பல்லவ சோமஸ்கந்தர் வடிவத்தின் வளர்ச்சி – இரண்டாம் பாகம்

சென்ற பதிவில், சோமஸ்கந்தர் வடிவத்தின் மிக தொன்மையான உருவத்தையும் தற்காலச் சிலையையும் பார்த்தோம்.

தர்மராஜா ரதத்தில் உள்ள சோமஸ்கந்தர் வடிவத்தை மிகவும் தொன்மைவாய்ந்தது என்று சொல்கிறார்களே அது எப்படி! அதனை மீண்டும் ஒரு முறை பார்த்துஆராய்வோம். படங்களும், வினாக்களும் என்னுடையது, விடையை நீங்கள்தான் கொடுக்கவேண்டும்.

இதை பல்லவ மன்னன் ராஜசிம்ஹன் காலத்து சோமஸ்கந்தர் வடிவத்துடன் ஒப்பிட்டு பார்த்தால் ஏதும் பிடிபடுகிறதா என்று பார்ப்போம். நாம் கொடுத்து வைத்தவர்கள், சிற்பக் கலைக்கு மெருகேற்றியஅவனது காலத்து சோமஸ்கந்தர் வடிவங்கள் பல இடங்களில் உள்ளன. மல்லை கடற்கரை கோயிலில் அற்புதமான வடிவம் ஒன்று உள்ளது. (மல்லை கடற்கரை கோயில் உண்மையில் மூன்று ஆலயங்கள் கொண்டது. முதலில் இருந்த சயன பெருமாள் கோயில், அதனை ஒட்டி ராஜ சிம்ஹன் எடுப்பித்த ராஜசிம்மேஷ்வரம் மற்றும் ஷத்ரியசிம்மேஷ்வரம் என்ற இரு சிவ ஆலயங்கள், நாம் இன்று பார்க்கும் சோமஸ்கந்தர் வடிவம் ராஜசிம்மேஷ்வர ஆலயத்தில் உள்ளது. ஷத்ரியசிம்மேஷ்வரம் சோமஸ்கந்தர் வடிவத்தை அடுத்து வரும் பதிவுகளில் அலசுவோம்).

இரண்டு சிற்பங்களுக்கும் உள்ள வேற்றுமையை எளிதில் கண்டறிய ஒற்றி எடுத்த கோட்டோவியங்கள் உதவும். ஆறு வித்தியாசம் கண்டுபிடிப்பது போல், இரண்டு சோமஸ்கந்தர் வடிவங்களுக்கும் உள்ள வேற்றுமைகளை நீங்களே ஒரு பட்டியல் இடுங்கள் பார்ப்போம்.

மல்லையின் புதிர்களில் இன்னும் ஒரு புதிர். மல்லை ராமானுஜ மண்டபம், அங்கிருக்கும் குடைவரைகளிலேயே மிகவும் முழுமை பெற்ற குடைவரை. எனினும் வன் செயல்களால் இங்கு உள்ள அனைத்து சிற்பங்களும் அழிக்கப்பட்டுள்ளன. .இரு வாயிற் காப்போன்கள் முதல் உள்ளே இருக்கும் மூன்று புடைப்பு சிற்பங்களும் உளி கொண்டு முழுவதுமாக செதுக்கி எடுக்கப்பட்டுள்ளன. ( யாரால், எதற்கு ?)

ஆனால், எந்தக் கயவனும் தடயம் விடாமல் செல்ல மாட்டானே. கருவறையில் உள்ள பின் சுவரில் அழிக்கபட்ட சிற்பத்தின் தடயங்கள் இன்னும் தெரிகின்றன – ஆம் அதுவும் ஒரு சோமஸ்கந்தர் வடிவமே.

நன்றாக உற்றுப் பாருங்கள், சரி இதையும் ஒற்றி எடுத்து பார்ப்போம். சோமஸ்கந்தர் எந்த வகை? தர்மராஜா ரதம் பாணியா அல்லது ராஜசிம்மேஷ்வர பாணியா? நீங்களே கண்டுபிடியுங்கள் பார்ப்போம்.

உங்கள் பணியை எளிதாக்க , தர்மராஜ ரதத்தில் உள்ள சோமஸ்கந்தர் வடிவத்தை இரண்டாய் பிரித்து உமை ஒரு பாகமாகவும் ஈசனை மற்றொரு பாகமுமாகத் தருகிறேன்.

இன்னும் உதவி தேவையா. படங்களை நான்றாக தலையை சாய்த்து பாருங்கள் !!

படங்களுக்கு நன்றி:

Varalaaru.com. மற்றும் திரு அசோக்

உயிர் சிலை என்றால் என்ன ?

பல்லவ சிற்பியின் உன்னதக் கலை ஏன் நம் மக்களை முழுவதுமாக சென்றடையவில்லை? கண்முன்னே இருக்கும் அற்புத வடிவங்களை நம் கண்கள் ஏன் உணர மறுக்கின்றன ?
உதாரணத்திற்கு அர்ஜுன ரதம் சிற்பங்கள் – இரண்டு அற்புத வடிவங்களை இன்று பார்ப்போம். ( எந்த புண்ணியவான் பஞ்ச ரதங்களுக்கு பஞ்ச பாண்டவர் பெயரை சூட்டினானோ ? எதற்கு வைத்தானோ ?)

அர்தனாரி வடிவத்தை பற்றி பார்க்கும் போது, சிற்பி எப்படி விடையை வைத்து சிற்ப வடிவத்தை அழகு சேர்த்தான் என்று பார்த்தோம். அந்த யோசனை திடீரென அவனுக்கு உதித்ததா, அல்லது வேறு எதாவது யுக்தி அவனுக்கு உதவி செய்ததா? அதைத்தான் இன்று நாம் பார்க்க போகிறோம். எப்படி விடை வாகனான ஈசனின் உருவத்தை அர்தனாரி உருவத்துடன் இணைத்தான் என்பதை பாருங்கள்.

அர்ஜுன ரதம். விடை வாகன்.

பல்லவனுக்கே உரிய அழகு சிற்பம், அதிகமான அணிகலன்கள் இல்லை,
எளிமையான எனினும் அழகிய அங்க அமைப்பு.

என்னடா இவன், சும்மா சாதரணமான சிற்பத்தை போட்டுவிட்டு இப்படி வர்ணிக்கிறானே என்று நீங்கள் மனதுள் நினைப்பது கேட்கிறது. சிலை அப்படி ஒன்றும் அபாரமாக இல்லையே? அதுவும் உடலமைப்பு சற்று சரியாக இல்லாதது போல தெரிகிறதே? சிற்பி ஏதாவது தவறு செய்துவிட்டானா ? இல்லை, கொஞ்சம் பொறுமையாக இருங்கள். இதோ விளக்குகிறேன்

முதலில், இது ஒரே கல்லில் குடையப்பட்ட ரதம், புடைப்பு சிற்பம், பல்லவனின் அற்புத சிற்ப திறனை பிரதிபலிக்கும் சிற்பம்.


இந்த கோணத்தில் பாருங்கள் – இப்போது புரிகிறதா ?

சிற்பக்கொத்தில், கிடைத்த சட்டத்திற்குள் ஈசனையும் அவனது விடை வாகனத்தையும் நேர் வடிவில் செதுக்க இடம் இல்லை. அதனால் கல்லின் ஆழத்தை உபயோகம் செய்து, ஈசனை ஒரு பக்கமாக திருப்பி வடித்துள்ளான் சிற்பி.

இந்த கோணம் சிற்பத்தை ரசிக்க சரியான கோணம் அல்ல ( படத்திற்கு நன்றி அசோக், நீங்கள் எப்போதுமே புதிய கோணங்களில் படம் எடுப்பது இங்கே உதவுகிறது ) , எனினும் சிற்பத்தின் ஆழத்தை உங்களுக்கு கட்டவே இதை இங்கே இடுகிறேன். கருங்கல்லில் இதனை கற்பனை செய்து எப்படி தான் செதுக்கினானோ!! நினைத்துப் பார்க்கவே தலை சுத்துகிறது.

இப்போது புரிகிறதா – விடைவாகனும் அர்தனாரி உருவங்களும் எப்படி ஒன்றாக ஆயின என்று.

சிற்பியின் இத்திறமையை ரசிக்க அர்ஜுன ரதத்தில் இருந்தே இன்னும் ஒரு எடுத்துக்காட்டு .

இது கல் என்றே நம்மை மறக்கடிக்கும் சிற்பம் இது


அந்த கோணத்தில் இருந்து அல்ல , இந்த கோணத்தில் பாருங்கள்.


அரசி கூப்பிட, அவள் குரலுக்கு தலை திருப்பும் அற்புத வடிவம்

ஒரு நிமிடம் கண்ணை மூடி கற்பனை செய்யுங்கள். பெண் குரலில் ” பிராண நாதா !” ஆண் . முகத்தை திருப்பியவாறு ” பிரிய சகியே ” – அல்லது இப்படி கற்பனை செய்வோமா ” ஏன்னா , செத்த இங்க பாருங்கோ !”

உயிர் சிற்பம் என்றால் என்ன? இதுவே அது. அதை நாம் ஆத்மார்த்தமாக உணர வேண்டும்

ஆணுக்குப் பெண் வளைந்து கொடுக்க வேண்டுமா?

ஆணுக்குப் பெண் வளைந்து கொடுக்க வேண்டுமா அல்லது பெண்ணுக்கு ஆண் வளைய வேண்டுமா ?

பதறாதீர்கள், சிற்பத்தை பற்றித் தான் பேசுகிறோம்.

முந்தைய பதிவில் அர்தனாரி வடிவம் எப்படி படிப் படியாக சிற்பியின் கையில் மெருகு பெற்றது என்பதை பார்த்தோம். அதில் கற்சிற்பங்களில் எப்படி பெண்ணின் நளினத்தை வளைவுகளிலும் அதை ஈடு கட்ட அப்பனை விடையின் மீது சாய்த்து வடிக்க நேர்ந்தது என்பதையும் பார்த்தோம். முடிவில் வெண்கல சிலைகளில் இந்த வடிவத்தை பிறகு பார்ப்போம் என்று நிறுத்தினோம். அங்கிருந்து இன்று தொடர்வோம்.

கல்கி நந்தினியை பற்றி பொன்னியின் செல்வனில் சொல்வார்..” தன் காலால் இட்ட பணியை ஆண்கள் தலையால் செய்து முடிக்க வைப்பாள்” என்று. இவை அந்த உத்தரவை கூட செய்ய வேண்டாம் – பார்த்தாலே அவற்றின் மதிவதன அழகில் சொக்கி கொத்தடிமைகளாய் ஆக்கும் நம்மை, பார்க்கப் பார்க்க சிந்தையை மயக்கி நமக்குப் பித்து பிடிக்க வைக்கும். ஆம், வெறும் வெண்கல சிலைகளை அல்ல, சோழர் சிலைகளையே பார்ப்போம். அதுவும் வெறும் சோழர் சிலையல்ல , ஒரு அற்புதச் சிலை. (தற்போது இருக்கும் இடம் கிளீவ்லாந்து அருங்காட்சியகம் ,அவர்களது படங்களுக்கு நன்றி )

அருகில் சென்றுதான் பார்ப்போமே. சிலையை அல்ல, அதை ஒத்தி எடுத்த ஓவியத்தை.

சிலர் பார்த்தவுடனேயே, அது என்ன அப்பனுக்கு இரண்டு கை, அம்மைக்கு ஒரே கை, இது ஆண் ஆதிக்கம் என்பர். ஐயா, இது அப்படி அல்ல. ஆணும் பெண்ணும் சரி சமானம் என்பதை நமக்கு உணர்த்தவே இந்த அற்புதக் கோலம். பின்னர் எதற்கு ஈசனுக்கு இரண்டு கைகள். பொறுமை. ஓவியத்தை மீண்டும் பார்ப்போம். ( இன்னும் கொஞ்சம் பின்னால் நகர்ந்து )

கற்சிலைகளில் பார்த்தது போலவே, இங்கும் உமையின் இடையை கடல் அலையென வளைத்து, உடலை திரிபங்கத்தில் வார்த்துள்ளான் சிற்பி. மீண்டும் ஒருமுறை கல்லையும் உலோகத்தையும் பார்ப்போம்.

உமையின் கை, அப்பப்பா – அழகே வடிவமாக மலர்ந்த தாமரையின் மெல்லிய காம்பை பிடித்திருப்பது போல அபிநயம் பிடிக்கும் விரல்களின் நளினம். அந்தப்பக்கம் அப்பன் மழுவை பிடித்திருக்கும் காட்சி அருமை. எதற்கு இன்னும் ஒரு கை.

சரி, விவாதத்திற்கு கையையும் விடையையும் அகற்றி விடுவோம்.

சிலை ஒரு பக்கம் வளைந்து கொண்டு – எப்படிச் சொல்வது. பயணிகள் நிறைந்த பேருந்தில் நாம் எட்டி நடத்துனரிடம் பயணச் சீட்டு வாங்குவது போலல்லவா உள்ளது!

இதை சரி செய்யவே விடையையும் அதன் தலைமேல் சாய்ந்த இரண்டாவது கையையும் கொண்டு வருகிறான் சிற்பி.

அது சரி , கேள்விக்கு விடை என்ன? கணவன் இழுத்த இழுப்புக்கு மனைவி வரவேண்டுமா? அல்லது மனைவி போடும் பாரத்தை கணவன் சுமக்க வேண்டுமா ? நமக்கு ஏன் இந்த வம்பு. சிற்பத்தை விளக்குவதோடு நிறுத்திக்கொள்வோம்.

அர்விந்த் ஒரு நல்ல கேள்வியை கேட்டார். சிவனின் கால் ஏன் மடங்கும்படி உள்ளது என்று.

பொதுவாக ஆணை வடிக்கும் பொது கட்டு மஸ்தான அளவில், நல்ல உயரமாக காட்டும் பழக்கம் உண்டே , அதனால் ஒருவேளை ஆண் பெண் இணைக்கும் பொது ஆணின் கால் பெண்ணின் காலை விட பெரியதாக காட்டுவதற்காகவா ? அல்லது இடையை வளைத்தனால் காலை மடிக்க வேண்டயுள்ளதா ?

நீங்கள் என்ன நினைகிறீர்கள்? இதை வெறும் ஆண் , பெண் வெண்கலச் சிலைகளை வைத்து மீண்டும் ஒரு பதிவில் ஆராய்வோம்.

அட, இதை ஒரு அற்புத வடிவம் என்றேனே – அது என்ன? முழுப் படத்தையும் பார்க்கவும்

ஆண்பாதி பெண்பாதி விடையோடு சூலத்தினுள் எப்படித்தான் வெங்கலத்தில் இப்படி மதிமயக்கும் அழகில் வார்த்தானோ!!!

சிற்பிக்கு “விடை”யே விடை

நண்பர் திரு தேவ் அவர்களுடன் சென்ற மடலைப் பற்றி தற்செயலாக நடந்த உரையாடலில் வந்த கேள்விகளை ஆராயும்போது கிடைத்த விடைகளை விரிவுபடுத்தி ஒரு பதிவாக இங்கு இடுகிறேன். சிற்பங்கள் வெகுவாக சிதைந்து இருப்பதால் அவற்றை கொட்டோவியங்களாகவும் உங்கள் பார்வைக்கு இடுகிறேன். ( வரைந்தவை அல்ல – ஒற்றி எடுத்தவை – திரேசிங்)

முதலில் ஒன்றை தெளிவு படுத்திக்கொள்ள விரும்புகிறேன். இந்த பதிவின் குறிக்கோள் அர்த்தனாரி வடிவத்தின் இரு பாகங்களின் வேற்றுமைகளை எடுத்துக்காட்டுவதல்ல, அந்த வடிவம் எப்படி படிப்படியாக பரிணாம வளர்ச்சி கண்டுள்ளது என்பதை விளக்க ஒரு முயற்சி. அதுவும் ஒரு சிற்பி இந்த வடிவத்தை செதுக்கும் போது எதிர்க்கொண்ட சவால்கள் என்னவாக இருந்திருக்கும், அதனை அவன் எப்படி சமாளித்தான் என்பதை காட்டவே இந்த பதிவு.

ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள அங்க அமைப்புகளின் வித்தியாசங்கள் பல. அவற்றை இங்கு பட்டியலிடாமல், சிற்பி எவ்வாறு இவற்றை ஒரு உருவத்துள் கொண்டு வர முயற்சிக்கிறான் என்று பார்ப்போம். ஆண் பெண் இருவரையும் ஒன்றாக இணைக்க வேண்டும், ஒரே உருவமாகத் தெரிய வேண்டும், எனினும் இரு பாகங்களும் ஆண் எது பெண் எது என்றும் தெளிவாகத் தெரிய வேண்டும். அழகாகவும் இருக்க வேண்டும். இந்தக் கேள்விகளையும் அவன் கண்டுபிடித்த விடையையும் நான்கு சிற்பங்களின் மூலம் பார்ப்போம். ( சிற்பங்கள் ஒவ்வொன்றும் மிக அருமை – அவற்றிற்கென தனி இடுகை வேண்டும், எனினும் தலைப்புக்கு என்ன தேவையோ அதை மட்டும் இன்று பார்ப்போம்)

முதல் சிற்பத்தை பார்ப்போம் – முற்கால பல்லவர் வடிவம் ( முதல் வடிவம் அல்ல, எனினும் நமது பதிவின் கால அட்டவணையில் மூத்தது). மல்லை தர்மராஜ ரதம் அர்த்தனாரி சிற்பம்.

எளிதில் சிற்பத்தை ரசிக்க ஒற்றி எடுத்த கோட்டோவியம்.

முற்கால பல்லவர் சிற்பம் என்பதற்கு சான்றுகள், மிகவும் குறைந்த அளவு ஆபரணங்கள் மற்றும் எளிமையான வடிவம். எனினும் பல்லவ சிற்பத்திற்கே உடைய உயிரோட்டம் இதில் இல்லை, அதே மல்லையில் உள்ள மற்ற சிற்பங்களில் உள்ள தன்மை இதில் ஏன் இல்லை. ஒருவேளை இந்த வடிவத்தை முதல் முதலில் சிற்பி வடித்ததால் இப்படியோ என்று தோன்றுகிறது. பல முறை சோதனை செய்து பார்த்து வடிக்க இது களிமண் பொம்மை இல்லையே. கருங்கல் அதுவும் நிலத்தில் இருந்த சிறு குன்றை குடைந்து வடித்த வடிவத்தின் வெளிச் சுவரில் வரும் புடைப்புச் சிற்பம். எனினும் பல்லவர் சிற்பம் என்றால் எனக்கு கொள்ளைப் பிரியம், பலரிடத்தில் அவர்கள் சிற்பக்கலை சோழர்களின் கலையை விட மேலானது என்று நான் வாதாடியதும் உண்டு. எனினும் இந்த சிற்பம் என்னை கவரவில்லை – ரோட்டில் லாரி ஏறி கிடக்கும் தேரை போல ஒரு வெறுமை – கண்டிப்பாக இது அவனது முதல் முயற்சி என்றுதான் தோன்றுகிறது. இரண்டு பாகங்களுக்கும் வேற்றுமைகள் ஒன்றும் பெரிதாக இல்லை, வெளிப்படையாக ஒன்றே ஒன்றுதான் தெரிகின்றது – மார்பகங்கள். கால்கள் இரண்டும் வித்தியாசம் பெரிதாக எதுவும் இன்றி ஒரே போல் இருப்பது வருத்தமே.
சரி, சிற்பி இதற்கு என்ன செய்தான். அதே சிற்பி என்று சொல்லவில்லை, சிற்பக் கலை பயில்வோர் இந்தச் சிலைவடிவதை எவ்வாறு அழகூட்டுவது என்று ரூம் போட்டு யோசித்தால் ….என்ன நடந்திருக்கும்.

அடுத்த உதாரணத்தை எடுத்துக்கொள்வோம். வாசகர் கவனிக்க. சிற்பங்களை அட்டவணை போட்டு காலம் என்னவென்று நாங்கள் ஆராயவில்லை. பொதுவாக எப்படி இந்த உருவம் காலப்போக்கில் வளர்ச்சி பெறுகிறது என்று பார்ப்பதற்கே இந்த உதாரணங்கள்

மீண்டும் ஒற்றி எடுத்த ஓவியம்.

இங்கே சிற்பி, ஆண் பெண் வேற்றுமையை இன்னும் பிரதானமாக எடுத்துக்காட்ட வேண்டும் என்பதை உணர்ந்துள்ளான். பெண்ணின் இடுப்பை அழகாக வளைத்து திருபங்கத்திற்கு எடுத்துச்செல்ல எத்தனித்துள்ளான். ஆனால் ஒரு பக்கம் இழுத்தால் மறு பக்கம் விளைவு – அதை சரி செய்ய ஆணின் காலை சற்று மடித்து – சவாலே சமாளி !! கைகளில் சிறு வேற்றுமைகளை காணலாம். பெண்ணின் கையை நளினமாகவும், ஆணின் கையை கம்பீரமாகவும் ( இடுப்பில் வைத்து ), ஆடைகளிலும் சற்று வேறுபாட்டை காட்டுகிறான் – அம்மைக்கு புடவை, ஐயனுக்கு அரை டிரௌசர் !!

இன்னும் வளர்ச்சி – பிற்கால சோழர் சிற்பம் சென்று, பூர்த்தி பெற்ற அம்மை அப்பன் – உமை ஒரு பாகன் சிற்பத்தை பார்ப்போம். .

மீண்டும் ஓவியம்.


பெண் பாகம் முழுமையாக திருபங்கத்தில் வந்துவிட்டது, அதனை சரிகட்ட ஆணின் கால் முழுமையாக மடித்து விட்டான் சிற்பி. எனினும் ஆணின் மேல் பாகம், வெகுவாக ஒரு பக்கம் சாய்ந்துள்ளது – பார்ப்பதற்கு சிற்பம் அழகாக இருந்தாலும், ஒருபக்கம் இழுத்துக்கொண்டு இருப்பது போல இருக்குமே. என்ன செய்வது என்று யோசிக்கிறான் சிற்பி. எதன் மேலாவது சாய்வது போல காட்டினால் என்ன? கடினமான வினா! விடை என்ன ?? ஆஹா “விடை”யே விடை. ஒய்யாரமாக சாய்ந்து நிற்க அவரது கையை வாகனமான விடை மீது இறங்க விட்டு சிற்பத்தை முடித்துவிட்டான். அழகிய ஆபரணங்கள் மற்றும் அணிகளை வடித்தான். அற்புத அர்த்தனாரி வடிவம், விடை வாகன் வந்துவிட்டான். அர்த்தனாரி என்றால் இனி இந்த வடிவமே என்று எங்கும் திகழும் வண்ணம் பரவியது அவன் திறன்.

அப்படியா. இந்த விடை அங்கு வருவதற்கு இது ஒரு காரணமோ. சரி இதை சோதிக்க எளிபண்டா குடவரை செல்வோம்.

அற்புத அர்த்தனாரி வடிவம், கொள்ளை அழகு, ஆண் பெண் இருவரும் பிணைந்து நிற்கும் வடிவம். ஆஹா, அதோ இங்கேயும் நமது விடை தன் தலையை ஐயனுக்கு தந்துள்ளதே

அணிகலன், ஆபரணம் வேறுபட்டாலும் வடிவம் ஒன்றே!!

சரி, இதற்க்கு வேறு சான்று உண்டா. எப்படி சோதிப்பது. பொதுவாக அர்த்தனாரி உருவங்கள் சிவன் வலது புறம், உமை இடது புறம் என இருப்பது வழக்கம். எனினும் இதற்கும் ஒரு சிற்பம் விதி விலக்கு ( ஏன் – ஆராய வேண்டும்) – இங்கு இடம் மாறி இருக்கும் அம்மை அப்பன் பாதிகள். பாருங்கள்.

சரி, இடம் மாறி உள்ளார்கள், அதற்கும் நமது இடுகைக்கும் உள்ள தொடர்பு என்ன ? பின்னால் இருக்கும் உருவத்தை பாருங்கள் …

விடையும் இடம் மாறி, இடது புறம் நோக்கி இருப்பது – ஆண் பாதிக்கு முட்டுக்கொடுக்கவே என்பதை ஊர்ஜிதை செய்கிறது.

இது ஒரு கருத்தே. இதை இன்னும் ஆராய வேண்டும். இந்த வடிவம் கல்லில் செய்தது, பின்னர் உலோகத்திலும் வடித்தனர். கல்லில் வடித்த போது வளைத்து செதுக்கும் போது கல்லின் எடை போன்றவையை நினைவில் கொள்ள வேண்டும். அப்படி என்றால் உலோகத்தில் வார்க்கும் போது என்ன ஆகும். அதை வரும் பதிவுகளில் பார்ப்போம்.

படங்களுக்கு நன்றி : அமெரிக்கன் இன்ஸ்டிடுட் ஒப் ஆசியான் ஸ்டடீஸ்.

அலைபேசி அளவில் உமையொருபாகன் விடை வாகன்

புள்ளமங்கையின் ஈர்ப்பு நம்மை அவ்வளவு சுலபத்தில் அங்கிருந்து வெளிவர விடை தர மறுக்கிறது. அதனால் இன்று மீண்டும் அங்கிருந்து ஒரு சிற்ப விருந்து. நன்றி திரு அர்விந்த் அவர்களே. இந்த பதிவின் மூலம் வாசகர்களுக்கு இன்னும் ஒரு வேண்டுகோள். நீங்கள் அடுத்த முறை இத்தளங்களுக்கு செல்லும் பொது அங்கு நான் சென்றேன் என்பதற்கு அத்தாட்சியாக சிற்பங்களின் முன்னர் நின்று படம் எடுப்பதோடு மட்டும் நின்றுவிடாமல், ஒரு சில நிமிடங்கள் எங்களுடன் உங்கள் படங்களை பகிரும் நோக்கத்தோடு, சிற்பங்களின் கலைத் திறனை வெளிக் கொணரும் பாணியில் படங்களை எடுத்து உதவுங்கள். இப்போது முன் போல படம் எடுக்க பணம் விரயம் செய்யவேண்டிய அவசியம் இல்லை, மின்னணு புகைப்படக் கருவி வந்துவிட்டதே.படச் சுருள் தேவை இல்லை – மற்றும் எடுத்ததை அப்போதே பார்த்து பகிரலாம். இவ்வாறு படம் எடுக்க சில நொடிகள், நடுக்கம் இல்லாத கை, அருகில் இருக்கும் சாமானிய பொருள்கள் மற்றும் நல்ல உள்ளம் மட்டுமே.

திரு அர்விந்த் அவர்கள் எப்படி படம் எடுத்துள்ளார் பாருங்கள்.

இல்லை, இது அலை பேசி / கை பேசிக்கான விளம்பரம் இல்லை. எதற்காக இந்த படம் என்பது இந்த அற்புத சிற்பத்தின் பதிவின் முடிவில் விளங்கும்.

அர்தனாரி – உமை ஒரு பாகன், அம்மையும் அப்பனும் ஒன்றாய் காட்சி அளிக்கும் திருவுருவம். பெண்கள் ஆண்களுக்கு சரி சமானம் என்றும், ஆணின் சரி பாதி என்றும் உலகுக்கு உணர்த்தும் உன்னத கோலம். இந்த வடிவத்தை கல்லில் அற்புதமாக செதுக்கி உள்ளான் சிற்பி.

உமையொருபாகன் தேவார வரிகளில் பல முறை வந்தாலும், அவனது எழில் மிகு தோற்றத்துடன் நந்தி இணைந்து விடை வாகனாக குறிப்பிடும் பாடல் இதோ

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=2&Song_idField=20850&padhi=085&startLimit=7&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

செப்பிள முலைநன்மங்கை யொருபாக மாக விடையேறு செல்வ னடைவார்
ஒப்பிள மதியுமப்பும் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும்வாத மிகையான பித்தும் வினையான வந்து நலியா
அப்படி நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே

செப்புப் போன்ற இள நகில்களை உடைய உமை நங்கை ஒருபாகத்தே விளங்க விடையேறிவரும் செல்வனாகிய சிவ பிரான் தன்னை அடைந்த இளமதியையும், கங்கையையும் முடிமேல் அணிந்தவனாய், என் உள்ளத்தின்கண் புகுந்து எழுந்தருளிய காரணத் தால், வெம்மை தண்மை வளி மிகுந்த பித்தம் வினைகள் இவற்றால் வரும் துன்பங்கள் நம்மை வந்து நலியா. அடியார்களுக்கும் அவை நல்லனவே செய்யும்.

இந்த சிற்பத்தின் அழகு அதை வடித்த சிற்பியின் கலை திறனைப் போற்றுகிறது. ஒரு புறம் ஆணின் வீரியம், அதனுடன் பெண்மையின் நளினத்தை இணைக்க வேண்டும், வெளி வரும் சிற்பம் இரு பாதிகளை ஒட்டியது போல இல்லாமல், பார்ப்பதற்கு ஒரு சிற்பம் போல இருக்க வேண்டும்

சிற்பத்தின் இரு பாதிகளையும் தனித்தனியாக பார்ப்போம். ஆண் பெண் என பார்த்தவுடனேயே நமக்கு உணர்த்தும் வகையில் நேர்த்தியாக செதுக்கிய அழகு அருமை

ஆண் பெண் என்ற இரு அம்சங்களையும் அவன் படித்து இரண்டிற்கும் உள்ள வேற்றுமைகளை உரிய வகையில் மிகைப் படுத்தி கல்லில் வடித்தான் என்பதை, அந்த இடையை பார்த்தாலே தெரிகிறது.

ஆண் என்பதனால் பறந்து விரிந்த தோள்கள், அதே உமைக்கோ கொடியென வளைந்து தவழும் வண்ணம் வடித்துள்ளான்.

அவன் கல்லில் இட்ட கோடுகளை சற்று மிகை படுத்தி நாம் ரசிக்க காட்டியுள்ளேன்.

அடுத்து ஈசன் கம்பிரமாய் நிற்கும் பாணி, அந்த பக்கம் உமையோ நளினமே உருவான தோற்றம். நந்தி பின்னால் – அதையும் மிக நேர்த்தியாக ( கழுத்தில் தொங்கும் சதை / தோல் ) வடித்துள்ளான் சிற்பி

அதனுடன் நமது பதிவு முடியவில்லை. அலை பேசி வரவேண்டுமே, இதோ..

அலைபேசி அளவில் உமையொருபாகன் விடை வாகன்

புள்ளமங்கை ப்ரம்மபுரீஸ்வரர் – ஒரு சிற்ப விருந்து

நண்பர்களே, இன்றைக்கு நமக்கு ஒரு சிற்ப விருந்து. புள்ளமங்கை ப்ரம்மபுரீஸ்வரர் ஆலயத்திற்கு சென்று வந்த இரு நண்பர்கள் – இல்லை இல்லை அவர்களை அங்கு சென்று படம் எடுத்து வாருங்கள் என்று தூண்டி இப்போது அதன் பலனை உங்களுடன் சேர்ந்து நானும் அனுபவிக்கிறேன். புள்ளமங்கை ஒரு கலைப் புதையல். ஆனால் புதையல் என்றாலே புதையுண்டு பல காலம் நினைவில் இருந்து விலகி பின்னர் கண்டுபிடிக்கப்படுவது போல, இன்னும் புதையுண்டு கிடக்கும் பொக்கிஷம் புள்ளமங்கை. அதன் அருமைகளை இந்த தொடரின் மூலம் வெளியிடுகிறோம்.

பொதுவாக இடுகைகளில் படங்களை தொலைவில் இருந்து இட்டு மெதுவாக அருகில் செல்வோம். ஆனால் இந்த பதிவுக்கு அதை சற்றி தலைகீழாக மாற்றி, முதலிலேயே அருகில் செல்வோம். படித்து முடித்தவுடன் ஏன் என்று உங்களுக்கு புரியும்.

இன்று நாம் பார்கவிருப்பது நான்கு சிற்பங்கள். கந்தன் பிறப்பை கல்லில் காட்சியை வடிக்கும் சிற்பங்கள், மற்றும் சில யாளிகள்.

எனக்கு பிடித்தமான யாளிகளுடன் துவங்குகிறேன்.

அற்புத வடிவங்கள், இவ்வளவு திறமை கொண்டு இவற்றை வடித்தான் சிற்பி என்றால், இவை வெறும் அலங்கார மதிப்புக்காகவா என்ற ஐயம் வருகிறது?

இன்னொரு யாளி ( கொம்புடன் இருப்பதால் இதனை ஆங்கிலத்தில் வ்யாலா என்கிறார்கள் )


என்னடா, முருகனின் பிறப்பு என்று சொல்லி மீண்டும் யாளிகளை வலம் வருகிறானே என்று எண்ண வேண்டாம். போகப் போக உங்களுக்கே புரியும் . சரி இதோ சிற்பங்கள்.


முதல் வடிவம். உமையும் ஈசனும் ஆடும் அற்புத நடனத்தைக் கண்டு ஸ்தம்பித்து நிற்கும் காமன் மற்றும் ரதி. இருவர் ஆட்டத்தில் தான் என்ன ஒரு உயிரோட்டம். ஆடல் வல்லானின் ஆட்டத்தின் ஆண்மை கலந்த தோரணை, உமையின் வடிவத்தில் பெண்ணிற்கே உரிய நளினம்.

அடுத்த வடிவம், உமையை தன்பால் ஈர்க்கும் ஈசன்.

வெட்கப்படும் பாவையாய் உமை, கடைக்கண் பார்வையால் தலைவனை பார்க்கும் வண்ணம் – ஆஹா, ஈசன் அமர்ந்திருக்கும் அழகைப் பாருங்கள்.

அடுத்து, இன்னும் நெருங்கி விட்டனர். தனது ஆசைக்குரிய பார்வதியை அன்புடன் சிவன் அணைக்கும் காட்சி.

இந்த சிற்பம் வடித்த சிற்பிக்கு உள்ள அறிவுக்கூர்மையை பாருங்கள். முதல் பார்வையில் ஈசனுக்கு இரண்டு வலது கரங்கள் இருப்பது போல வடித்தாலும் – ஒரு கை பின்னால் அமர்ந்திருக்கும் நந்தியின் மேல் , இன்னொரு கரம் உமையை அன்புடன் அணைப்பது போல இருந்தாலும், சிற்பத்தை இன்னும் ஒரு முறை பாருங்கள்.

கல்லில் ஈசனின் கை உயிர் பெற்று, நகர்ந்து உமையைப் பற்றுவது போல காட்டவே சிற்பி அப்படி வடித்தான் போல !!

அது சரி, அந்த முதல் ஸ்பரிசத்திற்கு உமையின் பதில். அப்பப்பா, நாணம் என்றால் இது தானோ !!!

அதனுடன் நிறுத்தவில்லை சிற்பி, நந்தியை கொஞ்சம் பாருங்கள்.

மேலே இருபுறமும் கணங்கள், கிழே பணிப்பெண் என்று பின்னுகிறான் சிற்பி.

நான்காவது சிற்பம். முருகன் பிறப்பு.

புரியவில்லையா. ஈசனின் மடியில் ஒரு குழந்தை, அப்பாவை செல்லமாக கை நீட்டி ஆசையாய் கன்னத்தை தொடுகிறது. கார்த்திகை பெண்கள் ஆறு, ஐவர் கையில் மற்ற ஐந்து குழந்தைகள்.

சிற்பங்கள் மற்றும் படங்கள் தரம் குறித்து சிலர் அதற்குள் கூறும் மறுமொழிகள் கேட்கிறது ( நல்லவை கெட்டவை இரண்டும் !!)

ஒரு நிமிடம் பொறுங்கள். காரணத்தை படங்கள் மூலமே சொல்கிறேன்.

இன்னும் முடியவில்லை

இன்னும் தொலைவில் இருந்து, இப்போது புரிகிறதா ? இந்த சிறிய சிற்ப புதையல்களை நாம் முதல் பார்வையில் விட்டு விடக் கூடும்.

நான் ” சிறு ” என்று பதிவில் சொன்னேனா ?

யார் படைப்பாளி , யார் படைப்பு

இன்றைக்கு நாம் மீண்டும் புள்ளமங்கை பிரம்ம புரீஸ்வரர் ஆலயம் செல்கிறோம். சிற்ப புதையல்கள் நிறைந்த ஆலயம், ஒவ்வொரு முக்கிலும் சிற்பம். எங்கும் சிற்பம், எதிலும் சிற்பம். சுற்றி சுற்றி நம்மை திணற வைக்கும் கலை பெட்டகம் . அவற்றில் ஒரு அற்புத சிற்பக் கொத்தை நாம் இன்று சதீஷின் உதவியுடன் பார்க்கிறோம். ஒரு படைப்பாளி தன்னை படைத்தவனை படைக்கும் போது – யார் படைப்பாளி யார் படைப்பு. புரியவில்லையா . மேலும் படியுங்கள்.

லிங்கோத்பாவர் சிற்பம். சைவ ஆலயங்களில் ஆகமங்களில் முக்கிய இடம் பெற்று விமானத்தின் பின்னால் இடம் பிடித்த சிற்பம்.

அதற்கு முன்னர், யாரையும் புண்படுத்த இந்த பதிவை இடவில்லை, சிற்பத்தை சிற்பமாக பார்ப்பதே எங்கள் நோக்கம். அதற்கு எவ்வளவு தூரம் கதை வேண்டுமோ அதை மட்டுமே இங்கு இடுகிறோம்

இந்த சிற்பக் கொத்தில் பார்க்க நிறைய உள்ளது

அவற்றை முறையே பிரித்து ஒவ்வொன்றாய் பார்ப்போம்.

முதலில் லிங்கோத்பாவர்

ஒருநாள் நான்முகனுக்கும் ( அப்போது அவருக்கு ஐந்து முகங்கள் ) திருமாலுக்கும் தம்முள் யார் பெரியவர் என்ற வினா எழுந்தது. நான்முகன், “நானே படைக்கிறேன்; ஆகவே நான் தான் பெரியவன்” என்றார். திருமால், “நான் காக்கிறேன்; ஆகவே நான் பெரியவன்” என்றார். இவ்வாறு அவர்கள் வாதமிட, அங்கே தீ பிழம்பாகிய ஜோதி வடிவம் ஒன்று எழுந்தது. அதன் அடிமுடி அறிந்தவரே பெரியவர் என்று ஒரு அசரீரி வானத்தில் கூறியது. பிரம்மா அதன் முடியைக் காண அன்னமாகி மேலே பறந்து சென்றார் . திருமாலும் வராக(பன்றி) வடிவில் பூமிக்குள் சென்று அடியை தேடினார். மிகவும் முயன்றும் பல காலம் கழிந்தும் இருவருக்கும் எந்த பலனும் கிட்டவில்லை . பறந்து சென்ற பிரம்மா வழியில் ஒரு தாழம்பூ விழுவதைக் கண்டு அது எங்கிருந்து வருகிறது என வினவ, அத்தாழம்பூ உச்சியிலிருந்து தான் புறப்பட்டு பல காலமாகக் கீழ் நோக்கி வந்து கொண்டிருப்பதாக கூறியது. உடனே போட்டியில் ஜெயிக்க குறுக்கு வழி வகுத்த பிரம்மா தாழம்பூவைத் தன் திட்டத்தில் சேர்த்துக் கொண்டு, தம்பத்தின் உச்சியைத் தான் கண்டு விட்டதாகவும் அதற்குத் தாழம்பூவே சாட்சி எனக் கூறினார். திருமால் பலகாலம் முயன்றும் அடியைக் கண்டறிய முடியவில்லை என ஒப்புக் கொண்டார்.

அப்போது அதில் இருந்து வெளி வந்தார் சிவன், தங்கள் அகந்தையால் எதிரில் இருப்பது ஈசன் என்றும், அவன் ஆதி அந்தன் என்பதையும் உணராதது பிழை என்று ஒப்புக்கொண்டனர். எனினும் பொய் சொன்ன பிரம்மாவின் தலையை கொய்தான் ஈசன். மேலும் அவருக்கு இனி தனி வழிபாடு இல்லை என்றும், தாழம் பூ இனி தெய்வ வழிபாட்டிற்கு உகந்த பூவல்ல என்றும் கூறினார். அவ்விருவர் அகந்தையையும் போக்கி சிவபெருமான் உலகிற்குத் தன் பேரொளி வடிவத்தைக் காட்டிய கோலமே இலிங்கோற்பவ மூர்த்தியாகும்.

இரண்டாம் திருமுறை – பாடல் எண் – 9

http://www.thevaaram.org/thirumurai_1/search_view.php?thiru=2&Song_idField=2025009&padhi=025

மாலும் நான்முகன் தானும் வார்கழற்
சீல மும்முடி தேட நீண்டெரி
போலும் மேனியன் பூம்பு கலியுட்
பால தாடிய பண்பன் நல்லனே.

திருமால் நான்முகன் ஆகியோர் நீண்ட திருவடிப் பெருமையையும், திருமுடியையும் தேட எரிபோலும் மேனியனாய் நீண்டவனும், அழகிய புகலியுள் பால் முதலியவற்றை ஆடி உறைபவனும் ஆகிய பண்பினன் நமக்கு நன்மைகள் செய்பவன்.

சரி, இப்போது சிற்பம்.

மேலே பறக்கும் பிரம்மா , கிழே பூமியை குடையும் வராஹம். நடுவில் சிவன் ( மிகவும் சிதைந்த நிலையில்) பிளந்துக்கொண்டு வெளி வருகிறார்.

இந்த சிற்பத்தின் இரு புறமும் பிரம்மன் மற்றும் திருமாலின் அற்புத சிற்ப வடிவங்கள்

கதையில் சற்று தாழ்ந்தாலும், பிரம்மனின் முகத் தோற்றம் அப்பப்பா அபாரம். ஒரு படைப்பாளி தன்னை படைத்தவனை படைக்கும் பொது – யார் படைப்பாளி யார் படைப்பு. தலைப்பு புரிந்ததா .

பொறுங்கள், இது ஒன்றும் நாடகம் அல்ல, தலைப்பு வந்தவுடன் முடிய, இன்னும் உள்ளது.

மிக அரிய சிறிய சிற்பங்கள்.

நாம் முன்னரே கங்கை கொண்ட சோழபுரத்தில் சண்டேச அநுகிரஹ முர்த்தி வடிவம் பார்த்தோம். இப்போது அதன் எறும்பு அளவு சிற்பம். ஈசன் அன்புடன் சண்டேசரின் தலையில் பூ சுற்றும் காட்சி.


அடுத்து, ஆதி சேஷனின் மடியில் துயிலும் திருமால், தேவி மற்றும் ஒருவர்.

அடுத்து, சிவன் பார்வதி – பார்ப்பதற்கு கங்காதரா வடிவம் போல உள்ளது
அடுத்து மூன்று பேர், யார் இவர்கள்.

அடுத்து மிக அற்புத மகா சதாசிவ வடிவம் ( இல்லை பிரம்மனா)

முடிவில் ( இல்லை இன்னும் யாளி வரிசை உள்ளது – அடுத்த பதிவில் பார்ப்போம் ) –

ஆஹா , அம்மை அப்பன் , கீழே ஒரு பூத கணம், எப்படி தான் உயிரோட்டத்துடன் வடித்தார்களோ, அம்மை அப்பன் அமர்ந்திருக்கும் ( ஒரு காலை மடித்து ) தோரணை அபாரம். இந்த சிற்பங்களை இன்னும் போற்ற முடிவில் சதீஷ் டச்

அருகில் இன்னொரு சிற்பம் – அதன் அளவை குறிக்க கார் சாவி …

படங்கள்: திரு சதீஷ், மற்றும் வரலாறு.காம்

ஒரே முகம் – இரு பாவங்கள்

கஜசம்ஹாரமூர்த்தி அல்லது யானை உரிபோர்த்திய மூர்த்தி வடிவம் தஞ்சை அருங்காட்சியக சிற்பம். இது தாராசுரத்திலிருந்து எடுத்து வந்தது.

நாம் முன்னரே புள்ளமங்கை பதிவில் இதே வடிவத்தை பார்த்தோம். இதே போல தில்லையிலும் உள்ளது

ஆனால் இது ஒரு அற்புத சிற்பம். இந்த சிற்பம் இரு ஜாம்பவான்களால் இவ்வாறு கூறப்பட்டது – ஒருவர் திரு குடவாயில் பாலசுப்ரமணியம், மற்றொருவர் சிற்பி திரு உமாபதி அவர்கள் ( உமாபதி அவர்கள் இதனை செப்பு தகடு கொண்டு வடித்த வடிவம் இதோ )


சரி – இந்த வடிவத்தில் அப்படி என்ன புதுமை என்று திரு குடவாயில் பாலசுப்ரமணியம் ஐயாவை கேட்டேன். இதே வடிவங்கள் மற்ற இடங்களிலும் உள்ளன … ( இதே சிற்பம் தில்லையிலும் உள்ளது ) அவர் அளித்த அருமையான விளக்கத்தை உங்களுடன் பகிர்கிறேன்

இந்த சிலையின் / வடிவத்தின் அருமை, அதை சிற்பி கையாண்ட முறை.

இதை விளக்க என்னிடத்தில் அப்போது சரியான படம் இல்லை – அதனால் பெங்களூரை சேர்ந்த தோழி திருமதி லக்ஷ்மி ஷரத் அவர்கள் சென்ற வாரம் தஞ்சை சென்ற பொது இந்த சிற்பத்தை படம் எடுத்து வர சொன்னேன். ( அமெரிக்கா தோழி காதி இரண்டு படங்கள் தந்து உதவினார்! )

இதோ படங்கள். இப்போது முதலில் காட்சியை பாருங்கள், என்ன காட்சி?

தாருகாவனத்தில் ரிஷிகள் ஏவிய யானையைக் கொன்று அதன் தோலை அணிந்தவன்.

இதோ தேவாரம் குறிப்பு.

சம்பந்தர் தேவாரம் – திருமுறை 1.10.8

ஒளிறூபுலி அதள்ஆடையன் உமைஅஞ்சுதல் பொருட்டால்
பிளிறூகுரல் மதவாரண வதனம்பிடித் துரித்து
வெளிறூபட விளையாடிய விகிர்தன்னிரா வணனை
அளறூபட அடர்த்தான்இடம் அண்ணாமலை அதுவே.

ஒளி செய்யும் புலித் தோலை ஆடையாகக் கொண்டவனும், உமையம்மை அஞ்சுமாறு பிளிறும் குரலை உடைய மதம் பொருந்திய யானையின் தலையைப் பிடித்து அதன் தோலை உரித்து எளிதாக விளையாடிய விகிர்தனும், இராவணனை மலையின்கீழ் அகப்படுத்தி இரத்த வெள்ளத்தில் அடர்த்தவனும் ஆகிய சிவபெருமானது இடம் திருவண்ணாமலை.

முதலில் அவன் ஆடும் அழகு, வலது காலை பாருங்கள்,யானையின் தலையில் மேல் ஊன்றி, நாம் முன்நின்று பார்க்கும் பொது அவன் நம்மை நோக்கிஇராமல் – பின்புறம் தெரிய உடலை எவ்வாறு முறுக்கி ஆடுகிறான்.

இரு புறமும் நான்கு கரங்கள், மேல் வலது கரத்தை பாருங்கள், யானை தொலை கிழித்து வெளி வரும் விரல்கள், சரி கிழே இடது கரம், நம்மை அங்கே இருக்கும் இருவரை பார்க்க சொல்கிறது ,யார் அவர்கள் ?

ஆஹா, ருத்ரன் வெகு கொடூரமாக ஆடும் ஆட்டத்தை குழந்தை முருகன் பார்க்காமல் இருக்க அம்மை அவனை தன் இடுப்பில் இட்டு தன் உடல் கொண்டு மறைக்கிறாள்,அதை காணும் ஈசனோ புண் முறுவல் புரிகிறான்.


3.86.1:
http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=3&Song_idField=3086&padhi=126+&button=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95

முறியுறு நிறமல்கு முகிழ்முலை மலைமகள் வெருவமுன்
வெறியுறு மதகரி யதள்பட வுரிசெய்த விறலினர்
நறியுறு மிதழியின் மலரொடு நதிமதி நகுதலை
செறியுறு சடைமுடி யடிகடம் வளநகர் சேறையே

சிவபெருமான், தளிர் போன்ற நிறமும், அரும்பு போன்ற முலையுமுடைய உமாதேவி அஞ்சுமாறு, மதம் பிடித்த யானையின் தோலை உரித்த வலிமையுடையவர். நறுமணம் கமழும் இதழ்களை உடைய கொன்றைப் பூவோடு, கங்கை நதியையும், பிறைச்சந்திரனையும், மண்டையோட்டையும் நெருங்கிய சடை முடியில் அணிந்துள்ள அவ்வடிகள் வீற்றிருந் தருளும் வளநகர் திருச்சேறை என்னும் திருத்தலமாகும்.
—————–
4.51.10:
http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=4&Song_idField=4051&padhi=051&startLimit=10&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

பழகநா னடிமை செய்வேன் பசுபதீ பாவ நாசா
மழகளி யானையின் றோன் மலைமகள் வெருவப் போர்த்த
அழகனே யரக்கன் றிண்டோ ளருவரை நெரிய வூன்றும்
குழகனே கோல மார்பா கோடிகா வுடைய கோவே

கோடிகா உடையகோவே ! ஆன்மாக்களின் தலைவனே ! பாவங்களைப்போக்குபவனே ! இளைய மதமயக்க முடைய யானையின் தோலைப் பார்வதி அஞ்சுமாறு போர்த்த அழகனே ! அரக்கனாகிய இராவணனுடைய வலிய தோள்கள் கயிலை மலையின் கீழ் அகப்பட்டு நெரியுமாறு கால்விரலை அழுத்திய அழகனே ! நின் தொண்டிற் பழகுமாறு நான் அடித்தொண்டு செய்வேன்.
——————–

( நன்றி .. எனக்கு உதவியவர்கள் : திரு வி.சுப்பிரமணியம் அவர்கள் மற்றும்
திவாகர் ஐயா )

இதை எப்படி சிற்பத்தில் காட்டுவது, படத்தை பாருங்கள்,முகத்தில் வலது புறம், ,கோவத்தில் வில்லென மேல் விரியும் புருவம், அதே முகத்தின் இடது பக்கம்,உமையை பார்க்கும் பக்கம்,ஆஹா புருவம் அழகாக வளைந்து உள்ளது , புன்முறுவல்.


33733386
இரு பாவங்களை ஒரே முகத்தில் கொண்டு வருகிறது இந்த சிற்பம் ( இதை போல புன்முறுவல் ஓவியம் உலக புகழ் பெற்றுள்ளது… …ஆனால் அதை விட கடினாமான கல்லில் உள்ள இந்த சிற்பம் தஞ்சையில் ஒரு ஓரத்தில் கிடக்கிறது…)

.

பதஞ்சலி – பாம்பு முனி

நாம் முன்னர் புலி கால் முனிவரை பார்த்தோம். இப்போது பாம்பு உடல் முனிவர் – பதஞ்சலியை பார்ப்போம். நன்றி திருமதி கீதா சாம்பசிவம் அவர்கள் அருமையான உரைக்கு , மற்றும் பிக்காசா கோமில்லா அவர்கள் – அருமையான படங்களுக்கு )

பதஞ்சலி முனிவர் பற்றிச் சில குறிப்புக்கள். இவரைப் பற்றிய தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாக இருக்கிறது. சிலர் இவரின் காலம் தொன்மையானது என்று சொல்கிறார்கள். சிலர் வேத காலத்தில் இருந்தே இருந்து வந்ததாயும் சொல்வார்கள். புராணங்களின் படி இவர் ஆதி சே்ஷனின் அவதாரம். மஹாவி்ஷ்ணு பூவுலகிற்கு அவதாரங்கள் செய்ய வந்த போது இவர் முனிவராக அவதாரம் செய்வதாய்ச் சொல்கிறார்கள். ஆகாயத்தில் இருந்து பூமியில் நேரே வந்து ஒரு பெண்ணின் பாதத்தில் அஞ்சலி செய்வது போல் கைகளைக் கூப்பிய வண்ணம் விழுந்ததால் இவர் பெயர் “பதஞ்சலி” என்று ஆனதாய் ஒரு கூற்று. மேலும் சிவனின் நடனத்தைத் தன் மானசீகக் கண்களால் தன் உள்ளத்தின் உள்ளே ஆடுவதைக் கண்டு ஆனந்தித்துக் கொண்டிருந்த மகாவிஷ்ணுவின் தோற்றத்தாலும், அவரின் திடீர் எடை அதிகரிப்பாலும் வியந்த ஆதிசேஷன் அவரிடம் காரணம் வினவுகின்றார். மகாவிஷ்ணுவும் ஈசனின் ஆனந்த நடனக் கோலத்தை வர்ணிக்கத் தாமும் அதைத் தரிசிக்க ஆவல் கொண்டிருப்பதாய்ச் சொல்ல, விஷ்ணுவும் அவரைப் பூவுலகில் சிதம்பரம் க்ஷேத்திரத்துக்குப் போய்ப் பார்க்கச் சொல்கின்றார். ஆதிசேஷனும் ஒரு ரிஷியின் மகனாய்ப் பிறக்கத் திருவுளம் கொண்டு அத்திரிக்கும், அனுசூயைக்கும் பிறந்ததாயும், இந்தக் குழந்தையே பதஞ்சலி முனிவர் என்றும் கூற்று.

இவருடைய சம காலத்தினரான புஷ்ய் மித்திரர் கி.மு.3-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் ஆகையால் இவரின் காலம் கி.மு. என்று சொல்லுவோரும் உண்டு. பதினெட்டு சித்தர்களில் ஒருவரான திருமூலரும் இவரும் ஒரே காலத்தில் வாழ்ந்ததாயும், பதஞ்சலி முனிவர் சம்ஸ்கிருதத்தில் எழுதிய மஹா பாஷ்யத்தின் தமிழாக்கம் தான் திருமூலரின் “திருமந்திரம்” என்று சொல்வோரும் உண்டு. எல்லாமே ஊகங்கள் தான். காலத்துக்கு அப்பாற்பட்ட இம்முனிவரைப் பற்றித் திருமூலர் என்ன சொல்கிறார் என்றால்:

“பதஞ்சலி முனிவர் அத்ரி மஹரிஷிக்கும், அனசூயைக்கும் பிறந்தவர். திருமூர்த்திகளும் தனக்குக் குழந்தையாகப் பிறக்க வேண்டும் என்ற ரிஷியின் வேண்டுகோளுக்கு இணங்கப் பிறந்த மூன்று குழந்தைகளான தத்தாத்ரேயர், துர்வாசர், பதஞ்சலி என்ற மூன்று ஆண் குழந்தைகளைத் தவிர அருந்ததி என்ற பெண்குழந்தையும் உண்டு இந்த ரிஷித் தம்பதியருக்கு. இந்த அருந்ததி தான் வசஷ்டரின் மனைவி. கோவையில்ல் இருந்து 100 கி.மீ. தள்ளி இருக்கும் “திருமூர்த்தி மலக்குன்றுகள்” இருக்கும் இடத்தில் இவர் பிறந்ததாயும், முன் காலத்தில் தென் இந்தியாவின் இந்தப் பகுதியைத் “தென் கைலாயம்” என்று அழைப்பதுண்டு என்றும் சொல்கிறார் திரு மூலர். இங்கே உள்ள அமணலிங்கேஸ்வரரைத் தான் அத்ரி மஹரிஷி வழிபட்டு வந்ததாயும் சொல்கிறார். பதினெட்டு சித்தர்களில் பதஞ்சலி முனிவரும்் ஒருவர்.”

“தன்னுடைய 7 யோக நண்பர்களுடன் நந்தி தேவரிடம் இருந்து நேரடியாக யோகக் கலையக் கற்றவர். இதைப் பற்றித் திருமூலர் என்ன சொல்கிறார் என்றால்:
“நந்தி அருள் பெற்ற நாதரை நாடினோம்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மறு தொழுத பதஞ்சலி, வ்யாக்ரபர்
என்றிவர் என்னோடு எண்மருமாம்!”

சித்தர்களில் ஒருவரான போகர்7,000 எழுதியதில் சொல்வது என்ன வென்றால்: தன்க்குச் சித்தி கிடைத்தது பற்றி வர்ணிக்கிறார். புரியாதவர்கள் கேட்கவும். முடிந்தால் விளக்குகிறேன்.

“அது என்னுடைய தாத்தா!
மேலே ஏறிப் பார்!
ஆனால் என்னைப் பிறப்பித்தவர்
காலங்கி நாதர்!
பதஞ்சலி, வ்யாக்ரபாதர், சிவயோகி முனி அனைவரும் சொன்னது
பார், இதுவே சரியான வழி!

அவர்கள் எப்படி மேலே ஏறுவது என்றும் திரும்புவது என்றும் சொல்லிக் கொடுத்தனர். அப்போது அந்த அகில உலகையும் படைத்துக் காத்து ஆளும் அந்த சர்வலோக சுந்தரி காட்சி கொடுத்துச் சொன்னாள்.”அப்பா நீ தேடினாயே இது தான் அது!” என்று.
குண்டலினி யோகம் படிக்கிறவர்களுக்கும், அதைப் பற்றித் தெரிந்தவர்களுக்கும் இது புரியும் என நினைக்கிறேன். நம் உடலில் உள்ள சூக்ஷும நாடியை இட நாடியின் உதவியோடும், பிங்கள நாடியின் உதவியோடும் மெதுவாய் மேலே எழுப்பிக் கொண்டு போய் நெற்றிப் பொட்டில் இருக்கும் சஹஸ்ராரச் சக்கரத்தில் சேர்த்தால் உள்ளொளி தெரியும். இறை தரிசனம் கிடைக்கும். இது சொல்வது சுலபம் என்றாலும் மிகுந்த பயிற்சியும் மன உறுதியும் தேவை. அதைத் தான் போகர் சொல்கிறார். காலங்கிநாதரில் ஆரம்பித்துப் பின் ஒவ்வொருவராய் முயன்று அவர் கடைசியில் தான் தேடியதை அடைந்தார். அவர் வேண்டியது கிடத்ததும் பிறந்தது “போகர் 7,000”. அதில் பதஞ்சலி பற்றியக் குறிப்புக்கள் கிடைக்கின்றன.

நாட்டிய சாஸ்திரம் எழுதிய பதஞ்சலியும், யோகக் கலை எழுதிய பதஞ்சலியும், மஹா பா்ஷ்யம் எழுதிய பதஞ்சலியும் வேறு வேறு என்றும் சிலருடைய அபிப்பிராயம். என்றாலும் ஆன்மீகவாதிகள் இதை எல்லாம் எழுதியது ஒருவரே எனச் சொல்கிறார்கள். பாம்பின் உடலும், மனித முகமும் படைத்த பதஞ்சலி தன் மாணாக்கர்களை நேரடியாகப் பார்த்துப் பாடம் சொல்லிக் கொடுக்க மாட்டார். ஏனெனில் அவரின் மூச்சுக் காற்றில் கடுமையான வி்ஷம் இருப்பதால் அதன் மூலம் மாணாக்கர்கள் இறந்து விட்டால் என்ன செய்வது என்ற எண்ணம் தான். ஒரு சமயம் 1,000 மாணாக்கர்களுக்குப் பாடம் சொல்லும் சமயம் யாரும் வெளியே செல்லக் கூடாது எனவும் தனக்கும் மாணாக்கர்களுக்கும் நடுவே உள்ள திரையை யாரும் நீக்கக் கூடாது எனவும் கட்டளை இட்டார் பதஞ்சலி முனிவர்.

மாணவர்களுக்கோ ஒரே ஆத்திரம்! ஏன் வேணாம்னு சொல்றார்னு. ஒருநாள் பாடம் நடக்கும்போது ஒரே ஒரு மாணவன் மட்டும் இயற்கையின் உந்துதல் தாங்காமல் ஆசிரியரிடம் தெரிவிக்காமல் வெளியே செல்ல, மற்ற மாணவர்கள் அந்தச் சமயம் திரையை விலக்கிப் பார்க்க அனைவரும் ஆசிரியரின் மூச்சுக் காற்றுப் பட்டுச் சாம்பல் ஆனார்கள். திரும்பி வந்த ஒரு மாணவனைக் காப்பாற்றி அவன் மூலம் வெளி வந்தது தான் அவ்ருடைய எழுத்துக்கள் என்றும், அதனாலும் முரண்பாடுகள் இருப்பதாயும் சொல்கிறார்கள்.

இப்போது ஒரு சுவரசீயமான கதையை பார்ப்போம்.

அம்பலவாணனின் நாட்டியத்தை முதலில் கண்டு களித்தவர்களில் பதஞ்சலியும், வியாக்ரபாத முனிவரும் என முன்பே பார்த்தோம் அல்லவா? ஆனால் நந்தி தேவருக்கோ தான் தான் முதலில் கண்டு களித்தவர் என்றதொரு பெருமை இருந்ததாம். இடைவிடாமல் தான் அருகே இருந்து பார்ப்பதாயும் நந்தி தேவருக்குப் பெருமை அதிகமாய் இருந்தது. அதன் காரணமாய்க் கொஞ்சம் கர்வமும் உண்டாயிற்றாம் நந்திதேவருக்கு. வியாக்ரபாதருக்கோ, தான் பூக்களை பறிக்க என இறைவனைக் கேட்டுப் புலிக் கால் வாங்கியதால், புலித் தோலை அரைக்கசைத்த அந்தப் பொன்னார் மேனியனுக்குத் தாமே அருகில் உள்ளோம், மேலும் நமக்கும் இடுப்புக்குக் கீழே புலித்தோலால் ஆன உடலும், கால்களும் இருப்பதால், ஈசனுக்கு இணையாக நர்த்தனம் ஆடலாம் என்றும் நினைத்தாராம். இருவருக்கும் தங்கள், தங்கள் பலம் அதிகம் என்ற நினைப்போடு, பதஞ்சலியிடம் இளக்காரமும் அதிகம் இருந்ததாம்.

அதிலும் பிரதோஷ வேளையில் நந்தியெம்பெருமானின் இரு கொம்புகளுக்கு இடையே ஈசன் ஆடிய ஆட்டத்தை நினைத்து, நினைத்து நந்தி எப்போதும் தன் தலையை ஆட்டிக் கொண்டே வேறே இருந்தாராம். (மாடுங்களெல்லாம் அதான் தலையை ஆட்டுதோ??) இப்படி நந்தி தன் கொம்பை நினைத்துப் பெருமையிலேயும், வியாக்ரபாதர் தன் புலிக் கால்களை நினைத்துப் பெருமையிலேயும் ஆழ்ந்திருந்தனர். ஒருநாள், ஈசன் புதியதொரு நடனமுறையை அறிமுகப் படுத்தப் போவதாய்ச் சொல்லி இருந்தார். அதைக் கண்டு களிக்க தேவாதி தேவர்கள் அனைவரும் கூடி இருந்தனர். கூடவே பதஞ்சலி முனிவர், வியாக்ரபாதருடன் வந்திருந்தார். நந்தியோ தன் மத்தளத்துடன் தயாராக இருந்தார். இவர்களைப் பார்த்தார் நந்தி.

இருவருடனும் ஈசன் சிதம்பரத்தில் ஆடிய ஆனந்தத் தாண்டவத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தார். அப்போது வியாக்ரபாதர் தன்னுடைய புலிக்காலின் மகிமையைப் பற்றிச் சொல்லி, ஈசனைப் போல் தானும் தாளம் தப்பாமல் ஆட வசதியாக இந்தப் புலிக்கால்கள் இருக்கும் என்றும், அந்தக் காரணத்தினால் தானே ஈசனின் நடனத்தை முழுமையாய் ரசித்ததாயும், ஈசனும் அதைப் புரிந்து கொண்டே அவ்வளவு ஆனந்த நடனம் ஆடியதாயும் சொல்ல, நந்தி சிரிக்கின்றார். “புலி, இது என்ன பெரியவிஷயம்?? பிரதோஷ காலத்தில் என்னோட கொம்புகளுக்கு இடையே ஆடறாரே அதைவிடவா? அவர் ஆடி முடிச்சப்புறம் கூட எனக்குக் கண்ணு முன்னாலே அந்த நடனமே தெரியும். சலங்கை ஒலி கேட்டுட்டே இருக்கும். எனக்காகத் தானே அவர் அப்படி ஆடினார்? அதை நினைவு வச்சுட்டுத் தான் அந்த ஜதிக்கேற்றமாதிரி என் தலையைக் கூட ஆட்டிக்கிறேனாக்கும்?” என்று சொன்னார்.
இருவரும் பதஞ்சலியைப் பார்த்து, “உனக்குக் கொம்பும் இல்லை, கால்களும் புலிக் கால்கள் இல்லை, ஆகவே ஈசனின் ஆட்டத்தையும் உன்னால் எங்கே ரசிக்க முடியும்?” என்று கேலியாய்ப் பேசினார்கள். பதஞ்சலியின் முகம் வாட்டம் அடைந்தது.

பதஞ்சலிக்கு முகம் வாட்டம் அடைந்தது. தான் ஆத்மார்த்த அனுபவத்தில் திளைத்து ஈசனின் ஆட்டத்தில் ஒன்றிப் போகவில்லையோ? இவர்கள் சொல்வது தான் சரியோ? ஒரு வேளை புலிக்கால்களும், நந்தியெம்பருமானைப் போல் கொம்புகளும் இருந்தால்தான் நாட்டியத்தை ரசிக்கும் பக்குவம் வருமோ? அப்போது அங்கே ஓங்கார சப்தம் ஒலிக்க ஈசன் வந்தார். கூடி இருக்கும் ரிஷி, முனிவர்களிடையே ஓர் ஓரமாய் ஒதுங்கி நின்று கொண்டிருந்த பதஞ்சலியைக் கிட்டே அழைத்தார் கருணைக் கடலாம் எம்பெருமான். பதஞ்சலி முனிவரைப் பார்த்து, “பதஞ்சலி, இன்று யாம் பாதம் தூக்கி ஆடப் போகும் நடனத்திற்குப் பதம் பாடப் போவது நீயே தான்! உன்னுடைய பதத்துக்குத் தான் நான் ஆடப் போகின்றேன்.” என்று சொல்லவும் பதஞ்சலிக்குக் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகியது.

மேலும் கூறுகின்றார் ஈசன், “பதஞ்சலி, இன்றைய பாடலில் கொம்பும், காலும் வரக் கூடாது!”என்று சொல்லவும் சுற்றி நின்றவர்கள் அனைவரும் திகைத்துப் போகப் பதஞ்சலி முனிவரோ “அப்படியே ஆகட்டும் ஈசனே!” என வணங்கி நின்றார். வியாக்ரபாதரின் முகத்திலும், நந்தி எம்பெருமானின் முகத்திலும் ஈ ஆடவில்லை. பதஞ்சலி பதம் பாட ஆரம்பித்தார். எப்படித் தெரியுமா? கொம்பெழுத்துகளும், துணைக்காலோடு கூடிய எழுத்துகளும் வராதபடிக்கு துதி ஒன்றைப் பாடினார். கெ, பெ, போ, ஆகிய எழுத்துகளில் போடும் ஒற்றைக் கொம்பும், இரட்டைக் கொம்பும், கா, பா, சா, லா, ளா போன்ற எழுத்துகளில் வரும் துணைக்காலும் இல்லாமல் பாடிய அந்த நடராஜர் துதி முழுமையாகக் கிடைப்பதற்காகக் காத்திருந்தேன், கிடைக்கவில்லை. கிடைத்த வரையிலும் கீழே போடுகின்றேன். வேறு யாரிடமாவது இருந்தால் போடலாம்.

“அநந்த நவரத்ன விலசத் கடக கிங்கிணி சலஞ்சல சலஞ்சல அரவம்!
முந்த விதி ஹஸ்தக தமத்தல லய த்வநி திமித்திமி நர்த்தந பதம்!
சகுந்தரத பர்ஹிரத நந்திமுக தந்திமுக ப்ருங்கிரிடிஸங்க நிகடம்!
ஸநந்த ஸநக ப்ரமுக வந்தித பதம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜே!”

இம்மாதிரிக் கொம்பெழுத்தோ, காலெழுத்தோ இல்லாமல் பதஞ்சலி பதம் பாட, பிரம்மாவும், மகாவிஷ்ணுவும் தாளம் போட, நந்தி, தந்திமுகன், ப்ருங்கிமுனிவர், சனகாதிமுனிவர்கள், தேவாதிதேவர்கள் என அனைவரும் கூடி நின்று பார்க்க, சலங்கை “ஜல் ஜல்” என ஒலிக்க ஆனந்த நடனம் ஆடினார் நடராஜன்.

இந்தப் பாடலைச் சாதாரணமாய்ச் சொல்லிப் பார்த்தாலே நடனம் ஆடுவது கண் முன்னே தெரியும்.

இப்போது தஞ்சை பெரிய கோயிலில் இருக்கும் இந்த சுவரோவியங்களை பாருங்கள் . ஆடல் வல்லானின் ஆனந்த கூத்தை கண்டு மெய்மறந்து நிற்கும் புலிக்காலர் மற்றும் பதஞ்சலி

நன்றி : http://aanmiga-payanam.blogspot.com/2007/04/6.html

புல்லரிக்கும் புள்ளமங்கை அர்த்தநாரீஸ்வர கோலம் – திரு சதிஷ் அருண்

இன்றைக்கு நமது குழுவில் ஒரு புதிய நபர் வருகை / சேர்கை – ஒரு கலை ஆர்வலர் – இன்று தன் ரசனையை நம்முடன் முதன்முறையாக பகிர்கிறார். திரு சதிஷ் குமார் அருணாசலம் அவர்கள், தற்போது அமெரிக்காவில் கணிபொறி நிபுணராக பணிபுரயும் இவர் தான் புள்ளமங்கை சென்ற அனுபவத்தை நம்முடன் பகிர்கிறார். இனி திரு சதீஷ் அவர்கள்

இதுவரை விஜய் அவர்களின் படைப்புகளை படித்தவர்களுக்கு, புள்ளமங்கை கோயில் நன்கு பரிச்சயமாகி இருக்கும். புள்ளமங்கை ஒரு கலைப்பெட்டகம். 1000 ஆண்டுகளுக்கு முன் சிற்பிகள் உளியை கொண்டு செதுக்கிய அற்புத ஓவியங்கள். நம் கை விரல்களை அகட்டினால், கட்டை விரல் நுனியிலிருந்து சுண்டு விரல் நுனி வரை உள்ள அளவில் பல அற்புத சிற்பங்களை தன்னகத்தே கொண்டுள்ள புள்ளமங்கை கோயில் பார்க்கப் பார்க்க திகட்டாதது.

புள்ளமங்கையை நினைவுக்கு கொண்டுவர – கீழே உள்ளவரை நீங்கள் ஏற்கனவே பார்த்திருப்பீர்கள்.

இங்குள்ள கை அளவு சிற்பங்கள் சிறப்பு மிக்கவை என்றாலும், இந்த தரவில் விமானத்தின் மீதுள்ள ஒரு அழகோவியத்தைப் பார்ப்போம்.

தாயே மூகாம்பிகே என்ற படத்தில் இளையராஜா அவர்கள் பாடிய ஜனனி ஜனனி பாடல், எனக்கு மட்டும் அல்ல, அனைவருக்கும் மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று. அதில் வரும் வரிகள் –

“சதுர்வேதங்களும், பஞ்ச பூதங்களும், ஷண்மார்க்கங்களும், சப்த தீர்த்தங்களும், கொண்ட நாயகனின், குளிர் தேகத்திலே, நின்ற நாயகியே, இட பாகத்திலே.”

திருஞானசம்பந்தர், திருச்சிராப்பள்ளியில் அருளிய பதிகத்தில்,

“நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளே
றொன்றுடையானை யுமையொருபாக முடையானைச்
சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்
குன்றுடையானைக் கூறவென்னுள்ளங் குளிரும்மே” (தேவரம் 1.98.1)

(நன்மைகளையே தனக்கு உடைமையாகக் கொண்டவனை, தீயது ஒன்றேனும் இல்லாதவனை, மிக வெண்மையான ஆனேற்றைத் தனக்கு ஊர்தியாகக் கொண்டவனை, பார்வதியை ஒரு பாகமாக உடையவனை, அவனது அருளாலன்றிச் சென்றடைய முடியாத வீடுபேறாகிய செல்வத்தை உடையவனை, சிராப்பள்ளிக் குன்றில் எழுந்தருளி யுள்ளவனைப் போற்ற என் உள்ளம் குளிரும். – நன்றி – www.thevaaram.org)

என்றும்,

அப்பர், திருகோடிகாவில் ஈசனை,

“பூணர வாரத் தானே புலியுரி யரையி னானே
காணில்வெண் கோவ ணம்முங் கையிலோர் கபால மேந்தி
ஊணுமோர் பிச்சை யானே யுமையொரு பாகத் தானே
கோணல்வெண் பிறையி னானே கோடிகா வுடைய கோவே” (4.51.5)

(கோடிகா உடைய தலைவன், வளைந்த பாம்பை மாலையாகப் பூண்டு புலித்தோலை இடையில் உடுத்து வெண்கோவணம் தரித்து, கையில் மண்டையோட்டை ஏந்தி, தாருகாவனத்துப் பெண்களைத் திருத்த உணவு கேட்டு பிச்சாண்டியாய் – பிச்சாண்டிவந்தவனை பார்வதிபாகனாய் குறுகிய வெள்ளிய பிறையைச் சூடியவனாய் உள்ளான். நன்றி – www.thevaaram.org )

என்றும் பாடுகிறார்கள். இப்படி பலரும் பாடிய ஈசனின், ஒரு அழகிய கோலத்தைத்தான் இப்பொழுது நாம் பார்க்கப் போகிறோம்.

என்ன கோலம் என்று ஊகித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். ஆம், அர்த்தநாரீஸ்வரன் என்றும், அம்மையப்பன் என்றும், உமை ஒரு பாகன் என்றும், பல பெயர்களில் அழைக்கப்படும் கோலம்தான் அது.

ஒரு பாதி ஆண், மறு பாதி பெண் என்று தன் உடம்பில் சரி பாதியை உமைக்கு கொடுத்த ஈசனின் கோலம்தான் உமை ஒரு பாகன். இதன் புராணத்தை அறிய, இந்த சுட்டியை பாருங்கள்

இப்பொழுது, சிற்பத்தைப் பார்ப்போம்.


இடது பக்கம் பார்த்தால், பெண்மையின் மிளிர்வு.

வலது புறம் பார்தால், ஆண்மையின் கம்பீரம். ஒரே முகத்தில், இப்படி பெண்மையையும், ஆண்மையையும் ஒரு சேர கொணர்ந்த அந்த சிற்பியை என்னவென்று பாராட்டுவது?

டாக்டர் கலைக்கோவன் அவர்கள், ‘சோழ சிற்பிகள், உடல் கூறுகளை
(anatomy) நன்கு அறிந்தவர்கள்’ என கூறக்கேட்டிருக்கிறேன். இந்த சிற்பமும் அதற்கு சான்று.

அம்மையின் சிற்றிடையும், ஒய்யாரமாய் நிற்கும் பாங்கும், அப்பனின் திண்தோள்களும், கம்பீரமாய் ரிஷபத்தில் மீது சாய்ந்திருக்கும் கோலமும் ஒருங்கே நம் கண் முன் கொண்டு வந்த சிற்பி மறைந்த பின்னும், அவன் விட்டு சென்ற கலைப்பொக்கிஷம் இன்றும் நம் கண்களுக்கு விருந்தளிக்கிறது.

இந்த கலைப்பெட்டகத்தை வரலாறு (www.varalaaru.com) குழுமத்துடன் பார்க்கும் அரிய வாய்ப்பு எனக்கு கிட்டியது. விமானத்தின் மீது ஏறி அர்த்தநாரீஸ்வரனை பார்க்க, அங்கு இருந்த ஒரு கோயில் பெரியவர் ஏணி தந்து உதவினார். அவரே, நாங்கள் சிற்பங்களை ஆவலாய் பார்ப்ப்தை கவனித்துவிட்டு, விமானத்தின் மீதுள்ள சிற்பத்தை பார்க்க ஏணி கொண்டு வந்து கொடுத்தார். இருட்டும் வரை பார்த்து மகிழ்ந்துவிட்டு, இரயிலுக்கு நேரமாகிவிட்டதால் புறப்படும் பொழுது, அவருக்கு மனமார நன்றி கூறிவிட்டு அவரிடம் அவர் பெயரைக் கேட்டோம். அவர் பெயர் ஏற்படுத்திய புல்லரிப்பு, இரவு இரயில் புறப்பட்ட பின்பும் குறைய வில்லை. ஏனெனில் அவ்ர் தன் பெயர் ‘அம்மையப்பன்’ என்று கூறினார்.