தைகள் உள்ளே தெரியும்.

இரண்டு சிற்பங்களும் இருவேறு இடங்கள். ஒன்று நம் பல்லவதேசத்தில் உள்ள தாளவனூர். இன்னொன்று கம்போடியா நாடு.

கடல் கடந்த நீண்ட இடைவெளி உள்ள இந்த இருவேறு சிற்பங்களின் ஒற்றுமை நம்மை வியக்கவைக்கிறது. இது அலங்காரத்துக்காக மட்டுமே செதுக்கப்படவில்லை. தன் சிற்பத் திறமையை முழுதும் கொட்டி இவைகளை அந்தச் சிற்பி வடித்திருக்கிறான் என்ற வகையில் அந்த மகரதோரணத்தில் அப்படி என்ன விசேஷம் என்று ஆராய்ந்தோமானால் நிறைய விஷயங்கள் தெரியவரும். சேக்கிழாரின் பெரிய புராணத்தில் திருஞானசம்பந்த நாயனார் கதையில் வரும் பாடலில் இந்த மகர தோரண முக்கியத்துவம் குறித்து விவரங்கள் கிடைக்கும்.

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1228&padhi=72&startLimit=1071&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

மகர தோரணம் வண்குலைக்
கமுகொடு கதலி
நிகரில் பல்கொடித் தாமங்கள்
அணிபெற நிரைத்து
நகர நீள்மறுகு யாவையும்
நலம்புனை அணியால்
புகரில் பொன்னுல கிழிந்ததாம்
எனப்பொலி வித்தார்.

(மகர தோரணங்களும், வளம்மிக்க குலைக் கமுகுகளும், வாழைகளும், ஒப்பில்லாத பலகொடிகளும், மாலை களும் ஆகிய இவற்றை அழகு பொருந்த நிரல்பட அமைத்து, நகரம் முழுமையும் உள்ள நீண்ட தெருக்கள் எல்லாவற்றையும் நன்மை பொருந்த அணிசெய்து, குற்றம் இல்லாத தேவலோகமே கீழ் இறங்கிய தாம் எனக் கூறுமாறு அழகு செய்வித்தார் சிவநேசர்.)

குற்றம் இல்லாத தேவலோகத்தில் மகரதோரணம் என்பது இன்றியமையாத ஒன்று என்பதை நாம் அறிந்துகொள்ளும்போது, அந்த சிற்பியின் கைவண்ணத்தைக் காண்கிறோம். ஒரு நகரத்தையோ அல்லது அரண்மனையோ அல்லது தொழப்படுகின்ற கோயில்களோ கல்லில் செதுக்கப்படவேண்டும் என்று வரும் பட்சத்தில் அது சிறப்பான தேவலோகத்துக்கு இணையாக சிற்பி கருதுகிறான். அங்கு மகரதோரண வாயில் என்பது இன்றியமையாத ஒன்று என்று சிற்பிக்குப் புலனாகிறது. மகரதோரணத்தில் இந்தப் புனிதம் கெடாதபடி சிற்பியின் கைவண்ணம் மிளிர்கிறது.

இப்படிப்பட்ட கடின வேலைப்பாடுகள் கொண்ட சிற்பங்கள் பிற்காலச் சோழர்கள் தங்கள் கோயில்களில் அருமையாய் பிணைத்தனர். தாராசுரம் கோயில் படி சுவரில் உள்ள இந்த மகரத்தை பாருங்கள்.

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் ஞான சரஸ்வதி சிற்பத்தில் மிக அருமையான இரு மகரங்களை பார்த்து மகிழுங்கள். நன்றி நண்பர் திரு மோகன்தாஸ் அவர்கள்.


மேலும் மகரங்களை பற்றி திரு உமாபதி ஸ்தபதியார் அவர்கள் இடத்தில கேட்ட பொது – சிலாகித்துப் போய் விளக்குகிறார். “ஆறு வெவ்வேறு விதமான சிற்பங்களை உள்ளடக்கி, அவைகளுக்குச் சுற்றி அலங்காரம் செய்வதைப் போல செடிகொடிகளையும் பக்கவாட்டுகளில்அழகோடு செதுக்கிக் காட்டவேண்டும். மிகக் கஷ்டமான சிற்பவேலை மட்டுமல்லாமல் கூரிய புத்தியோடு செயல்பட்டால் ஒழிய மகரதோரண சிற்பங்களை அவ்வளவு எளிதில் செதுக்கிவிடமுடியாது.!” அவர் மேலும் நமக்கு விளக்க அனுப்பிய படம் இதோ.

வேறெங்கெஙகு இத்தகைய மகரதோரணங்கள் செதுக்கியிருக்கிறார்கள் என்று மற்ற இடங்களிலும் ஒருமுறை பார்க்கவேண்டும். ஆராயவேண்டும்.

சத்ருமல்லேஷ்வராலயம் – மஹேந்திர பல்லவரின் உன்னத படைப்பு

விழுப்புரம் செஞ்சி சாலை . மதியம் 11.30 இருக்கும்

ரகோத்தமன்: ஆஹா , நல்ல வெய்யில். என்ன சார் முப்பது கிலோமீட்டர் வந்து இருப்போமா?
சந்துரு சார்: இல்லை, அதற்க்கு முன்னரே வலதுபுறம் திரும்ப வேண்டும்.!
நாராயணசுவாமி சார்: அப்படியா, இப்போ எவளோ ஆச்சு?
டிரைவர்: இருபத்தி ஏழு!
சதீஷ்: அதோ ஆசி போர்டு – தளவானூர் பாதை.
விஜய்: அப்பாடி , வந்தாச்சு. அந்த மலையா?
சந்துரு சார்: இல்லை இல்லை, ஆறு கிலோமீட்டர் இன்னும் போகணும்!
வெங்கடேஷ்: ஓ, அப்போ இந்த மலைத் தொடர் இல்லை..
சந்துரு சார்: ரோட்டில் இருந்தே தெரியும், ஆனால் கிட்டே ஓட்டிச்செல்ல வழி இல்லை. ஒரு இருநூறு மீட்டர் நடக்கணும்.

வெங்கடேஷ்: அதோ அதோ, இங்கே இருந்தே தெரியுதே. என்ன அற்புதமான இடம் – மகேந்திரர் சாய்ஸ் சூப்பர்… வயல் வெளி நடுவில் ரம்மியமான சௌந்தர்யம் மிக்க சரௌண்டிங் !!

சந்துரு சார்: வண்டிய இங்கேயே நிறுத்து பா, இனிமே நடந்து தான் போகணும்.

ஊர்க்காரன்: என்னாங்க, ஏங்க -வயல்ல நடக்கறீங்க, வரப்புல நடங்க. வயல்ல வெத வெதச்சு இருக்கோம்!
விஜய்: சரி சரி , ஆஹா பம்ப்பு செட்டு ஓடுது. வெயில்லுகு ஒரு குளியல் போட்ட அற்புதமா இருக்கும் , வரும்போது பார்ப்போம்.

அசோக்: என்ன பெரிய பாறை!!.

வெங்கடேஷ்: சூப்பர் ஸ்பாட்
சந்துரு சார்: ஆமாம், இதுக்கு மேலே தான் சமணர் படுக்கை இருக்கு, அப்புறம் போவோம்.

விஜய் : என்ன சார், கிரில் கேட் எல்லாம் இருக்கே . பூட்டு வேற தொங்குது
சந்துரு சார்: ஆள் பக்கத்துலே தான் எங்கேயாவது இருப்பான்!!

ஊர்க்காரன்: சாமி, சாவி என்கிட்டே தான் இருக்கு. இதோ தொறந்து வுடறேன். இதை நான் தான் பார்த்துக்கொள்கிறேன் .. சம்பளம் ஒண்ணும் கிடையாது. சும்மா தான். பூட்டி வைக்கலைன்னா டவுன் கார பசங்க வந்து ….

விஜய்: புரியுது புரியுது!!

விஜய்: என்ன கொடுமை சார். அழகிய மஹேந்திர தூண்களில் இப்படி கேட் போட்டு இருக்காங்க. அதுக்கு ஒரு ப்ளூ பெயிண்ட் வேறு – பெயிண்ட் அடிச்சவன் அவசரத்துல எப்படி பண்ணி இருக்கான் பாருங்க.

அசோக்: விஜய் , மேலே பாருங்க அது என்ன

சதீஷ்: விஜய், அங்கே பாருங்க மகர தோரணம். அதற்கு மேலே ஒரு சிவகணம்.

விஜய்: அசோக், அதுதான் கபோதம் , அதனுள் இருப்பது கூடு , அதற்குள் வெவ்வேறு முகங்கள் – எல்லோரா குடைவரைகளில் இது போல பார்த்த நினைவு. அற்புத மகர தோரணம் சதீஷ். இதே போல கம்போடியாவில் எங்கோ பார்த்த நினைவு. தேடிப் பார்க்கணும்.

அசோக் : குடவரை காவலர்கள் அருமை. என்ன கம்பீரம் அவர்கள் நிற்க்கும் தோரணை சூப்பர்.

விஜய்:அமாம், இடது புறம் உள்ள காவலரை பாருங்கள். கையில் கதை, மண்டகபட்டு போலவே. உடை அலங்காரம் எல்லாம் அற்புதம். உள்ளே இருக்கும் கருவறை காவலர்களை பார்க்க வேண்டும்.

சதீஷ்: உள்ளே பாருங்க விஜய், அமைப்பு புதுசா இருக்கு
வெங்கடேஷ்: அதோ பாருங்க , பெரிய கிராக், விரிசல்..
ரகோத்தமன்: உள்ளே நுழைந்ததும் ஒரு ஹால் மாதிரி வெட்டி இருக்காங்க, உள்ளே சென்று இடது புறம் திரும்பினா தான் சன்னதி

விஜய்: ஆமாம் ரகு, அதோ பாருங்க உள்ளேயே இரு மஹேந்திர தூண்கள். இங்கே உள்ள காவலனை பாருங்கள், சற்றே திரும்பி நிற்பது போல நிற்கின்றான். அவனது உடை ஆபரங்களை பாருங்கள். அற்புதம் அற்புதம்.

ஊர்க்காரன்: சாமி , ஆரத்தி காட்டட்டுமா

எல்லோரும்: இதோ வந்துட்டோம் . அற்புத தரிசனம்.
விஜய்: சதீஷ், இந்த சாமிக்கு பேர் என்ன
சதீஷ்: புக்கில் பார்க்கிறேன். சத்ருமல்லேஷ்வராலயம்

விஜய்:கல்வெட்டு ஏதேனும் இருக்கா?
சந்துரு சார்: இருக்கே, இதோ பல்லவ கி்ரந்தம்

சதீஷ்: இதோ படிக்கிறேன்

குன்றின் மீது உள்ள சத்ருமல்லேஷ்வராலயம் எனும் இக்குடவரைக் கோயிலைத் தம் படைவலியால் அரசுகளை எளியவர்களாக்கிய நரேந்திரனான சத்ருமல்லன் உருவாக்கினான்

விஜய்: சத்ருமல்லன் – அருமையான பெயர் . அசோக் இங்க பாருங்க, இங்கேயும் தூண்ல டிசைன் போட ஆரம்பிச்சுட்டாங்க. ஆனால் தூணின் மேலே வெறுமனே இருக்கு .

வெங்கடேஷ்: வாங்க மேல போய்ப் பார்ப்போம்
நாராயணசுவாமி சார்: ரொம்ப செங்குத்தா இருக்கா?

விஜய்: பரவாயில்ல வாங்க சார், படி வெட்டி இருக்காங்க, அசோக் நீங்களும் வாங்க

வெங்கடேஷ்: ஆஹா, அற்புத லொகேஷன் . என்ன குளு குளுன்னு இருக்கு இந்த வெயில் காலத்திலும்!.இப்ப மத்தியானம்னு தெரியவே இல்லை
அசோக்: கட்டுச் சாத்து கூடை இங்கே கொண்டு வந்துஇருக்கணும்
வெங்கடேஷ்: இப்போ சொல்றீங்களே , ஆனா சம்மையா இருந்துருக்கும்.
விஜய்: இங்கே இருந்து பார்த்தா நம்ப வந்த வழி பூரா தெரியுது.

வெங்கடேஷ்: ஆமாம். வரவங்களுக்கு தெரியாது, இங்க இருக்கறவன் கண்ணுக்குத் தெரியும். மறைந்து வாழ்வதற்கு நல்ல ஃசேப்டி ஏரியா!!

…..அவங்க ஏன் மறைந்து வாழனும் ???

விஜய்: இந்த சமணர் படுக்கை நல்லாதான் இருக்கு. கண்ண அப்படியே இழுக்குது.

சந்துரு சார்: வாங்க வாங்க , கிளம்புவோம் . மெதுவா பாத்து இறங்கி வாங்க

அப்படியே அந்த பம்புசெட்டில் ஒரு குளியல் ……பசிக்குது

அடுத்து இலக்ஷிதாயதனம் – அது தான் மண்டகப்பட்டு

முதல் முதல் கல்லில் செதுக்கிய ஆடல் வல்லான் – அவனிபாஜன பல்லவேஸ்வரம் – சீயமங்கலம் குடவரை

சீயமங்கலம் நோக்கி. ( வெகுவாக பயணத்தில் நிகழ்ந்த உரையாடல் , மற்றும் சில கற்பனைகள் )

திண்டிவனம் வந்தவாசி சாலை ….காலை mani 8.30 இருக்கும்

சந்துரு சார் : இது சரியான வழியா? . சார் சீயமங்கலம் இப்படி போனா வருமா .
ஊர் நபர் : பாலத்துல தப்பா திரும்பிட்டீங்க!
டிரைவர்: ஒ அப்படியா , சரி திரும்பி போகிறோம்.

வெங்கடேஷ்: அதோ பாலம். இப்போது எப்படி – நேர போங்க.
சந்துரு சார்: அதோ ஆசி போர்டு.
####: ஒரு நிமிஷம் ஓரமா நிறுத்துப்பா – முட்டுது !!!

ரகோத்தமன்: எடுங்க எடுங்க சீக்கிரம் போவோம்.
விஜய்: சதீஷ், அந்த முறுக்கு பாக்கெட் எங்கே. கார வேர்கடலை – பரவாயில்லே – அத்தையும் கொடுங்க.

நாராயணசுவாமி சார் : ஏதோ கிராமம் போல இருக்கே. வழி சரியா. கேட்டுக்கோ
சந்துரு சார் : எம்மா – குகை கோவில் வழி எப்படி
ஊர் அம்மா : அதுவா , இப்படீகா போய், அப்படி திரும்பி நேர போங்க. யாரையும் கேக்க வேண்டாம்.!!!!!
சந்துரு சார்: அது சரி, அப்படியே போப்பா .

வெங்கடேஷ்: அதோ அங்கே ஒரு மலை தெரியுது. உடு உடு .
சதீஷ்: என்னப்பா ரோடு வேறு பக்கமா போகுது.
நாராயணசுவாமி சார்: இரு இரு , இன்னொரு வாட்டி வழி கேப்போம்.
சந்துரு சார்: ஏம்பா.. குகை
ஊர் ஆசாமி: அதுவா சார், இப்படிகா போய் ….
டிரைவர்: நாங்க அப்படிக்கா தா வந்தோம்.
ஊர் ஆசாமி: இல்ல பா, இப்படி கா பொய், நடுல ஒரு பக்கம் ஒரு பாத போகும், அப்படி உடுங்க
சந்துரு சார்: ஓ சரி சரி

சந்துரு சார்: அப்பாடி, ஒரு வழியா வந்தாச்சு.
விஜய்: என்ன சார், குடவரை கோயில்னு வந்தா பெரிய கோபுரம் , விமானம், வெளி ப்ராஹாரம் எல்லாம் இருக்கு. நாங்கள் மஹேந்திர சீயமங்கலம் குடவரை கோயில், அதில் இருக்கும் முதல் முதல் கல்லில் செதுக்கிய ஆடல் வல்லான் பாக்க தான் வந்தோம்.

சந்துரு சார்: அதுவா, உள்ளுக்குளே இருப்பது மஹேந்திர குடவரை – அவர் வைத்த பெயர் அவனிபாஜன பல்லவேஸ்வரம் . அதை சுத்தி பாண்டிய மற்றும் விஜயநகர மன்னர்கள் திருப்பணி செய்து பெரிதாக்கி உள்ளனர்.

விஜய்: ஒ, அப்படியா ? என்ன ஈ காக்கா காணும்.

வெங்கடேஷ்: வாங்க வாங்க.
விஜய்: என்ன வெங்கடேஷ் , தொப்பி எல்லாம் பலமா இருக்கு. எதாவது புதையல் தேட போறீங்களா ?
வெங்கடேஷ்: இல்ல பா, இது எனக்கு மிகவும் ராசியான தொப்பி, இலங்கையில் வாங்கியது. அதோ யாரோ ஒருத்தர் வாரார் !

ஆசி காவலர் : வணக்கம்
சந்துரு சார்: வணக்கம்
விஜய்: சார் நாங்க உள்ளே போகணும். ரொம்ப தொலைவில் இருந்து வந்துருக்கோம்
ஆசி: சார், வெளியிலே பாருங்க. உள்ள போகனும்னா சாமி வரணும். அவர் கிட்டே தான் சாவி இருக்கு.
வேணும் நா இதோ – இந்த ஓட்ட வழியா பாருங்க.
விஜய்:இல்ல சார், உள்ளே போகணும். எங்களுக்கு ########### அவரை தெரியும். ########## தெரியும். வேணும் நா போன் போடட்டுமா ?
ஆசி: சாமி போன் தாரேன் , போட்டு பாருங்க சார். பெரிய பெரிய ஆளுங்க பேரெல்லாம் கரெக்டா சொல்றீங்க!!
விஜய்: கொடுங்க கொடுங்க , ரொம்ப ஆர்வமா வந்துருக்கோம்

ட்ரிங் ட்ரிங் : ஹலோ சாமியா, நாங்க கோயில்ல இருக்கோம். வர முடியுமா

விஜய்: அஞ்சு நிமிஷத்துல வாராராம்.வாங்க அதுக்குள்ளே மத்ததெல்லாம் பாப்போம்

விஜய்: சந்துரு சார், எப்படி மஹேந்திர பல்லவர் இப்படி ஒரு அத்துவான காட்டை செலக்ட் பண்றார்.
சந்துரு சார்: அதுவா, நல்ல கேள்வி. இதுக்கு சரியான பதில் இல்லை. இருந்தாலும், பல குடைவரைகள்
இருக்கும் இடங்களில் சில ஒற்றுமைகள் உண்டு . பெரும்பாலும் சிறு குன்றுகள், அருகில் ஒரு தடாகம் அல்லது அருவி ( நீர் பரப்பு ) இருக்கும் இடங்களையே அவர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.
விஜய்: ஒ, அப்படியா. இங்கே எங்கே சார் நீர் பரப்பு.
சந்துரு சார்: அதோ அங்கே பாருங்க. அந்த பக்கம். இப்போ மழை இல்லை, அதனால் நீர் இல்லை. மேலே ஏறி பாருங்க , நல்லா தெரியும்.

விஜய்: அது என்ன – பாறைக்கு மேலே ஒரு குட்டி கோயில்
சந்துரு சார்: அது ஒரு முருகர் கோயில். பின்னாளில் கட்டப்பட்டது பாத்து ஏறுங்க!!
விஜய்: படி இருக்கே ( பாதி வழி ஏறினப்பறம் தான் வந்தது ஆப்பு – அப்பா என்ன உசரம் )
எல்லோரும் வாங்க – அருமையான வியு




அசோக்: நானும் வாரேன்
சந்துரு சார்: அங்கே மழை காலத்தில் குளம் நிறைஞ்சு இருக்கும் . நடுவில் உள்ள கல் – அப்போ ஜல லிங்கம் போல காட்சி அளிக்கும். இந்த கோயில் இறைவனுக்கு தூணாண்டார் என்ற பெயர் வர அந்த கல்லே காரணமாக இருக்கலாம் என்று சிலர் கூறுகின்றனர்.

விஜய் : வழுக்குது பாத்து பார்த்து இறங்குங்க
காலை நம்ப முடியாது, அப்படியே உக்காந்து ( ஜீன்ஸ் பாண்ட் தானே ) சறுக்கு மரம் மாதிரி வர வேண்டியது தான். என்ன என்னை பாத்து எல்லாரும் சிரிக்கிறிங்களா – இறங்கும் போதுதானே உங்க வீரம் தெரியும்.

குடவரை அமைக்கப்பட்டுள்ள பெரும் பாறையை சுற்றி வந்தோம். அருகில் பல கல்வெட்டுகள், மற்றும் கல் உடைக்க பயன் பட்ட முறைகள் பற்றி பேச நிறைய இருந்தது. நாம் முன்னரே பார்த்த மாதிரி மர ஆப்புகள் அடிக்க துளைகள் பல இடங்களில் பார்த்தோம். அதன் அளவை காட்ட இதோ ஒரு படம். அருகில் இருப்பது இன்ஹேளர் .

சந்துரு சார் : அதோ சாமி டி வி எஸ் 50 வராரு . வாங்க திரும்புவோம் .

ஆடு மேய்ப்பவன்: யார் சார் நீங்க. அதோ பாருங்க – விமானத்துல இடி விழுந்து ஒரு யாழி உடஞ்சு போச்சு. யாரும் சரி செய்ய மாட்டேன்கரங்க. நீங்க எதாவது பண்ணுங்க சார்
அசோக்: அப்படியா , எப்போ இடி விழுந்துச்சு?

சாமி: சார் இதோ திறந்து வுடறேன் வாங்க

சதீஷ் : என்ன ஒரே இருட்டா இருக்கு
சாமி: அதுவா சார், இன்னும் இருட்டா இருக்கும். மூச்சு முட்டும். பாம்பு தொல்லை வேற இருந்துது. ஒரு கீரிப்பிள்ளையை உள்ளே வுட்டுட்டு தான் நான் உள்ளே போவேன். இப்போ கொஞ்சம் பரவாயில்லை. வெளி மண்டபத்தை பிரிச்சு கட்டி கொடுத்தாங்க. ஆனா இப்போ வெளிச்சமும் வருது மழை தண்ணியும் வருது. !!

விஜய்: என்ன சந்துரு சார் – இந்த மண்டபம் தூணும் மஹேந்திர தூண் மாதிரி இல்லையே ( அது என்ன மஹேந்திர தூண் – விரைவில் பார்ப்போம் )
சந்துரு சார்: இன்னும் உள்ளே போங்க
விஜய்: ஆஹா , அதோ மஹேந்திர தூண்

ஆசி: சார், போட்டோ எடுக்கக் கூடாது
விஜய்: மெயின் சாமி போட்டோ எடுக்க மாட்டோம்.தூண், வாயிற் கார்ப்பொன் அப்படி தான் எடுப்போம். ப்ளீஸ் , எங்களுக்கு @@@@@@@@@ தெரியும் !!!
ஆசி: ம்ம்ம்ம்ம்ம்

சதீஷ்: விஜய், இங்கே இன்னும் பல சிற்பங்கள். இடுக்கில் ஒரு மகர தோரணம் , அதில் ஒரு கணம்

விஜய்: ஒரு நிமிஷம் , இந்த வலது புறத்து வாயிற்காப்போனின் தலை பாருங்கள் – கொம்பு போல உள்ளது. ( என்ன அது – விரைவில் பார்ப்போம் )

சந்துரு சார்: தூணில் உள்ள வேலைப்பாட்டை பாருங்கள்.
விஜய்: அருமை – இரண்டு கம்பீர சிங்கங்கள். இங்கே தூணின் பொதிகையில் டிசைன் போட ஆரம்பித்துள்ளனர் ( அப்போ டிசைன் இல்லாத தூண் – உண்டு உண்டு – இங்கே இல்லை, வேறு இடத்தில )

நாராயணசுவாமி சார்: இங்கே இரு பக்கமும் பாருங்க.

விஜய்: சதீஷ், நீங்க சுந்தர் சார் கிட்டே கடன் வாங்கின மஹேந்திர குடைவரைகள் புக்கில் பாருங்க . யார் இது.

சதீஷ் : அவங்க அமலையர் சிற்ப்பங்கள்.

விஜய் ; ஒ அப்படி என்றால் என்ன, பார்க்கணும். இதோ பாருங்க பூ கூடையுடன் ஒரு தோழி ….

ரகோத்தமன்: சந்துரு சார், இதோ தூணில் ஒரு கல்வெட்டு இருக்கே. தமிழ் மாதிரி இல்லையே.
சந்துரு சார்: அது க்ரந்தம் . மஹேந்திர பல்லவர் கல்வெட்டு

விஜய்: ஒ , அப்படியா, சதீஷ் பூகில் குறிப்பு இருக்குமே பாருங்க
சதீஷ்: இருக்கு – இதோ படிக்கிறேன்.

அவனி பாஜன பல்லவேஷ்வரம் எனும் இக்கோயில் இலலிதாங்குரனால்
நற்செயல்கள் எனும் நகைகளை உள்ளடக்கிய நகைபெட்டியென எடுக்கப்பட்டது

விஜய்: அற்புதம், ஆயிரத்தி முன்னுறு ஆண்டுகள் ஆகியும் தன் புகழ் மட்டது இருக்கும் பல்லவர் …..வாழ்க

ரகோத்தமன்: தூணுக்கு இந்த பக்கம் வேறு கல்வெட்டு இருக்கு. ஆனால் வேறு எழுத்து.
சதீஷ்: அது பின்னாளைய தந்தி வர்மர் மற்றும் நந்தி வர்மர் – தமிழ் கல்வெட்டு.

சந்துரு சார் : இதோ நடராஜர் சிற்பம். தென்னகத்தில் கல்லில் வடிக்கப்பட்ட முதல் முதல் நடராஜர் வடிவம் இதுவே – இதோ இந்த தூணில் உள்ளது. சாமி கொஞ்சம் ஆர்த்தி காட்டுங்க. அந்த பக்கம் ரிஷப வாகனத்துடன் சிவன் பார்வதி .

அசோக்: ஒரு நிமிஷம் பொறுங்க, இதோ நான் வாறன் கேமரா வுடன்

ஆஹா… இருளை போக்கி ஆடல் வல்லான் ஆடிய ஆட்டத்தை மீண்டும் பார்க்கும் பாக்கியம். …

என்ன அற்புத புடைப்பு சிற்பம். சிற்பம் மற்றும் தூண்கள், மகர தோரணம் – அனைத்தும் அடுத்த பதிவில் அலசுவோம்.

படங்கள் : குழு நண்பர்கள், மற்றும் திரு சுவாமிநாதன் மற்றும் திரு சந்துரு அவர்களது முதல் பயணம் . நன்றி திரு சுந்தர் சார்.

ரகோத்தமன் , சதீஷ் ,வெங்கடேஷ் , சந்துரு சார் , அசோக் மற்றும் உங்கள் விஜய்

Ref: Sri K.R. Srinivasan – Cave temples of the Pallavas, Dr KKN’s மஹேந்திர குடைவரைகள்

ஒரு சிற்பியின் பார்வையில் சிற்ப ரசனை

திரு K P. உமாபதி ஸ்தபதியுடன் நம் நண்பர் திரு சதீஷ் உரையாடியதன் விளைவுதான் இந்தப் பதிவு.. உரையாடலின் போது அவர் நம்முடன் பகிர்ந்ததை வைத்து ஒரு சிற்பியின் பார்வையில் சிற்ப ரசனை ,அதில் அவர் எதை , எவற்றை எப்படி எல்லாம் ரசிக்கிறார் என்பதை எடுத்துக் காட்டும் முயற்சி.

மல்லை படங்கள் திரு ஸ்ரீராம், அசோக் , மற்றும் எனது சமீபத்திய பயணத்தில் எடுத்தவை – கம்போடிய சிற்பங்கள் திரு கோகுல் ( சிங்கப்பூர் நண்பர் – கிரிக்கெட் ரசிகர் ).


பல முறை நாம் பார்த்த வடிவம்தான் இந்த வராஹ சிற்பம், நாம் முன்னரே பாசுரங்களையும் வைத்து அலசியது என்றாலும் (( பாசுரங்களையும் வைத்து அலசியது))இப்போது ஒரு புதிய பார்வையில் பார்க்கிறோம், இல்லை படிக்கிறோம்

முதலில் முழு சிற்பத்தையும் பார்ப்போம். அதுவும் அசோக் உதவியுடன் சிற்ப நுணுக்கங்களை விளக்கு போட்டு பார்ப்போம்.


புரிகிறதா ? மல்லை சிற்பி ஒரே சிற்பத்தில் எத்தனை எத்தனை விதமான கை வடிவங்களை உயிரோட்டத்துடன் கருங்கல் குகையில் செதுக்கி நமக்கு அவனது ஆற்றலை காட்டுகிறான் பாருங்கள்.

பட்டியலிட்டு ஒன்றொன்றாய் பார்ப்போம். பொறுமையாகப் பாருங்கள். செதுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு உருவமும் ஒரே அளவில் இல்லை, எனினும் ஒரு குறிப்பிட்ட உருவத்தின் அளவுகள் அனைத்தும் ஒன்றுக்கொன்று இணையானவை.

3884388838913903390639103908391239153918392039223924392739293932
இன்னும் முடியவில்லை. என்னடா கைகளை கட்டி விட்டு கடைசியில் இரண்டு கால்களா என்று பார்க்கிறீர்களா? . முக்கியமான படங்கள் – முடிவில் வந்த இரண்டு படங்கள்.


பல்லவ சிற்பிகளின் அற்புத திறனை அங்கோர்வாட் சிறப்புடன் ஒப்பு நோக்கும் ஒரு முயற்சி.

நண்பர் கோகுல் அவர்களுக்கு நன்றி – அங்கோர்வாட் அழகிகளுக்கும். பல்லவ சிற்பத்திற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் – சம்பந்தம் இல்லை, வேற்றுமை. கண்டு பிடியுங்கள் பார்ப்போம். குனிந்து பாருங்கள்.

சரி படத்தை பாருங்கள். கால்களை பாருங்கள்.

ஒரு ஓவியத்தை தீட்டும் போது நாம் ஒரே பரிமாணத்தில் கொண்டு வருவது போல அவர்கள் சிற்பத்தையும் செதுக்கி உள்ளனர். ஆனால் பல்லவ மகா கலைஞனோ நேரில் நிற்கும் பாணி என்ன ஒருவர் திரும்பி சுவரை பார்க்கும் பாணியை கூட கால்களில் கொண்டு வந்து விட்டான்.

மேலும் சில படங்கள் – உங்கள் ரசனைக்கு

கோவர்த்தனம் என்னும் கொற்றக்குடை – திரு குடவாயில் பாலசுப்ரமணியம்

திரு பாலசுப்ரமணியம் அவர்களின் – கோவர்த்தனம் என்னும் கொற்றக்குடை – என்ற அற்புதமான பதிவை கண்ட நாள் முதல் அதனை இணையத்தில் அனைவரும் ரசிக்க இடவேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. திரு சுந்தர் பரத்வாஜ் அவர்கள் மூலம் இது இன்று வெளிவருகிறது. திரு சதீஷ் பொறுமையாக முழு பதிவையும் தமிழில் மீண்டும் இந்த தளத்தில் அடித்து தந்ததற்கு நன்றி.

பல்லவப் பேரரசர்கள் தமிழகத்திற்கு விட்டுச் சென்ற கலைக் கருவூலங்கள் மிகுதியாகவுள்ள இடங்கள் வரிசையில் தலையாய இடம் பெற்று விளங்கும் ஊர் கடல் மல்லை எனப்பெறும் மகாபலிபுரமாகும். சிறுசிறு குன்றுகளைக் குடைந்து உருவாக்கிய ஐந்து இரதங்கள்,

தரையில் கிடந்த பறையை கிடந்தகோல திருமாலாகச் செதுக்கி அவருக்கென அங்கு கோயில் எடுத்து அக்கோயிலின் இருமருங்கும் இரண்டு சிவாலயங்களை இணைத்து எழுப்பிய கடற்கரைக் கோயில்,

ஊருக்கு நடுவே கம்பீரமாகத் திகழும் குன்றமொன்றில் குடைந்து எடுக்கப்பெற்ற குடைவரைக் கோயில்கள் என எவ்வாறெல்லாம் கோயில்களைத் தோற்றுவிக்க முடியுமோ அவ்வண்ணம் கடல் மல்லையைக் கலைப் பெட்டகமாக மாற்றிய பெருமை அத்யந்தகாமன் என்ற பட்டம் சூடிய இராஜசிம்ம பல்லவனுக்கே உரியதாகும்.

உலக கலை வல்லோரை தன்பால் ஈர்த்து நாளும் மயங்க வைக்கும் தனிச்சிறப்பு மல்லைக்கு உண்டு. தூங்கானை மாடம் என்றும் கஜப்பிரிஷ்டம் என்றும் கோயிற் கட்டடக் கலை வல்லோர் குறிப்பிடும் யானை உடல் வடிவில் திகழும் கோயிலொன்றை பாறையிலிருந்து செதுக்கி எடுத்து அருகிலே அதனை ஒத்த யானை உருவத்தையும் அமைத்து அதன் சிறப்பைக் காட்டும் நுட்பத்தை இங்குமட்டுமே காணலாம்.

புலிவாயில் அரங்க மேடையி அமைத்துக் காட்டி அங்கு அரம்பையர்களை ஆடச்செய்து அழகு கண்ட புலிக்குகையும் மல்லையின் தனி முத்திரையாகும்.

மாமல்லையின் குன்றத்தை (சிறுமலையை) குடைந்து எடுக்கப்பெற்ற குடைவரைக் கோயில்கள் மட்டும் அணி செய்யவில்லை. அங்கு பாறைகளின் பக்கவாட்டில் சிற்பங்கள் அணி அணியாகச் செதுக்கி ஊரையே கலைக்கூடமாக மாற்றியிருக்கிறார்கள். ஒருபுறம் விண்ணக கங்கை அக்குன்றத்தின்மேல் இறங்கி ஆறாக ஓடி பாதாள உலகம் சென்றடையும் காட்சி செதுக்கப்பெற்று காணப் பெறுகின்றது. இங்குள்ள காட்சியை பகீரத தவக்காட்சி எனக் குறிப்பர். அக்குன்றத்தின் மேல் பொழியும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடி கால்வாயாக ஓடி வந்து பிதுக்கம் பெற்ற இரு பாறைகளுக்கு இடையே கீழே இறங்கும். அந்த இடத்தை தேர்வு செய்து பகீரதனின் தவ ஆற்றலுக்காக வானத்து கங்கை மண்ணகத்துக்கு இறங்கும் காட்சியை செதுக்கியுள்ள அந்த மகாசிற்பியின் கற்பனை ஆற்றலுக்கு ஈடாக எதையும் கூற முடியாது.

இச்சிற்பக் காட்சிப் பகுதியை பாதுகாக்க முனைந்தவர்களுக்கு அங்கு சித்தரிக்கப்பெற்ற புராணக் காட்சியின் பின்புலம் தெரியாத்தாலும், அந்த மகா சிற்பியின் மகோன்னதம் புரியாத்தாலும் மழைநீர் வந்து இறங்கும் இட்த்தில் செங்கற்களால் தடுப்பினை ஏற்படுத்தி பெருக்கெடுத்து ஓடிவரும் மழைநீரை திசைதிருப்பி விட்டிருக்கிறார்கள். தடுப்பு இல்லாமல் மழைநீர் இறங்கும்போது அங்கிருந்தவாறு அக்காட்சியைக் காண்போமானால் கங்கைப் பேராறு ஆர்ப்பரித்து விண்ணகத்திருந்து இறங்குவதையும், அதன் கரையில் கானகங்கள் உள்ளமையையும், வேட்டுவர்களோடு விலங்குகளையும், பறவைகளையும், வானவர்களையும், கந்தர்வர்களையும், மனிதர்களையும், கோயில்களையும் காண்பதோடு பாதாளலோகத்திருந்து நாகர்கள் நீரில் மேல் நோக்கி வருவதையும் உயிர்ப்போடு காணலாம். கலாரசிகர்களுக்கு அக்காட்சி பேரின்பம் பயப்பதாகும்.

கங்கை பேராற்றுக்கு குறுக்காக கல்தடுப்ப் செய்தது போன்று அங்கு நிகழும் மற்றொரு மகோன்னத சிற்பக் காட்சியை மண்டபம் எடுத்து மறைத்து விட்டார்கள். விஜய நகரப் பேரரசு காலத்தில் இது நிகழ்ந்தது. பக்திப் பெருக்கும்பார்வையை மறைத்ததால் இக்காட்சியின் சிறப்புக்கு ஊறு விளைந்தது. இருப்பினும் மண்டபத்துள் சிக்கியுள்ள மாண்புறு இக்காட்சியின் நுட்பச் சிறப்பை நுகர வேண்டுமாயின் கண்ணனின் வரலாற்றையும், ஆழ்வார்களின் பாசுரக் கூற்றையும் அறிந்து திளைத்து பின்பு சிற்பங்களை காண வேண்டும்.


கண்ணன் வளர்ந்த ஆயர்பாடியின் மக்கள் இந்திரவிழா கொண்டாடியபோது மந்திர விதிப்படி பூசனைகள் செய்யாததால் வெகுண்ட வானவர் தலைவனான இந்திரன் கோபமுற்று ஆயர்பாடி அழியுமாறு கல் மழையினைப் பெய்யச் செய்தான். ஆநிரைகளும், ஆயர்களும், ஆய்ச்சியரும் செய்வதறியாது அலறி ஓடிய போது, கண்ணபிரான் அங்கு வந்து அங்கிருந்த கோவர்த்தனம் என்னும் மலையைக் கையால் எடுத்து தலைக்குமேல் உயர்த்தி குடையாகப் பிடித்தான். அம்மலையோ கல்மாரியைத் தாங்கிக் கொண்டு ஆயர்பாடியை காத்து நின்றது. கண்ணன் வந்து கொற்றக் குடையாக கோவர்த்தன மலையை பிடித்தவுடன் அஞ்சி ஓடிய ஆயர் பாடி மக்கள் அமைதியுற்றனர். கல்மாரி கடுமையாகப் பொழிந்தாலும் கண்ணனுடைய கருணையினால் பசுக்கள் மகிழ்ச்சியுற்று பால்பொழிந்தன. கன்றினை நக்கி கனிவைக் காட்டின. ஆயர் மகளிரோ குழந்தைக்கு அமைதியாக பால்கொடுக்கத் தொடங்கினர். ஆய்ச்சியர் வெண்ணை கடந்து மோர் தூக்கிச் செல்லலாயினர். ஆயர்களோ பால் கறக்கத் தொடங்கினர். அவரவர் பணி அமைதியாக நடைபெறலாயிற்று. அன்று கண்ணன் குடை பிடிக்கவில்லை என்றால் கல்மாரியால் ஆயர்பாடியே அழிந்திருக்கும்.

பாகவதம் புகழும் இவ்வரலாற்றை திருமங்கையாழ்வார்,

இந்திரனுக்கு என்று ஆயர்கள் எடுத்த
எழில் விழாவில் பழ நடைசெய்
மந்திர விதியில் பூசனை பெறாது
மழை பொழிந்திடத் தளர்ந்து ஆயர்
எந்தம் ஓடின ஆநிரை தளராமல்
எம் பெருமான் அருள் என்ன
அந்தம் இல் வரையால் மழை தடுத்தானைத்
திருவல்லிக்கேணிக் கண்டேனே

என்ற அழகு தமிழ் பாசுரமாகப் பாடியுள்ளார். இதே செய்தியினை பெரியாழ்வார், ” ஆயனார் கூடி அமைந்த விழாவை அமரர்தம் கோனார்க் கொழியக் கோவர்த்தனத்துச் செய்தான் மலை” என்று குறிப்பிட்டுள்ளார். திருமங்கை மன்ன்னோ மீண்டும்,

கடுங்கால் மாரி கல்லே பொழிய, அல்ல
எமக்கு அன்று
கடுங்கால் நீயே சரண் என்று ஆயர் அஞ்ச
அஞ்சாமுன்
நெடுங்கால் குன்றம் குடை ஒன்று ஏந்தி
நிரையைச் சிரமத்தால்
நடுங்கா வண்ணம் காத்தான் நாம்ம் நமோ
நாராயணமே

என்ற பாடல் வழி கல்மாரிப் பொழிந்த திறத்தையும் கண்ணன் காத்த கருணையையும் விளக்கியுள்ளார்.

ஊரின் நடுவண் திகழும் மாமல்லை குன்றத்தின் கீழ்த்திசையில் பக்கவாட்டு பாறையில் ஒரு நீண்ட சிறபத்தொகுதி காணப்பெறுகின்றது. எழிலுறு அக்காட்சிக்கு முன்பாக கற்தூண்களை நட்டு மண்டபமொன்றினை பிற்காலத்தில் எடுத்துள்ளனர். இம்மண்டபம் அச்சிற்பங்களை காப்பதற்கென எடுக்கப் பெற்றிருந்தாலும், அச்சிற்பங்கள் எதை எடுத்துக் காட்டுகின்றன என்பதை மறைப்பதாகவே உள்ளது. விஜய நகர அரசு காலத்தில் எடுக்கப்பெற்ற இம்மண்டபத்திற்குச் சற்று தள்ளி எதிர்திசையில் நின்றவாறு நம் மனக் கண்களால் அம்மண்டபத்துத் தூண்களையும், கூரையையும் அகற்றிவிட்டு உள்ளே தெரியும் காட்சியை உற்று நோக்குவோமாயின் நெடிதுயர்ந்த கண்ணபிரான் தன் இடக்கரத்தை தலைக்கு மேல் உயர்த்தி மாமல்லை குன்றத்தை தாங்கி நிற்பது தெரியும்.




அருகே பலராமன் கைகட்டி நிற்கும் முதியவரான ஆயர் ஒருவரின் தோளில் கைவைத்து பரிவோடு அணைத்து நிற்பார். குன்றத்தை தூக்கி நிற்கும் கண்ணபிரானைச் சுற்றி ஆயர்பாடியே அங்கு காட்சியளிக்கும். பின்புலம் முழுவதும் பசுக் கூட்டங்கள், கம்பீரமான காளை ஒன்று அங்கு நிற்க கன்றுகளும், காளைகளும் சுற்றி நிற்கின்றன.

அழகிய கொம்புகளுடன் திகழும் பசு ஒன்று தன் கன்றின் முதுகில் நாக்கினால் நக்கி தாய்மை உணர்வை வெளிப்படுத்த ஆயன் ஒருவன் அதன் மடி சொறியும் பாலை பாத்திரமொன்றில் கறக்கும் காட்சி ஒருபுறம். ஆய்ச்சியர் மகள் ஒருத்தி தன் குழந்தைக்கு பாலூட்டுகின்றாள். அங்கு நிற்கும் ஆயனொருவன் குழலொன்றினைக் கையில் ஏந்தி அமுத கீதம் இசைக்கின்றான்.


ஆயர் குலப் பெண் ஒருத்தி தலையில் ஓலைப் பாயை சுருட்டி சுமந்தவாறு, தன் வலக்கரத்தில் தயிரும், வெண்ணையும் உள்ள பானைகள் கொண்ட உரியைப் பிடித்தவாறு செல்கின்றான்.

ஆயனொருவன் கைக் குழந்தையை முதுகில் சுமந்த வண்ணம் நீண்ட கோலுடன் செல்ல அவன் மனைவியோ சிறுபிள்ளை ஒருவன் கரம் பற்றியவாறு மோர்க்குடங்களை தலையில் சுமந்து செல்கிறாள்.

கோவர்த்தனகிரியை குடையாகத் தூக்கிப் பிடிக்கும் கண்ணனைச் சுற்றி ஆயர்குலப் பெண்கள் நின்றவாறு வியந்து அவனை நோக்குகின்றனர். கடுமையான கல்மாரி பெய்து கொண்டிருக்க கடுகளவும் கவலையில்லாமல் ஆயர்பாடி மக்கள் மகிழ்வோடு அவரவர் பணியினை மேற்கொண்டுள்ளனர்.

பசுக்களும் காளைகளும் மகிழ்வோடு திரிகின்றன. கல்மாரியை நோக்கி மலை குடையிலிருந்து வெளியே செல்ல முற்படும் ஆயன் ஒருவன் கரத்தை அவன் மனைவி பற்றி உள்ளே இழுக்கும் காட்சியும் அங்கு ஒருபுறம் இருப்பதைக் காணலாம்.

மாமல்லை குன்றத்தையே கோவர்த்தன மலையாக மாற்றிக் காட்டி இருக்கிறான் பல்லவனின் சிற்பி. இக்காட்சியின் ஒவ்வொரு பகுதியையும் உற்று நோக்கியவாறு ஆழ்வார்களின் கூற்றை மீண்டும் ஒருமுறை பார்ப்போம். தன் ஐந்து விரல்களை மேலுயர்த்தி குன்றத்தை குடை எனப் பிடித்திருக்கும் இக்காட்சியை பெரியாழ்வார் தம் பாசுரத்தில் படம்பிடித்துக் காட்டுகிறார். கண்ணபிரானின் மணி நெடுந்தோள் குடைக்காம்பாகவும், அவன் கைவிரல்கள் குடையின் உள் விட்டங்களாகவும் விளங்க அதன் மேல் மலை கவிழ்ந்து குடையாக இருப்பதிஅக் காண்கிறார். இதனை,

செப்பாருடைய திருமாலவன் தன்
செந்தாமரைக்கை விரல் ஐந்தினையும்
கம்பாக மடுத்து மணி நெடுந்தோள்
காம்பாகக் கொடுத்து கவித்த மலை

என்று பாடுகின்றார். இப்படி கண்ட பெரியாழ்வார்க்கு மேலும் ஒரு காட்சி புலப்படுகின்றது. கண்ணபிரான் விரல்களை விரித்து அம்மலையைத் தாங்கும் காட்சி ஆதிசேடன் தன் ஐந்து தலைகளை படமாக விரித்து அதன் மேல் பூமியை தாங்குவதுபோல் தோன்றிற்று. அதனை,

படங்கள் பலவுமுடைப் பாம்பரையன்
படர் பூமியைத் தாங்கிக் கிடப்பவன்போல்
தடங்கை விரலைந்தும் மலரவைத்துத்
தாமோதரன் தாங்கு தடவரைதான்

என்று “கோவர்த்தனமென்னும் கொற்றக் குடையே” என்ற ஈற்றடி வருமாறு பாடிய பாசுரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மாமல்லை சிற்பக் காட்சியில் ஆநிரைகளோடு குழந்தையைத் தோளில் சுமந்த ஆயன் ஒருவன் செல்ல அவன் பின்னே சிறுவன் ஒருவனுடன் மோர்ப் பானையை தலையில் சுமந்து தாய் ஒருத்தி செல்லுதலும், அருகே ஆயர்பாடி பெண்கள் கண்ணனைச் சூழ்ந்து நிற்பதையும் காணும் போது,

தாய்மார் மோர் விற்கப் போவார் தகப்பன்மார்
காற்றானிரப் பின்பு போவார்
நீ ஆய்ப்பாடி யிளங் கன்னி மார்களை
நேர்படவே கொண்டு போதி
காய்வார்க் கென்றும் உகப் பனவே செய்து
கண்டார் கழறித் திரியும்
ஆயா உன்னை யறிந்து கொண்டேன் உனக்
கஞ்சுவன் அம்மம் தரவே

என்ற பெரியாழ்வாரின் பாடல் பல்லவ சிற்பியின் உள்ளத்தை உருகச் செய்திருக்க வேண்டும் என்பது அறியலாம்.

ஆயர்பாடியின் அழகையும், குன்றமெடுத்து கல்மாரி தடுத்த கோபாலனின் தோற்றத்தையும் கண்முன் நிறுத்திய பல்லவ சிற்பி இக்காட்சி மூலம் தொண்டை மண்டலத்து மரபுவழி வந்த அம்மண்ணுக்குரிய கால்நடைகளின் உருவ அமைப்பை உலகம் உள்ளளவும் நிலையாகப் பதிவு செய்துவிட்டான். தமிழகத்தின் மண்ணுக்குரிய கால்நடை இனங்கள் மறைந்து வரும் இந்நாளில் இத்தகைய சிற்ப்ப் பதிவுகள் எதிர்கால சந்ததிகளுக்கு மரபுப் பெருமையை நிச்சயம் உணர்த்தும்.

( ஒரு பக்கம் மனித முகத்துடன் சிங்கம், கழுகு முகத்துடனும் ஒன்று )


படங்கள் – நன்றி – பிலிக்கர் நண்பர்கள், குறிப்பாக லக்ஷ்ணி பிரபால, மற்றும் பிரிட்டிஷ் நூலகம்