சித்தன்னவாசல் – மடிந்த ஓவியம் – பாகம் ஒன்று

அது என்ன சித்தன்னவாசல் ஓவியம் ?

புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் பற்றி பதிவை வெகு நாட்களாக எழுதவேண்டும் என்று எனக்கு ஆசை. அங்கே அப்படி என்ன இருக்கிறது என்று நண்பர்கள் கேட்பார்கள். சரியான கேள்வி தான். திரு சுவாமிநாதன் அவர்கள் ஒருமுறை ஒரு மணிநேரம் விளக்கினர். பிறகு நண்பர் திரு இளங்கோவன் அவர்களது அருமையான பதிவும் படித்தேன்.

சித்தன்னவாசல்

எனினும் இதை பற்றி இணையத்தில் அதுவும் குறிப்பாக அங்கே உள்ள ஓவியங்கள் பற்றி இணையத்தில் எங்கும் எதுவும் இல்லையே என்பதால் இந்த பதிவை இடுகிறேன்.

இதன் தற்போதைய நிலைமை, கலை ஆர்வலர் சென்றாலே விரக்தி அடைந்து திரும்பும் நிலை – ஏன் தெரியுமா ? அங்கே அப்படி என்ன இருக்கிறது என்ற கேள்விதான் ? இதற்கு விடை அளிப்பது கடினம். அங்கே அப்படி என்ன இருந்தது என்ற கேள்விக்கு வேண்டும் என்றால் பதில் கூறலாம். கூறும் முயற்சியே இந்த பதிவு .

அங்கே ஒரு குகைக்கோயில், சில பல சமணர் படுக்கைகள், பழமையான கல்வெட்டுக்கள் என்று பல இருந்தும் என்னை மிகவும் கவர்ந்தவை அங்கே உள்ள ( இருந்த ) ஓவியங்கள். சித்தன்னவாசல் ஓவியங்கள் பற்றி செவி வழி கூட செய்தி அறியாமல் பல தமிழரே இருக்கும் பொது இதை பற்றி வெளி உலகிற்கு தெரியாமலேயே போனது ஆச்சரியம் ஒன்றும் இல்லை. அதை விட சுவையான தகவல் – இவை அனைத்தும் சமணர்களின் பங்களிப்பாகும். ஆனால் இப்போது அங்கே என்ன இருக்கிறது?

அஜந்தா ஓவியங்கள் பாணியில் மிக அற்புத ஓவியங்கள் இருந்தன . அவை எங்கே போயின ? இலங்கையில் பல இடையூறுகள் நடுவிலும் நிற்கும் சிகிரியா மாந்தர்போல இவை ஏன் நிற்கவில்லை. ஆயிரம் ஆண்டுகள் நின்ற இவை – வெள்ளையர்கள் வெளியேறிய பின்னரே சிதைந்தன. நம் கைகளாலேயே நம் கண்களைக் குருடாக்கி கொள்வது போல நம் ஆட்களே ஓவியங்களை சிதைந்துள்ளனர்.

அப்படி என்ன ஓவியங்கள் அங்கே உள்ளன – முதலில் , தூண்களை பார்ப்போம். தூண்களின் முகப்பில் நாட்டிய மங்கையர் இருவர் நடனமாடும் எழில்மிகு தோற்றம் தீட்டப்பட்டுள்ளன. இவை மிகவும் அழிந்த நிலையிலேயே காணப்படுகின்றன.

ஒவ்வொருவரை பார்ப்போம்.

முதல் மங்கை. என்ன தெரியவில்லையா ?



இப்போது

அதுதான் இன்றைய நிலை.

சுமார் ஐம்பத்து வருடங்களுக்கு முன் எடுத்த கருப்பு வெள்ளை புகைப்படம் மட்டுமே மிஞ்சி உள்ளது. சில கோட்டோவியங்கள்

இவள் எப்படி இருந்திருப்பாள் என்பதை கற்பனை செய்து நான் தீட்டிய ஓவியம்.

ஓவியம் காட்டும் அபிநயமும், முத்திரைகளும், ஆடல் அரசன் நடராசரின் தாண்டவத்தை நினைவுபடுத்துகின்றன. நாட்டியக் மங்கை பலவித அணிகலன்களை அணிந்துள்ள பாங்கு வியக்கத்தக்கது. பொன்னிறமான மேனியழகு புன்முறுவல் நெஞ்சத்தை ஊடுருவிப்பார்க்கும் நீண்ட நயனங்கள் குறுகிய இடை பாம்புபோல் நெளியும் கரங்கள், அங்க அசைவுகள் கண்களின் ஒளி இவையாவும் ஒன்று சேர்ந்து உயிரோட்டம் ததும்பும் இவள் தேவலோகத்திலிருந்து இறங்கிவந்து இன்னிசைக்கேற்றவாறு நடனமாடுவது போல் உள்ளது.

இன்றைக்கு 1000 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் வழக்கிலிருந்த நாட்டிய பாவனைகளையும் நாட்டியக்கலை விதிகளையும் தெரிந்துகொள்ள இந்த ஓவியங்கள் நல்ல சான்று பகிர்கின்றன.

சித்தன்னவாசல் ஓவியங்களை வரைய உபயோகப்படுத்திய வண்ணங்கள் யாவும் இயற்கை கனிப்பொருள்களே ஆகும் கருப்புக்கு கரிப்பொடியும், சிகப்பு, மஞ்சள் நிறங்களுக்கு இவ்வண்ண காவிக்கற்களும் நீல நிறத்திற்கு நீலக்கல்லும் பிறவண்ணங்களுக்கு இந்த வண்ணங்களின் கலப்பும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

அஜந்தா ஓவியங்களிலும், பல்லவர் ஓவியங்களிலும் காணப்படும் அழகையும் அமைதியையும் பண்பட்ட கலைத்திறனையும் சித்தன்னவாசல் ஓவியங்களில் காணமுடிகிறது.இந்திய ஓவியக்கலைப் பாரம்பரியத்தில் தமிழகத்தின் பங்கினை சித்தன்னவாசல் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.

கலை உணர்வற்ற மூடர்களின் கருணையின்மையால் பெரும்பாலான ஓவியங்கள் சிதைந்து அழிந்துவிடட் போதிலும், இன்று நாம்காணும் எஞ்சியுள்ள ஓவியங்கள் அக்கால தமிழகத்தில் ஓவியக்கலை, நாட்டியக்கலை ஆகியவற்றைத் தெரிந்துகொள்ள காலத்தால் முற்பட்ட சான்றாக விளங்கிக் கொண்டிருக்கின்றன. உங்களது சிந்தைக்கு விருந்தளிக்க சித்தன்னவாசல் ஓவியக்கூடம் அன்புடன் உங்களை அழைக்கின்றது. முழுவதுமாய் ரசிக்க கொஞ்சம் கற்ப்பனை இல்லை நிறைய கற்பனைத் திறன் வேண்டும்.

தென்னிந்தியாவின் ஓவிய திறமைக்கு முடி சூடும் இந்த ஓவியங்கள் இப்போது நம் அறியாமைக்குத் தீனியாகி மாண்டுவிட்டன. மாண்டவர் மீண்டும் வருவாரோ ?

மன்னார்குடி ஸ்ரீராஜகோபால ஸ்வாமி

பல நேரங்களில் நம்மையும் மீறிய சில செயல்கள் – நம்மை சுற்றி நடக்கும் சம்பவங்கள் நம்மை திகைக்க வைக்கின்றன. அதுபோன்று ஒரு நிகழ்வே இந்த பதிவு. ஓவியர் நண்பர் திரு பிரசாத் அவர்கள் ஒரு சிலையை ஓவியமாய் தீட்ட இணையத்தில் தேட, அப்போது மன்னார்குடி ராஜகோபாலசுவாமி படம் கிடைக்க, அவரும் அதை அழகாக தீட்டி என்னிடம் அனுப்பினார். அதை நண்பர் அசோக் பார்த்துவிட்டு அவர் உபயோகித்த படம் தான் எடுத்து என்றும் சொன்னார். அற்புதமான படம், அதை ஒட்டி, மதிமயக்கும் ஓவியம் – இரண்டையும் பார்த்தவுடன் இதைப் பற்றிய வர்ணனைனைக்கு சரியான வல்லுனர்கள் – நண்பர் திரு தேவ் மற்றும் வரலாறு .காம் நண்பர் கோகுல் அவர்களின் தந்தையார் திரு சேஷாத்ரி – இருவரையும் அணுகினேன். இருவருமே அருமையான பதிவுகளை தந்தனர். இரண்டையும் சேர்த்து இந்த பதிவு.

நாம் கண்களை மூடி மனதில் இதுவரை நாம் கண்டு நெகிழ்ந்த திருமேனிகளை நினைத்துப்பார்க்கையில் வரும் காட்சிகள்

1. அழகிய மணவாளன் – ஸ்ரீரங்கம்
2. திருமலை தெய்வம் (மூலமூர்த்தி)
3. ராமபிரான் -தில்லை விளாகம்
4. மன்னார்குடி ஸ்ரீராஜகோபால ஸ்வாமி

கண்ணபிரான் யதுகுலத்தில் தோன்றி, கோகுலத்தில் வளர்ந்தருளினான். ஆநிரை மேய்த்தாலும் அரசர்க்குரிய காம்பீர்யம் சற்றும் குறையவில்லை. இக்கோலத்தில் ஆழங்கால் பட்ட அடியவர்கள் ‘ராஜ கோபாலன்’ என்றழைத்து இன்புற்றனர்

மன்னார்குடி ஸ்ரீராஜகோபால ஸ்வாமி

கண்ணபிரான் இடது திருக்கரத்தால் பசுவை அணைத்துக்கொண்டு,வலது திருக்கரத்தால் சாட்டையைச் சுழற்றும் பாவனையில் ‘வேத்ர பாணி’யாக, நின்ற திருமேனியோடு ஸேவை ஸாதிக்கும் திருக்கோலம் “மன்னார்” என்றழைக்கப்படுகிறது. தமிழகத்தில் இத்தகைய கோலத்தில் கோபாலன் எழுந்தருளியிருக்கும் தலங்கள் மிகவும் அபூர்வமானவை. ஸ்ரீ வில்லிபுத்தூர், காட்டுமன்னார் கோவில்,மன்னார்கோவில்,மேலப்பாவூர், ராஜமன்னார் குடி ஆகிய இடங்களில் இப்பேரழகைக் காணலாம். இவை அனைத்தினுள்ளும் புகழ் பெற்றது மன்னார்குடி மட்டுமே.மன்னார்குடி ‘தக்ஷிண த்வாரகை’ என்னும் பெயர் பெற்றது; அழகான மதிற்சுவர் அமையப் பெற்றது.

இவ்வூரின் பெருமையை ‘ஊர்பாதி, குளம்பாதி’, ‘மன்னார்குடி மதிலழகு’என்னும் வழக்கிலிருந்து அறியலாம்.ஊரைச் சுற்றியோடும் பாமணியாறு தவிர,மேலும் ஒன்பது நீர்நிலைகள் பல்வேறு பெயர்களில் புராணகாலம் தொட்டு இன்றுவரை வளம் காத்து வருகின்றன.இவ்வூரில் பேரறிஞர் பலர் வாழ்ந்துள்ளனர்.

உற்சவ மூர்த்தியான ஸ்ரீவித்யா ராஜகோபாலனை வர்ணிப்பது கடினம்.


அசோக் அவர்களின் படம்

இவன் கோஸகன்; ஆமருவியப்பன். ஒரே பட்டாடையை இடுப்பில் சுற்றிகொண்டு அதையே பின்புறமாகக் கொண்டு சென்று ஒயிலான தலைப்பாகையாகவும் ஆக்கிக்கொண்டுள்ளான். ‘த்ரைமம் வேத்ரம்; ஏக வஸ்த்ரம்’ என்று தொடங்கும் இவனைப் போற்றும் சுலோகம். மூன்று வளைவு கொண்ட சாட்டையும்,ஒற்றை ஆடையும் தனிச்சிறப்பு.இந்த ஆயர் சிறுவனின் மேனியழகில் மனத்தைப் பறிகொடுத்த ஸ்வாமி மணவாள மாமுனிகள் அந்திம காலத்தில் இங்கேயே வாஸம் செய்தாராம்.*

இதோ திரு பிரசாத் அவர்களின் ஓவியம்

ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதரவர்கள் ‘பால கோபால ‘ (பைரவி) ,’ஸ்ரீ வேணு கோபால’ ( குறிஞ்சி), ‘ ஸ்ரீ ராஜ கோபால’ ( ஸாவேரி) போன்ற பல பாடல்களை ராஜகோபாலன் விஷயமாகப் பாடியுள்ளார். ஊத்துக்காடு வேங்கட கவியின் கண்ணன் பாடல்கள் எல்லாமே இவனைப் பற்றியவையே என்று கூறுகின்றனர்.

நன்றி

http://raga-artblog.blogspot.com/2008/10/rajagopalaswamy-temple-mannargudi.html
www.srirajgopalaswamy.blogspot.com

ஒரு ஓவியம் பிறக்கிறது

இன்று ஒரு ஓவியம் பிறக்கும் கதையை பார்க்கிறோம். ஒரு ஓவியன் – அவனும் பிறக்கிறான் , உண்மையான கலைக்கு அழிவு என்பதே இல்லை. ஒரு கலைஞனின் தாகம் அவனுள் என்றைக்கும் ஒரு ஏக்கத்தை உருவாக்கும். அந்த வலி அவனை ஒரு தேடலில் ஈடு பட வைக்கும் – இந்த தேடல் மொழி, கலாசாரம் , கால வட்டம் என்று அனைத்து தடைகளையும் உடைத்து எரியும்.

இதை போல ஒரு ஓவியத்தை இன்று நாம் பார்க்க போகிறோம். சிற்ப கலை – அதன் தூண்டலால் உருவான ஒரு சிற்பம் – அதன் தாக்கத்தால் உண்டான ஓவியம். அந்த ஓவியத்தின் தாக்கத்தால் உருவாகும் ஓவியன்.

ஸ்ரீ வைகுந்தம் தூண் சிற்பம். அப்பப்பா – அந்த வீரபத்ரர் சிலையில் தான் என்ன ஒரு உயிர்ரோட்டம் – சிலையே உயிர் பெற்று எழுந்து ஆடுவது போல உள்ளது. ஓவியர் சில்பி அவர்கள் இதை போல ஒரு தூணை பார்த்தல் – கேட்க வேண்டுமா – கரும்பு கடிக்க கூலி வேண்டுமா . அவரும் அந்த சிற்பத்தில் உள்ள பிரம்மாண்டம் , வீரம், அனைத்தையும் உள்ளே இழுத்து – ஒரு அற்புத ஓவியத்தை படைத்தார் ( நன்றி திரு பசுபதி மற்றும் வரலாறு .காம் நண்பர்கள் ) அமரர் சில்பி அவர்களின் தனி சிறப்பே ஒரு சிற்ப்பத்தை சிற்பம் போலவே வரைவது, கல்லிலே கலைவண்ணம் – அதை தன் கை வண்ணத்தால் வெளி கொணர்ந்த அற்புத கலைஞர் அவர்.


சரி , இப்போது கதை வரலாற்று காலத்தை விட்டு , சென்ற வாரத்திற்கு நகர்கிறது. நண்பர் திரு பிரசாத் அவரது விடுமுறை நாட்களில் ஓவியம் தீட்ட நல்ல படம் கேட்டார். நானும் பல படங்களை கொடுத்து, அதில் மேலே குறிப்பிட்ட ஸ்ரீ வைகுந்தம் சிற்பம் மற்றும் சில்பி அவர்களின் ஓவியத்தை இணைத்தேன். பார்த்தவுடன் , இதை நான் வரைய முயற்சிக்கிறேன் என்றார். சற்று தயக்கத்துடன் இத்தனை கடினமான ஓவியம் ஆயிற்றே – என்று நிறைய எதிர்பார்ப்பு இல்லாமல் இருந்தேன்.

இரண்டு நாட்கள் கடந்தன – பிரசாத் எப்படி உள்ளது முதல் கோடுகள் என்று ஒரு படத்தை அனுப்பினார். கண்டவுடன் காதல் கொண்டேன். அமரர் சில்பி அவர்களின் கலை அழியவில்லை – அடுத்த தலைமுறையில் அவரது கலையை இட்டு செல்ல ஒரு அற்புத ஓவியன் பிறந்துவிட்டான் என்று எண்ணி பூரிப்பு அடைந்தேன்



( சிற்ப புகைபடத்தில் வாள் உடைந்து உள்ளது – அமரர் சில்பி அவர்கள் வரைந்த போதே அதில் விரிசல் விழுந்துள்ளதை அவர் கவனித்து அதையும் அவர் வரைந்துள்ளதை பாருங்கள் )

அருமை பிரசாத் – வீரபத்ரர் அற்புதம். சிற்பத்தில் மற்றும் சில்பி ஓவியத்தில் உள்ள அற்புத திறனை அப்படியே கொண்டு வந்துள்ளீர் – வாழ்க வளமுடன், இது போல இன்னும் பல படைப்புகளை உருவாக்க எங்கள் வாழ்த்துக்கள்.
308930993085

திரு பிரசாத் அவர்களின் மற்ற ஓவியங்களை பார்க்க
பிரசாத் ஓவியக்கூடம்

அழகுக்கு அழகு சேர்க்கும் – சிற்பகலைக்கு மகுடம் சூட்டும் ஓவியம் -பேலூர் யானை – திரு பிரசாத் அவர்களது ஓவியம்

இன்று நமது நண்பர் பிரசாத் மீண்டும் ஒரு அற்புத ஓவியத்தை தந்துள்ளார் . பேலூர் யானை , அதன் அருமையான சிற்பத்தை அப்படியே ஒரு புகை படத்தை வைத்துக்க் கொண்டு மட்டும் ஓவியத்தை தீட்டி இருக்கும் திறமை அபாரம் – பிரசாத் ( அவர் அமெரிக்காவில் படித்துக்கொண்டிருக்கிறார் ). அவரது மற்ற படைப்புகளை பார்க்க இங்கே சொடுக்கவும்.

பிரசாதின் ஓவியங்கள்

அருமையான ஓவியம் – அவர் பார்த்து வரைந்த புகைப்படத்தையும் பாருங்கள். அருமை
27422745

இன்னொரு புகைப்படம் இந்த இடுகையின் காரணம். எனக்கு பத்திரிகைகளில் சிறு வயதில் பிடித்து ஆறு வித்தியாசங்கள் ( அதை மட்டுமே வாசிக்க தெரியும் அப்போது / இப்போது !!)

இந்த சிற்பத்தை பார்த்தவுடன் பிரசாத் தீட்டி உள்ள ஓவியமும் இதுவும் ஒரே சிற்பங்களா என்ற ஐயம் வந்தது. பிறகு அவர் தனது படத்தை அனுப்பி வைத்தார். ஐயம் தீர்ந்தது.

சரி நீங்கள் கொஞ்சம் முயற்சி செய்து சொல்லுங்கள் – இரண்டும் ஒரே சிற்பமா ? இல்லையேல் ஆறு வித்யாசங்கள் உள்ளனவா ?

274227452739

அருமையான யானை சிற்பம், சிற்பி உங்கள் படைப்பை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பார் பிரசாத். தொடருங்கள் உங்கள் அருமையான பணியை.

சில்பியே சிகரம்

நாம் முன்பு ஸ்ரீரங்கம் சேஷராயர் மண்டப தூண்களை பார்த்தோம். இதை நம் இளம் ஓவியர்கள் எவ்வாறு அருமையாக வரைந்தனர் என்றும் பார்தோம். அவ்வாறு வரைந்த நண்பர் திரு பிரசாத் அவர்களுடன் பேசும் பொது, அமர ஓவியர் திரு சில்பி அவர்களின் புகை படம் இல்லை என்று வருந்தினார். அப்போது வரலாறு.காம் திரு கோகுல் அவர்கள் இட்ட இழை நினைவுக்கு வந்தது. எனினும் பிரசாத்துக்கு தமிழ் படிக்க கடினம் என்பதால் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தருகிறேன் என்றேன். அப்போது அதே பக்கத்தில் ஓவியர் சில்பியும் இதே தூண் சிற்பத்தை வரைந்த படம் கிடைத்தது அனைத்தையும் இணைத்து இங்கே இடுகிறேன்.


Temple : Srirangam Sri Ranganathaswami Temple – Trichy, Tamilnadu, India
Location : Sesharayar Mandapa
Features : The mandapa is finely sculpted with various figures. Silpi captures the essence of this complicated and delicate sculpture
Collection sent by : Prof.S.Swaminathan
Original series : Thennatuch Chelvangal
Magazine courtesy : Ananda Vikatan


சில்பியே சிகரம்

சே. கோகுல்

(நன்றி – தஞ்சை இராஜராஜேச்சரம் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர், 1997)

கருவிலேயே திருவுடையவர்களாகப் பிறப்பவர்களின் புகழ் காலத்தால் மறையாதது. ஆழமான உழைப்பின் பலன்களை எந்தக் கறையானும் அரித்துவிட முடியாது. நோக்கத்தில் உயர்வையே நாடிச் செல்லும் எண்ணத்தின் நுட்பம் மாபெரும் நோன்பாகவே மலர்ந்திருக்கும். வளையாத முதுகு, கண்ணாடி கேட்காத கண்கள், தீர்க்கமான பார்வை. அதிலும் தெளிவில் முதிர்ந்ததோர் மோன நிலை. தூரிகையைத் தாங்கிய விரல்கள் தொட்ட கோடுகளெல்லாம் உயிர் பேசும். அதிகம் சிரிக்கத் தெரியாவிட்டாலும் அரைப் புன்னகையில் உதடுகள் பிரியாத ஒரு அழகு மலர்ச்சி. அகன்ற நெற்றியில் அடுக்காக மூன்று திருநீற்றுக் கோடுகள். நெற்றியின் நடுவில் அகன்ற குங்குமப் பொட்டு.

ஒரு ஓவிய மாமேதையின் பெருமைக்குரிய திருவடிவம்தான் இது. எல்லோருக்கும் உரியவராகிவிட்ட “சில்பி”தான் அவர்கள்.

அவரது கைவண்ணத்தால் கவரப்படாத தென்னாட்டுத் திருக்கோயில்களிலுள்ள மூர்த்திகளே கிடையாது என்று சொல்லலாம். எல்லோரது இல்லங்களையும் கோயில்களாக்கிய பெருமை அந்தத் திருக்கரங்களுக்கே உண்டு.

இந்த நன்முத்தைப் பெற்றெடுத்த பெரும்பேறு நாமக்கல்லுக்கு 1919ம் ஆண்டில் உரியதானது. சிறுவனின் பெயர் சீனிவாசன். இளவயது முதலே இதர பாடங்களைவிட ஓவியத்துறையிலேயே உள்ளத்தை அதிகம் ஈடுபடுத்திக்கொண்டவன் சீனிவாசன். தேசியப் பெருங்கவிஞர் நாமக்கல் இராமலிங்கம் பிள்ளையவர்கள் மிகச்சிறந்த ஓவியரும் கூட. சீனிவாசனுடைய திறமைகளை நன்கு கவனித்த கவிஞரவர்கள் சென்ன எழும்பூரிலுள்ள ஓவியக் கலைக்கல்லூரியில் சேர்த்து, அவனது செயலாக்கத் திறனை முழுமையாக்கிக்கொள்ளும்படி அறிவுரை கூறினார்.

ஆறாண்டுகள் நீண்ட பயிற்சியில் அவரது ஆர்வத்தையும் தகுதியையும் கல்லூரி முதல்வர் திரு.டி.பி.ராய் செளத்திரி அவர்கள் மதிப்பிட்டு சீனிவாசனுடைய தேர்ச்சியை இருமடங்காக்கி இரண்டாம் ஆண்டிலிருந்து நான்காம் ஆண்டிற்கு உயர்த்தினார். பேனாவும் மையும் கொண்டு எழுதும் சித்திரக் கோடுகள் அவருக்கு எளிதில் கைவந்தன. எல்லோரும் வியக்கும் வண்ணம் அமைந்திருந்த அந்தச் சித்திரங்கள் திரு.செளத்ரி அவர்களால் பெரிதும் புகழப்பட்டது. மேல்நாட்டு ஓவியர்கள் பலரையும் மிஞ்சக்கூடிய வகையில் சீனிவாசனின் ஓவியங்கள் அமைந்திருந்ததாக அவர் புகழ்ந்தார்.

சீனிவாசன் மாணவனாக இருந்தபோது ஓவியர் “மாலி” அவர்களின் கேலிச்சித்திரங்களால் மிகவும் கவரப்பட்டார். அதே போன்று பின்னாளில் சீனிவாசனின் ஓவியங்கள் மாலியையும் மிகவும் கவர்ந்தன. இந்தப் பிணைப்பே சீனிவாசன் இருபத்தியிரண்டு ஆண்டுகள் ஆனந்த விகடனில் பணிபுரியும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தது.

இயல்பாகவே சீனிவாசனுக்கு மனித முகங்களைத் தீட்டுவதினும் கட்டிடங்களை ஓவியங்களாக்குவதிலேயே அதிக ஆர்வமிருந்தது. அதனை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள விரும்பிய மாலி சீனிவாசனுக்கு “சில்பி” என்னும் பெயர் சூட்டி, தெய்வ வடிவங்களையும் திருக்கோயில்களையும் மட்டுமே தீட்டும் பணிக்கு ஆயத்தம் செய்தார்.

கல்லிலே சிற்பி செதுக்கியுள்ள சிற்பங்களுக்கு மூன்று பரிமாணங்கள் மட்டுமின்றி இழைந்த ஒருவகை உயிர்ப்பும் உண்டு. புகைப்படங்களாக எடுக்கப்பட்டுள்ள சிற்பங்களில் பரிமாணங்கள் நிழலாக நிலைத்திருக்கும். ஆனால் உயிர்ப்பு உள்ளூர உணரமுடியாமல்தான் இருக்கும். அந்தக் குறையைக் களைந்து முழுமையான நிறைவுள்ள சிற்பங்களை – குறிப்பாக தெய்வ சித்திரங்களை – சில்பி அவர்களால் மட்டுமே வரைய முடிந்தது.

பக்தி, தூய்மை, பரவசம் ஆகிய மூவிழைப் பின்னலே உணர்வாக அவர் வரைந்த படங்களில் தெய்வம் தானே நிலைத்து நின்றது. அமைதியான சூழ்நிலையில் பக்தர்கள் தரிசனம் முடிந்து ஏகாந்தமான வேளையில் கர்ப்பகிருகத்தில் இருக்கும் தூண்டா விளக்கின் மயங்கிய ஒளியில் சில்பி அவர்களால் அவ்வளவு தெளிவாக அந்த அருள் முகத்தை எப்படி வரைய முடிகிறது என்கிற அதிசயத்திற்கு சில்பி கொடுக்கும் விளக்கம் “வண்ணத்தின் கலவைகளை சரியான அளவில் அமைத்துக்கொள்வதுதான் என் செயல். காட்சி கொடுக்கும் அந்த தெய்வந்தான் என் விரல்களோடு இணைந்து தன்னை எழுதி வைத்துக் கொள்கிறது. படைப்பின் முழுமைக்கும் காரணம் அந்தப் பரம்பொருள்தான். நான் வெறும் கருவி !”

கர்ப்பகிருஹத்திலுள்ள மூல மூர்த்தியை வரையுமுன்பு அதன் ஆபரணங்களைத் தனியே ஒரு தாளில் முதலில் வரைபட நகல் எடுத்து, அந்தந்தக் கற்களின் வண்ணங்களையும் குறித்துக்கொண்டு, மூர்த்தியைப் பூர்த்தி செய்யும்போது அந்தந்த ஆபரணங்களை வரைந்து தானே அதனைப் பூட்டியதைப்போல் பரவசமடைவார். இந்தப் பரவசத்தை தெய்வம் சில்பிக்கு அளித்ததால்தான் அந்த சான்னித்தியத்தை சித்திரங்களில் நம்மால் நன்கு உணர முடிகிறது. தனது படங்களை வரைந்து முடித்தவுடன் மறைந்துவிட்ட காஞ்சி முனிவர் பரமாச்சாரியாரிடம் எடுத்துச் சென்று அவரது பூரண ஆசியுடன் வீட்டுக்குக் கொண்டுவந்து விசேஷ பூஜைகள் செய்வார்.

ஆனந்த விகடனிலிருந்து விலகிய பின்பு பவன்ஸ் ஜர்னலில் பணிபுரிந்தார். மேலும் கலைமகள், தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, அமுதசுரபி ஆகிய பல தமிழ்ப் பத்திரிக்கைகளிலும் அவர் நிறையக் கோயில் சிற்பங்களை வரைந்துள்ளார்.

சில்பி அவர்களின் குடும்பம் சிறியது. அவர் பணிகளில், அவர் அனுஷ்டித்த ஆசாரக் கிரமங்களுக்குக் குறையாமல் அவருக்கு உதவி புரிந்தவர் மனைவி திருமதி பத்மா அவர்கள். ஒல்லியான வடிவம், குறையாத புன்னகையை சீதனமாகக் கொண்ட குளிர் முகம், விருந்தோம்பலில் தனக்குத்தானே நிகராக விளங்கிய அன்னபூரணி. சிறிய வயதிலேயே உடல் நலிவுற்று 1968ல் இந்த உலக வாழ்க்கையிலிருந்து விடுதலை பெற்றுவிட்டார். அவர்களது ஒரே மகன் மாலி என்கிற மகாலிங்கம். ஒரே பெண் சாரதா.

இவ்வளவு பெரிய மேதை தன் கலையை பின்தொடரத் தக்கதொரு சீடனை நீண்ட நாட்கள் தேடிக்கொள்ளவில்லை. 1981ம் ஆண்டு ஜனவரித் திங்கள் 14ம் நாள் – பொங்கலன்று ஒரு அதிசயம் நடந்தது. பதினைந்து வயதுச் சிறுவன் ஒருவன். பால்மணம் கமழும் பளிங்கு முகம். தன் தந்தையுடன் சில்பியைக் காண வருகிறான். கிரிதரன் என்னும் அந்தச் சிறுவனின் படங்களைப் பார்த்த சில்பி கிறங்கிப் போகிறார். அவன் வயதில் தான்கூட அத்தனை நுட்பமாகப் படம் வரைந்ததில்லையென்று கூறி அவனை வாயார வாழ்த்துகிறார்.

தனது கலைப்ப(¡)ணிக்குத் தகுதியுள்ளதொரு இளஞ்செல்வன் வாரிசாகக் கிடைத்ததையெண்ணி மிகவும் பூரித்துப் போனார் சில்பி. தனது மனைவியின் பெயரான பத்மாவையும் தன்னுடைய இயற்பெயரின் ஈற்றுப்பகுதியான வாசனையும் இணைத்து கிரிதரனுக்குப் பத்மவாசன் என்னும் பெயரைச் சூட்டினார். “எங்களின் இருவரது ஆசியும் உன் பெயராகவே என்றும் நிலைத்து, பத்மத்தில் வாசம் செய்யும் பிரம்மனாகவே – முதற் படைப்பாளியாகவே உன் புகழ் நின்று நிலைக்கட்டும்” என வாழ்த்தினார். அந்தச் சிறுவன்தான் இன்று பிரபல ஓவியரான திரு.பத்மவாசன். கல்கியின் சரித்திர நாவல்களுக்குப் புதிய சித்திரம் தீட்டித் தமிழக சித்திரக்காரர்களின் வரிசையில் அழியாத இடத்தைப் பிடித்துக்கொண்டுள்ள திரு பத்மவாசனின் படங்களில் கமழும் இறைத்தன்மைக்கு சில்பியே மூலகாரணம்.

தனது வாழ்க்கைப்பணிகள் முடிந்த பின்பு – அதாவது கோயில்களிலுள்ள தெய்வ மூர்த்தங்களைப் படம் எழுதி முடித்த பின்பு – அர்த்தமில்லாத வாழ்க்கை அவலங்களில் உழன்றுகொண்டிருக்கக்கூடாது – இறைவனின் திருவடிகளை விரைவில் அடைந்துவிடவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருப்பார் சில்பி. குடும்ப வாழ்க்கையிலும் தனது குழந்தைகளிடமும் பற்று வைத்திருந்தாலும் மனதளவில் ஒரு துறவியைப்போலத்தான் வாழ்க்கை நடத்திவந்தார் அவர்.

வாழும் நாட்களில் அவரை நன்கு பெருமைப்படுத்தத் தவறிய தமிழ்ச் சமுதாயம் அவர் வரலாறாகிவிட்ட இன்றைய நிலையிலும் அவரது பெருமைகளையும் அருமைகளையும் வரும் இளைய தலைமுறையினருக்கு எடுத்துக்கூறி அவர்கள் திறமைகளை சீரமைக்க ஏன் முன்வரமாட்டேன் என்கிறது என்பதுதான் இன்னமும் பெரும்புதிராக உள்ளது. காலம் மாறட்டும். கண்கள் திறக்கட்டும். கடமை விளங்கட்டும். கருதியதை முடிக்கட்டும்.

சிகரங்கள் அசையாமல் அமைதியைக் காத்துக்கொண்டு உயரத்தின் எல்லையை ஒட்டிப்பிடித்துக்கொண்டு நிற்கின்றன. ஆனால் உணர்வால் உயர்ந்த சிகரம், உண்மையால் உயர்ந்த சிகரம், உறுதியால் உயர்ந்த சிகரம், உத்தமப் பண்புகளால் உயர்ந்த சிகரம், ஒழுக்கத்தால் உயர்ந்த சிகரம், உழைப்பால் உயர்ந்த சிகரம் – ஒப்பற்ற கலைச் செல்வரான சில்பி சீனிவாசன்தான்.

Sources:
http://www.varalaaru.com/default.asp?articleid=443
http://www.varalaaru.com/default.asp?articleid=561

அது சரி, இந்த அருமையான சிற்பங்களை உடைய சேஷ ராயர் மண்டபத்தின் தற்போதையா
நிலவரம் …அடுத்து பார்ப்போம்.

அழகுக்கு அழகு சேர்க்கும் – சிற்பகலைக்கு மகுடம் சூட்டும் ஓவியம்

சிற்பக்கலை எவ்வாறு நம்மை தாக்குகிறது என்று பல இடுகைகளில் பார்த்தோம். ஆயிரம் ஆண்டுகள் ஆயினும், கால வேகத்தை தாண்டி அந்த கலைஞனின் கலை தாக்கம் அவனது ஜீவனில் இருந்து கல்லினுள் பாய்ந்து , கல்லினுள் இருந்து நமக்குள் பாய்கிறது.


இதை பலரும் உணர்தாலும் சிலருக்கே – அந்த அபூர்வ சக்தி படைத்த ஒரு சிலருக்கே, அந்த உணர்வை வெளி கொணர முடியும். மற்றவருக்கு நம் கண் முன்னே அழகை கண்டவுடன் ரசித்து , நம் அகக்கண் அதை படம் பிடித்து , உள்ளுணர்வை தூண்டி எழுப்பும், ஒரு வித வெளியீட்டை அது தேடும். என் நண்பர் முரளி போன்று கலை திறன் படைத்தவராய் இருந்தீர்கள் என்றால், அந்த உணர்வு, அந்த தாக்கம் , நீங்கள் கண்ட காட்சிக்கு – அழகுக்கு அழகு சேர்க்கும் – சிற்பகலைக்கு மகுடம் சூட்டும் ஓவியம் . பலருக்கு இந்த பாகியம் கிடைப்பதில்லை, எனினும் ரசிக்கும் கண்கள் உள்ளனவே. இரு கலைஞர்களுக்கும் இடையே ஆயிரம் ஆண்டுகள் ஆயினும், உயர்ந்த கலைக்கு என்றும் அழிவில்லை என்று உணர்த்தும் உயிர் சிலை -உயிர் ஓவியம். தஞ்சை பெரிய கோயில் லக்ஷ்மி சிற்பம். ( இதை முதலில் ஞான சரஸ்வதி என்று தவாறாக இட்டு இருந்தேன். பிறகு மேலும் படிக்கையில் இரு கரங்களுடன் இருப்பதால் இது லக்ஷ்மி என்றும், அதே ஆலயத்தில் இருக்கும் நான்கு கரம் கொண்ட சரஸ்வதி சிற்பமும் கண்டு பிழையை சரி செய்துள்ளேன்

சிற்பத்தில் என்ன ஒரு உணர்வு, காலை அழகே மடித்து ஒரு கால் மீது மற்றொன்றை இட்டு அமர்ந்திருக்கும் வண்ணம், அந்த கருணை சொட்டும் கனிவு முகம், வானவில்லை போல வளைத்த புருவம், மந்தகாச புன்னகை, மணி மகுடம், விதவிதமான ஆபரணங்கள், ஆடை அலங்காரம், இதை செதுக்கிய சோழ சிற்பி தன் வாழ்வின் பயனை இந்த படைப்பில் பேற்றான் என்றால் அது நிகை அல்ல. கல்லுக்குள் தன் உயிரை இட்டு அதை உயிர் பித்து என்றும் அழியா வரம் தந்து நம்மை இன்றும் மயக்கும் அவன் கலை திறன் வாழ்க.

வண்ணப்படம் பலவிருந்தும் கருப்பு வெள்ளைக்கு ஒரு தனி மௌசு, படத்தினுள் நம்மை எடுத்து செல்லும் தன்மை.

இதை தன் விரல்களால் வரைந்த ஓவியனுக்கு, பொறாமையாக உள்ளது, இது ஒரு தெய்வீக கலை என்பதை மீண்டும் உணர்த்தி விட்டீர்கள் முரளி. வாழ்க உமது கலை, இது போல இன்னும் பல ஓவியங்கள் தீட்ட எங்கள் நல் ஆசிகள்

முரளி அவர்களின் மற்ற ஓவியங்களை இங்கே காணலாம்.

Tanjore sculpture

விட்ட குறை – தொட்ட குறை

ஸ்ரீரங்கம் அழகிய தூண்கள் பற்றிய மடல்களை அனைவரும் கண்டு ரசித்து இருப்பீர்கள். அதை தொடர்ந்து ஒரு விந்தை நடந்தது. புதிய நண்பர்கள் இருவர் – ஒருவருக்கு ஒருவர் சம்பந்தம் இல்லாதவர், உலகில் இரு கோடியில் இருப்பவர். இருவரும் இதே தூண் சிற்பத்தை வரைந்துள்ளனர். இது தான் கலையின் வெற்றி, எங்கோ உறங்கிக்கொண்டு இருக்கும் நம் உள்ளுணர்வை தட்டி எழுப்பி, விட்ட கொறை தொட்ட கொறை என்று சொல்வது போல, நம்மையும் ஒரு கலை ரசிகனாக மட்டும் அல்லாமல் கலைஞனாகவே மாற்றும்.

ஒரு கலைஞனுக்கு தன் படைப்பில் உள்ள அழகை தான் மட்டும் இல்லாமல் பலரும் ரசிக்க காண்பதே ஊதியம் ….இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் அந்த சிற்பிக்கு இவ்விருவர் மட்டும் அல்லாமல் நாம் அனைவரும் தரும் கூலி – அவனின் உன்னத கலையை ரசித்து நெகிழ்வது.

திரு ராஜேந்திர பிரசாத் அவர்களின் ஓவியம்
http://raga-artblog.blogspot.com/2008/09/srirangam.html
1097
1111
1106
திரு ஸ்ரீராம் ராஜாராம் அவர்களின் ஓவியம்
http://album-photo.geo.fr/ap/album/6945/?pos=1&order=InsertDate
1101
1109