தஞ்சை பெரிய கோயில் விமான நந்தி, அதன் அளவு – ஒரு அலசல்

தஞ்சை பெரிய கோயிலை பற்றி பல செய்திகள் பின்னர் கிடைத்த ஆவணங்களின் மூலம் தெளிவு பெற்று உள்ளன – அதன் விமானத்தின் நிழல் தரையில் விழாது ( விழுகிறது – தினமும் ), அதன் மேல் இருப்பது XX எடை கொண்ட ஒரே கல் ( அது ஒரே கல் அல்ல ) , ராஜ ராஜனுக்கு வந்த நோய் தீரவே அவன் பெரிய கோயிலை நிறுவினான் – என்று பல தவறான கருத்துகளை அண்மைய ஆய்வுகள் தெளிவு பெற உதவி உள்ளன.

பெரிய கோயிலை பற்றிய முதல் காணல் மடலில் நான் இந்த அருமையான இணைய தளத்தில் உள்ள ஒரு படத்தை விவாதம் செய்தேன்

http://www.kumbakonam.info/kumbakonam/thanjavur/images/arcpho/arph31.jpg

இதோ அந்த படம் – பெரிய கோயில் விமானத்தின் மேல் உள்ள நந்தியின் அளவை கீழே உள்ள பிரகாரத்தில் உள்ள நந்தியின் அளவை கொண்டு விளக்க ஒரு முயற்சி. இது சரியா ?

இந்த கேள்விக்கு பதில் தேட – திரு குடவாயில் பாலசுப்பிரமணியம ஐயா அவரை அணுகிய பொது – இந்த படங்களை தந்து உதவினார் ( அவரை இதுவரை நேரில் பார்க்காதவர்களுக்கு அவரை படத்தில் பார்க்கும் ஒரு வாய்ப்பு ) . மேலும் பொன்னியின் செல்வன் குழும நண்பர் திரு ஸ்ரீராம் அவர்களும் பல படங்களை தந்து உதவினார்.

முதலில் கீழே இருக்கும் நந்தியை பார்போம். அருகில் நிற்பது திரு பாலு ஐயா. இந்த நந்தி ராஜ ராஜன் முதலில் நிறுவிய சிற்பம். நாயக்கர் காலத்தில் அதனை மாற்றி , இங்கே கொண்டு வந்துள்ளனர். இப்போது உள்ள நந்தியும் அவர்கள் நிருவியதே. எதனால் இவ்வாறு செய்தார்கள் ? ஒருவேளை மாலிக் கபூர் சூறையாடல் பொது நேர்ந்த சேதம் காரணமோ ?

இப்போது விமானத்தின் மேல் உள்ள நந்தி வரிசை – அதன் அளவை நாம் எப்படி அளப்பது – அதற்கும் திரு பாலு ஐயாவின் படம் இதோ – பெரிய கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்ற பொது எடுத்த படம்.

சாரத்தில் நமக்கு என்றே மனிதர்கள் – அவர்களை கொண்டு நாம் நந்தியின் அளவை அலசுவோம்.

இதன் படி பார்த்தல் கீழே இருக்கும் நந்தி – மேல் உள்ள நந்தியை விட அளவில் பெரியது – அதன் வடிவமும் வேறு பாணியில் உள்ளது.

எனினும் இதனை கொண்டு பெரிய கோயில் விமானத்தின் பிரம்மாண்டமான அளவை நாம் தெரிந்துக்கொண்டோம் – மீண்டும் ஒரு முறை தொலைவில் இருந்து அருகில் சென்று இந்த அற்புத சோழ படைப்பை கண்டு ரசிப்போம்.
14091332144513461423
143228832868

காமனை எரிக்கும் ஈசன் – தஞ்சை பெரிய கோயில்

இன்று மீண்டும் சில அற்புதமான தஞ்சை பெரியகோவில் சிற்பங்களை காண்போம் – காமதேவனை எரித்த கயிலை சிவன் ( திரு சதீஷ் அவர்கள் படம் எடுக்க மட்டும் அல்ல நல்ல தமிழ் ஆற்றல் உடையவர் என்று இன்றுதான் அறிந்தேன் – இதோ அவரது படங்கள் மற்றும் வர்ணனை )

முதலில் காமதேவனை பற்றிய சில குறிப்புகள் – மன்மதன், உருவிலாளன், கருப்புவில்லி, கரும்பன், நாரன், புட்பரசன், மகரக்கொடியோன், மதனன், மாரன், மான்மகன், வசந்தன், வேனிலான் என்று பல பெயர்களில் அழைக்கப்படும் காமதேவன் தேவர்கள் யாவரிலும் அழகு மிகுந்தவன். காதல் தெய்வமான, மகரக்கொடியுடைய மன்மதனின் ஆயுதங்கள் என்னவோ ரீங்காரமிடும் வண்டுகளை நாண்களாக உடைய கரும்பாலாகிய வில்லும், ஐந்து மலரினாலாகிய அம்புகளும்தான், இவன் தன் ஆயுதங்கள் மெலிதாயினும் அதன் வலிமையோ வெல்வதற்கரிது. தன் மனைவி ரதியோடு வாகனமாகிய கிளியில் அமர்ந்து, தென்றலாகிய தேரில் வலம் வரும்பொழுது, தென்படுவோர் யாவரும் தென்றலால் மனம் இளக, ரதி தேவி இச்சையை உண்டாக்க, காம பாணத்தை செலுத்துவார் காமதேவன், இதில் வீழ்ந்தோர் தப்பித்ததில்லை.

(சில மாதங்களுக்கு முன் அகத்தியர் குழுமத்தில் திரு. K. Shrikanth அவர்கள் எழுதிய காமபாணத்தை பற்றிய கட்டுரையில் இருந்து சில தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.) பஞ்சபாணம் எனப்படும் மன்மதனின் பாணம், தாமரை, அசோகம், மாம்பூ, முல்லை மற்றும் குவளை (நீலோத்பலம்) மலர்களால் ஆனவை. இந்த ஐந்து மலர்கணைகளையும் உடம்பின் வெவ்வேறு பாகங்களில் செலுத்த உண்டாகும் விளைவுகளும் ஐந்துவகை. மார்பைத் தாக்கும் தாமரை உன்மத்தம் எனும் போதையைத் தர, மெல்லிய உதடுகளை தாக்கும் அசோகம் தன் துணையை நினைத்து ஏங்கி புலம்பச் செய்ய, முல்லையோ கண்களைத் தாக்கி உறக்கத்தை கெடுக்க, மாம்பூவோ தலையை தடவி காதல் பித்து கொள்ளச் செய்ய, முடிவில் நீலோத்பலம் எனும் குவளை மலர்க்கணை விரகதாபத்தின் உச்சிக்கே அழைத்துச் சென்று உணர்விழக்கச் செய்யும்.

(காண்க: http://manoranjitam.wordpress.com/2008/01/21/legend-of-kaama/)

காமனின் அறிமுகம் போதும், இனி நம் கதைக்கு வருவோம்.

இந்த கதையும் சிற்பங்களும் நாம் முன்னே கண்ட தக்ஷன் தலையக் கொய்த ஈசன் கதையின் தொடர்ச்சியாகவே வருகிறது. தன் மணாளனான மகேசனுக்கு யாகத்தின் பொழுது சேரவேண்டிய அவிர்பாகத்தை தராமலும் தன்னை மகள் என்றும் பாராமல் தட்சனால் தானும் தன் மணாளனும் அவமானப்பட்டதை தாங்க முடியாமல் தாட்சாயணி யாகாக்கினியில் தன் உயிரை மாய்த்துக்கொள்கிறாள். இதனால் மனமுடைந்த ஈசன் சக்தியில்லையேல் சிவமில்லை என நினைத்து யோகத்தில் ஆழ்ந்து விடுகிறார்.

அழிக்கும் கடவுளாகிய பரமசிவன் தவத்தில் ஆழ்ந்துவிட்டதால் தீயசக்திகளின் கொட்டத்தை கேட்கவா வேண்டும். இந்த சமயத்தில் தாரகாசூரன் எனும் அசுரன் பற்பல ஆண்டுகளாக பிரம்மனை நோக்கி கடுந்தவம் செய்தான். அவனது தவத்தின் உறுதியை கண்ட பிரம்மன் வேறுவழியின்றி அவன் முன் தோன்ற, வழக்கம்போல் சாகாவரம் கோரினான் அசுரன். பிரம்மன் மறுக்கவே சிவனின் ஆழ்ந்த தவத்தையும் சக்தியின் மறைவையும் அறிந்திருந்த அசுரன் புத்திசாலித்தனமாக (அல்லது அவ்வாறு நினைத்துக் கொண்டு) சிவனின் குமாரனைத் தவிர வேறு யாராலும் தனக்கு எந்தவித துன்பமும் நேரக்கூடாது எனக்கோரி வரத்தைப் பெறுகிறான்.

வரம்பெற்ற அசுரனின் நடவடிக்கைகள் வரம்பு மீறுகிறது, அனைத்து உலகங்களையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து தேவர்களையும், முனிவர்களையும், மக்களையும் கொடுமைப் படுத்தி துன்பத்தில் ஆழ்த்திவிட்டான். தேவர்கள் யாவரையும் ஒருவர் பின் ஒருவராக வெற்றி கொண்டு அவர்களிடம் உள்ள பெறுதற்கரிய பொக்கிஷங்களை பிடுங்கிக் கொண்டு அவர்களை சிறைப்படுத்தினான். அமிர்தமதனத்தின் பொழுது கிடைத்த ஐராவதம், உச்சைசிரவம் முதலியவற்றை இந்திரனிடம் இருந்தும், கேட்டதெயெல்லாம் கொடுக்கும் காமதேனு பசுவை ஜமதாக்கினி முனிவரிடம் இருந்தும், குபேரனின் அரிய ஆயிரம் குதிரைகளையும் பிடுங்கிக் கொண்டதோடல்லாமல், வாயுவையும் தன் விருப்பத்திற்கு ஆட்டி வைத்தான். சூரிய வெப்பத்தை அடக்கி குளிர்ந்த சந்திரனையே எப்பொழுதும் பிரகாசிக்கச் செய்தான். இவன் கொடுமைகளை தாங்க இயலாமல் தேவர்கள் அனைவரும் தங்கள் உல்லாச அரண்மனைகளை துறந்து கானகங்களில் ஒளிந்து திரிந்து வாழ்ந்துவந்தார்கள்.

அசுரனுக்கு பயந்து மறைந்து வாழ்ந்த தேவர்கள் ஒன்றுகூடி அசுரனை அழிக்க ஆலோசித்தனர், அந்த நேரத்தில் அனைவரும் ஒட்டுமொத்தமாக அசுரனுக்கு வரமளித்த பிரம்மனை நிந்தித்தனர். தேவர்களின் துன்பத்தை கண்ட பிரம்மன், தான் அளித்த வரத்தில் உள்ள சூட்சுமத்தை தேவர்களுக்கு எடுத்துரைத்தார். ஆழ்ந்த தவத்தில் இருக்கும் ஈசனின் தவத்தை கலைப்பது எவ்வாறு என்று தேவர்கள் ஆலோசனையில் இறங்கினர்.

இதற்கிடையே பிள்ளைபேறு வேண்டிய இமவானின் தவத்திற்கிணங்கி, உமையாள் “பார்வதி” என்ற பெயருடன் இமவான், மனோரமா தம்பதிகளின் மகளாக பிறந்து வளர்ந்து வருகிறாள். ஈடிணையில்லாத அழகியாக வளர்ந்த பார்வதி பருவமடைந்தவுடன் தன் உண்மை நிலை அறிந்து மகேசனிடம் மனதை செலுத்தி தவம் மேற்கொள்கிறாள்.

இதனை உணர்ந்த இந்திரன் முதலானோர் மன்மதனை அழைத்து தங்கள் கோரிக்கையை வைத்து இறைஞ்ச காமதேவன் பயத்துடனும், தயக்கத்துடனும் ஏற்றுக்கொள்கிறான். இதனை தொடர்ந்து சகல ஆயத்தங்களுடன் கயிலையை நோக்கி பயனிக்கிறான். கவலையினாலும் சினத்தாலும் மோனத்தில் இருந்த பவளமேனியானின் வண்ணம் நெருப்புக் கனலாகத் தெரியவும், கயிலையில் சகலமும் ஒடுங்கி நிசப்தமாயிருப்பதைக் கண்டும் செய்வதறியாது பல காலம் திகைத்து நின்றான்.

இப்படி செய்வதறியாது நின்ற காமனின் கண்களில் தன் உள்ளம் கவர்ந்த நாயகனின் ஆராதனைக்காக மலர்கள் பறிக்க வந்த பார்வதி தேவி கண்ணில் பட, இதுதான் தக்க சமயமென நினைத்து தன் மலர்கணையை நாணேற்றிவிட அதுவும் குறி தவறாமல் மகேசனின் மார்பை ஸ்பரிசித்தது. கோபாக்கினி ஒளிர திடுக்கிட்டு தவம் கலைந்த கையிலைநாதனின் கண்களில் மலர்கள் பறித்துக் கொண்டிருந்த கனிவான, அழகு மிளிரும் பார்வதி தேவியின் முகம் தெரிய அவரது மனம் கனிந்தது. அடுத்த கணமே தவம் களைய காரணமான மன்மதன் அவர் கண்களில் தெரிய கோபத்தில் நெற்றிக்கண் திறந்து காமதேவன் சாம்பலானான்.

இதனைக் கண்ட ரதி தேவி அழுது புரண்டு இறைவனை வேண்ட பரமனும் மனம் இளகி காமதேவனுக்கு அருவுருவ (சூட்சும) உடலளித்து அவன் ரதியின் கண்களுக்கு மட்டும் தெரிவான், உண்மை காதலின், அன்பின் உருவமாய் இருப்பான் என்று அருள் செய்தார்.

இதன்பிறகு முருகன் (கந்தன்) பிறந்து கொடிய அசுரர்களை அழித்து தேவர்களை காத்த கதையை நாமறிவோம். (காளிதாசனின் குமார சம்பவத்தில் இந்தக் கதை மிகவும் அழகாக விவரிக்கப்பட்டுள்ளது)

சற்றே நீளமான பதிவாயினும் சுவாரசியமானதல்லவா, இனி சிற்பங்களை காண்போம்.

முதலாவதாக முழு சிற்பத் தொகுதிகளையும் பார்க்கலாம், மேற்பாக முதல் வரிசையில் சிவயோகிகள் இருக்க, கீழே கடைசி வரிசையில் பயபக்தியுடன் சிவகணங்கள் இருக்க, மொத்த கதையும் மூன்று காட்சிகளில் விளக்கப்பட்டுள்ளது.

முதல் காட்சி, ஆழ்ந்த தவத்தில் இருக்கும் சிவன், மிகச் சிறிய சிற்பமாயினும் சிவனின் கண்கள் மூடியுள்ளதை மிக நுணுக்கமாக வடித்துள்ள சிற்பியின் கலைத்திறனை கட்டாயம் பாராட்ட வேண்டும். வசீகர காமவேந்தன் மலர்க்கணையை சிவனை நோக்கி குறிவைக்கிறான். (காமதேவனின் இதழ்களில் புன்சிரிப்பு தெரிகிறதா? சற்றே கூர்ந்து கவனியுங்கள்!)

இரண்டாவது காட்சியில் முதலில் வருவது, வீழும் காமன், அழுது புலம்பும் ரதி. அடுத்த சிற்பம் சற்றே சிதைந்திருந்தாலும் வீழும் காமனை அழகாய் காட்டுகிறது. தலையில் அடித்துக் கொண்டு அழும் ரதியையும் பாருங்கள். (தென்னிந்தியாவின் துக்க வீடுகளில் இது போன்ற காட்சிகளை காணலாம்)

முடிவாக, இரண்டாவது காட்சியின் வலப்புறம் காண்பது பயபக்தியுடன் மீண்டெழுந்த மன்மதனும் மகிழ்ச்சியில் திளைக்கும் ரதியும் சிவனிடம் ஆசிபெறுகிறார்கள், பூதகணங்களும் சூழ்ந்திருக்கின்றன.

இதை காணும்பொழுது கம்போடியாவிலுள்ள பண்டியா ஸ்ரெய் காம்ப்ளக்ஸில் உள்ள இதே போன்ற சிற்பங்களை நினைவுபடுத்துகிறது. இந்த சிற்பங்களை பிறகு தனிப் பதிவில் பார்க்கலாம்.

பன்னிரு திருமுறை குறிப்பு – இதோ ( நன்றி திரு வி. சுப்பிரமணியன் ஐயா அவர்கள் )

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=4&Song_idField=41030&padhi=103&startLimit=3&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC


தூமென் மலர்க்கணை கோத்துத்தீ வேள்வி தொழிற்படுத்த
காமன் பொடிபடக் காய்ந்த கடனாகைக் காரோணநின்
நாமம் பரவி நமச்சிவாய வென்னும் மஞ்செழுத்தும்
சாமன் றுரைக்கத் தருதிகண் டாயெங்கள் சங்கரனே

தூய மெல்லிய பூக்களாகிய அம்புகளைக் கோத்துக் காமாக்கினியை வளர்க்க முற்பட்ட மன்மதன் சாம்பலாகுமாறு கோபித்த கடல்நாகைக் காரோணனே ! எங்கள் சங்கரனே ! உன் திருப் பெயரை முன்நின்று துதித்து நமசிவாய என்ற திருவைந்தெழுத்தையும் அடியேன் உயிர்போகும் பொழுது சொல்லும் பேற்றினை நல்கு வாயாக.

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1228&padhi=72&startLimit=476&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

அடியாராம் இமையவர்தங் கூட்டம் உய்ய
அலைகடல்வாய் நஞ்சுண்ட அமுதே செங்கண்
நெடியானும் நான்முகனுங் காணாக் கோல
நீலவிட அரவணிந்த நிமலாவெந்து
பொடியான காமன்உயிர் இரதி வேண்டப்
புரிந்தளித்த புண்ணியனே பொங்கர் வாசக்
கடியாரும் மலர்ச்சோலை மருங்கு சூழும்
கவின்மருகற் பெருமானே காவாய் என்றும்.

`அடியவர்களாகிய தேவர்களின் கூட்டம் முழுதும் உய்யும் பொருட்டாய் அலைபொருந்திய பாற்கடலினி டத்துத் தோன்றிய நஞ்சையுண்டருளிய அமுதமே! சிவந்த கண் களையுடைய நீண்ட திருமாலும் நான்கு முகங்களையுடைய நான்முக னும் காணாத கோலம் உடைய நீலநிறமுடைய நச்சுப் பாம்புகளை அணியாய் அணிந்த விமலனே! வெந்து சாம்பலாகிவிட்ட காமனின் உயிரை அவன் மனைவியான இரதியின் வேண்டுதலுக்கு இணங்க மீண்டும் அளித்த புண்ணியனே! மலர்களின் மணம் மிக்க சோலைகள் எங்கும் சூழவுள்ள அழகுடைய திருமருகலில் வீற்றிருக்கும் இறை வனே! காப்பாயாக!’ என்று கூறியவள் பின்னும்,

வள்ளி திருமணம் – சோழர் சிற்பம்

திரு ஸ்ரீனிவாசன் அவர்கள் சென்ற மடலில் மிக அழகான கேள்வியை எழுப்பினார் . திரு சதீஷ் உதவியுடன் அதே தஞ்சை பெரிய கோவில் சோழர் கால வள்ளி திருமணம் சிற்பம் இப்போது பார்போம் .

சிற்பத்தின் அளவை குறிக்க தண்ணீர் குடுவை ( பாட்டில்) ஒன்றை அருகில் வைத்தோம்.

சிற்பம் சற்று சிதைந்து உள்ளது – அதுவும் முழு கதையை விளக்குமாறு இல்லை. சரி, மேல் இருந்து வருவோம். முதலில் பரண் மீது அமர்ந்திருக்கும் வள்ளியை வம்புக்கு இழுக்கும் கிழவனார். ( கையில் குடை ஏந்தி நிற்க்கும் வேஷதாரி முருகன் )

அடுத்து முருகன் தன் சுய உருவில், தமையன் யானையாக ( யானை குட்டி போல உள்ளது சிற்பம் ) வந்து வள்ளியயை பயமுறுத்தும் கணேசன். ( வள்ளி சிரத்தில் கை வைத்து வணக்கம் கூறும் வண்ணம் உள்ளது ??)

முடிவில் – யானையின் ( இப்போது பெரிய யானை ) மேலே திரும்பி செல்லும் முருகன், வள்ளியோ இரு கைதூக்கி வணங்கும் வண்ணம் உள்ளது சிற்பம்.

அடியில் வள்ளியின் வேடர் குலத்தவர் அணிவகுப்பு. .


அடுத்து இருக்கும் சிற்பம் – மேலே ஒரு பக்தன் மரத்தின் அடியில் , அடுத்து முருகன் நிற்கும் கோலம் அருகில் குடையின் அடியில் அமர்ந்திருக்கும் தேவசேனை ? , முடிவில் முருகன் வள்ளி தேவசெனையுடன் – கீழே மயில் வாகனம். மிக அருமையான சிற்பம்.

எமன் ரொம்ப பொல்லாதவன் விடமாட்டான், சாம்பசிவ பக்தன் என்றால் தொடமாட்டான்

இன்று மீண்டும் திரு சதீஷ் அவர்களின் உதவியால், தஞ்சை பெரிய கோவிலிலுள்ள, எனக்கு மிகவும் பிடித்த சிற்பத்தின் அற்புத புகைப்படம் கிடைத்துள்ளது.

காரணம்? சிறு வயதில் என்னை உறங்க வைக்க என் தந்தையார் எனக்கு இந்த கதையை பாட்டாக படிப்பார். இன்றும் நினைவில் உள்ளது. என் மகனும் இந்த பாட்டைகேட்டால் தூங்கிவிடுவான்

எமன் ரொம்ப பொல்லாதவன் விடமாட்டான்
சாம்ப சிவா பக்தன் என்றால் தொடமாட்டான்
சிவ சிவ சிவ என்ற நாமம் சொல்லடா
மானுடனே உனக்கிதில் பாரம் என்னடா

மார்க்கண்டேயனின் கதை நாம் அனைவரும் அறிந்ததே. ம்ருகண்டு முனிவரும் அவரது துணைவி மருடவதி பிள்ளைப் பேறு வேண்டி கடுந்தவம் புரிந்தனர். தவத்தின் பயனாக அவர்கள் முன் தோன்றிய சிவபெருமான், ,” அறிவிலர்களாய் நூறு பிள்ளைகள், இல்லையேல் அறிவு ஜீவியாய் பதினாறே ஆண்டுகளே ஆயுள் உள்ள மகன், இதில் ஒன்றை தேர்ந்து எடு்ப்பீர்களாக,” என்றார். எதிர்பார்த்தபடியே அறிவில் சிறந்த பிள்ளையை அவர்கள் வேண்ட அவ்வாறே ஒரு மகனை அவர்கள் பெறுகின்றனர். மார்கண்டேயன் என்று பெயர் சூட்டி, அன்பும், அறமும் திகழ வளர்கிறது குழந்தை.

பாலகன் பதினாறு வயதை நெருங்க நெருங்க, பெற்ற மனங்கள் பதறுகின்றன. பெற்றோரின் கவலை முகங்கள் கண்டு துளைத்துத் துளைத்துச் சிறுவன் வினவ,அவர்களும் தங்கள் தவப்பயனாக அவன் பிறந்தாலும், அதிலுள்ள நிபந்தனையான 16 வயதில் மரணமெனும் செய்தியையும் கூறி அழுகின்றனர். காலனின் ஈசனே தனக்கு நித்திய பூஜா மூர்த்தியாய் இருக்கையில், மரணம் தன்னை நெருங்காது எனும் தீர்க்க முடிவோடு, மார்க்கண்டேயன் தினந்தோறும் சிவ லிங்க பூஜையில் ஈடுபடுகிறான். அவ்வாறே, குறிப்பிட்ட நாள் வருகையில், எமன் தனது பாசக் கயிற்றை வீச தக்க தருணத்தை எதிர் நோகியுள்ளான்.

மார்க்கண்டேயனோ, எமனுக்கு அஞ்சி ஓடி, சிவலிங்கத்தை ஆலிங்கனம் செய்தவாறு உயிர் பிச்சைக்கான பூசையிலுள்ளான்! காலம், காலன் இரண்டும் நிற்காதல்லவா? பொறுமை இழந்த எமன் தன் பாசக்கயிற்றை மார்க்கண்டேயனை நோக்கி வீசுகையில், சிவலிங்கத்திலும் சேர்ந்தே விழுகிறது. தன் பக்தன் தன்னை ஆலிங்கனம் செய்து பூசை செய்வதைக் கூட மதியாமல், தன் பணியை செய்த (!) எமனின் செயலால் கோபம் கொண்ட சிவன், லிங்கத்திலிருந்து வெளிப்பட்டு, காலால் காலனை எட்டி உதைக்கிறார். ஆனால், காலன் தனது பணியைச் செய்வதையே சிவனாரே தடுத்த மாதிரி ஆகிவிடுமல்லவா? எனவே, மார்க்கண்டேயனின் ஆயுள் ‘என்றும் பதினாறு’ என்ற அரிய வரம் தந்து அருள்கிறார்.

இதுவே கதை – இப்போது சிற்பம். மூன்று காட்சிகள் – மேல் இருந்து கீழ்.
முதல் காட்சி:

காலன் மார்கண்டேயனை துரத்தி வர, அவன் சிவ லிங்கத்தை கட்டிக்கொண்டு இருப்பது போல அற்புதமான சிற்பம்.

அடுத்து, ஈசன் காலனை உதைத்து கீழே விழும் எமன். ( ஒரு வருடம் முன்னர் நண்பர் ஸ்ரீவத்சன் எடுத்த படத்தையும், இப்போது சதீஷ் எடுத்த படத்துடன் ஒப்பிட்டிப் பாருங்கள் – ஈசன் கையில் இருக்கும் சூலம் – இப்போது முழுவதுமாக சிதைந்து விட்டது !!!)

கடைசி காட்சி – சாகா வரம் பெற்ற மார்கண்டேயன் தன் இரு கை கூப்பி ஈசனை வணங்குகிறான்

இதோ அப்பர் இந்த கதையை அற்புதமாக பாடியிருக்கும் தேவாரம்:

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=4&Song_idField=4107&padhi=113+&button=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95

மருட்டுயர் தீரவன் றர்ச்சித்த மாணிமார்க் கண்டேயற்காய்
இருட்டிய மேனி வளைவா ளெயிற்றெரி போலுங்குஞ்சிச்
சுருட்டிய நாவில்வெங் கூற்றம் பதைப்ப வுதைத்துங்ஙனே
உருட்டிய சேவடி யான்கட வூருறை யுத்தமனே

தன்னை மயக்கிய யமபயமாகிய துன்பம் தீருமாறு அக்காலத்தில் அர்ச்சித்த பிரமசாரியான மார்க்கண்டேயனுக்காகக் கரிய உடம்பு, வளைந்த ஒளி பொருந்திய பற்கள் தீயைப் போன்ற சிவந்த மயிர்முடி, மடித்த நா இவற்றை உடைய கொடிய கூற்றுவன் உடல் நடுங்குமாறு அவனை உதைத்து அவ்விடத்திலே அவனை உருளச்செய்த சிவந்த திருவடிகளை உடையவன் திருக்கடவூரில் உகந்தருளி உறைகின்ற உத்தமனாகிய சிவபெருமான் ஆவான்.

தக்ஷன் தலையை கொய்த ஈசன் – தஞ்சை பெரிய கோயில்

நண்பர் சதீஷ் குமார் அவர்கள் சென்ற வாரம் தஞ்சை செல்லும் பொது – வழக்கம் போல படங்கள் எடுத்து வருமாறு கேட்டேன் . அவரும் அருமையான பல படங்களை எடுத்து வந்துள்ளார் . அதில் ஒன்றை இன்று பார்ப்போம். முதலில் கதை !!

தக்ஷன் வரலாறு

தக்ஷன் எனும் அரசன் முற்பிறவியில் செய்த தவத்தின் பயனாக பார்வதி தேவி அவரின் மகளாகப் பிறக்க அவளை சிவனுக்கு மணம் முடிக்க தேவர்கள் தக்ஷனிடம் பெண் கேட்டு வருகையில் ஆணவத்தால் அறிவிழந்த தக்ஷன் சிவபெருமான் தனது காலில் விழுந்து வணங்க வேண்டும் என்று வேண்டவே சிவபெருமான் பார்வதியைச் சிறை எடுத்துச் சென்று மணம் புரிந்து கொண்டார். அவன் விருப்பத்துக்கு மாறாக அவன் மகள் தாக்ஷாயிணியை சிவன் மணந்து கொண்டதால், வேண்டும் என்றே தக்ஷன் ஒரு மகா வேள்வி நடத்த எத்தனித்து, அதற்கு தன் மாப்பிள்ளையை அழைக்காமல் அவமானம் செய்தான்.

அந்த வேள்வியைக் காண தான் செல்ல வேண்டுமெனப் பரமேஸ்வரனிடம் அனுமதி கேட்டாள் மலைமகள். பரமேஸ்வரன் அந்த நேரத்தில் தியானத்தினால் ஆலோசித்து, “இந்த வேள்வியில் என்னுடைய அம்சமாக உள்ள ருத்திரனுக்கு ஹவிர் பாகம் இல்லாமல் இந்த யாகம் நடத்த உள்ளனர். ஆகவே, என்னை அவமதிப்பதற்காகவே இந்த யாகம் நடத்தப்படுவதால் நீ செல்ல வேண்டாம்”, என்று சொல்கிறார்.

ஆனால் தந்தை பாசம் கண்ணை மறைக்க அழையா விருந்தாளியாக தாக்ஷாயிணி அங்கே போனாள். தக்ஷன் வேள்விக்கான ஏற்பாடுகளைச் செய்து வேள்வியைத் தொடங்குகிறான். தாக்ஷர்யணியை எவரும் விசேஷமாகக் கவனிக்கவில்லை. சிவனுக்கு நடந்த அவமானங்களை கண்டு சகிக்க முடியாமல் அங்கேயே மறைந்து போனாள்.

அப்பொழுது, பரமேஸ்வரனுக்கு விவரம் தெரிந்து, கோபத்தில் தக்ஷ்ன் தலையைக் கொய்து – அதனை வேள்வி தீயினிலே இட்டு எரிக்கிறான் ஈசன். இதை காணும் அனைவரும் அஞ்சி நடுங்குகின்றனர்.

பின்னர், பிரம்மன் ( தக்ஷனின் தந்தை ) ஈசனிடம் சென்று வேண்டிய்தின் பெயரில் , வெட்டப்பட்ட தலைக்கு பதில் ஒரு ஆட்டின் தலையை வைத்து உயிர் பெறுகிறான் தக்ஷன்.
இவற்றை பெரிய கோவில் படிகளின் கைப்பிடியில் செதுக்கி உள்ள அழகு சிற்பங்கள்.. அருமை. ஒவ்வொன்றாக பார்ப்போம்.

முதலில் இது இருக்கும் இடம் ( நண்பர் சதீஷ் அருமையாக படம் எடுத்துள்ளார் ) – நமக்கு சிற்பத்தின் அளவை விளக்க ஒரு பேனாவை வைத்து படங்களை பிடித்துள்ளார். கதையை விளக்க சிற்பங்களை பாருங்கள்.இரு பக்கமாக காட்சிகள் நகருகின்றன – ஒரு பக்கம் தக்ஷன் தலை கொய்தல் . மற்றொறு பக்கம் அவனுக்கு ஆட்டின் தலையை பொருத்துதல் .


முதல் தலை கொய்தல் – முனிவர்கள் அனைவரும் கூடி நிற்கும் காட்சி ( நீங்கள் பார்க்கும் பொது மிகவும் பின்னால் இருக்கும் இடம் ) – அதை அடுத்து மேல் தளத்தில் மிக அழகாக அமர்ந்திருக்கும் ஈசன், நந்தியின் மேல் ஒரு கை வைத்து அழகாக நிற்கும் உமை, அவர்களை அடுத்து ஒரு தோழிப்பெண்.

கீழே – முக்கிய காட்சி – தக்ஷனின் தலையைக் கொய்து தீயில் இடும் ஈசன் ( அதை கண்டு முகம் திரும்பி நகரும் முனிவர். அடுத்து தலை வெட்டப்பட்டு முண்டமாக கிடக்கும் தக்ஷன் – அவன் நிலையை கண்டு கைகளை மேல உயர்த்தி அழும் தக்ஷனின் துணைவி . அதை அடுத்து இந்த காட்சியை கண்டு பார்போர் அலறி பயந்து ஓட – என்ன ஒரு அருமையான படைப்பு – முன்று பெண்மணிகள் , அவர்களை அடுத்து முன்று முனிவர்கள் – அவர்களின் தோற்றம், திரும்பி, முகத்தில் பயம் – அந்த கோர காட்சியை காட்சியை பார்த்துக்கொண்டே , ஓடும் படி செதுக்கி உள்ளான் சிற்பி.. கடைசியில் இருவர் – ஓட ஆரம்பித்தே விட்டனர். ( சிற்பத்தின் அளவை குறிக்க பேனாவை கவனியுங்கள் )

சரி – அடுத்த பாகம் – மூன்று ரிஷிகள் – மற்றும் பிரம்மன் ஈசனிடம் வேண்டும் காட்சி , தக்ஷனின் தவறை மன்னித்து அவனுக்கு உயிர் பிச்சை கேட்டு நிற்கின்றனர். என்ன ஒரு அருமையான சிற்பம் – அதுவும் அந்த ஈசனின் வடிவம் – மான் , மழு , இடையில் தொங்கும் நாகம் , மிக அருமை.


ஈசனும் மனம் இறங்க – கடைசி காட்சி – மேல பூத கணங்களும் விண்ணவரும் இசை முழங்க , ஆட்டின் தலையுடன் ஈசனை வணங்கும் தக்ஷன் – மற்றும் மற்ற முனிவர்கள் ஆசி பெறுகின்றனர்.

இதோ தேவாரம் குறிப்புகள்

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=8&Song_idField=81140&padhi=14&startLimit=10&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

வெஞ்சின வேள்வி வியாத்திர னார்தலை
துஞ்சின வாபாடி உந்தீபற
தொடர்ந்த பிறப்பற உந்தீபற.

கடுஞ்சினத்தால் தொடங்கின யாகத்துக்கு அதி தேவதையின் தலை அற்ற விதத்தை நமது பிறவித் தொடர் அற்று ஒழி யும் வண்ணம் பாடி உந்தீபறப்பாயாக!

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=8&Song_idField=81140&padhi=14&startLimit=11&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

ஆட்டின் தலையை விதிக்குத் தலையாகக்
கூட்டிய வாபாடி உந்தீபற
கொங்கை குலுங்கநின் றுந்தீபற.

சிறுவிதியின் தலையற்றுப் போக அதற்குப் பிரதியாக ஆட்டின் தலையைப் பொருத்தின விதத்தைப் பாடித் தனங் குலுங்க நின்று உந்தீபறப்பாயாக!

ஈசனுக்கு உடும்பு கறி படைத்த பக்தன்

கண்ணப்பர் செருப்பு அணிந்ததை சென்ற மடல்களில் பார்த்தோம். இப்போது அவர் ஈசனுக்கு உடும்பு கறி படைத்ததை பார்ப்போம். மீண்டும் தஞ்சை பெரிய கோவில் சிற்பம், ராஜ ராஜ சோழ தேவருக்கு மிகவும் பிடித்த கதைகள் – ஈசனிடம் அளவில்லாத பற்று கொண்டு அவனிடம் சரண் புகுந்த நாயன்மார் கதைகள். அதில் அவர் மிகவும் ரசித்த ஒன்று , கண்ணப்பர் கதை. இதோ கருங்கல்லில் .
1880188718901884
சிறு சிற்பம் என்றாலும் அந்த சிற்பத்தில் கண்ணப்பரின் முகத்தில் தெரியும் பணிவு, பக்தி – அதிலும் அவர் ஆசையுடன் உடும்பை படைக்கும் காட்சி ( வேடுவன் அல்லவா, அப்போதும் தனது வில் அம்பை விடவில்லை, அருகில் அவரது வேட்டை நாய் )- எதிரில் மரத்தடியில் சிவ லிங்கம்.

தேவார குறிப்பு, இதற்கும் உண்டு.
பதினொன்றாம் திருமுறை

சிந்தக்கடும்பகல் வேட்டையிற் காதலித் தடித்த
உடம்பொடு சிலைகணை உடைத்தோல் செருப்புத்
தொடர்ந்த நாயொடு தோன்றினன் தோன்றலும்

தடிந்த உடும்பு – கொல்லப்பட்ட உடும்பு, அது பாகமாக்கப்படவில்லை. இறைவற்கு நகை தோற்றுவிக்க அன்பினால் கொண்டு வரப்பட்டது.

இங்கே மேலும் கதையை உணர்த்தும் சிற்பங்கள் உண்டு. அவற்றை பற்றி வரலாறு.காம் நண்பர் கோகுல் அவர்களின் அருமையான இடுகை (கடை காட்சியில் சிவ கோச்சாரியார் மரத்தின் பின் ஒளிந்துக்கொண்டு பார்ப்பதை சித்தரித்த வண்ணம் அருமை )
கோகுல் அவர்களின் அருமையான இடுகை

படங்களுக்கு நன்றி www.varalaaru.com

பெரிய கோவில் – சிறிய சிற்பம்

நாம் மல்லை அர்ஜுன தவம் முன்னர் பார்த்தோம். அதே போல காஞ்சி கைலசனாத கோவில் சிற்பமும் பார்த்தோம்.அங்கே பல்லவ சிற்பியின் கலை பார்த்த நாம் – இப்போது அங்கிருந்து சுமார் முன்னூறு ஆண்டுகள் பின்னர் சோழ சிற்பி இதே கதையை கையாண்ட முறையை பார்போம்.

சோழ பேரரசன் ராஜ ராஜன் கட்டிய கற்றளி – தஞ்சை பெரிய கோவில் (எனினும் அவனே பெரிய கற்றளி என்று அழைத்த கோவில் காஞ்சி கைலசனாத கோவில். )

சரி, பெரிய கோவில் என்றதும் அங்கு இருக்கும் அனைத்தும் பெரியது என்று இல்லாமல் – நாம் அங்கே இருக்கும் சிறு சிற்பங்களை பார்போம். முன்பு நாம் பார்த்த சண்டேச அணுகிறஹ முர்த்தி போல, அடுத்து நாம் பார்ப்பது பசுபதஅஸ்த்ரதான முர்த்தி. சிறு சிற்பம் என்றாலும் மிக அழகான வடிவம். முதலில் முழு சிற்பத்தையும் கொஞ்சம் பாருங்கள்.
1173
நிறைய நபர்கள் – புரிய கொஞ்சம் கடினமாக இருக்கிறதா ?. சரி ஒவ்வொன்றாக பார்போம். முதலில் கீழ் இருந்து மேல்

முதல் வரிசை
1165
இங்கே சிவ பூத கணங்கள் – கொஞ்சம் கொஞ்சமாக ஒரு காட்டுப்பன்றி போல மாறுவது போல வடித்து உள்ளனர். சரி கதையை மீண்டும் பார்போம். ***

அர்ஜுனன் மகாபாரத போருக்கு தன்னை தயார் படுத்து ஈசனிடம் இருந்து பசுபத அஸ்திரத்தை பெற முயல்கிறான். கடுந்தவம் புரிகிறான். அப்போது ஈசன் அவனை விளையாட்டாய் பரிசோதிக்க வேடுவன் போல வேடம் இட்டு – ஒரு பன்றியாயை இருவரும் வேட்டை ஆடுவது போல நிகழ்வு, அப்புறம் இருவருக்கும் யுத்தம் – கடைசியில் அர்ஜுனன் வந்தது ஈசன் என்று உணர்த்து அவன் தாள் பணிய, அஸ்திரத்தை பெறுகிறான்.

இப்போது மீண்டும் சிற்பத்திற்கு வருவோம் – இரண்டாம் தளம் – இங்கே அர்ஜுனன் ஒரு காலில் நின்று தவம் புரிகிறான் ( கடுந்தவம் போல இல்லை – மல்லையில் எலும்பும் தோலுமாய் இருந்த துறவி போல இல்லாமல் சற்று நன்றாகத்தான் உள்ளான் )
11631169
806
அடுத்த காட்சி – இருவருக்கும் யுத்தம் – அருகில் உமை, தனது மடியில் குழந்தை முருகனை வைத்து இருக்கும் கோலம் அருமை
11761178
இருவரும் ஒருவரை ஒருவர் எதிர் கொள்ளும் கோலம் ( நாம் முன்பு காஞ்சி கைலாசநாத கோவிலில் பார்த்த வடிவம் ) அருமை. 1192
1167
அருகில் நான்முகன், மஹாவிஷ்ணு மற்றும் லெட்சுமி . மல்லையில் விஷ்ணு மட்டும் கோவிலினுள் இருப்பது போல இருக்குமே ??
1196
அடுத்த மேலும் சில தெய்வங்கள் – இந்த அறிய காட்சியை கண்டு நிற்கின்றனர்.

அடுத்த தளம் – இங்கே அருமையாக அதிகார தோரணையில் அமர்ந்திருக்கும் ஈசன் – அடுத்து உமை – அவர்களுக்கு முன் கை கூப்பி நிற்க்கும் அர்ஜுனன் – அர்ஜுனனுக்கு அஸ்திரத்தை அளிக்கும் குள்ள பூத கணம்…இதை காணும் விண்ணவர்கள் அவர்களை போற்றுகின்றனர்.
11711182
அடுத்து – அம்மையும் அப்பனும், மடியில் முருகனும் மீண்டும் கைலைக்கு செல்கின்றனர். அந்த குழந்தையின் மடி சவாரி – என்ன உயிரோட்டம்.
1180
கடை தளம் – இங்கேயும் விண்ணவர். ஒரு முனிவர் தன் சீடனுக்கு ஏதோ உபதேசம் செய்வது போல உள்ளது – வியாசர் விருந்தோ ? 11601307

***

இது விசயன் தவத்தைக் கெடுத்துக் கொல்லவந்த மூகாசுரன் என்னும் பன்றி

ஒரு அருமையான நம் ஐயம் தீர்க்கும் பாடல் ( இதற்க்கு சரியான விளக்கம் தந்த திரு வி. சுப்ரமணியம் அவர்களுக்கு நன்றி.)

சம்பந்தர் தேவாரம் – திருமுறை 1.48.6

காடடைந்த ஏனமொன்றின் காரண மாகிவந்து
வேடடைந்த வேடனாகி விசயனொ(டு) எய்ததென்னே
கோடடைந்த மால்களிற்றுக் கோச்செங்க ணாற்கருள்செய்
சேடடைந்த செல்வர்வாழும் சேய்ஞலூர் மேயவனே.

கோடுகளோடு கூடிய பெரிய யானைப் படைகளை உடைய கோச்செங்கட் சோழனுக்கு அருள் செய்தவனும், பெருமை பொருந்திய செல்வர்கள் வாழும் திருச்சேய்ஞலூரில் மேவியவனுமாகிய இறைவனே! வில்லடிபட்டுக் காட்டுள் சென்று பதுங்கிய பன்றி ஒன்றின் காரணமாக, தான் வேடன் உருத்தாங்கி வந்து அருச்சுன னோடு போர் புரிந்தது ஏனோ?

குறிப்புரை:
பன்றியைத் துரத்திவந்து வேடனாகி விசயனோடு சண்டையிட்டது ஏன் என்கின்றது. ஏனம் – பன்றி. இது விசயன் தவத்தைக் கெடுத்துக் கொல்லவந்த மூகாசுரன் என்னும் பன்றி. இதனைத் திருவுள்ளம் பற்றிய சிவபெருமான் பன்றியைக்கொன்று விசயனைக் காத்தனர் என்பது வரலாறு. கோடு – கொம்பு. மால் – பெரிய; மயக்கமுமாம். கோச்செங்கண்ணான் செய்த கோயில்களில் ஒன்றாதலின் அவற்கு அருள்செய் சேய்ஞலூர் மேயவனே என்றார். சேடு – பெருமை.