பல்லவர் கால காஞ்சி கைலாசநாதர் சிதைந்த ஓவியங்களுக்கு உயிர் கொடுக்க முடியுமா? பாகம் ஒன்று

தமிழ் நாட்டு ஓவியக்கலையின் மிக தொன்மையான பல்லவ ஓவியங்கள் இன்றும் காஞ்சி கைலாசநாதர் ஆலயத்தில் இங்கும் அங்குமாய் சிதைந்த நிலையில் பார்க்க முடிகிறது. பார்த்த சில நொடிக்களிலேயே நம்மை சொக்க வைக்கும் அழகைக் கொண்ட இந்த ஓவியங்களைப் பார்க்கும் பொது ஒருபக்கம் பரவசமும் மறு பக்கம் பெரும் துக்கமும் வரும். பரவசம், ஆயிரத்திமுன்னூறு ஆண்டுகளுக்கு முன்னரே தனது கலையில் இப்படி ஒரு உன்னத நிலையை நம் மண்ணின் கலைஞன் எட்டிவிட்டான் என்பதும், அவனது கலை காலத்தை வென்று இன்று வரை நின்றுள்ளது என்பதும். துக்கம், இங்கும் அங்குமாய் தெரிந்த சில கோடுகள், சில வண்ணங்கள், என்று நாம் இன்று காணும் இந்த ஓவியங்கள், அடுத்த தலைமுறை பார்க்க , பரவசம் அடைய இந்த அரிய பொக்கிஷங்களை , நம் குல தனங்களை, நிலைக்க வைக்க முடியுமா என்ற கேள்வி.

நம்மால் முடிந்தது – இன்றைய நிலையை அப்படியே படம் பிடித்து இணையம் மூலம் கருவூலம் அமைத்து பாதுகாக்கமுடியும். எனினும், எங்கோ மூலையில் ஒரு சின்ன ஆசை. இவை, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எப்படி வண்ணங்களின் பிரதிபலிப்பாய் ஜொலித்திருக்கும் என மனக்கண்ணில் அப்படியே அவற்றை கற்பனை செய்து ரசிப்பது உண்டு, எனினும் அப்படி மனக்கண்ணில் கண்ட காட்சியை அனைவருடன் எப்படி பகிர்வது. பல்லவ சிற்பியுடன் போட்டி போட நமக்கு தேர்ச்சி இல்லை, தற்போது உள்ள கணினி தொழில்நுட்பம் கொண்டு படங்களை ஒற்றி எடுத்தும், ஒரு ஓவியம் கூட முழுவதுமாக இன்று நிலைக்க வில்லை. இது சாமானியன் செய்யும் வேலை இல்லை என்று புரிந்தது. இந்த கலை ரத்தத்திலேயே ஊறி போன ஒருவரால் மட்டுமே இவற்றுக்கு உயிர் கொடுக்க முடியும் என்று தெளிவாக தெரிந்து. ஓவியர் நண்பர்கள் யாரை சந்தித்தாலும் கோரிக்கை மனு கொடுத்து வைப்பேன்.

இப்படி இருக்கையில், தற்செயலாக நண்பர் ஒருவரின் ஓவியக் கண்காட்சி ஒன்றிற்கு சென்ற பொது, ஓவியர் மணியம் அவர்களின் வழித்தோன்றல் இருவரை சந்திக்க நேர்ந்தது. ஆம் அவர்தான், அமரர் கல்கியின் கதை காலத்திற்கு மெருக் ஏற்றி அற்புத ஓவியங்களை படைத்தவர். அவரது கதாபாத்திரங்களை நம் கண் முன்னே கொண்டு வந்தவர். திரு மணியம் அவர்களின் ஓவியங்கள் சில , அவரது மகன் திரு மணியம் செல்வன் அவர்களும் சிறந்த ஓவியர், அவரது ஓவியங்கள் சில ,ஆனால் நான் சந்தித்தது அவரது புதல்விகளை . புலிக்கு பிறந்தது பூனை யாகுமா. இருவருமே சிறந்த ஓவியர்கள். அப்படியே நின்றுக் கொண்டே பேசினோம், கல்கி , பார்த்திபன் கனவு , பொன்னியின் செல்வன் என்று போன உரையாடல் முடிவில் கோரிக்கை மனுவை நீட்டினேன். திருமதி சுபாஷினி பாலசுப்ரமணியன் அவர்கள் அவரது ஓவியங்கள் ,முயற்சி செய்து பார்ப்போம் என்று கூறினார்.

பணி மிகவும் கடினம், ஓவியங்கள் மிகவும் சிதைந்த நிலையில் இருந்தன. நான்கு இடங்களில் உள்ள இதே வடிவம், ஒரு இடத்தில கூட முழுவதுமாக இல்லை. போதாத குறைக்கு என்னிடத்தில் நல்ல படங்களும் இல்லை. நண்பர்கள் இடத்தில கேட்டுப் பார்த்தேன், யாரிடத்திலும் எங்களுக்கு தேவைப்படும் அளவிற்கு பெரிய படங்கள் இல்லை.


இருப்பதை வைத்து, முதலில் வேலையை துவங்கினோம். நன்றாக வருமோ என்ற ஐயம் எழும் முன்னரே, உடனே வந்தது சுபாஷினி அவர்களின் முதல் பிரதி

சரியான இடத்தில தான் பணியை ஒப்படைத்துள்ளோம் என்று சொன்னது மனம். வாழை அடி வாழையாய் வந்த கலை, அவர்களது கையில் விளையாடியது . எனினும் மிக நேர்த்தியாக வரையவேண்டும் என்றால் நல்ல படம் சீக்கிரம் தேவை. என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துக் கொடிருந்த பொது, ஒரு இனிய அதிர்ச்சி. மே மாதம் தற்செயலாக தளத்தின் மூலம் உரையாடிய பத்தாம் வகுப்பு மாணவன் ஜகதீஷ், ஒரு மடல் அனுப்பினான். எனது காஞ்சி பயண புகை படங்கள் என்றது தலைப்பு. கூடவே,”ஹலோ அண்ணா , என்னை நினைவுள்ளதா, நான் ராஜகேசரி ( புனைப்பெயர் ) , சமீபத்தில் காஞ்சிபுரம் சென்றிருந்தேன் , அங்கு எடுத்த படங்கள் இதோ ”

உள்ளே, நான் தேடிக்கொண்டிருந்த படங்கள். உடனே தொடர்பு கொண்டு, முழு அளவில் படத்தை அனுப்பு என்று சொன்னவுடன் உதவினான் நம் தோழன், இந்த சின்ன வயதில் -வேலூர் பள்ளியில் இப்போது பதினொன்றாம் வகுப்பு படிக்கும் நம் ஹீரோ இதோ.

பல்லவ கலை, ராஜசிம்ம பல்லவனால் வளர்க்கப்பட்ட கலை, இன்று இந்த மாணவன் உதவியுடன் அடுத்த தலைமுறைக்கு செல்கிறது.

பிரம்மா

உமை

விஷ்ணு

நல்ல படங்கள் ஏன் தேவை பட்டன என்பதற்கு, கிழே இருக்கும் பூத கணம், மற்றும் பணிப்பெண் உருவங்களை கண்டு கொள்ள பெரிதும் உதவின.

ஆசனத்தின் கால்கள் சிங்க முகங்கள் போல சித்தரிக்க நினைத்தோம். ( மலை மகிஷாசுரமர்தினி மண்டபம் போல )

அடுத்து இன்னும் பல விவரங்களை எடுத்து ஓவியத்தை பூர்த்தி செய்ய ஆரம்பித்தோம்.

நன்றாக வருகிறது . இன்னும் பார்க்க ஆவலா ? பொறுமை, அடுத்த பதிவில் தொடரும் இந்த ஓவியம்.

கிராதன் அர்ஜுநர்கள் – இன்றைய காமிக்ஸ் அன்றைய சிற்பம் ஒரு கலக்கல்

கலைச் செல்வங்களை ரசிக்கும் தன்மையை எப்படி நமது அடுத்த தலைமுறைக்கு எடுத்துரைப்பது. அவர்களை எப்படி இந்த பொக்கிஷங்களை பாதுகாக்க வைப்பது. அவர்களது ரசனையை எப்படி தூண்டுவது. இவை போன்ற கேள்விகள் எங்கள் மனதில் தினமும் எழும். இன்றைய தலைமுறை சதா சர்வகாலமும் இணையம், அதில் உள்ள இணைய விளையாட்டு, காமிக்ஸ் என்றே செல்கிறது என்று பார்க்காமல், அவற்றையும் ஒரு வளரும் துறையாக பார்த்து , அவற்றை கொண்டும் இள நெஞ்சங்களிடம் நம் கருத்துக்களை எடுத்துச் செல்லலாம் என்பதே எங்கள் கருத்து. அதன் அடிப்படையில் இன்று காஞ்சி கைலாசநாதர் சிற்பம் ஒன்றையும் ( எனக்கு மிகவும் பிடித்த சிற்பம் ) அதை ஒட்டிய கதையை இன்றைய இணைய ஓவிய காமிக்ஸ் போலவும் சேர்த்து பார்ப்போம்.

கதை ஒன்றும் பெரியது அல்ல. மகாபாரதத்தில் வன பர்வத்தில் , அர்ஜுனன் தனியே சிவ பெருமானிடத்தில் இருந்து பாசுபத அஸ்திரத்தை பெற தவம் செய்ய இமயம் செல்கிறான். கடுந்தவம் புரியும் அவனை சோதிக்க
ஈசனே கிராதன் ( வேடன் ) உருவிலும், உமை ஒரு வேடர் குல பெண்ணாகவும் வனத்தினுள் வருகின்றனர். அப்போது முகசுரன் என்றஅசுரன் காட்டுப்பன்றி உருவம் தரித்து அர்ஜுனனை நோக்கி விரைந்து வருகிறான். வில்லுக்கு ஒரு விஜயன் ஆயிற்றே, உடனே காண்டீபத்தை எடுத்து பன்றியின் தலைக்கு நாணைத் தொடுக்கிறான் பார்த்தன். அதே வேளையில் இன்னொரு புறத்தில் இருந்து பன்றியின் பின்புறம் ஒரு அம்பு பாய்கிறது. அங்கே வில்லேந்தி நிற்கிறான் கிராதன். அர்ஜுனன் சினம் கொண்டு, பின்னால் இருந்து நாணை எய்வது வீரனுக்கு அழகா என்று கேட்க, அவனோ இது வேட்டை.. யுத்தம் அல்ல !!, காட்டு மிருகங்களுக்கு போர் நீதி செல்லாது என்கிறான் ( வாலி வதம் ? ) அப்படியே பன்றி யாருடையது என்று வாக்குவாதம் நடக்கிறது.

வாக்குவாதம் முற்ற கைக்கலப்பும் ஆரம்பம். காண்டிபதை கொண்டு அக்னி கொடுத்த தீராத பாணங்களை தரும் கூடையில் இருந்து அம்புகளை மழையென பொழிய வைத்தான் குந்தி புத்திரன். எனினும் அந்த வேடனோ சிறிதும் சிரமம் இல்லாமல் அனைத்தையும் தடுத்து விட்டான். உடனே காண்டீபத்தை ஈட்டி போல வேடன் மேல் பாய்ச்சுகிறான் அர்ஜுனன். அதை அப்படியே பிடித்து இழுத்துப் பறித்து விடிகிறான் அந்த வேடன். அர்ஜுனனுக்கு இன்னும் கோபம், உடனே மல்யுத்தம் செய்ய அவன் மேல் பாய்கிறான். ஆனாலும் வேடனை ஒன்றுமே செய்ய முடியவில்லை. அர்ஜுனுக்கு மூச்சு வாங்கி தலை சுற்றுகிறது, வேடனோ ஒரு வியர்வை துளி கூட சிந்தாமல் நகைத்துக் கொண்டே போர்புரிகிறான். இதனை கண்ட அர்ஜுனன், சண்டையை நிறுத்தி விட்டு, ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து , வேடனை வீழ்த்த மகேசனின் ஆசி கூறி, மலர்களை சமர்ப்பிக்கிறான். என்ன ஆச்சரியம், லிங்கத்திற்கு அவன் இடும் மலர்கள் வேடனை அலங்கரிக்கின்றன. உண்மை புரிந்த அர்ஜுனன் மகேசனிடம் சரண் புகுந்தான். இன்னொரு வழக்கில் சண்டை இடும்போது அர்ஜுனன் ஈசனின் காலை பிடித்தானாம், தன மலர் பதம் பிடிக்கும் பக்தரை தடுத்துத்ஆட்கொள்ளும் ஈசன், அப்போது போரை நிறுத்தி அவனை அணைத்தார் என்றும் வருகிறது. எனினும் நாம் இன்று பார்ப்பது இருவரும் சண்டை போட்டனர்.

நன்றி திரு அபிலாஷ் நாராயணன் , அவர்களுக்கு, நம்முடன் அவரது கணினி ஓவியத்தை பகிர்ந்துக்கொண்டமைக்கு.

அவரது மற்ற படைப்புகளை காண

திரு அபிலாஷ் நாராயணன்

சரி, இப்போது நாம் காஞ்சி கைலாசநாதர் ஆலயம் செல்கிறோம். வெகு நாட்களுக்கு முன்னரே இந்த சிற்பத்தை ஒட்டிய பதிவை இங்கு போட்டிருக்க வேண்டும் – எனக்கு அவ்வளவு பிடிக்கும் இந்த சிற்பம். அதில் உள்ள உயி்ரோட்டம், காட்சி அமைப்பு எல்லாமே அபாரம். இது இரு கதாநாயகர்கள் நடிக்கும் படத்தின் விளம்பரம் போல இருக்கும் இந்த சிற்பத்தை திரு அபிலாஷ் அவர்களின் ஓவியத்துடன் மோத விடுவோம்.

படங்களுக்கு நன்றி: திரு அர்விந்த் மற்றும் திரு சுவாமிநாதன்

சிற்பத்தை நன்றாக பாருங்கள். இரு வீரர்கள், ஒருவரை ஒருவர் எதிர் நோக்கி சண்டை இட தயாராக நிற்கும் காட்சி. இருவர் கையிலும் வில், மற்றொரு கையில் அம்பு, அல்லது அம்பை எடுக்கு செல்லும் கை. முதுகில் அம்புகள் வைக்கும் கூடை ( இருபுறமும் இவை இருப்பது நேர்த்தி ) , ஒருவர் இடுப்பில் மற்றும் உடைவாள். இது கிராடார்ஜுன கதை தான் என்பதை சந்தேகம் இன்றி நிறுவ இருவரின் பின்னால் நேர்த்தியாக ஒரு காட்டுப் பன்றியை செதுக்கி உள்ளான் சிற்பி.

இப்போது ஒரு கடினமான கேள்வி, இதில் ஈசன் யார், அர்ஜுனன் யார். சற்று அருகில் சென்று பார்ப்போம்.

குறிப்பாக அவர்கள் அணிந்திருக்கும் உடை , ஆபரணம் மற்றும் தலை அலங்காரங்களை பாருங்கள்.

இருவருக்கும் உள்ள வேற்றுமை என்ன – பட்டியல் இடுவோம்.

சிற்பத்தின் இடது புறம் ( நீங்கள் பார்க்கும்போது வலது புறம்) – இருக்கும் வீரன் ஒரு நீண்ட கிரீடத்தையும், மார்பில் பூணூலையும் அணிகிறான். மற்ற வீரனோ தலையை கொண்டாய் போல கட்டிக்கொண்டு, மார்பில் சன்னவீர என்னும் குறுக்கு பட்டைகளை அணிகிரான். அவன் மட்டுமே உடைவாளை வைத்துள்ளான்.

நமக்கு தெரிந்த மட்டிலும் அர்ஜுனன் ஒரு துறவி போல தவம் செய்து ( கடைசியில் காற்றை மட்டுமே சுவாசித்து பல மாதங்கள் கடுந்தவம் புரிந்தான் என்று நினைக்கிறோம். மகாபாரத்திலும் அவன் காண்டீபம் என்னும் வில்லுடன் ஒரு அற்புத தங்க கைப்பிடி கொண்ட உடைவாளை கொண்டிருந்தான் என்ற குறிப்புகள் உள்ளன.

சரி, அது அப்படி நிற்க , நாம் கிராட உருவத்தை பற்றி படிப்போம்.கிராதன் ஒரு வேடன், அதுவும் ஈசனை பொதுவாக ஜடா மகுடத்துடனே நாம் காண்கிறோம். மேலும் திரு நாகசுவாமி அவர்களின் குறிப்புகளில் , சோழ வடிவத்தில் கிராட உருவம் ஒரு வேடன், அதுவும் உருண்டை தொப்பையுடனும், மார்பில் சன்னவீர கொண்டும், தலையை கொண்டாய் போட்டுக் கொண்டு இருக்க காண்கிறோம் என்கிறார்.

Kirata or Tripurantaka


However in many Chola sculptures and also Bronzes (Melapperumpallam image) Kirata will be shown like a hunter with round bellied body , beard and cannavira. His hair would be tied as a bun-like knot and not the jata-makuta one sees in the Tripurari form.

இவை அனைத்தும் கொண்டு பார்க்கையில் கிரீடம் அணிந்திருப்பது அர்ஜுனன் என்றும் மற்றவர் ஈசன் என்றும் நான் நினைக்கிறேன், உங்கள் எண்ணம் என்ன.

என்ன, கலக்கல் பிடித்தா ?

சர்ச்சைச் சிற்பங்கள்- பாகம் ஒன்று – திருமாலுக் காழி யளித்தாய் போற்றி

கடவுளுக்கும் கடவுளுக்கும் போட்டியா? இல்லை என் கடவுளுக்கும் உன் கடவுளுக்கும் போட்டியா? பெரும்பாலும் இது மாதிரி சர்ச்சைக்குரிய வாதங்களை தவிர்க்க முயற்சிப்போம்.

ஆனால் சில நேரங்களில் இவை அத்து மீறிப் போகும் பொழுது, நாம் அந்த வாதங்களை சரியான முறையில் பார்ப்பதற்கு முன் முதலில் அங்கே என்ன இருக்கிறது என்பதை எடுத்துரைக்க வேண்டும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தவற்றில் எது சரி எது தவறு என்ற அனைத்தும் இன்றும் அப்படியே இருக்கும் என்பது சாத்தியம் இல்லை. எனினும் அன்று என்ன இருந்தது என்பதை நாம் தெரிந்துக்கொள்ள வேண்டும். இருப்பதை ஆராய்ந்து பார்க்கும் முன்னரே போர்க்கொடி தூக்குவது நல்லதன்று. சிற்பம் என்பது எங்கும் நிறைந்திருக்கும் ஒன்றை மனிதனின் மனதால் கட்டுப்படுத்தி செதுக்கப்பட்ட பொருள் என்று மட்டும் பார்க்காமல் மனதை கட்டுப்படுத்தி அடுத்த நிலைக்கு எடுத்தும் செல்லும் கருவி என்றே நாம் பார்க்கவேண்டும்.

இந்த தளத்தின் நோக்கம் சிற்பங்களில் மறைந்து இருக்கும் கதைகளையும் நுணுக்கங்களையும் அனைவரும் விளங்கும் வண்ணம் எடுத்துச் சொல்வதே. கடந்து வந்த பாதை கரடு முரடானது. பல மதங்கள் காலப்போக்கில் ஒன்றுக்கொன்று போட்டி போட்டன, ஒரே மதங்களினுள்ளும் இந்த போட்டி நிலவியது. எனினும் இவையும் நமது பாரம்பரியத்தின் இழையாக பிணைந்து விட்டன. இவற்றில் சரி தவறு என்ற வாதங்களை எடுத்தாண்டு எதிரிகளாக நிற்காமல் இருப்பதை இருந்தாக பாருங்கள் என்பது முதல் வேண்டுகோள். இப்படி பார்க்கும் மனப்பக்குவம் இல்லாதவர்கள் தயவு செய்து இப்போதே மேலும் படிக்காமல் விலகி விடுங்கள் என்பது இரண்டாவது வேண்டுகோள்.

என்னடா பில்ட் அப் பெரியதாக இருக்கிறதே என்று பார்க்க வேண்டாம். இது போன்ற சர்ச்சை வடிவங்கள் பல உண்டு. ஏன் பரவலாக காணப்படும் லிங்கோத்பவர், காண்பதற்கரிய சரபேஸ்வரர் என்று ஒரு பக்கம். வாமன அவதாரத்தில் கங்கை உரு பெற்ற கதை சொல்லும் சிற்பங்கள் என்று இன்றைய சினிமா படம் போல ஆடியன்சுக்கு ஏற்ப சிற்பங்களும் செதுக்கப்பட்டன. அரசர்களும் தங்களுக்குப் பிடித்த தெய்வங்களை உயர்த்தியும் போற்றியும் குறிப்பிட்ட மதத்தை வளர்த்தனர். நாம் இன்று இரு சிற்பங்களை பார்க்க போகிறோம். விஷ்ணு அனுக்ரஹா மூர்த்தி / சக்கர தானர், இது மதுரை மீனாக்ஷி அம்மன் கோயில் சிற்பம், காலத்தால் மாலிக் கபூர் தாக்குதலுக்கு பின்னர் உருவானதாக இருக்கலாம். மற்றொன்று அதையும் விட பழமை வாய்ந்த எட்டாம் நூற்றாண்டு ராஜ ஸிம்ஹ பல்லவனின் காஞ்சி கைலாசநாதர் கோயில் சிற்பம்.

சிற்பங்களை ஒட்டிய கதை ஏதோ நான் ஓட்டுகின்ற கதை அல்ல என்பதை முதலிலேயே தெளிவு படுத்த அப்பர் சுவாமிகளின் தேவாரத்தை இங்கே எடுத்துக் கொடுத்துள்ளேன்.

ஆறாம் திருமுறை

பூவார்ந்த சென்னிப் புனிதா போற்றி
புத்தேளிர் போற்றும் பொருளே போற்றி
தேவார்ந்த தேவர்க்குந் தேவே போற்றி
திருமாலுக் காழி யளித்தாய் போற்றி
சாவாமே காத்தென்னை யாண்டாய் போற்றி
சங்கொத்த நீற்றெஞ் சதுரா போற்றி
சேவார்ந்த வெல்கொடியாய் போற்றி போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி.

ஒரு வழியாக சொல்ல வேண்டியது எல்லாம் சொல்லியாகி விட்டது. இப்போது கதைக்குள் செல்வோம். வழக்கம் போல இந்த கருவை கொண்டு பல கதைகள் உள்ளன.

முதல் பாகம்:

ஜலந்தரன் என்னும் சமுத்திரராஜனின் மகன் தன்னுடைய ஆட்சியை எங்கும் நிலைநாட்ட, தேவலோகம், மற்ற தேவர்கள் அனைவரையும் தனக்குக் கீழ் கொண்டு வர எண்ணினான். அவன் மனைவியான பிருந்தை பதிவிரதை என்பதாலும், சிவ பக்தை என்பதாலும் அவளின் சிவ பக்தியும், கற்பின் சக்தியும் அவனைக் கட்டிக் காத்ததால் யாராலும் இந்த ஜலந்தரனை அழிக்கமுடியவில்லை.ஆனாலும் ஈசனோடும் ஜலந்தரன் போர் புரிகிறான். ஈசனுக்கோ, தன் பக்தையின் கணவனை எங்ஙனம் அழிப்பது என்று தன்னுடனும் போருக்கு வரும் ஜாலந்தரனைத் திருப்பி அனுப்புகிறார்.மகாவிஷ்ணுவின் மூலமே அவனை அழிக்கவேண்டும் என எண்ணினார் ஈசன்.

மஹாவிஷ்ணுவும் அதற்கு உடன்பட்டு சிவனுக்கு வழிபாடுகள் செய்கின்றார். ஆயிரம் தாமரை மலர்களால் ஈசனை அர்ச்சித்து விஷ்ணு வழிபட ஆயிரமாவது தாமரை இல்லாமல் 999 தாமரைகளே இருக்கின்றன. எண்ணிக்கையில் ஒன்று குறைவதைக் கண்ட விஷ்ணு ஆயிரமாவது தாமரைக்காகத் தன் கண்ணைப் ( அவன் தான் கமலக்கண்ணன் ஆயிற்றே!! ) பிடுங்கி அர்ச்சிக்கிறார்…. (இதோ காஞ்சி கைலாசந்தர் கோயில் சிற்பம்.)

பல்லவ சிற்பியின் தனித்துவம் இங்கும் தெரிகிறது. ஈசன் அமர்ந்திர்க்கும் பாணியில்தான் என்ன ஒரு யதார்த்தம். ஒரு காலை மடித்து , வலது கரத்தை ஆசனத்தில் முட்டுக் கொடுத்து அமர்ந்திருக்கும் காட்சி அருமை. தலைக்கு மேலே மற்ற இரு கைகளும் என்ன செய்கின்றன? ஏதோ தலைப்பாகையை கட்டுவது போல உள்ளது, அருகில் உமையம்மை. பெருமாள் ஒரு காலை மடித்து, இரு கரங்களிலும் தாமரை மலர்களை சிவனுக்கு அளிப்பது போல உள்ளது. இன்னொரு இடது கரம் கண்ணப்பர் போல தனது இடது கண்ணை பறிக்க செல்கிறது.

சிற்பி இங்கே பின்னணியில் உள்ள கதைக்கு ஏற்ப சிற்பத்தை செதுக்கி உள்ளான். ஒரு வேளை அதில் நமக்கு எதாவது சொல்ல வருகிறானோ. தான் யார் என்பதை மறந்து அவனுடன் ஒன்றாகும் நிலையே பக்தி அல்லவா?

கதையின் அடுத்த பகுதியையும் மதுரை சிற்பதையும் அடுத்து பார்ப்போம்.

பெருமாளின் செய்கையை பார்த்து, ஈசன் பிரத்யக்ஷமாகி அவரைத் தடுத்துத் தரையில் காலால் கீறி ஒரு வட்டம் வரைகிறார். அதைச் சக்கரமாக வரைந்து அதைப் பெயர்த்தெடுத்து அந்தச் சக்கரத்தின் மூலம் ஜலந்தரனைக் கொல்லச் சொல்கிறார். இதுவே அறுபத்து நாலு சிவ வடிவங்களின் புராணக்கதைகளிலும்,ஈசனின் வீரச் செயல்களைப் பற்றிச் சொல்லும்போதும் வேறுவிதமாய் ஈசனே அந்தச் சக்கரத்தை ஜலந்தரன் மேல் வீசி எறிந்து அவனை இரண்டாகப் பிளந்ததாயும் வரும். பின்னரே அந்தச் சக்கரத்தை விஷ்ணுவுக்குக் கொடுத்ததாய்ச் சொல்வார்கள். நமக்கு இப்போது தேவை ஈசன் பெருமாளுக்கு சக்கரம் தருவது மட்டுமே.

இந்த காட்சியை மதுரை சிற்பதில் பாருங்கள்.

விஷ்ணு மற்றும் சிவன், அருகில் நான்முகன். கைகளில் உள்ள ஆயுதங்களைக் கொண்டு யார் யார் என்று தெளிவாக புரிகிறது. இந்த காலத்தில் ஆகமங்கள் மேலோங்கி நின்று சிற்பியின் திறனை தாங்கள் இட்ட சட்டங்களுள் கொண்டுவந்து விட்டன. எனவே பல்லவ சிற்பதில் பார்த்த உயிரோட்டம் இங்கே இல்லை. சிற்பம் சிலையாக சொல்லும் கதையை சொல்வதில் மட்டும் தன் கவனத்தை செலுத்துகிறது.

தூண் சிற்பம் தான், எனினும் சிற்பி இன்னும் சற்று சமமான முறையில் அனைவரையும் காண்பித்து இருக்கலாம் என்று தோன்றுகிறது. கலைக் கண்ணோடு பார்ப்பவருக்கும் சரி சமயக் கண்ணோடு பார்ப்போருக்கும் சரியாக இருந்திருக்கும். ஏன் சொல்கிறேன் என்றால் வெவ்வேறு அளவில் செதுக்கியதால் சக்ராயுதத்தை பெருமாளின் அளவுக்கு ஏற்ப செதுக்க , அது ஈசனின் கையில் சொப்பு போல தெரிகிறது…..இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.

காஞ்சி மாதங்கேஸ்வரர் ஆலயம் – சோமஸ்கந்தர் வடிவம்

சிறப்பு விருந்தினர் அரவிந்த் படைக்கும் சிறப்பு விருந்து. பலரும் செல்லும் காஞ்சியில் ஒளிந்து இருக்கும் பொக்கிஷம். நண்பர் அரவிந்த் சிலை சிற்பங்கள் மேல் தீராக் காதல் கொண்டவர். சிற்பம் பற்றி பல நல்ல புத்தங்களை சேகரித்து, அவற்றை பல முறை ஆழ்ந்து படித்து, அதன் பின்னர் அங்கு சென்று மீண்டும் மீண்டும் ரசித்து ஆராய்பவர். மேலே படியுங்கள் – இனி ஓவர் டு அரவிந்த்

காஞ்சிபுரம் செல்ல வேண்டும் என்பது நான் பல நாட்களாக செய்யவேண்டும் என்று குறித்து வைத்த ஒன்று. பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின்போது பலமுறை சென்றிருந்தாலும், சமீப காலத்தில் இந்த புதையல்களின் குவியலை சென்று பார்க்கவில்லையே என்ற ஒரு குறை வெகு நாட்களாக இருந்தது.

காஞ்சிபுரம் செல்ல வேண்டும் என்பது நான் பல நாட்களாக செய்யவேண்டும் என்று குறித்து வைத்த ஒன்று. பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின்போது பலமுறை சென்றிருந்தாலும், சமீப காலத்தில் இந்த புதையல்களின் குவியலை சென்று பார்க்கவில்லையே என்ற ஒரு குறை வெகு நாட்களாக இருந்தது.

ஒரு நண்பருடன் பேசும்போது, ஆர்வம் மீண்டும் எழுந்தது. கடைசியில், சென்ற வாரம், இப்போதே போக வேண்டும் என்று முடிவெடுத்து – அதுவும் அது ஒரு முழு வாரக் கடைசி – இரண்டு நாட்கள் ஒதுக்கி வைத்து – முடிந்தவரையிலும் அனைத்து இடங்களை இம்முறை பார்த்துவிட வேண்டும் என்ற வைராக்கியத்துடன் புறப்பட்டேன். நண்பர் கோபிநாத ஸ்ரீநிவாஸ் அவரும் உடனே வருகிறேன் என்று சேர்ந்துக்கொண்டார்.

ஒவ்வொரு ஆலயமாக செல்லச் செல்ல, சிற்பங்களின் போதை ஏறியது, வெய்யில் அதிகம் – என்றாலும் முதல் நாள் கைலாசநாதர், கச்சபேஸ்வரர், காமாட்சி அம்மன் , உலகளந்த பெருமாள் என்று சனிக்கிழமை வந்தது தெரியாமல் ஓடியே போய் விட்டது.

அடுத்த நாள் விடியற் காலையிலேயே புறப்பட்டு விட்டோம். மதியம் நடைசாத்தும் முன்னர் முடிந்த வரையிலும் முடிக்க வேண்டும் . ஏகாம்பரேஸ்வரர் தரிசனத்தை முடித்துவிட்டு வைகுண்ட பெருமாள் கோயில் விரைந்தோம். ஏகாம்பரேஸ்வரர் கோயில் வெளியேஇருந்து பார்த்த பிரம்மாண்டத்திற்கு உள்ளே சிற்பங்கள் அப்படி ஒன்றும் விசேஷமாக இல்லை. ஆனால் வைகுண்ட பெருமாளோ …அப்பாடா – நகர முடியவில்லை – ஒவ்வொரு துணுக்கும் ஏராளமான சிலை, அவை சொல்லும் கதை. ஒரு இடத்தில ஹோங் சென், மல்லை கடற்கரை கோயில், பல்லவ மன்னர்கள் அரியணை ஏறும் வைபவம் என்று எங்கே பார்த்தாலும் சிற்பக் குவியல். அப்போது கோவில் பூசாரி பக்கத்தில் இன்னும் ஒரு நல்ல கோயில் இருக்கிறது – போய்ப் பாருங்கள் என்றார்.

வைகுண்ட பெருமாள் கோயிலில் இருந்து ஒரு இருநூறு மீட்டர் தூரம் தான் . ஆனால் அதை கண்டுபிடிப்பது சுலபம் இல்லை.

பூசாரி – இரண்டாவது வலது ரோட்டில் திரும்ப சொன்னார் – திரும்பியவுடன் கோபுரம் தெரிந்தது. ஆஹா என்று, சென்று பார்த்தால் – உள்ளே செல்லும் வழி தெரியவில்லை. எல்லா பக்கமும் நவீன வீடுகள். திரும்ப ஒருமுறை வந்த வழியே வந்து பார்த்தோம். ஆ , இதோ ஒரு சிறு பாதை. முப்பது அடி உள்ளே – அருமையான கோயில். பல்லவர் கட்டிய சிறு ஆலயம் தான் – மொத்தமே நாலாயிரம் சதுர அடி தான் இருக்கும். எதிரே ஒரு சிறு நந்தி, பக்கத்தில் ஒரு அரச மரம் ( அதுக்கு நல்ல கூட்டம் போல தெரிகிறது )


தரையில் இருந்து பத்து படி ஏறினால் மண்டபம்

உள்ளே – லிங்கம் – அதன் பின்னர் அற்புத சோமஸ்கந்தர் வடிவம். இது எந்த பாணியில் உள்ளது? பார்த்து சொல்லுங்கள்

இந்த ஆலயத்தின் உள்பக்க சுவரிலும், வெளி பிரகாரத்திலும் இன்னும் மிக அற்புத சிற்பங்கள் உள்ளன. இவற்றின் அழகை முழுவதுமாக ரசிக்க மீண்டும் ஒரு முறை வர வேண்டும்.

அற்புத சிற்பங்களையும் இந்த ஆலயத்தின் வரலாற்றையும் பற்றி – தொடரும் அடுத்த பாகத்தில் பார்ப்போம்.

பிற்கால பல்லவ வாயிற்காப்போன் -காஞ்சி மாதங்கேசுவரர் ஆலயம்

வாயிற்காப்போன் தொடரில் இன்று மேலும் பயணிக்கிறோம். காஞ்சிபுரத்தில் நவீன கட்டுமானங்களுக்கு நடுவில் மறைந்துக் கிடக்கும் ஒரு பொக்கிஷம். நண்பர் திரு அர்விந்த் மிகவும் தேடி கண்டுபிடித்து நமக்காக படங்களை கொடுத்து உதவுகிறார். அவருக்கு மீண்டும் ஒரு நன்றி. மாதங்கேசுவரர் ஆலயம் ( அதன் உடன்பிறப்பு முக்தேஷ்வரா ஆலயத்தையும் விரைவில் காண்போம் )

இந்த ஆலயத்தின் காலம் சரியாக தெரியவில்லை , அதை பற்றி நாம் முக்தேஷ்வரா படங்களையும் பார்த்துவிட்டு அலசுவோம்.
இப்போதைக்கு CE 700 – 800 – இரண்டாம் நந்திவர்மன் காலம் என வைத்துக்கொள்வோம். மிகவும் சுவாரசீயமான காலம் – அரசனின் அரியணை ஏறுவது முதலே பல சம்பவங்கள், நடுவில் சாளுக்கியரிடம் தோற்றல், அக்யாதவாசம், மீண்டும் அரியணை ஏறல் – பின்னர் முடிவில் தனது பேரில் ஒரு கலம்பகம் !!

வேறு எங்கோ போகிறது பதிவு, மீண்டும் சிற்பத்துக்கு வருவோம்.

சிங்க தூண்கள் மறைக்கின்றனவே . சரி இன்னும் அருகில் செல்வோம். .

கொஞ்சம் கொடூரமாக தான் இருக்காங்க. இதுவரைக்கும் ஆஜானபாகுவாக இருந்தாலும் ஒரு நக்கல் பார்வை தான் இருந்தது.நீங்களே பாருங்களேன் – முற்கால பல்லவ வாயிற்காப்போன்களை ஒப்பிட்டு பார்ப்போம்.

மண்டகப்பட்டு

சீயமங்கலம்

தளவானூர்

இன்னும் உன்னிப்பாக மாதங்கேசுவரர் ஆலயம் வாயிற்காப்போன்களை பார்ப்போம்.

இடது புறம்

இங்கே கொம்பு போல தான் உள்ளன ( சூல வடிவத்தின் நடு கம்பி கண்ணுக்கு தெரியவில்லை )

வலது புறம்

இங்கே ஒரு மாற்றம் காண்கிறோமா? மழு முன்னர் செங்குத்தாக நெடுக்க இருந்தது – எங்கோ மாறி குறுக்காக உள்ளதே?. இது மழு தானா?

முக்கியமான வேறுபாடு -இருவருக்கும் மேலும் இரண்டு கைகள் -மொத்தம் நான்கு கைகள்.
இப்போது தான் கடினமான புதிர் வருகிறது. சாளுக்கிய இரண்டாம் விக்ரமாதித்யன் காஞ்சியை 745 இல் வென்றான், கைலாசநாதர் ஆலயத்தை கண்டு பிரமிப்பு அடைந்து, அதன் சிற்பிகளை கையேடு கூட்டிச்சென்று பட்டடக்கல் ஆலயங்கள் அமைத்தான். சூலம் அல்லது கொம்பு உள்ள வாயிற்காப்போன்கள் பல்லவர் சிற்பங்களில் முன்னவே இருந்தன. ஆனால் இந்த கூடுதல் கைகள் யாரால் ஏற்பட்ட மாற்றம். அதற்கு நாம் இதே காலத்தை ஒட்டிய காஞ்சி வைகுந்த பெருமாள் ஆலயத்தை ஒப்பிட வேண்டும். செய்வோமா?

உத்திரமேரூர் சுந்தர வரத கோவில் சிற்பம்

சில மாதங்களாகவே இந்த சிற்பத்தை பற்றி எழுதவேண்டும் என்று ஆசை. எனினும் அதன் பின் இருக்கும் கதை விளங்காததால் பல இடங்களில் தேடிப்பார்த்தேன். கடைசியில் உங்களிடமே அதை விடுகிறேன். முயன்று பாருங்கள் – விடை தெரிந்தால் சொல்லுங்கள்.

உத்திரமேரூர் சுந்தர வரத பெருமாள் கோவில்.வெளி ப்ரஹாரம்… மூன்று சிற்பங்கள் ஒவ்வொன்றாக பார்போம்.

முதலில் சற்று தொலைவில் இருந்து சிற்பத்தை பாருங்கள்.

அருமையான பிருகு முனிவர் சிலை . ( நான் முதலில் தவறாக எழுதிவிட்டேன் )


ஆனால் இன்று நாம் பார்க்க வேண்டியது சிலையின் மேல் உள்ள மிகவும் அருமையான சிறு சிற்பம் ( நாம் எப்போதும் முக்கிய சிலைகளை பற்றி பேசுவது இல்லையே !!)

தொலைவில் இருந்து பார்க்கையிலேயே சற்று வினோதமாக இருந்தது, படங்களை
பாருங்கள்.

மூன்று தபசிகள் – ஒவ்வொருவரும் ஒரு கோலத்தில்… வலது புறம் இருப்பவர் – ஒரு சிங்கத்தின் மேலே ( ஆஹா , என்ன ஒரு அருமையான சிங்கம்.)- ஒரு கால் மீது மற்றொரு காலை மடித்து தபஸ் செய்கிறார்
26832685
இடது புறம் இருப்பவர் கால் மாறி மடித்து உள்ளார்.

நடுவில் அமர்ந்து இருக்கும் தபாசியின் தவ கோலம் – மிக அருமை. அரியணையின் மேல் மிக அழகாக ஒரு காலை இன்னொரு காலின் மேல் சப்பலாங்கால் போட்டு அமர்ந்துள்ளார் (அரியணையின் ஒரு கால் சிங்க முக யாளி , மற்ற கால் யானை முகம் கொண்ட யாளி ),மேல குடை, இருபுறமும் வெண் சாமரம்.

மூன்று பாம்புகள் வேறு உள்ளன.

இது என்ன கதை என்று இதுவரை தெரியவில்லை, எனினும் நுண்ணிய வேலைப்பாடு, மிக அழகிய சிற்பங்கள் ….அபாரம்.

பெண்களை மயக்கும் திகம்பரர் , ஆண்களை மயக்கும் மோகினி

நண்பர் ஒருவர் பல சிவ பிட்சாண்டவன் சிற்பங்கள் இருக்க, ஒரு சில சிற்பங்களையே ஏன் இடுகிறீர்கள் என்று கேட்டார் . மிகவும் நல்ல கேள்வி. திரு திவாகர் அவர்களின் தமிழும் அதனுள் இருந்த பல கருத்துகளும் சரி வர சென்றடையவே – அவர்களது மடலில் இட்ட சிற்பங்களை பற்றி மேலும் எழுதவில்லை.

இதோ அதன் தொடர்ச்சி. கதையை கேட்டீர்கள் அல்லவா, இப்போது அந்த மகா சிற்பி சிவனை மட்டும் செதுக்கவில்லை, அந்த கதையையே செதுக்கி உள்ள அருமையை பாருங்கள்.

காஞ்சி கைலாசநாத கோவில். ராஜ சிம்ஹன் நிறுவிய அற்புத கோயில், தஞ்சை பெரியகோவிலை நிறுவிய ராஜ ராஜனே பெரிய கற்றளி என்று வியந்த கோயில். அங்கே இந்த அற்புத சிவ பிட்சாண்டவனின் வடிவம் – ராஜ சிம்ஹனின் பாயும் சிங்கங்களின் நடுவில் கம்பீரமாக நிற்கும் காட்சி. சிற்பத்தில் ஈசன் தன் இடது கை விரலை நீட்டி நம்மை மேல பார்க்க சொல்வது போல உள்ளது. மேலே என்ன இருக்கிறது. ஆஹா, ஆடல் வல்லானின் அற்புத ஆட்டம். ( இதே வடிவம் நாம் மல்லை ஓலக்கநெஸ்வர கோயிலிலும் பார்த்தோம் !!)

சரி சிற்பத்திற்கு மீண்டும் வருவோம். கட்டழகு வாலிபன் அல்லவா – உணர்த்த என்ன ஒரு கட்டுடல், முகத்தில் விஷம சிரிப்பு , ஒரு காலை அழகாய் மடித்து, கால்களில் இருக்கும் பாத ரக்‌ஷைகள் – அதிலும் ஒரு பாதம் சற்றே தூக்கியவாறு, பரந்த விரிந்த தோள்கள் , வலது கையை என்ன ஒரு யதார்த்தமாக தண்டத்தின் மீது இட்டிருக்கும் பாங்கு , அதில் ஒட்டிக்கொண்டு இருக்கும் திரு ஓடு.. அருமையான சித்தரிப்பு. அதனுடன் நிறுத்தவில்லை நம் சிற்பி.


அழகு வாலிபனை கண்டு சொக்கி அவன் காலில் விழும் இரு ரிஷி பத்தினிமார்கள், அவர்களுக்கு மேலே இதை கண்டு சினம் கொண்டு ஈசனை தாக்க கை தூக்கும் ரிஷி. ஒரு கதா பத்திரத்தை மட்டும் சித்தரிக்க வில்லை இந்த சிற்பம், , ஒரு கதையையே சித்தரிக்கிறது.

சரி, திருமுறையில் இந்த காட்சி வருகிறதா ? நான்காம் திருமுறை

நான்காம் திருமுறை

கொக்கரை தாளம் வீணை பாணிசெய் குழகர் போலும்
அக்கரை யணிவர் போலும் ஐந்தலை யரவர் போலும்
வக்கரை யமர்வர் போலும் மாதரை மையல் செய்யும்
நக்கரை யுருவர் போலும் நாகவீச் சரவ னாரே.

திருநாகேச்சுரத்துப் பெருமான் கொக்கரை, தாளம், வீணை எனும் இவற்றின் தாளத்திற்கு ஏற்பக் கூத்து நிகழ்த்தும் இளைய ராய், சங்கு மணியை இடையில் அணிபவராய், ஐந்து தலைகளை உடைய பாம்பினை ஆட்டுபவராய், திருவக்கரைத் திருத்தலத்தில் உகந்தருளியிருப்பவராய், பெண்களை மயக்கும் திகம்பரவடிவினராய் உள்ளார்.

186518721868
சரி, இப்போது மோகினி வடிவம் – காஞ்சி தேவராஜசுவாமி கோவில் தூண் சிற்பம். அங்கும் சிற்பி தன் கலை நுணுக்கத்தை காட்டி உள்ளான்.உற்றுப் பாருங்கள் – மோகினியின் மோகனப் புன்னகையில் மயங்கி ,அவள் ஊற்றிக் கொடுக்கும் பானத்தை இரு கரம் கூப்பி அருந்தும் ரிஷிகளின் வேடிக்கையான காட்சியையும் காட்டிய சிற்பியின் கற்பனை , கலைத் திறன் அபாரம்.

சரி, திருமுறையில் இந்த காட்சி வருகிறதா ?இரண்டாம் திருமுறை

இரண்டாம் திருமுறை

விரிந்தனை குவிந்தனை விழுங்குயி ருமிழ்ந்தனை
திரிந்தனை குருந்தொசி பெருந்தகையு நீயும்
பிரிந்தனை புணர்ந்தனை பிணம்புகு மயானம்
புரிந்தனை மகிழ்ந்தனை புறம்பயம் அமர்ந்தோய்.

புறம்பயம் அமர்ந்த பெருமானே! எல்லாமாக விரிந்து நின்றாய்: நுண்ணியனாகக் குவிந்துள்ளாய்: ஊழிக் காலத்தில் விழுங்கிய உயிர்களை வினைப்போகத்திற்காக மீண்டும் உடலோடு உலவவிட்டாய்: உன் நிலையை விடுத்துப் பல்வகை வடிவங்கள் எடுத்துத் திரிந்தாய்.
குருந்தொசித்த திருமால் மோகினியாக வர அவ ரோடு கூடிப் பிரிந்தும் புணர்ந்தும் விளையாடினாய்: பிணம்புகும் சுடு காட்டை விரும்பிமகிழ்ந்தாய்.

கல் சங்கிலியில் பூத்த பூவை மொய்க்கும் கிளிகள்

நண்பர் திரு சந்திர சூடன் கோபாலகிருஷ்ணன் அவர்களின் அரிய புகைப்படம் ஒன்று இந்த கலை சங்கிலி கல் சங்கிலி தொடரின் இரண்டாவது பாகம் எழுத தூண்டியது .
173517331737
நாம் முன்னரே காஞ்சியில் பார்த்த சங்கிலிகளை போலவே கன்னட தாளகாடு கோயிலிலும் உண்டு. அங்கே பல சுவாரசியமான தகவல்கள் மற்றும் சிற்பங்கள் உண்டு, எனினும் நாம் இன்று சங்கிலியை மட்டும் பார்ப்போம். இதை வடிப்பது எவ்வளவு கடினம், அதிலும் மேல் தள கல்லில் இருந்து தொங்கும் படி வடிப்பது, அதிலும் வளைந்து நெளிந்து செல்லும் நான்கு தலை படம் எடுக்கும் பாம்பின் ஒரு வளைவிலிருந்து தொங்குமாறு வடிப்பது, அப்பப்பா, அபாரம், அருமை.
1728
ஆனால் நாம் முன்னர் காஞ்சி வரதராஜ சுவாமி கோயில் கலை சங்கிலியை முழுவதுமாய் பார்க்கவில்லை. கல்லில் சங்கிலி அமைக்கும் அபார திறன் படைத்த சிற்பி, தன்னுடைய கலை திறனை நமக்கு காட்ட, அதை இன்னும் கடினமாக்கி, ( தங்க பதக்கம் பெற்ற பின் உலக சாதனைக்கு தாவும் வீரனை போல ) அந்த சங்கிலியின் கடைசி வளைவை எப்படி முடித்துள்ளான் பாருங்கள் – ஒரு பூவின் மொட்டு , அதில் நான்கு கொஞ்சும் கிளிகள் தொங்குமாறு செதுக்கி
1731
….மேலும் வாரத்தைகள் வர வில்லை.

கலை சங்கிலி, கல் சங்கிலி

சென்னைக்கு மிக அருகாமையில் உள்ள காஞ்சிபுரத்தின் புராதன கோயில்களில் ஒன்றான தேவரஜச்வாமி அலையத்தின் கல்யாண மண்டப சிற்ப வேலைபாடு இது. ஆனால் பராமரிப்பு இல்லாமையால் இந்த அறிய பொக்கிஷம் கேட்பார் அற்று கிடக்கிறது. விலை மதிப்பில்லா சிற்பங்களுக்கு தற்போது காவல் காய்ந்த கருவேல முர்க்களே.

நீங்கள் பார்க்கும் சங்கிலி முற்றிலும் ஒரே கல்லில் செதுக்கப் பட்டது

அதுவும் மேல் இருக்கும் தளத்தில் இருந்து தொங்குமாறு செதுக்கிய அந்த மகாசிற்பியின் ஆவி தற்போது நிலையை கண்டால் என்ன பாடு படுமோ. அய்யோ , அக்கற் சிலையை செதுக்க அச்சிற்பி எப்பாடு பட்டுஇருப்பனோ, தனது கை நரம்புகளின் வலியையும் மீறி தலைமுறை தலைமுறையாக தான் கற்ற கலையை ..ஒரு ஆயிரம் ஆண்டு அறிவை…தன் குருதியை ……கல்லினுள் ஊற்றி அதற்க்கு உயிர் கொடுத்த அவன் கரங்கள்…… அக்கல்லும் அந்த படைப்பாலியின் உழைப்பிற்கு ஆதாரமாக புவி இருக்கும் வரை நிற்க ஆவல் பூண்டு பல நூற்றாண்டுகள் நின்றும் பார்போரை நேகிழ்விதும் வந்திருக்கும் …நடுவில் வந்தவர்கள் தெரிந்து சிதைதர்கள் – அவர்கள் விரோதிகள் – பகைவர்கள்… மன்னிக்கலாம் , இம் மூடர்களோ …இவர்களை என்ன வென்று சொல்வது – சபிப்பது . இதை பார்த்தால் சில முறை இவை இருக்கும் இடத்தில் இருந்து சிதைவதை விட எங்கோ ஐரோபிய கண்காட்சியில் இருந்து வாழ்வதே மேல்